சீர்மை | க. அரவிந்த் | தமிழினி பதிப்பகம்
இளம் எழுத்தாளரான க.அரவிந்த் நம்பிக்கைக்குரிய புதுவரவு. தமிழில் இதுவரை அறிவியல் எழுத்தாளர்களால் கூட அவ்வளவாக எழுதப்படாத சீர்மை (symmetry) எனும் கருப்பொருளை வாழ்க்கையோடும் இந்திய, உலக தத்துவங்களோடும் பொருத்திப் பார்க்கும் படைப்பு!
இருமுனை | தூயன் | யாவரும் பதிப்பகம்
தூயனும் இளம் எழுத்தாளர்தான். தமிழ்ப் புனைகதையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்ளச் செய்வர்களில் ஒருவர். விளிம்புநிலை வாழ்க்கை, புலம்பெயர்ந்து வரும் வட இந்தியர்களின் நிலை, அதீத மனநிலை, தொன்மம் என்று நல்லதொரு புனைவு சாகசம் இந்தச் சிறுகதை தொகுப்பு!
விதானத்துச் சித்திரம் | ரவிசுப்பிரமணியன் | போதி வனம்
மனித உணர்வுகளோடு புராதனமும் இசையும் சிற்பங்களும் தொன்மங்களும் இழைத்தெடுக்கப்பட்ட நுட்பமான கவிதைகள். ராகங்கள் தரும் உணர்வுகளைச் சொற்களில் கொண்டுவர முடிந்திருப்பது ரவிசுப்பிரமணியன் பெற்றிருக்கும் பேறு!
பனை மரமே! பனை மரமே! | ஆ.சிவசுப்பிரமணியன் | காலச்சுவடு பதிப்பகம்
தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்த பனை மரத்தைப் பற்றிய விரிவான சமூக, பண்பாட்டு ஆய்வு நூல் இது. இலக்கியம், வரலாறு, அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம், அரசியல், உணவு, பண்பாடு என்று பல்வேறு தளங்களில் பனை மரம் குறித்து ஆய்வு செய்திருக்கிறார் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்.
தாகங்கொண்ட மீனொன்று ரூமி | தமிழில்: என்.சத்தியமூர்த்தி | லாஸ்ட் ரிசார்ட் வெளியீடு
பாரசீகக் கவிஞரும் சூஃபி ஞானியுமான ரூமியின் கவிதைகளை ஆங்கிலம் வழி தமிழில் ‘கவிதை’களாகவே நல்ல மொழிபெயர்ப்பில் தந்திருக்கிறார் சத்தியமூர்த்தி. துல்லியமும் கவித்துவமும் ஒருங்கே அமையப்பெற்றதோடு அட்டகாசமான வடிவமைப்பிலும் வந்திருக்கும் நூல்!
நிச்சயமற்ற பெருமை: இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் | ஜீன் டிரீஸ், அமர்த்தியா சென் - தமிழில்: பொன்னுராஜ் | பாரதி புத்தகாலயம் வெளியீடு
உண்மையான வளர்ச்சி எது, இந்தியாவின் சிக்கல்களுக்கான சிடுக்குகள் எங்கே இருக்கின்றன என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவும் முக்கியமான நூல். பொன்னுராஜின் இயல்பான தமிழில். தமிழ்நாட்டின் பெருமைகளைத் தெரிந்துகொள்வதற்காகவேனும் இதைப் படிக்க வேண்டும்!
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் | ஆ.திருநீலகண்டன் | காலச்சுவடு பதிப்பகம்
நீடாமங்கலத்தில் 1937-ல் நடந்த தென்தஞ்சை மாவட்ட காங்கிரஸ் மாநாட்டின் விருந்தில் கலந்துகொண்ட தலித் மக்களுக்கு நேரிட்ட கொடுமையையும் அதற்கெதிரான திராவிட இயக்கத்தின் போராட்டத்தையும் வரலாற்றின் இடுக்குகளிலிருந்து கொண்டுவந்திருக்கிறார் ஆ. திருநீலகண்டன். முக்கியமான வரவு.
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? | பெரியார் ஈ.வெ.ரா. - பதிப்பாசிரியர்: பசு.கவுதமன் | என்.சி.பி.ஹெச். வெளியீடு
பல விஷயங்களைப் பற்றியும் பெரியார் கூறியவற்றை அவற்றின் பின்புலத்தை விடுத்து ஒற்றை வரி மேற்கோள்களாக எடுத்தாண்டு பெரியாரின் கருத்துகளைத் திரிக்க முயற்சிகள் நடைபெற்றுவரும் சூழலில் மிகவும் முக்கியத்துவம் உடையதாகிறது இந்தப் பெருந்தொகுப்பு. பல்லாண்டு உழைப்பு!
பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும் | டக்ளஸ் எம்.நைட் - தமிழில்: அரவிந்தன் | க்ரியா பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பரதக் கலைஞர்களுள் ஒருவரான பாலசரஸ்வதியின் இந்த வாழ்க்கை வரலாறு அவருடையதும் அவருடைய சாதனைகளுமுடைய தொகுப்பு மட்டுமல்ல; தமிழகமும், இந்தியாவும் நவீனமடைந்த கதை இதில் உள்ளது. அரவிந்தனின் உயிரோட்டமான மொழிபெயர்ப்பில்!
ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள் | ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் - தமிழில்: லியோ ஜோசப் | எதிர் வெளியீடு.
ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் எழுதி, 2015-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற, ‘தி ஆதிவாசி வில் நாட் டான்ஸ்’ சிறுகதைத் தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு. தேசிய அளவில் விவாதப்பொருளான தொகுப்பு இது!
(நன்றி: தி இந்து)