இந்நூல் பெற்றோர்களுக்கான கதை வழிகாட்டி என்ற உப தலைப்புடன் வெளிவந்துள்ளது, எனினும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடியது. ஏனெனில் “பெற்றோர்கள் வீட்டிலிருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளியிலிருக்கும் பெற்றோர்கள்” என்பார்கள். எனவே இந்நூல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என இரு தரப்பினருக்கும் பயன்தரக்கூடிய முக்கியமான நூல். கதை சொல்லலின் அவசியத்தையும், கதை கேட்டலின் அவசியத்தையும், எந்தெந்த மாதிரியான கதைகளைச் சொல்லலாம் என்பது பற்றியும், பழைய கதைகளையே நவீன வடிவில் எப்படி மாற்றிச் சொல்லலாம் என்பது பற்றியும், கதைகளால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இந்த 67 பக்கங்களே ஆன சிறிய நூலில் பத்திரிக்கையாளரும், குழந்தை எழுத்தாளரும், கதை சொல்லியும், குழந்தை நேய செயல்பாட்டாளருமான விஷ்ணுபுரம் சரவணன் மிக எளிதாக விளக்கியுள்ளார்.
ஒரு குழந்தையை சிந்திக்கும் தன்மையுடைய அறிவாளியாக மாற்ற கதை சொல்ல வேண்டும், இன்னும் அறிவாளியாக்க இன்னும் கதை சொல்ல வேண்டும் என எங்கோ படித்ததாக ஞாபகம். கதை சொல்லும் கலை வெறும் பொழுது போக்கிற்கானது மட்டுமில்லை. கதைகளின் மூலம் கணிதம், அறிவியல் உட்பட எந்தக் கடினமான செய்தியையும் எளிதாக, மனதில் பதியும்படி கற்றுத் தர முடியும்.
இதே கருப்பொருளில் நாம் ஏற்கனவே பார்த்த ச.முருகபதி அவர்களின் நூலான “கதை சொல்லும் கலை” என்பதில் குழந்தைகளுக்கான கதைகளின் அவசியம் பற்றிக் கூற வருகையில், “கதை சொல்லல் என்பது போதனையல்ல; மாறாக நிகழ்த்துதல், குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும். வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், தத்துவம், கலாச்சாரம் என பல துறை அறிவும் கதைகள் வழியே கற்பித்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகவும், சுய சிந்தனை உள்ளதாகவும், மனதில் எளிதில் பதியக்கூடியதாகவும் இருக்கும். கதை வழியே, கதை சுமந்த பாடல்கள் வழியேதான் நம் குழந்தைகள் உலகை அறிந்து கொள்கின்றனர். கதைவெளிதான் தங்களுக்கான வாழ்விடம் என்பதைத் தங்களையறியாமல் நம்பிக்கை கொண்டுள்ளனர். குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சியின் தொடர்கதைகள், விளம்பரங்கள், கார்ட்டூன்கள், சண்டைக் காட்சிகள், டூயட் காட்சிகள், பாடல்கள் என அனைத்து நிகழ்ச்சிகளும் வெளிப்படுத்தும் தன்மையில் சொல்வதை மறுப்பின்றி சுய சிந்தனைக்கு வாய்ப்பற்று அப்படியே ஏற்றுக்கொள்ளுதலுக்கே அதிக அழுத்தம் தருவதால் கற்பனைத்திறனை மழுங்கடித்து விடுகிறது. ஆனால் கதை சொல்லுதல் அல்லது கதை சொல்லியிடம் உலவும் குழந்தைகள் கதைகள் குறித்து இடையிடையே உரையாடும் வாய்ப்புகள் இருப்பதால் கேள்விகள் கேட்பதும் கதையோடு ஒன்றிய விளையாட்டுக்கள் உருவாவது, பாடல்கள் உருவாவது எனப் பல்வேறு குழந்தைகளின் கற்பனாவெளிக்கு இட்டுச் செல்கின்றன. இவற்றை ஒருபோதும் தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்குவதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
நாம் இப்போது பார்க்கும் “ கதை கதையாம் காரணமாம்” என்னும் நூலும் கதை சொல்லலின் அவசியம் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறது. கதை சொல்வதும், கதை கேட்பதும் பொழுது போக்கவோ, தூக்கம் வரச் செய்யவோ அல்ல. உணர்வுகளைக் கடத்தவும், அன்பைப் பரிமாறிக் கொள்ளவும் எளிய வழி கதை சொல்லலே என்று முன்னுரையில் கூறியுள்ளார் நூலாசிரியர். கதைகளின் கதாபாத்திரங்களாக மாறி நாம் கதை சொல்லும்போது நமக்குள்ளும் இருக்கும் உறங்கிப்போன குழந்தைமை விழிப்படைவதை கதை சொல்வதால் கதைசொல்லிக்குண்டாகும் உணர்வு ப்பூர்வ அனுபவமாகக் குறிப்பிடுகிறார்.
