வைகை நதிக் கரையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வளமார்ந்த நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் கீழடி அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்களின் மதுரை நகர் விவரணைகள் கற்பனைகள் அல்ல, உண்மைகளே என்பதை அந்தச் சான்றுகள் நிறுவுகின்றன. மேற்கொண்டு ஆய்வுகள் தொடரப்பட்டால் வைகைக்கரை நாகரிகம் பற்றி தொடர்ந்து பல வரலாற்று உண்மைகள் வெளிச்சத்துக்கு வரலாம். ஆனால், தொல்பொருள் ஆய்வுகளை நடத்த வேண்டிய மத்திய அரசுக்கோ அதில் அக்கறை இல்லாமல் போய்விட்டது.
இந்தியத் தொல்பொருள் ஆய்வுகளில் தென்னகம் எப்போதுமே கண்டுகொள்ளப்படுவதில்லை. 2001-ல்தான் தென்னிந்தியாவுக்கு என்று தனியாக ஓர் அகழ்வாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டது. தென்னிந்தியப் பிரிவின் கண்காணிப்பாளராக 2013-ல் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா பொறுப்பேற்றுக்கொண்ட பிறகே கீழடி ஆய்வுகள் தொடங்கின. இதுவரை மூன்று கட்ட அகழ்வாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. 6,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும் நான்காம் கட்ட அகழ்வாய்வுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. தமிழக அரசே நிதி ஒதுக்கி, பணியைத் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்க வேண்டிய சூழலும் உருவாகியிருக்கிறது.
கீழடி அகழ்வாய்வுகள், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் அறிவுலகின் முக்கியமான பேசுபொருள்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று அறிவுத் துறை சார்ந்த பலரும் கீழடி ஆய்வுகளின் முக்கியத்துவம் குறித்த நூல்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். ஒவ்வொரு நூலும், கீழடி ஆய்வுகளைக் குறித்து அணுகும் முறையாலும் அதை வெளிப்படுத்தியுள்ள முறையாலும் தனிச்சிறப்பு கொண்டதாக அமைந்துள்ளன.
தமிழகம் முழுவதும் மலைப் பகுதிகளில் உள்ள பாறை ஓவியங்களையும், கல்வெட்டுகளையும் தேடித் தேடி ஆய்வுப் பயணம் செய்துகொண்டிருப்பவர் காந்திராஜன். கீழடி குறித்து அவர் எழுதியுள்ள ‘கீழடி- மதுரை: சங்ககால தமிழர் நாகரிகம், ஓர் அறிமுகம்’ நூல், கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சுடுமண் பொருட்களில் உள்ள எழுத்துகளுக்கும் மதுரையைச் சுற்றி அமைந்துள்ள குகைகளின் தமிழி கல்வெட்டுகளுக்கும் உள்ள ஒற்றுமையை ஒப்பிட்டுப் பேசுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எழுத்து வடிவம்தான் தமிழி. இந்த எழுத்துகளில் அமைந்துள்ள கல்வெட்டுச் செய்திகளுடன் தொடர்புடைய சங்க இலக்கிய வரிகளையும் தொகுத்து அளித்திருக்கிறார். சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற செய்திகள் கல்வெட்டுகளாலும் கல்வெட்டுச் செய்திகள் தொல்பொருள் சான்றுகளாலும் உறுதிப்படுத்தப்படுவதை காந்திராஜன் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு குறித்த முக்கியமான ஆய்வுநூல்களைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர் சி.இளங்கோ. அவரது ‘தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்- கீழடி வரை...’ நூல், தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அரிக்கமேடு, கொடமணல், ஆதிச்சநல்லூர் முதலான தொல்லியல் ஆய்வுகளையும், கீழடியைப் போலவே ஆய்வுசெய்யப்பட வேண்டிய முக்கியமான தொல்பொருள் களங்களையும் பட்டியலிட்டிருக்கிறது. பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், அகழ்வாய்வில் கிடைக்கும் மட்பாண்டப் பொருட்கள், ஈமப் பேழைகள், நாணயங்கள் என்று வரலாற்றுச் சான்றாதாரங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.
