சாப்பிடுதல் என்பது உடல் வளத்திற்கு மிக முக்கியமானது. இதில் சமைப்பவர், உண்பவர் என்பவர்களைத் தாண்டி எதைச் சமைக்கிறோம் என்பது மிக முக்கியமானது. உணவின் தன்மைக்கேற்பவே உடல் வலுப்பெறுகிறது. உணவில் இருக்கும் குறைபாடு நிச்சயம் உணவைப்பாதிக்கும்.
அதைப்போல கற்றல் என்பது மனதை வளப்படுத்த மிகவும் முக்கியமானது. இதில் கற்பிப்பவர், கற்பவர் என்பவர்களைத் தாண்டி எதைக் கற்கிறோம் என்பது மிக முக்கியமானது.
இது வரை நாம் இந்த கல்வி நூல் வரிசையில் பார்த்த பல புத்தகங்கள் கற்பித்தல் முறையில் நாம் பின்பற்ற வேண்டிய மாணவர் மைய அணுகுமுறைகளைப் பற்றி பேசியது, ஆனால் இப்போது நாம் பார்க்க இருக்கிற இந்த கல்விக் குழப்பங்கள் என்னும் இந்தப் புத்தகம் எதை மாணவர்களுக்கு கற்பிக்கிறோம் என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறது.
நமது பாடப் புத்தகங்களிலுள்ள எத்தனை தவறான தகவல்களை மாணவர்களுக்குக் கற்பிக்கிறோம் என்பதைப் பற்றி உரக்கப் பேசுகிறது.
எனது வாசிப்பனுவத்தில் இந்தப் புத்தகம் ஒரு தனி ரகம்.
தமிழ், சமூக அறிவியல், அறிவியல் என்று பல தளங்களிலும் பல வல்லுநர்கள், பல நாள்கள் முயன்று உருவாக்கிய பாடப்புத்தகங்களில் ஏன் இத்தனைப் பிழைகள் மலிந்துள்ளன. “எந்த தகவலை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவில்லையோ அந்த தகவலை அடுத்தவருக்கு நாம் தெளிவாக புரிய வைக்க முடியாது” என்பார்கள். அதைப்போல இந்தப் பாடத்திட்டங்களை உருவாக்கிய வல்லுநர்களின் தவறான புரிதல்கள்தான் அவர்கள் உருவாக்கிய பாடநூல்களிலும் பிரதிபலிக்கிறதோ?.
வரலாற்றுப் பாடங்களில் நூலாசிரியர் முன்வைத்துள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றும் முனைவர் பட்ட ஆய்வு முடிவுகள் போல உள்ளது. இது வரை நான் சரியென்று எண்ணி இருந்ததை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது இந்நூலாசிரியர் 50 தலைப்புகளில் எழுதியுள்ள இந்தப் புத்தகம்.
சோழர்கள் பற்றி மிக விரிவான மற்றும் ஆழமான புரிதலை நூலாசிரியர் கொண்டுள்ளார் என்பதை அவர் அடிக்குறிப்பாக தந்துள்ள புத்தகத் தலைப்புகளே நமக்கு உணர்த்துகின்றன.
உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் குடவோலை முறை சோழர் காலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக வரலாற்றுப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு சபை முழுதும் பிராமணர்களுக்கானது என்பதையும் இந்த குலுக்குச்சீட்டில் பிராமணர்கள் பெயரைத் தவிர வேறு எவரும் இடம்பெற வாய்ப்பு இல்லை மற்றும் சீட்டு எடுப்பவன்கூட பிராமணச்சிறுவன் என்கிற உண்மைகள் மிகக் கவனமாகத் திட்டமிட்டு மறைக்கப்படுவதை நூலாசிரியர் “குடவோலை முறை ஜனநாயகமா” என்னும் கட்டுரையில் கசடற விளக்குகிறார்.
பொற்கால சோழப்பேரரசு தமிழ் மொழிக்குச் செய்தது என்ன? மற்றும் இன்ன பிற கட்டுரைகள் சோழப்பேரரசு பற்றி நமது புரிதல்களில் புது வெளிச்சம் பாய்ச்சுகிறது.
புத்தர் ஏன் துறவறத்தைத் தேர்வு செய்தார்? என்ற கட்டுரையில் புத்தர் துறவறம் மேற்கொண்டதற்கான காரணங்கள் எவ்வாறு பசி, பிணி, சாவு என திரிக்கப்பட்டுள்ளன என்பதை ஆதாரத்துடன் நிறுவுகிறார்.
“தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியின் சாதனைகள்” என்னும் கட்டுரை நமது பாடப் புத்தகங்கள் பட்டியலிட்டுள்ள பார்வையிலிருந்து புதிய பரிமாணத்தைத் தருகிறது.
குமரி (லெமூரியா) கண்டத்தின் இருப்பு பற்றி கேள்வி எழுப்பும் கட்டுரை, சமஸ்கிருதம் மட்டும்தான் வடமொழியா? என்னும் கட்டுரை போன்றவை எல்லாம் சிறிய கட்டுரைகள்தான், ஆனால் விரிவும் ஆழமும் தேடிய பயணங்கள் அவை.
அறிவியல் புத்தகத்தில் உள்ள குறைகளையும் ஆழ்ந்து ஆராய்ந்து தவறுகளை சுட்டிக்காட்டி உள்ளது மிகவும் சிறப்புற உள்ளது.
நிலக்கடலையா? வேர்க்கடலையா? என்று கேள்வி எழுப்பி நிலக்கடலையே என நிறுவியுள்ளது சிறப்பு. “ஈசலின் வாழ்காலம்” கட்டுரை, ஈசலின் ஆயுள் ஒரு நாள் என்னும் பொதுவான அறிதலுக்கு முடிவுரை எழுதி உள்ளது.
“சந்தன மரம் ஒரு வேர் ஒட்டுண்ணித் தாவரம்” என்னும் கட்டுரை நமது பாடப்புத்தகத்திலுள்ள தகவல்களை விட அதிக செய்திகளை நமக்கு வழங்குகிறது.
இன்னும் இன்னும், பலப்பல, புதுப்புது தகவல்களை நமக்கு இந்த 50 கட்டுரைகளில் நூலாசிரியர் தந்துள்ளார். ஒவ்வொன்றும் சிறிய கட்டுரைகளாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த ஒவ்வொன்றையும் எழுத நூலாசிரியர் பல புத்தகங்களை படித்திருக்க வேண்டும். இதில் நூலாசிரியரின் பல்லாண்டு கால வாசிப்பனுபவம் பளிச்சிடுகிறது.
நமது பாடப் புத்தகங்களில் மலிந்துள்ள பிழைகளை சுட்டிக்காட்ட சில இடங்களில் கடுமையாகவும் பேசியுள்ளார் நூலாசிரியர்.
ஓரிரண்டு தவறான தகவல்களும் இப்புத்தகத்தில் உள்ளன. தவறுகளை குறைக்க நினைக்கும் நூலாசிரியர் நாம் கூறும் சுட்டிக்காட்டலை பயனுள்ளதாக எடுத்துக் கொள்வார் என்று நம்புவோம்!
1. பக்கம். 55ல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33% என்பதை மூன்றில் இரண்டு பங்கு என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது மூன்றில் ஒரு பங்கு தானே!
2. பக்கம் 133 ல் ஏன் பெண் கொசுக்கள் மட்டும் கடிக்கின்றன? என்ற கட்டுரைக்கு மேலதிக தகவல்களாக, பெண் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு (முட்டை உற்பத்திக்கு) ரத்தம் அவசியம் என்ற தகவல்களையும் சேர்த்துக் கூறலாம்.
3. பக்கம் 143ல் மாம்பழம் பழுக்க வைக்க கார்பனேட் கற்கள் பயன்படுவதாக உள்ளது. ஆனால் உன்மையில் கால்சியம் கார்பைடு கற்கள்தான் பயன்படுகின்றன.
இவை எல்லாம் என் பார்வையில் படும் சிறு சிறு தவறாக உள்ளது. ஆனால் ஒட்டு மொத்தமாக கல்வி சார்ந்த புலத்தில் சிறப்புற பணியாற்ற விரும்புபவர்களுக்கு, இளைய தலைமுறையின் கைகளில் தவழும் பாடப்புத்தகங்களில் உள்ள கருத்துப் பிழையை பொறுக்க இயலாதவர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த பயனுள்ள நூலாக இருக்கும் என நிச்சயம் கூறலாம்.
****
வணக்கம்.
நூல் விமர்சனத்திற்கு மிக்க நன்றி. எனது நூல் பற்றி நானறிந்த வரையில் ஈரோடு, திருவாரூர் ஆகிய இரு இடங்களில் வாசிப்பு முகாம்கள் நடந்துள்ளன. திருவாரூரிலிருந்து வெளிவரும் பேசும் புதிய சக்தி இதழில் மதிப்புரை ஒன்று வெளியானது.
