வரலாறு பயணிகளுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. பயணிகள் புதிய நிலங்களை, நாடுகளை, கண்டங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். புதிய விலங்கினங்களையும் பறவைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நாடுகளுக்கு இடையில் வணிக உறவுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியைத் துரிதப்படுத்தியிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தை வளர்த்திருக்கிறார்கள்.
உலகம் உருண்டையானது என்பது பயணங்கள் மூலமாகவே நமக்குத் தெரியவந்தது. ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குக் கடலில் வரமுடியும் என்பதைப் பயணிகளே கண்டறிந்தார்கள். கடல் பயணம் இல்லையென்றால் அமெரிக்கா இல்லை. ஒரு சவாலாக நினைத்து கடலில் கால் பதித்தவர்கள் ஏராளம். ஆசியா போனால் செல்வந்தர் ஆகிவிடலாம் என்னும் கனவோடு கப்பலில் இறங்கியவர்கள் பலர்.
அறிவியல் ஆய்வுகளுக்காகவே கப்பல் பயணம் மேற்கொண்டவர்கள் இருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காகப் பயணம் செய்தவர்கள் இன்னொரு வகை. பெரிய நோக்கங்கள் எல்லாம் இல்லாமல், சாகசத்துக்காகக் கடல் பயணம் மேற்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
பயணம் மனிதர்களைப் பிணைத்திருக்கிறது. கடலும் மலையும் நாடும் கண்டமும் பிரித்தாலும் உலகம் என்பது ஒன்றுதான். வெவ்வெறு மொழிகள் பேசினாலும், விதவிதமான ஆடைகள் அணிந்தாலும், வெவ்வேறு வகையான வாழ்க்கைமுறையைக் கடைபிடித்தாலும் மனிதர்களுக்கிடையே அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதைக் கடல் பயணங்களின்மூலமே உலகம் தெரிந்துகொண்டது.
அதே பயணங்கள்தான் மனிதர்களைப் பிளவுபடுத்தவும் செய்தது. எங்கெல்லாம் இயற்கை வளங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துவைத்துக்கொண்டு பலர் படையெடுத்து வருவதற்கும் ஆக்கிரமிப்புகள் செய்வதற்கும் பயணங்கள் உதவியுள்ளன.
ஒரே பயணம் சிலருக்கு நன்மையையும் வேறு சிலருக்குத் தீமையையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. உதாரணத்துக்கு, வாஸ்கோ ட காமா இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தால் அவருடைய நாடான போர்ச்சுகல் நன்மையடைந்தது. ஆனால் இந்தியா ஒரு காலனி நாடாக மாறிப்போனது.
கடல் பயணங்களை மேற்கொண்டு அற்புதமான பல ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் பலர் நிகழ்த்தியிருக்கிறார்கள். வழிமறித்துக் கொள்ளையடிப்பதற்காகவே கப்பலில் சென்ற கொள்ளையர்களும் இருக்கிறார்கள்.
பிரச்னை கடலிடமோ கப்பலிடமோ இல்லை. கடல் எல்லோரையும் ஒன்றுபோலவே வரவேற்கிறது. கப்பல் எல்லோரையும் அன்புடன் வரவேற்று சுமந்துசெல்கிறது. பயணம் செய்பவர் யார், அவருடைய நோக்கம் என்ன என்பதில்தான் வேறுபாடு அடங்கியிருக்கிறது.
சுட்டி விகடனில் ‘சென்றதும் வென்றதும்’ என்னும் தலைப்பில் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது. ஐயோ வரலாறா என்று அலறும் இளம் வாசகர்களுக்கு அந்தத் துறையின்மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக கதை போல் எளிமையான நடையில் இந்த அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன.
சில முக்கியமான பயணங்களை மட்டுமே என்னால் தேர்ந்தெடுக்கமுடிந்தது. பயணிகள் குறித்து எளிமைப்படுத்தப்பட்ட சித்திரங்களை மட்டுமே அளிக்கமுடிந்தது. இதில் இடம்பெறும் ஒவ்வொரு பயணியைப் பற்றியும் அவர்களுடைய ஒவ்வொரு முக்கியமான பயணம் பற்றியும் தனித்தனியே பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இவர்களில் சிலர் தங்களுடைய பயண அனுபவங்களை தாங்களே எழுதியிருக்கின்றனர். அவற்றையெல்லாம் நாடிச் சென்று படிக்கவேண்டும் என்னும் ஆர்வத்தை ஏற்படுத்துவது மட்டுமே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
எழுதுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சுட்டி விகடன் இதழின் பொறுப்பாசிரியர் கணேசனுக்கு நன்றி. வெளிவந்த அத்தியாயங்களைத் தொகுத்து, செம்மைப்படுத்தி புத்தக வடிவுக்குக் கொண்டுவந்த சுஜாதாவுக்கு நன்றி. சுட்டி விகடனில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சிறப்பாக அழகூட்டிய ஓவியர் ஷண்முகவேலுக்கு நன்றி. இவர்களுடைய ஒத்துழைப்பு இன்றி இந்தப் புத்தகம் இல்லை. மற்றபடி, குற்றம் குறைகளுக்கு நானே முழுப் பொறுப்பு.