முதல்நிலைத் தகவல்களின் வழி, பழைய உண்மைத் தரவுகளைத் தேடுவதையே ஆய்வு என்று கூறுகிறோம். இந்த வரையறைக்கு ஏற்றதோர் இலக்கணமாகத் திகழ்கிறது, பழ.அதியமான் எழுதியுள்ள ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’ என்னும் நூல்.
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும், வைக்கம் போராட்டமும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நடைபெற்றவை. இவை இரண்டும்தான் திராவிட இயக்க எழுச்சிக்கு வித்துகளாக அமைந்தன.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே காங்கிரஸ் கட்சி தொடங்கப் பட்டுவிட்டாலும், காந்தியாரின் வருகைக்குப் பின்பே அது வெகு மக்களைச் சென்றடைந்தது.
அவ்வாறே, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே திராவிட இயக்கத்தின் வேர்கள் தென்படுகின்றன என்றாலும், தந்தை பெரியாரின் வருகைக்குப் பின்பே அது வெகு மக்களைச் சென்றடைந்தது.
அந்தப் பெரியாரையே தமிழ்நாட்டிற்கு உருவாக்கித் தந்தது இந்தக் குருகுலப் போராட்டம்தான் என்று கூறலாம்.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாருக்கும், குருகுலப் போராட்டத்தில் வரதராஜுலு (நாயுடு)வுக்கும் பெரும்பங்கு இருந்திருக்கிறது. குருகுலம் தொடங்கும் போது பெரியாரும், குருகுல எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சகட்ட வேளையில் வரதராஜுலுவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்துள்ளனர்.
ஆங்கிலேயர்களின் ஐரோப்பியக் கல்விக்கு மாற்றாக, தேசியக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்னும் காங்கிரஸ் கட்சியின் நோக்கத்தை ஒட்டியே வ.வே.சு.(ஐயர்), குருகுலத்தை முதலில் கல்லிடைக்குறிச்சியிலும், பிறகு சேரன்மாதேவியிலும் நடத்தி உள்ளார்.
1922ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் நாள் குருகுலம் தொடங்கப் பட்டுள்ளது. தொடக்கத்தில் நல்ல நோக்கங்களையே அக்குருகுலம் கொண்டிருந்த போதும், காலப்போக் கில் வருணாசிரம, வைதீக நடைமுறைகள் அங்கு நிலைபெற்றிருக்கின்றன.
குறிப்பாக, சேர்ந்து உணவுண்ணல் என்பது மறுக்கப்பட்டு, பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தனியாகவும், மற்றவர்களுக்கு வேறோர் இடத்திலும் உணவு பரிமாறப்பட்டுள்ளது. இச்செய்தி வெளியில் வந்த வேளையில்தான், எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன.
அவை மதிக்கப்படாத காரணத்தால், ஒரு போராட்ட வடிவத்தை அது எட்டியிருக்கிறது.பொதுமக்களின் கட்சியான காங்கிரசின் நிதியிலிருந்தும், கானாடுகாத்தானைச் சேர்ந்த வை.சு. சண்முகம் போன்றோரின் நன்கொடையிலிருந்தும் நடத்தப்பெற்ற குருகுலத்தில் பிள்ளைகளிடம் ஏற்றத்தாழ்வு காட்டப்படுவது ஏற்கமுடியாதது என்றே வரதராஜுலுவும், பெரியாரும் முதலில் குரல் கொடுத்துள்ளனர்.
வைக்கம் போராட்டத்திற்குப் பெரியார் சென்று அங்கு சிறைப்பட்டு விட்டதாலும், அவருடைய குடியரசுப் பத்திரிகை அதற்குப் பின்பே தொடங்கப்பட்டது என்பதாலும், குருகுல எதிர்ப்புப் போராட்டத்தில் வரதராஜுலு அவர்களின் பங்கே குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கிறது.
அன்றைக்கு வெளிவந்து கொண்டிருந்த நாள், வார ஏடுகள் இச்செய்தி குறித்து தொடர்ந்து பலரது அறிக்கைகளையும், விவாதங்களையும் வெளியிட்டுள்ளன. ஆங்கில இதழ் ஹிந்து, தமிழ் ஏடுகளான சுதேசமித்திரன், தமிழ்நாடு, நவசக்தி, குமரன் முதலானவையும் இதுகுறித்த பல்வேறு தகவல்களைத் தந்திருக்கின்றன.
சுதேசமித்திரன் வ.வே.சு.விற்கு மறைமுகமான ஆதரவாய் நிற்க, மற்ற தமிழ் ஏடுகள் அனைத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்திருக்கின்றன. மிதவாதியான திரு.வி.கவும் தன் நவசக்தி ஏட்டில் வ.வே.சு.வின் நிலைப்பாட்டை எதிர்த்து எழுதியிருக்கிறார்.
