குழந்தைகளின் கல்வியைப் பற்றிய கவிதைகள் என்றால் மூன்று கவிதைகளை ஆகச் சிறந்தது எனலாம். முதலாவது கவிஞர் கலீல் கிப்ரானின்,
“உங்கள் குழந்தைகள், உங்களின் குழந்தைகள் அல்ல
அவர்கள் எதிர்கால வாழ்வின் பிள்ளைகள்!
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்;
ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் –
உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனென்றால் அவர்களுக்கென்று
அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் சரீரத்தை நீங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கலாம் – ஆன்மாவை அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில்கூட
சென்றடைய முடியாது
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால் அவர்களை உங்களைபோல ஆக்கிவிடாதீர்கள்
வாழ்க்கை பின்னோக்கியோ
நேற்றைக்கோ செல்வதில்லை
நீங்கள் உங்கள் பிள்ளைகள் எனும்
வாழும் அம்புகள் அனுப்பப்படும் வில் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்!”
என்னும் கவிதை. இது பெற்றோருக்குச் சொல்லப்பட்டது போன்று தோன்றினாலும் ஆசிரியருக்கும் பொருத்தமுடையதே ஏனெனில் “பெற்றோர்கள் வீட்டிலிருக்கும் ஆசிரியர்கள்; ஆசிரியர்கள் பள்ளியிலிருக்கும் பெற்றோர்கள்” என்பார் கவிஞர் நா.முத்துநிலவன். இந்த கவிதை கல்விப் புலத்தில் மிகப்பெரிய வெளிச்சம் பாய்ச்சிய கவிதை.
இரண்டாவது கவிதை கவிக்கோ அப்துல் ரகுமானின் ,
“பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்
குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து
புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்
அவன் மேலும் சொன்னான்…
குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?
உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன"
இக்கவிதை குழந்தையின் அறிவை மட்டுமல்ல, அவர்களின் குழந்தைப் பருவத்தை மட்டுமல்ல, அவர்களையே வேட்டையாடும் நமது கல்விமுறையின் மீது, பாடப் புத்தகங்களின் மீது மிகப்பெரிய விமர்சனத்தை வைத்த கவிதை.
மூன்றாவது கவிதை ஆசிரியரும் கவிஞருமான பழ.புகழேந்தியின் கவிதை...
““சார்”
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.
“சார்”
உடனே மற்றொருவன். . .
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.”
இந்த ஒற்றைக் கவிதையை பேராசிரியர். ச.மாடசாமி அவர்களின் ஆளுக்கொரு கிணறு நூலில் முதன்முதலாகப் படித்தேன்.. எளிய வரிகள்.. மிக மிக எளிய வரிகள், ஆனால் மிகு வலியைத் தந்த மிக எளிய வரிகள். வகுப்பறை வன்முறை என்பது உடல்ரீதியான தாக்குதல் மட்டுமென நினைப்போரின் சட்டையைப் பிடித்து உலுக்கிய கவிதை. இந்த கவிதையைப் படித்துவிட்டு நான்கு வருடம் இந்தப் புத்தகத்தை கடைகடையாய்த தேடி இருக்கிறேன். கடைசியாக 2017 மதுரை புத்தகக் காட்சியிலும் நண்பரின் உதவியுடன் தேடிப்பார்க்கச் சொன்னேன், இல்லை.. பின் முகநூலில் தொடர்பு எண் கண்டு வாசல் பதிப்பக பொறுப்பாளரிடம் மதுரை கண்காட்சியில் கரும்பலகையில் எழுதாதவை புத்தகம் கிடைக்குமா? என்று வினவினேன்.. இருக்கும்… புலம் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், கீழைக்காற்று பதிப்பக காட்சியகங்களில் கேட்கச் சொன்னார், ஏனெனில் இக்கண்காட்சியில் வாசல் பதிப்பகம் கலந்துகொள்ளவில்லை என்ற தகவலையும் சொன்னார்.. என் நண்பர் மேலே சொன்ன அனைத்து பதிப்பக காட்சியகங்களிலும் கேட்க, அவர்கள் சொன்ன பதில் “புத்தகம் தீர்ந்து விட்டது” என்ற ஒற்றை பதில்.. சோர்ந்து போய் முகநூலில் மறுபடியும் தேடி ஒரு தொடர்பு எண்ணை கண்டு அழைத்தேன். எடுத்தது நூலாசிரியரின் தந்தை. நூலை பற்றி விசாரித்ததும் அவரின் மகிழ்விருக்கிறதே.. அப்பப்பா.. ஒரு தந்தைக்கு மகன் தேடித்தந்த மிகப்பெரும் கௌரவம். அவரிடம் புத்தகம் வேண்டும் என்றவுடன் “ஒரு வேலையாக தஞ்சாவூருக்கு இன்னும் நான்கு நாட்களில் வருகிறேன்..அப்போது புத்தகம் கொண்டு வருகிறேன்” என்றார். அதே போல் தஞ்சை வந்தவரிடமிருந்து புத்தகத்தை மிகுந்த மகிழ்வுடன் பெற்றேன். வீட்டுக்கு வந்த வேகத்தில் ஒரே மூச்சில் படித்தே விட்டேன்.
மொத்தம் 46 கவிதைகள்தான். அனைத்தும் கல்வி என்னும் ஒரே கருப்பொருளின்கீழ் அமைந்த கவிதைகள். பல பரிமாணங்களைக் கொண்ட கல்வித்துறையின் ஒவ்வொரு சிக்கல்களும் கடைசியாக பாதிப்பது குழந்தைகளையே என்று கலகக்குரல் எழுப்பிய வரிகள். முதல்முறை படிக்கும்போது எளிமையாக இருந்த கவிதை வரிகள் மறுபடி படிக்கும்போதும் , மனதால் நினைக்கும் போதும் அதன் கணம் கூடிக்கொண்டே செல்கிறது.
கவிதை நூலை விமர்சனம் செய்வது மிகக் கடினம், ஏனெனில் கவிதைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே இந்நூலிலுள்ள கவிதைகளில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்,
“விடை சொல்லவே
பழக்குகிறோம்.
பழக்கியதே இல்லை
கேள்வி கேட்க”
என்னும் கவிதையில் தற்போதைய மனப்பாடக் கல்வி முறையின் மீது சாட்டையைச் சொடுக்குகிறார்.
சறுக்கல் விளையாட
ஆசைப்பட்டான்.
“சார்
ஏறி,ஏறி
சறுக்கப் போகிறேன்”
“மாற்றிச் சொல் குழந்தாய்
சறுக்கச் சறுக்க
ஏறப்போகிறேன்.”
சறுக்கல் இயற்கை
ஏறுதலே முயற்சி.
என்னும் கவிதையில் மிளிரும் தன்னம்பிக்கையை குழந்தைகளுக்கு மட்டுமே விட்டுத் தர முடியாது. நானும் எடுத்துக் கொள்கிறேன்.
இவரின் 46 கவிதைகளையும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கவிஞர் ஆசிரியராக மட்டும் இல்லாமல் போனால் இந்தக் கவிதைகளை எழுதி இருக்க முடியாமல் போயிருக்கலாம், ஏனெனில் ஒவ்வொன்றும் அவரின் அனுபவ மொழி. வகுப்பறையின் மிகக் கூரிய உற்றுநோக்கல்கள். அடித்து விட்டு அழும் இளகிய மனம்! ஆசிரியரின் சட்டை தனது அப்பாவின் சட்டை போல இருப்பதைக் கண்டு அப்பாவின் நினைவுவந்து அழுத குழந்தையால் உருகிய உள்ளம் கொண்டு அவர் எழுதிய
“சட்டையின் கோடுகளுக்குள்
ஒரு ஞாபகத்தின் சிறையிருப்பு
கழற்றிப் போடும்வரை
கனமாகவே இருந்தது
உடம்பில்”
என்னும் கவிதையால் உருகிப் போனது அவர் மட்டுமல்ல நானும்தான்.
அழுக்குச் சீருடை என்று மாணவனிடம் கோபிக்க அடுத்த நாள் அவன் அணிந்து வந்த ஈரச்சீருடை கண்டு பதறிப் போய் அவர் வடித்த கவிதையே,
“சீருடை அழுக்கென்று
சினந்தேன்.
மறுநாள்
ஈரச் சீருடையோடு வந்தான்.
உடம்புச் சூட்டில்
உலர்ந்து விடும் என்று
மாட்டிவிட்டாளாம் அம்மா.
காய்ந்த வயிற்றிலும்
உலரவில்லை
ஈரவிழியில் நனைந்த
ஓருடை”
இந்த மாதிரி கவிதையெல்லாம் வகுப்பறைககுள் மாணவனுடன் மாணவனாக வளைய வரும் ஆசிரியரால் மட்டுமே எழுத இயலும். “இவையெல்லாம் பிரச்சனைகளா” என இதுநாள்வரை நாம் எளிதாக கடந்து சென்ற விஷயங்களை , “இவைதான் பிரச்சனைகள்” என்று நமக்கு அறிமுகப்படுத்தி, இதற்கான தீர்வுகளை யோசித்து விரைவில் வகுப்பில் செயல்படுத்துங்கள் என நம்மை வழிப்படுத்தும் புத்தகமாய் விளங்குகிறது. இத்தொகுப்பில் உச்சமென்றால் அந்த “ சார்.. ஒருவிரல் தூக்கியபடி எழுந்தான்…” என்னும் கவிதையே..
எனினும்
“இசை வகுப்பில்
அமைதியாய் இருந்தோம்
வெளியே
குயிலின் கூவல்”
போன்ற கவிதைகள் இயற்கையை ரசிக்கும்படியானவை.
ஒட்டு மொத்தத்தில் வகுப்பறை சார்ந்த பிரச்சினைகளை மிக நன்றாக உற்று நோக்கி அனுபவப்பட்ட ஆசிரியக் கவிஞர் மிக எளிய , அதிராத மொழிகளில் தனது கவிதைகளைப் படைத்துள்ளார் , ஆனால் இதில் நம்மை அதிர வைத்து தீர்வை நோக்கி நம்மை வழிப்படுத்துகிறார்.
இந்தக் கவிதைகள் எல்லா ஆசிரியர்கள் கைகளில் தவழும்போது, வகுப்பறை சார்ந்த வன்முறைகளால் நாற்றமடிக்கும் வகுப்பறையின் நாற்றம் நீக்கலாம்; மாற்றம் சேர்க்கலாம்! ஆசிரியக் கவி பழ.புகழேந்தி யின் விருப்பப்படி அடுத்த பதிப்பு தேவையில்லாமல் போகட்டும்! கடைசியாக அட்டைப்பட உருவாக்கம் மிக அழகு!
(நன்றி: ராமமூர்த்தி)