கருத்துரிமைக்கெதிராக சைவ-இந்துத்துவ வெறியர்கள்

கருத்துரிமைக்கெதிராக சைவ-இந்துத்துவ வெறியர்கள்

இப்போதெல்லாம் தலையணை கனத்தில் நாவல் எழுவது பேஷனாகிவிட்டது. நாவலாசிரியர் சோலை சுந்தரபெருமாள் எழுதிய சமீபத்திய நாவலான தாண்டவபுரம் 700 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல். இவரது நாவல்களில் இதுதான் பெரியது என்று எண்ணுகிறேன். இந்நாவலை சென்ற ஆண்டு அக்டோபர் 10 , 2011 அவரிடமிருந்து வாங்கினேன். இந்த மாதிரி பெரிய நாவல்கள் புரட்டிப் படிக்கவே பெருமலைப்பை உண்டுபண்ணுகின்றன.எனவே படிப்பதை ஒத்திவைத்துவிட்டேன்.

இந்த நாவல் திருஞானசம்பந்தரையும் சைவமதத்தையும் இழிவுப் படுத்துகிறது என்று சொல்லி இந்நாவலை தடை செய்யவேண்டும், சோலை சுந்தரபெருமாளை கைது செய்யவேண்டும்,பாரதி புத்தகாலயம் மீதும் சோலை மீதும் வழக்கு தொடரவேண்டும் என்றெல்லாம் பல கோரிக்கைகளை இந்து மக்கள் கட்சியும் சைவ மடங்களும் எழுப்பி நூல் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் இறங்கியுள்ளன. தமிழக அரசியல்,தினமலர் உள்பட சில இதழ்கள் இவற்றிற்கு தேவைக்கதிகமான முக்கியத்துவம் அளிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

நாவலைப் படித்துவிட்டு விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு தடை செய்யவேண்டும் என்று கூக்குரலிடுவது மிகவும் ஆபத்தானது. இந்த மதவெறிப் போக்கை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

இந்த நாவலில் சைவ ஆதரவுக்கூறுகள் நிரம்ப இருக்கின்றன. அவைதீக மதங்களான பவுத்த,சமண மதங்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறைந்து சைவமதத்தை உயர்த்திப்பிடிக்கும் போக்கு மிகுந்த இந்நாவலை சைவ -இந்துத்துவ வெறியர்கள் இப்படி அணுகுவது வியப்பாக உள்ளது. திருஞானசம்பந்தர் தேவதாசி மனோன்மணியுடன் இல்வாழ்வு மேற்கொண்டார் என்பதுதான் அவர்களுக்கு இடைஞ்சலாக உள்ளதென்று கருதவேண்டியிருக்கிறது. இதை அவர்களும் உறுதிப்படித்தியுள்ளனர்.

சோலையின் முந்தைய நாவலான மரக்காலில் இருந்த சைவத்தை பெரிதும் உயர்த்திப்பிடிக்கும் தன்மையை சஞ்சாரம்- 1 (மார்ச்-2008) இதழில் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தேன். இந்த நாவல் குறித்தும் வேறொரு சமயத்தில் விரிவாக எழுத உத்தேசம்.

சோலையின் மரக்கால், தாண்டவபுரம் ஆகிய எந்த நாவலாகட்டும் நம்முடைய விமர்சனம் இந்த நாவல்களின் தேவை மற்றும் அவற்றின் சித்தரிப்புகளில் ஊடாடும் சில சார்புத்தன்மைகள் குறித்ததாகும். கருத்துரிமைக்கெதிரான இந்து மத வெறியர்களின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கெதிரானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. சோலையின் சைவத்தமிழ்ப்பற்று இந்த வெறியர்களின் தரப்பை நியாயப்படுத்துவதில் முடிந்துவிடக்கூடதென்பதுதான் நமது நியாயமான கவலை. இதனால்தான் இந்த சைவச் சார்புத்தன்மையை நாம் கடுமையாக விமர்சிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சோலையும் இந்த சைவ-இந்துத்துவ வெறியர்களும் வேறுபடும் புள்ளிகள் இருப்பதனால் நாம் சோலையின் ஆதரவுத்தரப்பில் நின்று பேசவேண்டியிருக்கிறது. இந்த நூலிழை வேறுபாடு அறுந்துவிடும் அபாயம் எப்போதும் உண்டு. இந்த சைவத்தமிழ்ப்பற்று நாளடைவில் வேறு ஏதேனும் உருமாற்றம் அடைந்து முற்றிலும் அடித்தட்டு மக்களுக்கு எதிராகப் போய்விடக்கூடிய அபாயத்தையும் நாம் கவனத்தில் கொண்டாகவேண்டும்.