நாயக்கர் ஆட்சிக் காலத்து மதுரை நகரை தனது ‘காவல்கோட்டம்’ நாவலால் இலக்கியவெளிக்குக் கொண்டுவந்தவர் சு.வெங்கடேசன். அவர் எழுதியிருக்கும் நூல் ‘வைகை நதி நாகரிகம்.’ இந்நூலில் பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் வணிகப் பெருநகராகவும் விளங்கிய மதுரையைச் சுற்றி ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளையும் கீழடியையும் இணைத்து வைகை நதி நாகரிகம் எப்படி இருந்திருக்கும் என்ற தோற்றத்தை வாசகர் மனதில் உருவாக்கியிருக்கிறார் வெங்கடேசன். கீழடி ஆய்வுகள் மூன்றாம் கட்டத்தோடு முடித்துவைக்கப்பட்டதைக் கண்டித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் ‘தி இந்து’வில் எழுதிய கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நீ.சு.பெருமாள் எழுதியுள்ள ‘கீழடி: தமிழ் இனத்தின் முதல் காலடி’ நூல், இந்திய வரலாறு என்னும் பெரும்பரப்பில் கீழடியின் இடம் என்னவென்று விவரிக்கும் முயற்சி. அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் உரையாடி அதையும் இந்நூலின் ஒரு பகுதியாக்கியிருக்கிறார் பெருமாள். அகழ்வாய்வுத் துறையில் அதிகாரிகள் இடமாற்ற நடைமுறைகள் 2016-ல் கொண்டுவரப்பட்டன என்று குறிப்பிடும் அமர்நாத், 110 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள கீழடி ஆய்வுக் களத்தில் வெறும் ஒரு ஏக்கர் அளவுக்கே ஆய்வுகள் நடந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் ஆர்.நல்லகண்ணுவைச் சந்திக்கச் சென்றபோது, அவரால் கமலுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகம் இது. அதையொட்டி இந்தப் புத்தகத்துக்கு ஒரு புதுவெளிச்சமும் கிடைத்திருக்கிறது.
மூத்த பத்திரிகையாளர் எம்.தனசேகரன்(அமுதன்) எழுதிய ‘மண் மூடிய மகத்தான நாகரிகம்’ நூல், ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாயிலிருந்து தொடங்கி கீழடி ஆய்வுடன் முடிவடைகிறது. வைகை நதிக்கரையில் வாழ்ந்த மக்கள், இன்றைய நகர வாழ்க்கையின் குடியிருப்பு வசதிகள் அனைத்தையும் முயன்று பார்த்திருக்கிறார்கள். செங்கற் சுவர்கள், சுடுமண் பொருட்கள், உறைகிணறுகள், கழிவுநீர்ப் பாதைகள் என அகழ்வாய்வில் கிடைத்துள்ள சான்றுகள் அதை நிரூபிக்கின்றன என்பதை மிகவும் எளிமையான தமிழில் விளக்கியிருக்கிறது தனசேகரனின் புத்தகம்.
கீழடி அகழ்வாய்வின் மிகவும் முக்கியமான ஒரு அம்சம், இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களில், மதங்களுடன் தொடர்புடைய எந்தச் சின்னங்களும் குறியீடுகளும் காணப்படவில்லை என்பதுதான். முன்னோர் வழிபாட்டைக் குறிக்கும் நடுகற்களைத் தவிர்த்து, இறைவழிபாட்டுடன் தொடர்புடைய பொருட்கள் இதுவரை கிடைக்கவில்லை. இது ஆய்வின் தொடக்கநிலைக் கருத்துதான். எனினும், ஆய்வுகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இக்கருத்து நிலைபெறுமாயின், மதங்கள் இல்லாத தொல்குடிச் சமூகமாக தமிழினம் வரலாற்றில் இடம்பெறும் வாய்ப்பிருக்கிறது.
(நன்றி: தி இந்து)