காவல்கோட்டம் தமிழில் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நாவல்களில் முதன்மையானது என்று சொன்னேன். புனைவு மூலம் ஒரு மாற்று வரலாற்றை உருவாக்கி வரலாறேயாக வரலாற்றுக்குள் நிலைநாட்டுவதில் முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறது இந்த நாவல். வரலாற்று அனுபவம் என்பது சிடுக்கும் சிக்கலும் உத்வேகமுமாக வாழ்க்கை கட்டின்றிப் பெருக்கெடுப்பதைப் பார்க்கும் பிரமிப்பும் தத்தளிப்பும் கலந்த மனநிலைதான்.
வரலாற்றை ஒருபோதும் ஒரு கட்டுக்கோப்பான வடிவ உருவகத்திற்குள் நிறுத்திவிட முடியாது. அதேசமயம் அதில் ஒரு கட்டுக்கோப்பைப் பார்க்க நமது மனம் துடித்தபடியேதான் இருக்கும். அள்ள அள்ள கைமீறிச் சரிந்து விரிந்து பரவும் அனுபவமே எப்போதும் வரலாற்றில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. வரலாற்று நாவல் அளிக்கும் அனுபவமும் கிட்டத்தட்ட அதுவே.
தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலை வாசித்த ஹென்றி ஜேம்ஸ் அதன் வடிவம் எவ்வித்மான கட்டுக்கோப்புக்குள்ளும் அடங்காமல் இருக்கிறது என்பதை ஒரு பெரும் குறையாகச் சொல்லி அந்நாவலை நிராகரித்தார்.[ அதை ‘loose baggy monster’ என்றார் ஹென்றி ஜேம்ஸ்] பிற்பாடு அதுவே ஒரு சிறந்த வரலாற்று நாவலுக்குரிய முன்னுதாரணமான வடிவமாக இருக்க முடியும் என்று ஏற்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு காடுபோல. ஈரம் உள்ள இடத்துக்கெல்லாம் பரவி முளைத்து விரிந்து கொண்டே இருக்கும் ஒரு மாபெரும் விதைத் தொகுதிதான் காடு என்பது. உலகின் முக்கியமான வரலாற்று நாவல்கள் அனைத்துமே பிற்பாடு போரும் அமைதியும் நாவலின் வடிவத்தையே முன்னுதாரணமாகக் கொண்டன. பெருக்கெடுப்பதே அவற்றின் வழி. வடிவமின்மையே அவற்றின் வடிவம்.
காவல்கோட்டமும் அத்தகைய வடிவமின்மையை வடிவமாகக் கொண்டுள்ளது. சாத்தியமான இடங்களுக்கெல்லாம் துணைக் கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டு துணைக் கதைகளை கண்டடைந்து அது விரிந்தபடியே இருக்கிறது. மனிதர்கள் தோன்றி மறைய காலம் மட்டும் முன்னால் பெருகிச் சென்றபடியே இருக்கிறது. இந்த ஆயிரம் பக்கங்களில் எத்தனை நூறு மானுடக் கதைகள் கூறப்பட்டிருக்கின்றன என்ற பெருவியப்பு நாவலை முடித்ததும் நெஞ்சை நிறைக்கிறது.
பிரம்மாண்டமான நாவல்களுக்கே உரிய தனித்தன்மை இது, சமயங்களில் முகங்களில் தனித்துவங்கள் மறைந்து முகங்களின் அலையாக அவை நமக்கு காட்சியளிக்கும். வரலாற்றுக் கதாபாத்திரங்கள் எளிய மனிதர்கள். போர் நுட்பங்கள் போலவே திருட்டு நுட்பங்கள். கொண்டாட்டங்கள், பெரும்பஞ்சங்கள்…. போர்களுக்குப் பின்னும் பஞ்சத்திற்குப் பின்பும் பிடிவாதமாக மீள மீள உயிர்த்தெழுந்து வரும் மானுடம். மானுடக் கதையை எழுதுவதே ஒரு படைப்பாளியின் பணி. எழுதி எழுதித் தீராத மனித வாழ்க்கையின் கதை. அதை எழுதிக் காட்டியிருக்கிறது இந்நாவல். சமீபகாலமாக வெறும் உத்திகள், மொழிப் பயிற்சிகள் என்று சலிப்பூட்டிய தமிழ்ச்சூழலில் இந்நாவலை கிட்டத்தட்ட வெங்கடேசன் வருணிக்கும் தாது வருஷப் பஞ்சத்திற்குப் பிறகு வந்த அதே மழையைப் போலவே உணர்கிறேன்.