இச்சிக்கல், காந்தியார் வரையில் சென்றிருக்கிறது. அவர் வைக்கத்திற்கு வந்தபோது, அவரை நேரில் சென்று கண்டு இருதரப்பினரும் வாதிட்டுள்ளனர். காந்தியாரோ, இருவருக்கும் இடைப்பட்ட ஒரு சமாதானத்தை முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே குருகுலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களைச் சேர்ந்துண்ணுமாறு வலியுறுத்த வேண்டாம் என்றும், இனி வரும் மாணவர்களுக்கு அதனை விதியாக ஆக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், அனைவருக்கும் உணவு சமைப்பது பிராமணர்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்பதும், காந்தியார் முன்வைத்த சமாதானத்தின் ஒரு பகுதி. இதனை வரதராஜுலு ஏற்கவில்லை. ஆகையால், போராட்டம் தொடர்ந்தது.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் சென்று வரதராஜுலு, குருகுலத்தில் நடக்கும் ஏற்றத் தாழ்வை வெளிப்படுத்தினார். இறுதியில் வா.வே.சு., தன் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டார்.
இவ்வளவு செய்திகளையும், மிகத் துல்லியமாகவும், எவ்விதமான குழப்பத்திற்கும் இடமின்றியும் பழ. அதியமான் தொகுத்துள்ளார். ஒவ்வொரு பக்கத்திலும் அவருடைய கடும் உழைப்பை நம்மால் காணமுடிகிறது. 335 பக்கங்கள் கொண்ட அந்நூலில், 135 பக்கங்கள் அரிய தரவுகளாக பின் இணைப்பில் தரப்பட்டுள்ளன.
பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என்னும் எதிர்வுகளின் விளைவாக எழுந்த சிக்கலாக மட்டுமின்றி, இருதரப்பிலும் இடம் பெயர்ந்து நின்றவர்களையும் பார்க்க முடிகிறது.
இசுலாமியரான நாமக்கல் முகமது உஸ்மான், பார்ப்பனர் அல்லாதவரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.பக்தவச்சலம்(முன்னாள் முதல்வர்) ஆகியோர் குருகுலத்தை ஆதரித்துள்ளனர். அவர்களின் கடிதங்கள், அறிக்கைகள், விவாதங்கள் அனைத்தும் நூலின் பின் இணைப்பில் காணப்படுகின்றன.
குருகுலம் என்றால் என்ன என்னும் விளக்கம், போராட்டத்தின் தொடக்கமும், போக்கும், போராட் டத்தின் உச்சமும், முடிவும், குருகுலம் கற்பித்த பாடம், வரலாற்றில் குருகுலப்போராட்டம் என்னும் ஐந்து தலைப்புகளின் கீழ் நூலுள் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூறியது கூறலோ, சலிப்பு ஏற்படுத்தும் கடினமான ஆய்வு நடையோ ஏதுமின்றி, தெளிந்த நீரோடையாகப் புத்தகத்தில் செய்திகள் சொல்லப் பட்டுள்ளன.
எங்கோ ஓரிடத்தில், யாரோ ஓரிருவருக்குச் சில பாதிப்புகள் ஏற்பட்டன என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு போராட்டத்தில் இறங்க வேண்டுமா? அச்சிறு போராட்டம் தமிழக அளவில் ஒரு பெரும் வரலாற்றுச் செய்தியாக இன்றும் பேசப்பட வேண்டுமா என்னும் வினாக்கள் ஒரு சிலருக்கு எழலாம். “ஒரு சிறு பகுதியில் தீங்கிழைக்கப்பட்டாலும், அது முழுப்பகுதி யையும் பாதிக்கும்” என்னும் மார்டின் லூதர் கிங்கின் கருத்தை இந்த இடத்தில் நாம் எண்ணிப்பார்க்கலாம்.
ஆகவேதான், தமிழ்நாட்டின் தென்கோடியில், எங்கோ ஒரு சிற்றூரில் நடைபெற்ற சாதிப்பாகுபாட்டினைத் தமிழகம் முழுவதும் எதிர்க்க வேண்டிய கடமை அன்றைய தலைவர்களின் தோள்களுக்கு வந்தது.
அந்த வரலாற்றை இத்தனை தெளிவாக எழுதியிருக்கும் பழ. அதியமான் மிகுந்த பாராட்டுக் குரியவர். அவருடைய முயற்சிகள் தொடரட்டும் என வாழ்த்துகின்றோம்.
(நன்றி: கீற்று)