சில புத்தகங்களின் தலைப்பே அப்புத்தகத்தை வாங்கவும் வாசிக்கவும் வைக்கும். அப்படியான ஒரு புத்தகம்தான் இந்த கல்வி – சமூக மாற்றத்துக்கான கருவி. அர்த்தமுள்ள தலைப்பு. இதில் சமூக மாற்றம் என்பதை இவ்வாறாக வரையறுக்கலாம, “சமூக மாற்றம் என்பது குறிப்பிட்ட கால வெளியில் சமுதாயத்தில் ஏற்படும் நடத்தை , பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களில்(மதிப்புகளில்) ஏற்படும் மாற்றம் ஆகும்”. இந்த சமூக மாற்றங்கள் சமுதாயத்தின் பல தளங்களில் பலவிதமான ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உதாரணமாக தொழிற்புரட்சி, அடிமை ஒழிப்பு, சதி என்னும் உடன்கட்டை ஒழிப்பு போன்றவைகளை சமூக மாற்றங்களுக்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். அவ்வாறு இந்தியாவில் மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான கருவியாக கல்வி வளர்ந்து வருகிறது.
“உலகில் உள்ள வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகளில் 13 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. இதில் 50 விழுக்காட்டினர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள். அதிலும், தனது அண்டை நாடுகளான மிகவும் வறிய நிலைமையில் உள்ள சிறிய நாடுகளைவிட நமது இந்தியாவின் நிலைமை எந்தவிதத்திலும் மேம்பட்டதாக இல்லை. உண்மையில், அடிப்படைக் கல்வி வழங்கும் விஷயத்தில் உலகிலேயே மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது. இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளில் 62% குழந்தைகள் மட்டுமே தொடக்கக் கல்வியை நிறைவு செய்கின்றனர்”, என்ற வருந்த வைக்கும் அறிமுகத்துடன் இந்நூல் தொடங்குகிறது. பிறகு மீதி மாணவர்கள் எங்கு சென்றனர்?. இதற்கு பதிலாகக் கிடைப்பதுதான் இந்நூலுக்கான் அடிப்படை ஆதாரம். அது “பள்ளி செல்லாத எந்தக் குழந்தையும் குழந்தை தொழிலாளர்களே” என்பதாகும்.
இந்தக் கருதுகோளின் அடிப்படையில், ஆந்திர மாநிலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி வழங்கிய எம்விஎஃப் அறக்கட்டளை எனப்படும் M.Venkatarangaiya Foundation என்ற அரசு சாரா நிறுவனம். இதன் செயல்திட்டங்களையும், களப்பணி அனுபவங்களையும் கேட்டறிந்து திருமதி. சுச்சேதா மகாஜன் எழுதியுள்ள நூலே இதுவாகும். இதனை தமிழில் மூ.அப்பணசாமி மொழி பெயர்த்துள்ளார்.
“பள்ளி செல்லாத எந்தவொரு குழந்தையும் குழந்தைத் தொழிலாளிதான் என்ற கருதுகோளின் அடிப்படையில் எம்விஎஃப் மேற்கொண்ட இயக்கம் நான்கு லட்சம் குழந்தைத் தொழிலாளர்களை மாணவர்கள் ஆக்கியுள்ளது. கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான ஆற்றல் மிக்க கருவியாக பிற்படுத்தப்பட்ட சமூகக் குழுக்களுக்கு சமவாய்ப்புத்தரும் கருவியாக அமைய முடியும் என எம்விஎஃப் நிரூபித்துள்ளது. இதன் அணுகுமுறை உரிமைகளின் அடிப்படையில் அமைந்து, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியது, கருத்தொருமை உருவாக்கம் மற்றும் அகிம்சையில் நம்பிக்கை கொண்டது. ஏழைகளுக்கு தமது குழந்தைகளின் சம்பாத்தியம் தேவை என்பதால் அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது என காலம் காலமாக நிலவி வரும் எண்ணத்தை எம்விஎஃப் உடைத்துவிட்டது. உறுதி இருந்தால் குழந்தை உழைப்பை முற்றாக ஒழிக்க முடியும், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை வழங்க முடியும் என எம்விஎஃப் காட்டுகிறது” என எம்விஎஃப் செயல்பாடுகளைப் பற்றி நூலின் பின்னட்டையில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூலினை முழுமையாகப் படிக்கையில் இவர்கள் இந்த லட்சியத்தை எட்டுவதற்கு பலவித தடைகளைக் தாண்டியுள்ளது தெரிய வருகிறது.
