திங்கட்கிழமை தோறும் அரைப்பக்கம் “பிஸினஸ் லைன்” என்ற செல்வாக்கு மிக்க தினப்பத்திரிக்கையில் எட்டு முக்கியப் பிரமுகர்களைக் சில கேள்விகளைக் கேட்கிறார்கள். அதில், ‘உங்கள் வாழ்க்கையில் யார் முக்கியமான வழிகாட்டி என நினைக்கிறீர்கள்?’ என்று ஒரு கேள்வி இருக்கிறது. எட்டு பிரமுகர்களில் ஆறு பேர் பள்ளி ஆசிரியர் ஒருவரைத்தான் குறிப்பிடுகிறார்கள். கல்லூரி, மேல்படிப்புக்காக அயல் நாடு சென்றவர்கள், நாட்டின் முக்கியத் தொழில் அல்லது வணிக நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பேராசிரியர்கள் நினைவுக்கு வருவதில்லை. ஆனால் பள்ளி ஆசிரியர்கள் இன்னமும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறார்கள்.
என இப்புத்தகத்தின் தொடக்கத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் பள்ளி ஆசிரியர்களின் பெருமை கூறுகிறார்.
சரி இது என்ன புத்தகம் என்றால் இது சமயபுரம் SRV பள்ளியின் முதல்வர் திரு.க.துளசிதாசன் தொகுத்த தமிழ்ச்சமூகத்தின் முக்கிய ஆளுமைகள் தனது ஆசிரியர்கள் பற்றி கூறும் இனிய நினைவு கூறலும், தனது கனவு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்பைப் பற்றியும் கூறும் ஒரு அருமையான நூல். இதில் சமூகத்தின் வெவ்வேறு தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞானி, ச.தமிழ்ச்செல்வன், பவா செல்லதுரை, கீரனூர் ஜாகீர் ராஜா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரும் , IAS அதிகாரிகளான ஆர்.பாலகிருஷ்ணன், வெ.இறையன்பு போன்றோரும், ஆசிரிய எழுத்தாளர்களான பொன்னீலன்,ச.மாடசாமி, இரத்தின நடராஜன்,ஆயிஷா நடராஜன்,பாமா போன்றோரும்,ஓவியர் ட்ராஸ்கி மருது, விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன், நாடக ஆளுமை பிரளயன் மற்றும் சுற்றுச்சூழல் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் மற்றும் நூலாசிரியர் க.துளசிதாசன் என 19 ஆளுமைகள் தங்கள் ஆசிரியரைப் பற்றியும் கனவு ஆசிரியரைப் பற்றியும் குறிப்பிடுகின்றனர்.
142 பக்கமுள்ள இந்த புத்தகத்தை ஓரே மூச்சில் கூட படித்துவிடலாம், ஆனால் இந்த புத்தகம் நம் மனதில் விதைக்கும் சிந்தனைகள் பல ஆண்டுகள் நம் மனதில் நிலைத்திருக்கும். அதில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இன்னும் இன்னும் ஏராளமான சிந்தனைகள் கொட்டிக்கிடக்கும் இந்த கனவு ஆசிரியர் என்னும் புத்தகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்களேன்.