தோழர் செ.மணிமாறன் அவர்கள் தனது முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் தனித்தனி தலைப்புகளில் சில விமர்சனக் கட்டுரைகளை எழுதினார்.
அந்தவகையில் சமூக வலைத்தளத்தில் வரும் இரண்டாவது விமர்சனமாக இது உள்ளது. மகிழ்ச்சியும் நன்றியும். இதில் குறிப்பிட்டுள்ள பிழைகளுக்கு பொறுப்பேற்கிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
1, 3 ம் கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகள்; 2 ஐ ஈரோடு வாசிப்பு முகாமில் ஒரு தோழர் சுட்டினார். இன்னும் பிழைகள் இருக்கலாம் நான் எந்தப் பாடத்தையும் முறையாக படிக்காதவன். சுயகல்வி மூலமே அதாவது வாசிப்பு மூலமே சில கருத்துகளைச் சொல்ல நேரிடுகிறது.
அறிவியல் புலமை உடையவர்கள் இன்னும் பாடநூலில் உள்ள பிழைகளைக் காணமுடியும். யாரும் இதைச் செய்ய முன்வரவில்லையே என்பதே எனது ஆதங்கம். இந்நூலில் கணிதவியல், ஆங்கிலம் ஆகியன முற்றிலும் ஒதுக்கப்பட்டதற்கு காரணம் அதில் எனக்கு சிறிதும் தெரியாது என்பதே உண்மை.
சில இடங்களில் விரிவாக சொல்லப்படாமலும் விடுபட்டதுண்டு. (உ.ம்) களப்பிரர்கள்). இதை குடவாசல் தோழர் சார்லஸும் எடுத்துச் சொன்னார். பாம்புகள் பற்றிச் சொல்லும்போது இடம், உணவுக்கான சண்டையும் mating ஆக கற்பிதம் ஆவதைச் சொல்ல மறந்தேன்.
‘தி இந்து’வில் வெளியான, இந்நூலில் உள்ள பின்னிணைப்பு கட்டுரையே இதன் அடைப்படை. அதில் விடுபட்ட சில செய்திகளை தனிததனியே இது பேசுகிறது. ஒரு பாடநூலைப் படிக்கும்போது அதில் உள்ள நெருடல்களை தனியே எழுதியதால் ஒரு தொடர் ஓட்டம் இருக்க வாய்ப்பில்லை.
பாடநூலில் இல்லாமல் கல்வியில் நமக்கு குழப்பமேற்படுத்தும் சில பகுதிகளும் இங்கு விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சுவாசித்தல், பாசிகள், கொசுக்கள் போன்றவை அவ்வகைப் பட்டவையே.
தேயிலை செடியல்ல; மரம், தோடர்கள் இங்கு பழங்குடியினராக இல்லை என்பது போன்ற கட்டுரைகள் இந்நூலில் சேர்க்கப்படவில்லை. பாடநூல் பிழைகளுக்குப் பஞ்சமில்லை. இனி புதிதாக உருவாகும் பாடநூற்கள் நமக்கு இம்மாதிரியான வேலையைத் தராது என்று நம்புவோம்.
முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத் தளங்களுக்காக எழுதப்பட்ட இக்கட்டுரைகளை நண்பர்களின் வலியுறுத்தல் காரணமாக நூலாக்கம் பெற்றது.
முதலில் இடம்பெறும் சில கட்டுரைகள் படிப்போருக்கு அதிர்ச்சியளிப்பது விவாதங்களில் உணரமுடிகிறது. எனவே இம்மாதிரியான குறைசுட்டல் குறைவாக உள்ளது. நூலை முழுவதுமாக வாசித்து, கருத்துரைத்து, குறைகளையும் சுட்டிக் காட்டிய தோழருக்கு மீண்டும் நன்றிகள்.
இக்கட்டுரைகளை மட்டும் வாசிக்காமல் அவை தொடர்பான நூற்களையும் வாசிப்பது பலன் தரும். நாலந்தர சினிமாக்களுக்கு பக்கம், பக்கமாக விமர்சனம் எழுதும் இதழ்கள் வருங்காலத் தலைமுறைகள் படிக்கும் பாடநூல்களை ஏன் கண்டுகொள்வதில்லை என்பது எனது நீண்ட நாள் ஆதங்கம். இனிவரும் புதிய பாடநூல்களைப் பல்வேறு தரப்பிலிருந்தும் விரிவாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
மீண்டும் நன்றியும்… அன்பும்..
(நன்றி: மு. சிவகுருநாதன்)