வறுமைவாதம் தவறு என இந்நூலில் இவர்கள் நிரூபித்துள்ளனர். அதாவது வறுமைவாதம் என்பது தம் குழந்தைகளின் எதிர்காலம் மீதோ, அவர்கள் வாழ்க்கை வளம்பெற வேண்டும் என்பது குறித்தோ பெற்றோருக்கு அக்கறை இருப்பதில்லை என்ற அனுமானத்தில் அமைந்த வாதம் அது. இது எந்த விதத்திலும் ஏற்க இயலாத கருத்து, எதார்த்த நிலைக்கு நேர் மாறானது. தம் குழந்தைகளுக்கும் கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப்படுமானால், இரு கரங்களாலும் அதை ஏற்க – அதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டால் அதையும் சந்திக்க – பெற்றோர் தயாராக உள்ளனர். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதால் வருவாய் இழப்பு ஏற்படுமே எனத் தொடக்கத்தில் தயங்கிய பெற்றோர் கூட, பள்ளிக்குச் செல்லும் மற்ற குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதை, கல்வியால் அவர்கள் வாழ்க்கை மேம்படுவதைக் காணும் போது, தம் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப முன்வந்த அனுபவங்களைப் பல செயல்வீரர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். சில பெற்றோர் ஆடு மாடுகளை விற்றுக்கூட தம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்; வேறு சிலர் மதுப் பழக்கத்தைக் கைவிட்டு வேலைக்குச் செல்லத் தொடங்கினர் என்பதை எம்விஎஃப் நிரூபித்துள்ளது நல்ல படிப்பினை. மேலும் PROBE என்னும் Public Report on Basic Education in India மேற்கொண்ட கணக்கெடுப்பில் ஆண் குழந்தைகளின் கல்வி அவசியம் எனக் கூறிய பெற்றோர் 98%, பெண் குழந்தைகளுக்குக் கல்வி அவசியம் எனக் கூறிய பெற்றோர் 89% என்பது வரவேற்கத்தகுந்த செய்தியாகும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது தமது கடமை என்பதை பெற்றோரை ஏற்கச் செய்வது மிகவும் முக்கியமாகும் என்று ஜீன் டிரேஸ் மற்றும் அமர்தியா சென் கூறுகின்றனர் என்பதையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
எம்விஎஃப் தனது கொள்கைகளுக்கு மைரோன் வெய்னரின் சிந்தனைகளிலிருந்து ஊக்கம் பெற்றுள்ளது. அனைவருக்கும் கல்வி அளிப்பதற்கும், குழந்தை உழைப்பை அகற்றுவதற்கும் மக்கள் தொகை பெருக்கமும், வருவாய்க் குறைவும் பெரும் தடைக்கற்கள் என்னும் வாதங்களை வெய்னர் கடுமையாக விமர்சித்தவர். இந்தியாவில் கல்வியைக் கட்டாயமாக்குவதற்கு அரசிடமிருந்தோ, அரசியல் கட்சிகளிடமிருந்தோ சிறிதளவு அரசியல் ஆதரவுகூட கிடைக்காததுதான் பிரச்சினை என்பதே வெய்னர் பார்வையாகும்.
எம்விஎஃப் கண்ணோட்டத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. குழந்தை உழைப்புக்கும் கல்விக்கும் உள்ள உறவு பற்றிய புரிதல் மற்றும் அவர்களைத் திரட்டுவதற்கான செயல்திட்டம். இதன்வழியேதான் இவர்கள் தங்கள் வெற்றியினைப் பெற்றுள்ளனர்.
குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையையொட்டி மக்கள் வெளிப்படுத்திய ஆற்றலால் இதர பிரச்சினைகளான நிலம், குடிநீர்,குழந்தை திருமணம், சுகாதாரம் போன்றவற்றையும் கையிலெடுத்து இந்த அமைப்பு வெற்றி கண்டுள்ளது. இந்த அமைப்பு ஆந்திராவைத் தாண்டி அசாம், பீகார், மத்திய பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் மத்திய அமெரிக்கா, மொராக்கோ, அல்பேனியா போன்ற நாடுகளிலும் எம்விஎஃப் செயல்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுததியுள்ளது.
தமிழ்நாட்டில் 2004 ஜனவரியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘கையோடு கை’ என்னும் என்.ஜி.ஓவுக்கு ஆதரவு அளித்தது. இரவுப்பள்ளி நடத்தி வந்த அந்த என்.ஜி.ஓவிடம் இரவுப் பள்ளிகள் வழக்கமான பள்ளிகளுக்கு மாற்றாக அமைய முடியாது என்பதை படிப்படியாக புரிய வைத்தது. பெற்றோருடன் சந்திப்புகள் மேற்கொண்டு , இக்குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். குழந்தைக் கொத்தடிமைகள் 25 பேர் விடுவிக்கப்பட்டனர். 174 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
இவ்வாறு ஆந்திராவில் தனது பணியைத் துவங்கிய எம்விஎஃப் அமைப்பு குழந்தைத் தொழிலாளர்களாக, கொத்தடிமைகளாக பெரும் பணக்காரர்களிடமும், உயர்சாதியினரிடமும் இருந்த குழந்தைகளை பலவித போராட்டஙகளுக்கிடையே மீட்டனர். பின் அவர்களை பாலம் எனப்படும் இணைப்புப் பள்ளிகளில் பயிற்றுவித்து அவர்கள் வயதுக்கேற்ற திறனை அடைந்த பிறகு வழக்கமான பள்ளிகளில் சேர்த்தனர். இவ்வாறு அவர்களின் வாழ்க்கை மேம்பட வழக்கமான பொதுப்பள்ளிகளிலிருந்து பெறும் கல்வி அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட்ட எம்விஎஃப் என்ற அரசு சாரா நிறுவனத்தின் செயல்திட்டம் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
“ உறுதி இருந்தால் குழந்தை உழைப்பை முற்றாக ஒழிக்க முடியும், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை வழங்க முடியும் என எம்விஎஃப் காட்டுகிறது. கொள்கை வகுப்பாளர்கள், அரசுசாரா அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், குழந்தை உரிமைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் பயனுள்ளதாக இருக்கும்” என பின்னட்டை கூறுகிறது.அத்தோடு குழந்தைகள் இடைநிற்றலைத் தவிர்க்க நினைக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்பெறும்.
இந்நூல் முழுவதும் எம்விஎஃப் செயல்திட்டங்களே விவரிக்கப்பட்டுள்ளதால் கொஞ்சம் முயற்சி செய்து வாசிக்க வேண்டியுள்ளதை உங்களிடம் மறைக்க வேண்டாம் என நினைக்கிறேன்.