ஜனநாயகத்தின்பால் அக்கறையுள்ள எவரும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இத்தகைய செயல்களை கண்டிக்காமல் இருக்கக்கூடாது. இந்திய அளவில் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போன்றோரின் எழுத்துக்களுக்கு இன்றுவரை நீடிக்கும் தடை நமது நாட்டை உலக அரங்கில் இழிவுபடுத்துவதாக உள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பெரியார் பிறந்து வாழ்ந்த மண்ணில் மதவெறி தலையெடுக்க நாம் அனுமதிக்கக்கூடாது.

இத்துடன் சோலைசுந்தரபெருமாள் 01..02.2012 அன்று பத்தரிக்கைகளுக்கு அளித்த அறிக்கையை இணைத்துள்ளேன்.
அந்த அறிக்கை கீழே.

சோலைசுந்தரபெருமாள் வெளியிட்ட அறிக்கை:

திருவாரூர். நாள்: 01..02.2012

ஜனவரி 23 ஆம் தேதி கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள பாரதி புத்தகாலயம் முன் கூடிய இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திடீரென பதிப்பகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள் என்றும் என்னுடைய ‘தாண்டவபுரம்’ நாவலை அங்கேயே தீயிட்டுக் கொளுத்தினார்கள் என்று ‘தமிழக அரசியல்’ என்ற இதழின் செய்தியாளர் தெரிவித்தார். அப்போது, அது பற்றிய என்னுடைய கருத்துக்களைக் கேட்டார். நான் சொன்னவற்றில் ஒரு கருத்தை மட்டும் வெளியிட்டு அவ்வமைப்பின் பொறுப்பாளர்கள் தெரிவித்தக் கருத்துக்களை விரிவாக வெளியிட்டுள்ளது அவ்விதழ்.

அவ்வமைப்புகளின் கருத்தாவது,

1. சைவசமயக் குரவர்களின் ஒருவரான திருஞானசம்பந்தர் தேவதாசி பெண்ணான மனோன்மணியும் இகவாழ்வு கொண்டார்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இகவாழ்வினை நெருங்காமல் சிவனை போற்றிப் பாடியே தன்னுயிர் நீத்த திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலற்றை தவறாக திரித்து எழுதியுள்ளார், நாவலாசிரியர். இது சிவபக்தர்களை புண்படுத்தும் விதமாகவும் இந்து மதத்தை இழிவுபடுத்து விதமாகவும் உள்ளது.

2. சிவஅடியாராக – அவதாரக் கடவுளாராக மதிக்கப் பெறுபவரான திருஞானசம்பந்தரை 16 வயது வரையே வாழ்ந்தவரை தேவதாசிப் பெண்ணுடன் இகவாழ்வைத் தொடக்கினார் என்று சொல்லப்பட்டு இருப்பது இந்துமதத்தையே இழிவுபடுத்திடும் செயல்’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

நாவல் படைப்பின் நோக்கம் யாரையும் இழிவு படுத்திடும் போக்கில் அமையவில்லை என்பதை வாசிப்பவர்களுக்கு எளிதில் புரிந்து விடும். மேலே குறிப்பிடப்பட்டவை அனைத்தும் மேலெழுந்த வாரியான – அல்லது திட்டமிட்டு என் படைப்பின் மீது அவதூறு செய்யும் நோக்கம் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. என்னுடைய படைப்புக்கு உந்து சக்தியாக இருந்தவை அருளாளர் திருஞானசம்பந்தரின் பாடல்கள் காட்டும் அகச்சான்றுகளும் அவர் வாழ்ந்தகால சமூக வரலாறு, பண்பாட்டுச் சான்றாதாரங்களும் ஆகும்.