ஒரு பேட்டியில் உம்பர்த்தோ ஈக்கோ தகவல்களே நாவலை உருவாக்குகின்றன என்கிறார். தீராத தகவல்களின் தொகையாகவே நாவலாசிரியனின் மனம் இருக்கவேண்டும் ,கலைக்களஞ்சிய நாவல் என்று ஒன்று இல்லை, எல்லா நல்ல நாவல்களும் கலைக் களஞ்சியங்களே என்று விளக்குகிறார். நான் அடுத்தபடிக்குச் சென்று தகவல்கள்தான் புனைவு என்று கூறுவேன். தகவல்களால் ஆனதே வரலாறும் பண்பாடும். தகவல்களின் ஒழுங்குகள் அவை. மேலதிக நுண் தகவல்களுடன் வரலாற்றுக்குள்ளும் பண்பாட்டுக்குள்ளும் ஊடுருவுவதே இலக்கியமாகும்.
உலக இலக்கியத்தின் பெரும்படைப்புகள் அனைத்துமே பிரம்மாண்டமான தகவல் பெருக்கம் கொண்டவை. உதாரணம் தல்ஸ்தோய்தான். ராணுவ நகர்வு முதல் தேனீ வளர்ப்பு வரை போரும் அமைதியும் தொட்டுச் செல்லாத தளங்கள் இல்லை. மஸ¤ர்க்கா நடனம் முதல் பாக்ரேஷியனின் மந்திராலோசனை வரை அவரது துல்லியம் நீள்கிறது. இன்றைய பின்நவீனச்சூழல் கலைக்களஞ்சியம் போன்று பரந்த பெரும் புனைவுகளை உருவாக்குகிறது. அவை நூல்களில் இருந்து நேரனுபவங்களில் இருந்தும் பெறப்படுபவை. அவை இரண்டுமே வெங்கடேசனுக்குக் கைகொடுக்கின்றன.
தமிழில் மிக குறைவான படைப்புகள்தான் காவல்கோட்டத்துக்கு நிகரான தகவல் பெருக்கம் உள்ளது என்பது வியப்புருவாக்கும் விஷயம் . பலநூறு சாதிகளும் பல்வேறு நிலப்பகுதிகளும், நிலத்துக்கு ஏற்ப மாறுபடும் வேளாண்மையும், வணிக ஆசாரங்களும், மூவாயிரம் வருடத்து வரலாறும் கொண்ட இந்த தேசத்தை ஓரளவேனும் சொல்லிவிடுவதற்கு எத்தனை மலை மலையாகத் தகவல்கள் தேவை! உள்ளங்கையளவு ஐரோப்பாவை புனைவாக்கம் செய்யவே அங்கே எத்தனை பிரம்மாண்டமான தகவல் களஞ்சியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன!
ஆனால் தமிழில் எழுதப்பட்ட இலக்கியம் அளிக்கும் ஏமாற்றம் சாதாரணமானது அல்ல. இத்தனை செறிவான மக்கள் தொகையும் உள் மடிப்புகளாக விரியும் பண்பாட்டுப் புலமும் கொண்ட இச்சமூகத்தின் மக்களில் தொண்ணூறு விழுக்காடு பேர் இன்றுவரை எழுதப்படாத மக்கள். தமிழில் நவீன இலக்கியம் அவ்ந்து நூறுவருடமாகியும் நம் மக்கள்சமூகங்களில் பத்துசதவீதம் பேர் கூட இலக்கியத்தால் இன்னமும் தீண்டப்படவில்லை. ஒரு படைப்பிலாவது சித்தரிக்கப்படாத வாழ்க்கை உள்ள எத்தனை சாதிகள், எத்தனை நிலப்பகுதிகள் தமிழகத்தில் உள்ளன என்று பாருங்கள், பிரமிப்பே எஞ்சும்.