ஒன்பது தலைப்புகளில் அடங்கியுள்ள இந்நூலின் முதல் தலைப்பு “கதைகள் ஏன் அவசியம்?” என்பதாகும். குழந்தைகளை நன்கு புரிந்து கொள்ளவும், நெருக்கமான அன்பை உருவாக்கிக் கொள்ளவும் கதைகள் நிச்சயம் உதவும் என்கிறார், மேலும் குழந்தைகள் புதிய சொற்களின் அர்த்தம் விளங்க கற்றுக் கொள்வார்கள் ; சொல்லும் செய்தியைக் கற்பனையில் காட்சியாக்கப் பழகிக் கொள்வர்; கதைகளில் வரும் உறவுகளுக்கான மதிப்புகளை உணர்ந்து கொள்வர். உரையாடும் தன்மை இயல்பாக செழுமைப்படும். ஒரு செய்தியைக் குழப்பம் இல்லாமல் சரியாகச் சொல்வதற்கு தன்னை அறியாமலே தயார் ஆவர். இவை எல்லாவற்றை விட கதை கேட்கும்போது உங்கள் குழந்தைகள் மிகழ்ச்சியாக இருப்பர்” என்கிறார். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டிலேயே கற்றல் அதிகம் நடைபெறுவது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
வயதுக்கேற்ற கதைகள் என்ற இரண்டாவது தலைப்பில், “கதையை, ஒரே விதத்தில் எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் சொல்லக் கூடாது, அப்படிச் சொல்லும்போது அவர்கள் சீக்கிரத்தில் சோர்ந்து போய் விடுவார்கள் என்கிறார். எனவே குழந்தைகளை ஐந்து வயதுவரை, 11 வயது வரை, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் என கதைசொல்லியின் வசதிக்கேற்ப மூன்று பிரிவாக பிரித்து, முதலாவது பிரிவுக்கு அவர்களுக்குத் தெரிந்த குறைந்த அளவு சொற்களைக் கொண்ட கதைகளையும் அதற்கு அடுத்த பிரிவினருக்கு அவர்களின் தன்மைக்கேற்ப சொல்வங்கியை விரிவாக்கிக் கூறலாம் என்கிறார்.
வடை சொன்ன கதை என்பது மூன்றாவது தலைப்பு. இதில் பாட்டி வடை சுட்ட கதையையே சூழலுக்குத் தக்க மாற்றி சுவாரசியம் கூட்டி, தூக்கிச்செல்லப்படும் வடையே தன் கதையைச் சொல்வதாகவும், தூக்கிச் செல்லும் காகம் தன் கதையைச் சொல்வதாகவும் சொல்லும்போது அல்லது குழந்தைகளைச் சொல்லச் சொல்லி ஊக்கப்படுத்தும்போது கதைக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைப்பதை உணர்த்துகிறார்.
குழந்தைகளை எல்லோருக்குமே பிடிக்கும். ஆனால், குழந்தைகளுக்கு சிலரைத்தான் பிடிக்கும். அந்த சிலரில் நீங்களும் இருக்க வேண்டுமெனில் குழந்தைகளுக்கு நிறைய கதை சொல்லுங்கள் என்னும் “குழந்தைகளுக்கு யாரைப் பிடிக்கும்?” என்ற நான்காவது கட்டுரை குழந்தைகள் நேசிக்கும் மனிதராக நாம் மாற வழிகாட்டுகிறது.