சிவபெருமானின் தோற்றம் தொல்சமூகத்தில் இறுதிகட்டத்தில் – வேளாண்சமூகம் வளர்ச்சிப் போக்கில் வளர்த்து எடுக்கப்பட்டது. அவருக்கு உரிய மொழி தமிழ் என்றே வரலாறு காட்டுகிறது. புராணங்கள், சிவபெருமான் தான் தமிழைப்படைத்தார் என்று சுட்டுகின்றன. சிவத்தையும் தமிழையும் உயர்த்திப்பிடித்து எதிராளிகளிடம் இருந்து தற்காத்துக் கொண்டதே பக்திஇயக்கம் – இலக்கியம் என்பது. இக்கருத்தே நாவல் முழுதும் விரவிக்கிடக்கிறது. இப்படியான படைப்பில், இயற்கைக்கோ, அறிவியலுக்கோ முரணானாதாக ஒரு இடத்தில் கூடப் படைக்கப்படவில்லை.

வர்ணத்துக்கு எதிராகப் போராடிய சமணத்தை வீழ்த்த வேதமதத்தால் முடியவில்லை. காரணம், அவர்கள் தங்கள் வர்ணாசிரம தர்மத்தை கைவிட முன்வரவில்லை. கூடவே தமிழை நீசமொழி என்று புறந்தள்ளி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்தார்கள். அவ்வேளையில் தான், சமத்துவக்குரலோடு சிவமதம் (இன்றைக்கு சைவமதம்) சமணத்தின் துறவற நெறிக்கு எதிராக போர்க்குணம் பெற்றது. அதாவது தமிழ் மரபுக்குப் பொருந்துவதாகவும் இயற்கை வாழ்வுக்கு உகந்ததாகவும் இகவாழ்க்கைக் கொள்கையினை உயர்த்திப் பிடித்தது.

இதனைத்தான் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் பக்திஇயக்கத் தத்துவமாக உட்படுத்திக் கொண்டார்கள். அன்றைக்கு சமஸ்கிருதமும், பாலியும், பிராகிருதமும் தமிழின் தொன்மையை அழித்திடும் செயலில் இறங்கிடும் போது இம்மண்ணின் மக்கள் மொழியான தமிழை முன்னிருத்தியிருக்கிறார்கள். திருஞானசம்பந்தர் தன்னையே `தமிழாக’ உருவகப்படுத்திக் கொண்டு பக்திஇயக்கத்தினை தொடர்ந்திருக்கிறார். தேவார ஆசிரியர்களும் பக்திஇயக்கத்திற்கு உகந்த இலக்கியமாக தேவாரத்தினைப் படைத்தளித்திருக்கிறார்கள்.

திருஞானசம்பந்தர், தன் பதிகங்களில் சிவபெருமான் – பார்வதிதேவியாரின் பெருமையினை வெளிப்படுத்திடும் நூற்றுக்கணக்கான பாடல்களில் இகவாழ்வு குறித்து பதிவு செய்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் மற்ற தேவார ஆசிரியர்களும் நெகிழ்வோடு பெண்களின் உறுப்புகளையும் அவ்வுறுப்புகளின் அசைவு நிலையையும் தங்கள் படைப்புகளில் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் நோக்கமெல்லாம் இகவாழ்வை பெருமிதமாகவே பார்த்திருக்கிறார்கள்; இழிவாக கருதவேயில்லை. அதுவே, அன்றைய வரலாற்றுத் தேவையாகயும் இருந்திருக்கிறது.

இல்லாவிட்டால், தேவாரம் பாடிய மூவரில் சுந்தரர், பரவை நாச்சியார் என்னும் தேவதாசிப் பெண்ணோடு இகவாழ்வைக் கொண்டு இருப்பாரா? இதனையும் சிவபெருமானே ஏற்றுக் கொண்டாரே! சிவபெருமானே, பரவைநாச்சியாரிடம் தூது போயிருக்கிறாரே! இதற்காக எந்த சிவத்தொண்டரும் மனம் நொந்ததாகத் தெரியவில்லையே. மாறாக பரவசப்பட வில்லையா?

திருஞானசம்பந்தர், மனோன்மணியோடு இகவாழ்வை கொண்டார் என்று `தாண்டவபுரம்’ படைப்பில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை சேக்கிழார் அவ்வாறு கூறவில்லை என்று கூறலாமே தவிர அது சிவத்தொண்டர்களின் மனத்தைப் புண்படுத்துகிறது என்பதோ, சிவமத்தின் கட்டமைப்பைச் சிதைப்பதற்காகச் செய்யப்பட்டது என்பதோ சரியான புரிதலில் சொல்லப்படவில்லை.