இன்றுவரை தமிழில் ஒரு நகரத்தின் பரிணாமம் எழுதப்பட்டதில்லை. ஒரு கோயிலின் பரிணாமம் எழுதப்பட்டதில்லை. ஒரு சாதி புனைவுக்குள் வந்து முழுமையாக விரிந்ததில்லை. இவ்வளவு பெரிய விவசாய நாட்டில் விவசாயம் புனைவிலக்கியத்தில் மிகமிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கிறது. இத்தனை பெரிய கால்நடைச் செல்வம் உள்ள இந்த நாட்டில் கால்நடைகளைப் பற்றிய எளிய சித்திரம்கூட புனைவிலக்கியத்தில் இல்லை. நமது சமையல், மருத்துவம் எதுவுமே நம் இலக்கியத்தில் இல்லை. நமது வாழ்வும் பண்பாடும் நம் இலக்கியத்தில் இல்லை.
நமது எழுத்தாளர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த அந்தரங்கத்தை எழுதுகிறார்கள். தங்கள் மிகச்சிறிய வாழ்வில் தங்களுக்கு எது தெரிய வந்ததோ அதை எழுதுகிறார்கள். சரக்கு தீரும்போது உத்திகளில் சென்று சேர்கிறார்கள். விதவிதமான வடிவங்களை எழுதிப்பார்க்கிறார்கள். மொழியில் சோதனை செய்யும் மொழித்திறனும் இருப்பதில்லை. விளைவாக பரிதாபகரமான முயற்சிகளையே காண்கிறோம். நமது மொழியில் பெரும்பாலான இளம் படைப்பாளிகள் புதுக்கவிதை எழுதுவதற்கான காரணம் ஒன்றே. அதை எழுதுவதற்கு அனுபவம் அவதானிப்பு, வாசிப்பு எதுவுமே தேவையில்லை. உழைப்போ, கலைக்கான அர்ப்பணிப்போ தேவையில்லை. எழுதுகிறோம் என்ற போலி திருப்தி வந்துவிடுகிறது.
இந்தப் போலி மனநிலை உருவாவதற்குக் காரணம் நமது எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். தன் சொந்த வாழ்க்கைக்கு அப்பால் அவர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. தான் பிறந்த சாதியை, தன்னைச் சூழ்ந்திருக்கும் பண்பாட்டின் உட்பிரிவுகளை, தான் வாழும் நகரத்தை தெரிந்து கொள்ள அவன் ஒரு சிறுமுயற்சிகூட எடுப்பதில்லை. ஒன்றுமே தெரியாமல் என்ன புனைவை எழுதமுடியும். மீண்டும் மீண்டும் அது ஒரு வகை டைரியாகவே அமைகிறது. அபத்தமான பாலியல் ஏக்கங்களை ஏதோ பெரிய தத்தவச் சிக்கல்போல முன்வைக்கும் கவிதைகளை எழுதமுடிகிறது.
இச்சூழலில் வெங்கடேசனின் காவல்கோட்டம் உருவாக்கும் வீச்சு மிகவும் முக்கியமானது. ஒரு பரந்துபட்ட பார்வை ஒரு பக்கம் வரலாற்றிலம் மறுபக்கம் நாட்டாரியலிலும் விரிந்து செல்கிறது. ஒரு ராணுவம் வியூகம் வகுக்கும்போது அதன் உபசாதி அமைப்பு எப்படி இருந்தது என்று கூறும் நுட்பமும் சரி, தாதனூர் கள்ளர்கள் எப்படி தங்கள் தலைக்குமேல் எழுந்து நின்ற அமணர் மலையை பார்த்தார்கள் என்று கூறும் நுட்பமும் சரி வியக்கத்தக்க முறையில் அமைந்துள்ளன. ஒரு கைகக்டிகாரத்தை திருடிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். உள்லே டிக் டிக் சத்தம். எழுத்துக்கள் வேறு. மேலே உள்ள சமணார்சாமி படித்தவர்தானே எழுத்துக்களை அவர் பார்த்துக்கொள்ளட்டும் என்று அவர்காலடியில் கொண்டு வைத்து விடுகிறார்கள்.
தாதனூரில் நெல் புடைக்கும் காட்சி தாதனூரின் அன்றாட அகவாழ்க்கையின் சித்திரத்துக்கு ஓர் உதாரணம். பெண்களின் வம்புகளுக்குள் ஓடும் பாலியல் மீறல்களை அபாரமான அவதானத் திறனுடன் முன்வைக்கிறது இந்நாவல். தண்டட்டி போட வரும் குறவன் எப்படி காதுகளை பெரிதாக்குகிறான் என்பதைக் காட்டும் அதே விரிவுடன் பிரிட்டிஷ் நிர்வாக முறையின் சம்பிரதாயமான வரிவடிவ நடவடிக்கைகளும் கூறப்படுகின்றந. நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் முதல் தமிழிலக்கியத்தில் மதுரை சித்தரிக்கப்படுகிறது. பெரும்பாலும் அந்தரங்க மனப்பதிவுகள் என்பதற்கு அப்பால் எந்த சித்தரிப்பும் சென்றதில்லை. இரண்டே இரண்டு விதிவிலக்குகள்தான். ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்.
இப்பெருநாவலின் குறைகள் என்று சிலவற்றை சுட்டிக்காட்ட வேண்டும். இந்நாவலை வாசிக்கும் ஓரு நல்ல வாசகன் இக்குறைபாடுகளை உணர்ந்தபடியேதான் இதன்வழியாகக் கடந்துசெல்ல முடியும். ஏற்கனவே கூறியதுபோல ஆரம்பகட்ட வரலாற்றுச் சித்தரிப்பில் பலபகுதிகள் வெறும் தகவல் குறிப்புகளாக மட்டுமே உள்ளன. வரலாற்றில் அவர் கவனப்படுத்த விரும்பும் பகுதியை மட்டும் விரித்துரைத்துவிட்டு பிறவற்றுக்கு தகவல் மட்டும் கூறி முன்னகர வெங்கடேசன் எண்ணியிருக்கலாம். ஆனால் இவ்வாறு நேரடிக் குறிப்புகளாகக் கொடுக்காமல் வேறு வகையில் புனைவின் கட்டமைப்புக்குள் வரும்படியாக அவற்றை அமைப்பதற்கு முயன்றிருக்கலாம்.
படிப்படியாக விரிந்து வளரும் கொள்ளும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்பது இந்நாவலின் இன்னொரு பெரும் குறை. அழுத்தமான கதாபாத்திரங்கள் பல உள்ளன. மாயாண்டி பெரியாம்பிளை போல. ஆனால் கதாபாத்திரங்களின் அகத்திற்குள் செல்வதும் அந்த அகம் கொள்ளும் பரிணாம மாற்றத்தைச் சித்தரிப்பதும்தான் கதாபாத்திரங்களை பெரிதாக்குகிறது. அவர்களுடன் வாசகர்கள் நெருங்கும்படிச் செல்கிறது. அதாவது அவர்களை வாசகன் வெளியே பார்ப்பதில்லை; மாறாக உள்ளே நுழைந்தே பார்க்கிறான். இந்த அனுபவம் இந்நாவலில் விடுபடுகிறது. எல்லா கதாபாத்திரங்களையும் நாம் வாசகனாக நின்று பார்க்கிறோம், ஒரு கதாபாத்திரத்துடனும் சேர்ந்து வாழவில்லை. ஆகவேதான் ஒட்டுமொத்தமாக நாவல் முடியும்போது எந்த மனித முகமும் வலுவாக நிற்கவில்லை.
மன ஓட்டங்களைச் சொல்ல வெங்கடேசன் முயலவேயில்லை. அவரைப் பொறுத்தவரை வரலாறு என்பதும் வாழ்க்கை என்பதும் புறவயமாக வெளியே நிகழ்வது மட்டுமே. நிகழ்ச்சிகள் மட்டுமே இந்நாவலில் உள்ளன. கதாபாத்திரங்களின் எதிர்வினைகள் கூட இல்லை. தான் உருவாக்கிய சாம்ராஜ்யத்தில் தானே அன்னியமாகும்போது அரியநாத முதலியார் என்ன நினைத்தார். தங்கள் குலத்தின் காவலுரிமை மெல்ல மெல்ல இல்லாமலாக்கும்போது மாயாண்டி பெரியாம்பிளை என்ன நினைத்தார்? இந்நாவல் அங்கே செல்வதேயில்லை
மன ஓட்டத்தை கைவிட்டுவிட்டதனால் இந்நாவல் எந்தக் கதாபாத்திரத்தையும் தொடர்ச்சியாக பின் தொடர்வதில்லை. நிகழ்ச்சிகளை மட்டுமே கோர்த்துச் செல்கிறது. ஆகவே முழுக்க முழுக்க ஒரு புறவய வரலாறாகவே இது நின்றுவிடுகிறது. வரலாறு என்பது எப்படி புறத்தே நிகழ்கிறதோ அதேபோல அகத்தே நிகழ்வதுமாகும். அந்த அக வரலாறே இந்த பெருநாவலில் இல்லை. ஆகவே ஒரு பெரிய பகுதி தொடப்படவே இல்லை.
இந்தப் புறவயப் பார்வையின் விளைவாக இருக்கலாம், இந்நாவலில் கவித்துவ உச்சம் என்பதே சாத்தியமாகவில்லை. இத்தனை பெரிய நாவலுக்கு இது மிகப்பெரிய குறையேயாகும். இத்தனை மானுட வாழ்க்கை கூறப்படும் இடத்தில் நாம் மானுட உச்சம் என்று கருதும் இடம், நெகிழ வைக்கும், மனம் விம்மச் செய்யும் இடம் எதுவும் நிகழவில்லை. ஒட்டுமொத்த மானுட வாழ்வே இதுதான் என்று நமது அகம் பாய்ந்து எழும் தருணம் எதுவும் இந்நாவலில் இல்லை. ஒரேஓரு விதிவிலக்கு என்று சொல்லத்தக்கத்து பஞ்சத்திற்குப்பின் பிறக்கும் அந்தக் குழந்தையின் சித்திரம்
வரலாற்றுநாவலின் கவித்துவ வெற்றிக்குச் சிறந்த உதாரணமாக தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலைச் சொல்லலாம். அதுவும் புறவயத்தன்மைமிக்க நாவலே. அனால் கூட்டம் கூட்டமாகச் செல்லும் சட்டை அணியாத போர்வீரர்களைப் பார்த்து இளவரசர் ஆண்ட்ரூ பீரங்கித்தீனி என்று நினைக்கும் இடமும், அவர் போர்க்களத்தில் காயம்பட்டு கிடக்கும்போது வானத்தைப் பார்க்கும் இடமும் அவற்றின் அபாரமான கவித்துவத்தால் நாவலையே தாண்டிச் சென்றுவிட்டவை. அத்தகைய பகுதிகளே கலைப்படைப்பை உச்சம் பெறச் செய்கின்றன.
அவை வாசகனை கற்பனையின் முடிவின்மையை சந்திக்கச் செய்வதன் மூலமே நிகழ்கின்றன. நாம் ஒரு நாவலில் வாழ்வை பார்க்கிறோம். கூடவே வாழ்கிறோம். ஆனால் அந்த உச்சத்தில் நாமே நாவலாசிரியராகிறோம். அவன் எழுதாத இடங்களுக்குக்கூட நாம் பறந்து செல்லமுடியும். அத்தகைய உச்சம் இந்நாவலில் எங்குமே நிகழவில்லை. அதனால்தான் நல்ல நாவலாகிய இது மகத்தான நாவலாக ஆகவில்லை.