கதைகளே பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான உரையாடலை சுவராஸ்யமாக்குகிறது என்னும் நூலாசிரியர் கதையைத் தேடி அலைய வேண்டியதில்லை, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வைத்தும், பார்க்கும் பொருட்களை வைத்தும் கதைகளை உருவாக்கலாம். மேலும் குழந்தைகளையும் கதை சொல்ல உற்சாகப்படுத்தலாம் என்கிறார். இவ்வாறு செய்வதால் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், பொருட்களோடு குழந்தைகள் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். இதனால் பிள்ளைகளின் கவனிப்புத்திறன் அதிகமாகிறது என்று “எத்தனையோ கதைகள்…. உங்கள் பாதையில்” என்னும் ஐந்தாவது கட்டுரையில் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
ஒரு கதைசொல்லி மாணவர்களை திறந்த வெளியில் வானை உற்று நோக்கச் சொல்கிறார். பிறகு அவர்கள் வானில் கண்ட மேகத்தையும், அதில் தெரிந்த கற்பனை உருவத்தையும் இணைத்து மாணவர்களை கதையை உருவாக்கச் சொல்கிறார். மாணவர்களிடமிருந்து புதிய புதிய கதைகள் உருவாகி வெளிவருவதைக் கண்டு கூட்டம் சொக்கிப் போகிறது. இதனை தனது “இந்தக் காலத்துப் பிள்ளைகள் கதை கேட்க விரும்புகிறார்களா..?” என்ற ஆறாவது கட்டுரையில் குறிப்பிட்டு, சொல்லும் முறையில் சொன்னால் கண்டிப்பாக கதைகளை இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமில்லை எல்லாக் காலத்துப் பிள்ளைகளுக்கும் பிடிக்கும் என்கிறார் நூலாசிரியர்.
கார்ட்டூன் சேனல்களைவிட கதைகள் எத்தனையோ படிகள் மேலானவை என்பதைக் கூறும், “கார்டூன் சேனல்களும் கதைகளும்” என்ற ஏழாவது கட்டுரை மிக முக்கியமானது. இதில் “கார்டூன் சேனல்களில் கதையைக் காட்சியாக மாற்றிவிடும்போது பிள்ளைகள் பார்வையாளராக மட்டுமே சுருங்கி விடுகின்றனர். ஆனால் கதை சொல்லப்படும் போது கதை சொல்பவர் மற்றும் கேட்பவருக்குமிடையே ஓர் உரையாடல் நிகழ்கிறது”. இது முக்கியமான விஷயம் என்கிறார் நூலாசிரியர்.
“கல்வியைப் பிள்ளைகள் உணர்ந்து நெருக்கமாகக் கற்றுக்கொள்ள, நல்ல தோழமையாக கதைகள் உதவுகின்றன. இருளில் செல்லும்போது பாதைக்கு வெளிச்சமிடும் டார்ச் போன்றதுதான் கதைகள். வெளிச்சம் வந்தவுடன் அல்லது சேரும் இடம் வந்தவுடன் டார்ச்சுக்கு வேலையில்லாமல் இருக்கலாம். ஆனால், பயணத்தை எளிமையாக்கியது கதைகளே” என்று கல்வியில் கதையின் இடத்தை “கல்விப் பயணம்… கதைகள் இருந்தால் சுலபம்!” என்ற எட்டாவது கட்டுரையில் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
கடைசி ஒன்பதாவது கட்டுரை, “அம்மா சொல்லும் கதை…. அமுதம்!” என்பதாகும். இதில் தமிழகத்தில் சமகால முக்கியமான கதைசொல்லிகளான வேலு சரவணன், ஜீவா ரகுநாத், ஆழி வெங்கடேசன், ஆயிஷா நடராசன், யூமா வாசுகி உள்ளிட்ட சிலரைப் பற்றிய தகவல்களையும், அவர்களின் சிறு பேட்டியையும் குறிப்பிடுகிறார் இந்நூலின் ஆசிரியரான விஷ்ணுபுரம் சரவணன்.
ஒட்டுமொத்தத்தில் 67 பக்கங்களைக் கொண்ட இந்நூல் கதைப்புத்தகமல்ல, கதைகளைப்பற்றிய அருமையான புத்தகம். கதைகளின் அவசியத்தையும், கதை சொல்லும் முறைகளையும் எளிய மொழியில் அருகிலிருந்து ஒரு நண்பன் உரையாடுவது போல இந்நூல் விளக்குகிறது. நான் இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள மிக முக்கியமான கருத்துக்களை மட்டும் இங்கே தந்துள்ளேன். உள்ளே ஒவ்வொரு பகுதியிலும் நிறைய அனுபவப் பகிர்தல்கள், நிறைய கதை சொல்லும் முறைகள் ஆகியவை உள்ளன.
குறைவான பக்கங்கள்… நிறைவான தகவல்கள்…