சிவமதத்தின் கட்டமைப்பைச் சிதைப்பதற்காக தாண்டவபுரம் நாவல் படைக்கப்பட்டது என்று சொல்ல்வது சரியென்றால் சுந்தருக்காக, சிவபெருமான், பரவைநாச்சியாரிடத்துத் தூது போனதும், சுந்தரர் தேவதாசிப்பெண்ணோடு இகவாழ்வில் ஈடுபட்டதும் கூட சைவமதக் கட்டமைப்பைச் சிதைக்கப் போதுமானவையே! இவ்விடத்தில் சுந்தரருக்கு ஒரு நீதி, திருஞானசம்பந்தருக்கு ஒரு நீதி என்பது சரியா?

இன்னும் சொல்லப்போனால் இந்த பக்தி இயக்கம் கி.பி.7 ஆம் நூற்ற்றாண்டின் தொடக்கக் காலத்தில்தான் எழுச்சி பெற்றிருக்கிறது. நாவலை களங்கப்படுத்தும் இவர்கள் சான்றாகக் காட்டும் பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழார் 12 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவர்.

திருஞானசம்பந்தரும் மற்றைய தேவார ஆசிரியர்களின் வரலாறும் கட்டமைக்கப்படும் காலம் 12 ஆம் நூற்றாண்டு. அக்காலத்தில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு புனைவுகளை உட்படுத்தி சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்திருக்கமுடியும். அவர் இயற்கையின் படைப்பாற்றலையும் சமூக அறிவியல் கண்ணோட்டத்தையும் கணக்கில் கொள்ளவில்லை. பெரியபுராணத்தை கூர்ந்து படிப்பவர்கள் இதனை நன்கு உணரமுடியும்.

திருஞானசம்பந்தர், திருமணத்திற்குத் தயார் நிலையில் அவர் மனமும் உடலும் இருந்திருக்கிறது. என்று தானே அவர் பெற்றோர்கள் மணம் முடிக்க முன்வந்திருக்கிறார்கள். அவரோடு சேத்திராடனம் கொண்டு இருந்த பக்தர்களோடு அவரும் மணக்கோலத்தில் இருந்த போது மணமகளோடு தானே ஜோதியில் கலந்தார் என்று சேக்கிழார் கூறுகிறார். திருஞானசம்பந்தர் பதினாறு வயதிலேயே திருமணத்திற்குத் தயாரானார் என்பதில் இருந்தே அவருக்கு இகவாழ்வில் நாட்டமிருந்தது என்று புரிதலுக்கு ஏன் வர மறுக்க வேண்டும்?

அன்றைக்கு தேவார ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்திருக்கும் திருஞானசம்பந்தர் இகவாழ்வை முன்னிறுத்தி, சிவத்தையும் தமிழையும் முன்னெடுத்து மேற்கொண்ட சேத்திராடனப்பயணத்தால் வேளாண்மக்களைத் திரட்டி சமணமதத்தில் பெரும்பான்மையாக இருந்த வணிகர்களை சிவமத்தின் பக்கம் ஈர்த்துள்ளாரல்லவா? இவை தானே பக்திஇயக்கத்திற்கு மாபெரும் வெற்றி என்று வரலாற்று ஏடுகள் பேசுகின்றன.

எனவே, சிவமதத்திற்கும் அதன் மரபுக்கும் எதிராக ஒரு போதும் இந்நாவலான, `தாண்டவபுரம்’ படைக்கப்படவில்லை என்று உறுதியாக சொல்லுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. பக்தியியக்கத்தவர்கள் உணர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. சமூக அறிவியலுக்கும் பண்பாட்டுக்கும் முன்னுரிமை அளித்துள்ளார்கள். அதுதானே பின்னாட்களில் உருக்கொண்ட சைவசித்தாந்த மரபு நமக்கு கைவிளக்காக இருக்கிறது.

தாண்டவபுரம் நாவல் குறித்து இப்படியான பிரச்சாரம் செய்பவர்கள் போராட்டங்களைச் செய்து மக்களை திசைத்திருப்பிட பார்க்கிறார்கள். தொடர் போராட்டங்களை நடத்திட திட்டமிட்டுள்ளார்கள். இத்தனைக்கு இப்படியான பொய்மையை பரப்பிடுபவர்கள், நாவலை படிக்கவே இல்லை என்று தெரிகிறது. இப்படியான செயல் ஜனநாயக உரிமைகளுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு எதிரான செயலாகவே படுகிறது.

(நன்றி: மு. சிவகுருநாதன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp