சமூக அறிவியல் பாடத்தில் மக்களாட்சி என்பதன் வரையரையாக ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ள “ மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்பது புகழ்மிக்க வாசகம். அதைப்போல தற்போதைய வணிகமயமாகிவிட்ட கல்விச் சூழலில் கல்வியை இவ்வாறு கூட வரையறுக்கலாம். “பணத்தால் பணத்துக்காக பணமே நடத்துவது கல்வி”. இது சற்று மிகையாகக் கூடத் தோன்றலாம், ஆனால் நினைத்துப் பார்க்க முடியாத வணிகமாகிவிட்டது கல்வி. ஒரு பிரமாண்டமான தொழிற்சாலை நடத்துவதைக் காட்டிலும் இன்று லாபகரமானது தனியார் பள்ளிக்கூடம் நடத்துவது. மறுபக்கம் அனைவருக்கும் கல்வி என்ற கருத்து வலுப்பட்ட இந்த நூறாண்டுக்குள் ஏன் அரசுப் பள்ளிகள் இவ்வளவு பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தன. அதற்கான காரணங்கள் என்ன? அரசுப்பள்ளிகள் மீண்டெழ செய்யவேண்டியது என்ன? போன்றவற்றை இந்த நூலின் வழியே கல்வியாளராக மாறி 31 தலைப்புகளில் விவாதித்துள்ளார் ஆனந்த விகடன் பத்திரிகை ஆசிரியரான பாரதி தம்பி. அரசாங்கம் , அதிகாரிகள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது பல இடங்களில் கடுமையான சாட்டையினை வீசியுள்ள போதிலும் அவை அரசுப்பள்ளிகளின் எழுச்சிக்காகவே வீசப்பட்டுள்ளன. *“அரசுப்பள்ளிகள்தான் நம் கல்வி உரிமையின் அடையாளம், எக்காரணம் கொண்டும் அதை விட்டுத்தர முடியாது”* என அறைகூவல் விடுக்கும் பாரதிதம்பி தரவு சேகரித்தல், நேரடி கள ஆய்வு என மிகப்பெரிய உழைப்பைத் தந்து இந்தப் புத்தகத்தை உருவாக்கி உள்ளார். ஆனந்த விகடன் இதழில் 2014 ஆம் ஆண்டில் தொடராக வந்தபோதே மிகுந்த விவாதத்தை உண்டாக்கியது இந்தக்கட்டுரைகள். தற்போது இவை நூலாக்கம் பெற்றுள்ளன.
இதன் 31 தலைப்புகளே இந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய பேசுகின்றன.
1. பாகுபாட்டை விதைக்கும் பள்ளி(பொருளாதார அடிப்படையில்)
2. மிரட்டும் தனியார் பள்ளிகள்
3. கட்டண நிர்ணயம் நியாயமா?
4. கொள்ளைக்கு ஆதரவாக கொள்கை
5. பிபிபி, சி எஸ் ஆர் உண்மை என்ன?(அரசு தனியார் கூட்டு, பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு.)
6. அனுமதி பெறாத பள்ளிகள்
7. அச்சுறுத்தும் உணவு
8. சிபிஎஸ்இ மோகம்
9. மெக்காலே… இன்னொரு பார்வை
10. சமச்சீர் கல்வி தரமானதா?
11. தொடர் மதிப்பீட்டு முறை
12. சி.சி.இ வெற்றியா?தோல்வியா?
13. ஆசிரியருடன் ஓர் உரையாடல்
14. ஆசிரியர்களுக்கு பணிச் சுமை?
15. அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளியும்
16. மூடப்படும் அரசுப்பள்ளிகள்
17. அசத்தும் அரசுப்பள்ளிகள்
18. சுடர்விடும் நம்பிக்கைகள்
19. நம்பிக்கை தரும் அரசுப்பள்ளிகள்
20. ஆங்கில வழிக்கல்வி தேவையா?
21. தாய் மொழி வழிக்கல்வி… ஆய்வுகள் சொல்வது என்ன?
22. தாய்த்தமிழ் பள்ளிகள்… நம்பிக்கையின் அடையாளம்
23. விளையாட்டு படிப்பின் எதிரியா?
24. வகுப்பறை… உள் வகுப்பறை!
25. மாறிவரும் மாணவர் மனம்
26. துணிவைத் தரும் கல்வி
27.சாதிக்கறை படிந்த பள்ளிகள்
28.பின்வாங்கும் அரசு
29.பின்லாந்து… கல்வியின் மெக்கா
30.வாசிப்பின் வழியே கல்வி
31.தீர்வுதான் என்ன?
