குழந்தைகளுக்கு ஏன் கதை சொல்ல வேண்டும்? குழந்தைகளை புத்திசாலியாக்க, கற்பனையை வளர்க்க, புதியது படைக்கும் திறனை வளர்க்க… கதை சொல்ல வேண்டும்.. இன்னும் அதிகமாக புத்திசாலியாக்க இன்னும் அதிகம் கதை சொல்ல வேண்டும்.
"கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்து விடும்.. கண்ணில் தோன்றாக் காட்சிகள் தான் கற்பனை வளர்த்து விடும்…" என்று ஒரு திரைப்பாடல் கூட உண்டு.
“Imagination Rules the World” என்பார்கள். கற்பனையே உலகை ஆள்கிறது. கற்பனையே புதியது படைக்கிறது. எனவே கற்பனைத்திறனை இளம் குழந்தைகளிடம் வளர்த்தெடுப்பதற்கு கதைகளே முக்கியமான வழி.
இந்த கதைகளை எவ்வாறு குழந்தைகளிடம் சொல்வது என்பதையும், கதைகளின் அவசியத்தையும் பற்றி இந்த சிறுநூல் அழகுற விளக்குகிறது.
“கதை சொல்லல் என்பது போதனையல்ல; மாறாக நிகழ்த்துதல்,குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும். கதைகள் வழியே பாடங்களை கற்பிக்கும்போது குழந்தைகளுக்கு பிடித்தமானதாகவும், சுய சிந்தனை உள்ளதாகவும், மனதில் எளிதில் பதியக்கூடியதாகவும் இருக்கும். கதை வழி சொல்லப்படுகிற எந்த வொரு விஷயத்தின் மீதும் குழந்தைகள் நம்பிக்கை கொண்டு அதனோடு வாழத் தொடங்கிவிடுகின்றனர்…” என்கிறார் நூலாசிரியர் முருகபூபதி.
“கதை வழியே, கதைகள் சுமந்த பாடல்கள் வழியேதான் நம் குழந்தைகள் உலகை அறிந்துகொள்கின்றனர். கதைவெளிதான் தங்களுக்கான வாழ்விடம் என்பதைத் தங்களையறியாமல் நம்பிக்கை கொண்டுள்ளனர்..” என குழந்தைகளுக்கான கதைகளின் அவசியத்தை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
“வகுப்பறைக்குள் வரும் குழந்தைகள் எப்போதும் தங்களுக்குள் பேசவே பெரும் விருப்பம் கொள்வார்கள். காரணம் எல்லோரும் வெவ்வேறு ஊர்க்குடும்பத்திலிருந்து வருகிறார்கள். அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ள எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. பேசுவதற்கான சுதந்திரத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு நாம் தரவேண்டும். நாம் சொல்வதை மட்டுமே அவர்கள் கேட்க வேண்டுமென நினைக்கிறோம். வகுப்பறைகளை முதலில் உரையாடல்களுக்கான வெளியாக மாற்ற வேண்டும்” என குழந்தைகள் பக்கம் நிற்கிறார் நூலாசிரியர்.
“சித்திரமிட்டபடி, ஆடியபடி, பாடியபடி, சப்தமிட்டபடி, தாவரங்களுடன் சண்டையிட்டபடி, விலங்கினங்களோடு, பட்சிகளோடு கதை சொல்லியபடி, தனக்குத் தானே உரையாடும் அவர்களது உரையாடல் என்றும் முடிவற்றுத் தொடர்கிறது. நாம் அதனை படைப்பூக்கமாக மாற்ற வேண்டும்” என நூலாசியர் ச.முருகபூபதி நமக்கு கூறுகிறார்.
படைப்பூக்கத்தை வளர்த்தெடுப்பது தானே இன்றைய கல்வியின் தேவை. புதிய அறிவியல் கருவிகள் படைப்பதற்கு படைப்பூக்கம் தானே தேவை. அறிவியல் படிப்பவர்களில் எத்தனை பேர் அப்துல் கலாம் ஆகிறார்கள்..? .. அறிவியலில் மட்டுமல்ல எதிர்காலத்தில் குழந்தைகள் ஈடுபடும் கலை, இலக்கியம் போன்ற எந்தத் துறையிலும் படைப்பூக்கத்துடன் திகழ, தொலைநோக்குப் பார்வையுடன் வலம்வர இச்சிறுநூல் கதை சொல்லலின் அவசியத்தைக் கூறுகிறது. சிறு நூல்தான், ஆனால் தவற விடக்கூடாத முக்கியமான நூல்.
இந்நூலை எழுதியுள்ள ச.முருகபூபதி ஒரு தேர்ந்த நாடகவியலாளர், கதைசொல்லி, குழந்தை எழுத்தாளர்.