“மறைந்த டாக்டர் பாலகோபால் என மதிப்பிற்குரிய வழிகாட்டி. அவர் தெலுங்கில் எழுதிய 36 கட்டுரைகளை நீண்ட காலம் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த மாதவ், வி.பி. சிந்தன் நினைவில் தொடங்கிய சிந்தன் பதிப்பகம் மூலம் வெளியிட்டு தமிழுக்கு இந்தக் கொடையை அளித்துள்ளார்” என்று தன் முகநூலில் குறிப்படுகிறார் பேரா. அ.மார்க்ஸ்.
1983 முதல் 2009 வரை தெலுங்கில் இந்துத்துவம் தொடர்பாக மனித உரிமைப் போராளி பாலகோபால் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் புலமையுடைய மாதவ் அழகுற மொழிபெயர்த்துள்ளார். ‘மேற்தோற்றத்தில் வெளிப்படும் எளிமைக்கு அப்பால் மிக ஆழமாக நம்மைச் சிந்திக்க தூண்டுபவை இதிலுள்ள கட்டுரைகள்.’
‘பெருகிவரும் இந்து மதவெறி, வெறும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் ஆபத்தானதல்ல. ஜனநாயக பெருமதிகளுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் ஆபத்தானது.’ இந்நிலையில் இந்நூல் புதிய வெளிச்சத்தை நமக்கு கொடுக்கிறது. பாலகோபால் முன் வைக்கும் முன்மொழிவுகள், கருத்துகள், விமர்சனங்கள் அனைத்துமே ‘நோய்நாடி’ குறளின் அடியொட்டி எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது.
‘பிராமண தர்மத்தில் ஜனநாயகம்’ என்ற 70 பக்க கட்டுரையில் மனு குற்றவியல் நியதி – குடியுரிமைகள், உடல்சார் வன்முறை, பாலியல் குற்றங்கள், அரசு இயந்திரம், அதிகார இயந்திரம், நிதி அமைப்பு போன்றவைகளை ஆழமாக விவாதிக்கிறார். சட்டக் கல்லூரியில் சட்டவியலின் வளர்ச்சியைப் (jurisprudence) படிப்பவர்களுக்குக் கூட இது கற்பிக்கப்படுமா எனத் தெரியவில்லை. பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வரக் கூடாது என சிவசேனா வெறியர்கள் கூச்சலிட்டதை அநாகரிக போக்காக அனைவரும் திட்டினர். ஆனால் கார்கில் யுத்தம் நடைபெறுகையில் வாஜ்பாயி அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்தது என்று சோனியா காந்தி வைக்கிற குற்றச்சாட்டின் வித்தியாசம் தன்னைப் போன்ற ‘மந்தபுத்தியினருக்கு’ புரிவது கடினம் என்று (தாமரை பூத்ததில் யாருக்கு எவ்வளவு பங்கு?) கவலைப்படுகிறார்.
சம அந்தஸ்து வேண்டும் போராட்டங்கள், ஆதிவாசிகள் போராட்டங்கள், ஜமீன்தார் கையிலுள்ள நிலங்கள் நிலமற்றவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனும் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள் போன்றவைகளில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, அம்பேத்கர், பெரியார் ஆகியோரை பின்பற்றியோரை காணமுடியும். ஆனால் என்றைக்கும் எந்தப்பெயரில் இருந்ததாலும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் போராட்டங்களுக்கு மட்டும் பரிவார் கும்பல் துவக்கம் முதல் எதிரானவர்களே என்று கல்வி – கருத்தியல் கட்டுரையில் கூறுகிறார்.
‘தலித் பகுஜன அரசியல் ஊழல் மயமான அமைப்பின் பகுதியாகவே வளர்கின்றது’ என்று வருத்தப்படுகிறார். பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் இந்துக் கோவில்களை இடித்ததைப் பற்றி அந்த நாடுகளின் பிரமுகர்கள், அறிஞர்கள் பெரிய அளவில் கிளர்ச்சி செய்தனர்’ என்கிறார்.
சவுதி தவிர அரபு நாடுகள் அனைத்தும் மதச் சார்பற்ற அரசுகளே என்கிறார். தனிநபர் சட்டங்கள் ஜனநாயகப் படுத்தப் பட வேண்டும் என்கிறார். தொகாடியாவின் ‘ஆவேசம்’ பற்றி பேசுகிறார்; நீதிமன்றங்களின் சாய்வு பற்றி பேசுகிறார். திருமலையில் ஒரு உள்ளாட்சி அமைப்பு இல்லாதது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைப்பு இல்லாதது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்கிறார் (திருப்பதியில் மத அரசு வேண்டுமா?)
பேரா.அ.மார்க்ஸ் முன்னுரையும், 2009 – 2015 என்ற தலைப்பில் ஆழமான பின்னுரையும் எழுதியுள்ளார். ‘கடினமே ஆனாலும் இதுதான் வழி’ என்று பிஜூ மேத்யூ தெலுங்கு பதிப்பிற்கு எழுதிய முன்னுரையும் இதில் உள்ளது. இந்த நூலுக்காக தனியான ஆய்வரங்குகள் நடத்தலாம்.
மொத்தத்தில் இந்த நூல் அதன் பெயர் காரணத்தை நூறு சதவீதம் உண்மையாக்கி இருக்கிறது.
(நன்றி: தி டைம்ஸ் தமிழ்)