கடைசியாக பின்னுரையாக பேராசிரியர் பிரபா கல்விமணியின் ஒரு கட்டுரை என கல்வித்துறையினை நுணுகி நுணுகி உற்றுநோக்கி கல்வியாளர்களால் மட்டுமே விவாதிக்கப்படும் சமச்சீர் கல்வி , சி.சி.இ போன்றவற்றைப் பற்றி பொதுவெளியில் எழுதப்பட்ட இப்படி ஒரு புத்தகத்தை பார்ப்பது அரிது.
உதாரணத்திற்கு சிசிஇ பற்றி 'சி.சி.இ. வெற்றியா? தோல்வியா?' என்ற கட்டுரையில்நூலாசிரியர் பாரதிதம்பி குறிப்பிடுவதைப் பாருங்கள்.
" தேர்வில் ‘கரும்பு எங்கு விளைகிறது?’ என்பது கேள்வி. ஒரு மாணவருக்கு பாடப் புத்தகத்தில் உள்ள விடை தெரியும்.எழுதினார்; மதிப்பெண் கிடைத்தது. இன்னொருவருக்கு பாடப்புத்தக விடை தெரியாது. அவரது கிராமத்தில் கரும்பு விளைகிறது என்றாலும் அதை எழுத முடியாது. புத்தகத்தில் உள்ள விடையைத்தான் எழுத வேண்டும். அது நினைவுக்கு வரவில்லை; ஆகவே எழுதவில்லை; அதனால் மதிப்பெண்ணும் இல்லை. இப்போது இரண்டு பேருக்கும் முன்பாக ஒரு கரும்பை வைத்து இது என்ன என்று கேட்கப்படுகிறது. தேர்வில் சரியான விடை எழுதியவருக்கு அது என்ன என்றே தெரியவில்லை. விடை எழுதாத மாணவர் சட்டென்று ‘கரும்பு’ என்று சொன்னார். நடைமுறையில் இருந்து துண்டிக்கப்பட்டதாக இருக்கும் நமது கல்வி முறையின் அபத்தத்தை இது உணர்த்துகிறது என்றபோதிலும்,இரண்டுமே அறிவுதான். ஒன்று எழுத்தறிவு என்றால் மற்றது சொல்வதன் வழியே வெளிப்படும் அறிவு. எழுதுதல்,பேசுதல்,கேட்டல் ஆகிய மூன்று திறன்களுக்கும் கல்வியில் சமமுக்கியத்துவம் உண்டு. மூன்றும் ஒருங்கிணையும்போதுதான் கல்வி முழுமை அடைகிறது.”
என்ன சத்தியமான வார்த்தைகள். சிசிஇ பற்றிய எவ்வளவு எளிமையான விளக்கங்கள். இதைப்போல் தான் ஒவ்வொரு தலைப்பும் விவாதிப்பதை சிறிது சிறிது கூறினாலும் நீண்ட இப்பதிவு மிக நீண்ட பதிவாகிவிடும். எனவே தான் தலைப்புகளை அட்டவணைப்படுத்துவது சரியில்லைதான் என்றாலும் தலைப்பே புத்தகத்தின் நோக்கத்தை விளக்கமாகக் கூறுவதால் குறிப்பிட்டுள்ளேன். பொறுத்தருள்க.
இப்புத்தகத்தின் பரிந்துரைகளில் தனியார் பள்ளிகளின் அசுர வளர்ச்சியினைத் தடுத்து அதற்கு மூடுவிழா நடத்திட மிக முக்கியமானது CCE யினை 10 ஆம் வகுப்பு வரை நீட்டித்து 11ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடத்துவது. இதில் இரண்டாவது பரிந்துரை தற்போது நடைமுறைக்கு வந்திருப்பது இப்புத்தகத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.
20 மாணவர்களுக்கு ஒரு குடிநீர்க்குழாய், ஒரு சிறுநீர்க் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு ஒரு மலக்கழிப்பறை போன்ற அரசுப்பள்ளிகளுக்கான தமிழக அரசின் 2012 ஆம் ஆண்டு அரசாணைகளை உண்மையாக இந்தப் புத்தகத்தின் வாயிலாகவே நான் அறிந்தேன்.
இவ்வாறு அரசுப்பள்ளிகள் வீழ்ச்சி அடையாமல் காப்பதற்கான வழிமுறைகளைக்கூறும் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்களேன், பிடித்துப் போகும். கல்வித்துறையின் சிக்கல்கள் புலப்படும், நம் புரிதல் மேம்படும்.