க. துளசிதாசன் தொகுத்த `கனவுஆசிரியர்’ படித்தேன். அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞாநி, ஆர். பாலகிருஷ்ணன், எஸ்.ரா, தியோடர்பாஸ்கரன், இறையன்பு, ச. மாடசாமி, பொன்னீலன், பிரளயன், இரத்தினநடராஜன், த.வி. வெங்கடேஸ்வரன், பாமா, க. துளசிதாசன், இரா. நடராசன், ச. தமிழ்ச்செல்வன், ட்ராட்ஸ்கி மருது, கீரனூர் ஜாகிர் ராஜா, பவா செல்லதுரை, ஆபிரகாம் லிங்கனின் `தலைமையாசிரியருக்குக் கடிதம் என பல தளங்களில் செயலாற்றுபவர்களின் செறிவான அனுபவங்கள் வழியே கனவு ஆசிரியரைக் கண்டடைவதற்கான ஒரு முயற்சி இது.
இதில் இந்திய ஆட்சிப் பணியில் வேலை செய்துவரும் ஆர். பாலகிருஷ்ணனின் `கடவுள் பதவிகள் காலியாய் கிடப்பது எதனால்?” என்கிற கட்டுரை ஆழ்மனதைத் தொட்டது. ஆசிரியர்களைக் கடவுளுக்கு ஒப்பிட்டு ஏன் இந்தியாவெங்கிலும் பல இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்தும், ஆசிரியர் பணிக்கான அடிப்படைகள் என்ன என்பது பற்றியும், நல்லாசிரியர் தாயுமனவர் என்றும், நல்ல ஆசிரியர் ஒரு நல்ல மாணவர் என்றும், நல்லாசிரியரின் சமூகப் பொறுப்பு பற்றியும், அவர் நம்பிக்கையை விதைப்பவர் என்றும், யார் கனவு ஆசிரியர் என்றும் ஒரு கடித வடிவில் பல விஷயங்களை புரியும்படி எளிமையாக எழுதியிருக்கிறார். அதிலிருந்துசிலதுளிகள்:
ஆசிரியப் பணி என்பது மற்ற வேலைகளைப் போன்ற இன்னொரு வேலை இல்லை. ஊதியத்தை மட்டும் கருதும் உழைப்பும் அல்ல. விரும்பிச் செய்வது. இன்னும் சொல்லப்போனால் விரும்புகிறவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது.
கற்பித்தலில், பயிற்றுவித்தலில் இயல்பான ஈடுபாடு உள்ளவர்களே சிறந்த ஆசிரியர்களாக உருவாக முடியும். நல்லாசிரியர்கள் உண்மையில் ஆசிரியர்களாக வாழ்கிறார்கள். மற்றவர்கள் ஆசிரியர்களாக `வேலை’ செய்கிறார்கள்.
எல்லோருக்கும் எடுத்து வழங்கினால் பொருட்ச்செல்வம் குறையலாம். ஆனால், கல்விச் செல்வம் மட்டும் கொடுக்கக் கொடுக்கக் குன்றாது வளர்கிறது.
ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தால் ஒருவன் தொடர்ந்து படிக்கப் போகிறான் என்று பொருள்.
கற்பித்தல் என்பது `ஒருவழிச்சாலை’ அல்ல. இருவழிச்சாலை. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே புரிந்துணர்வு இல்லாமல் இந்த இருவழிச்சாலை இயங்க முடியாது.
ட்ராட்ஸ்கி மருது மதுரை தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஓவிய ஆசிரியர்களான அகஸ்டீன், ஜெயராஜ் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். நானும் அப்பள்ளியில் படித்தவன் என்கிற முறையில் இந்த ஆசிரியர்கள் எனக்கும் அறிமுகமானவர்கள். இவர்களைப் பற்றி அவர் எழுதியருப்பது மானசீகமான ஒன்று.
சு. தமிழ்ச்செல்வன் கட்டுரை மூலம் தெரியவந்த புத்தகம் `Letter to a Teacher’ – by School Children of Barbiana. அதாவது `முறைசார்’ கல்விஅமைப்பின் `முறையான’பள்ளிகளால் தேறாதவர்கள் என இறக்கிவிடப்பட்ட மாணவர்களாக சேர்ந்து தங்களைப் போன்ற மாணவர்களுக்காகத் தாங்களே நடத்தும் பள்ளி. இவர்கள் தங்களைக் கண்டுகொள்ளாத முறைசார் பள்ளியின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்தான், இந்தப்புத்தகம். // இந்தப்புத்தகத்தைப்படித்துவிட்டுகதறிஅழுததைப்போலஒருபோதும்அழுததில்லை// - என்று இக்கட்டுரையில் தமிழ்ச்செல்வன் பதிவு செய்திருக்கிறார்.
தியோடர் கட்டுரை மூலம் தெரியவந்து என்னுடைய படிக்க வேண்டிய பட்டியலில் சேர்ந்த புத்தகங்கள் ஜான் ஹோல்ட்டின் `how children learn’, இவான்இல்லிக்கின் ` deschooling’.
இருபது கட்டுரைகளும் அட்சர லட்சம் பெறும். ஆசிரியர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். அரசும் செப்டெம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடுவதுடன் நின்றுவிடாமல் சமுதாயத்திற்கு பயன்தரும் வகையில் `கனவு ஆசிரியர்’களை உருவாக்கும் பணியை முன்னெடுக்க வேண்டும். அதுவே டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கும், வோட்டளித்த சமூகத்துக்கும் அரசு செய்யக்கூடிய கடமையாகும்.
இந்நூலை வெளியிட்டிருக்கும் பாரதி புத்தக நிலையத்துக்கும், தொகுத்திருக்கும் திரு துளசிதாசன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்! தொண்ணூறு ரூபாயில் ஒரு பொக்கிஷம்!