வெங்கடேசனின் மொழிநடை சிக்கல் இல்லாததாக உள்ளது. மொத்த நாவலையும் சரளமாக வாசிக்கச்செய்கிறது அது. இளம்படைப்பாளிக்குரிய முதிர்ச்சியின்மை என்பது மிக அபூர்வமாகவே காணக்கிடைக்கிறது. காவல் கோட்டத்தின் மொழி வரலாற்று விவரணைகளுக்கு நுட்பமான தகவல் செறிவுடனும் தாதனூர் சித்திரங்களுக்கு கதை சொல்லும் வாய்மொழிச் சரளத்துடனும் உருமாற்றிக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கதே. ஆனால் இத்தகைய ஒருபெருநாவலுக்கு எல்லா நுண்தருணத்திற்கேற்பவும் தன்னை உருமாற்றம்செய்துகொள்வதுடன் விவரிப்பாகவும் நாடகீயமாகவும் கவித்துவமாகவும் மாறும் அபாரமான நடைதேவை. வெங்கடேசனின் நடை இந்நாவலைநிகழ்த்துகிறது, மேலெழுப்பவில்லை. .விதிவிலக்காகச் சொல்லத்தக்க இடங்கள் கோட்டைத்தெய்வங்கள் இறங்கும் காட்சியும் மங்கம்மாளின் மரணத்தருணமும்தான்.
எவ்வளவு தேவையோ அவ்வளவே உரையாடலைக் கையாளும் நாவல் இது. தாதனூர் கள்ளர்களின் பேச்சுமொழி குறையில்லாமல் அமைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஆனால் இத்தகைய ஒரு பெருநாவல் கோருவது இன்னமும் வண்ணங்கள் கொண்ட உரையாடலை. தாதனூர்க்கள்ளர்களின் பேச்சுநடை அல்ல, மாறாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உரிய தனித்த பேச்சுநடையை நாவல் கோருகிறது. ஒரு குறிப்பிட்ட தொழிற்களத்தில் உள்ளவர்கள் அதற்கே உரிய பேச்சுமொழி ஒன்றை மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். அதன் தனித்தன்மைகள் பலவகையான சொலவடைகளாகவும், நகைச்சுவைகளாகவும் வெளிப்படும். அத்தகை அபூர்வமான உரையாடல்தருணங்கள் ஏதும் இதில் உருவாகவில்லை, விதிவிலக்கு பெண்கள் தானியம் இடிக்குமிடத்தில் பாலியல்கதைகளைப் பேசிக்கொள்ளும் தருணம் மட்டுமே.
ஆரம்பத்தில் வரலாற்று மாந்தர்களின் உரையாடல்களில் சில அத்தியாயங்களில் ஒருவித செயற்கையான நாடகத்தளம் கலந்துள்ளது. அவர்கள் தெலுங்கில் பேசிக்கொள்கிறார்கள். அதை தமிழில் அமைக்கும்போது அச்சுநடை தேவையாகிறது. அது தெலுங்கு என்பதை நினைவூட்டும் சில சொற்களுடன் அவற்றை அமைத்திருக்கலாம். மாறாக தூயதமிழ் காரணமாக அவை நாடகம்போல் அமைந்துவிடுகின்றன. தாதனூர்க்காரர்கள் திருடச்செல்லும்போது பேசும் உரையாடல்கள் நம்பகமாகவும் சரியாகவும் உள்ளன. அனால் ஒரு பெருநாவலுக்கு வாசகன் இன்னமும் எதிர்பார்க்கலாம். உரையாடல்கள் மூலம் வெளிப்படும் குணச்சித்திர விசித்திரங்கள், கதாபாத்திரங்களின் தனித்தன்மையைக் காட்டும் நகைச்சுவை மற்றும் நாட்டார்மரபுக்கே உரிய ஒரு கவித்துவம் ஆகியவற்றின் மூலம் உரையாடல் இன்னும் நுட்பமாக ஆக்கப்பட்டிருக்கலாம். இந்நாவலின் எந்த ஒருகதாபாத்திரத்தின் குரலும் நம் காதில் நீடிப்பதில்லை.
கடைசியாக, வெங்கடேசனின் வரலாற்றுத் தரிசனம் மார்க்ஸிய கோட்பாட்டுச் சட்டகத்தைத் தாண்டவில்லை என்றே கூறவேண்டும். வரலாறு என்பது புறவயமான, பொருண்மையான சக்திகளின் முரணியக்கம என்ற புத்தக ஞானத்திற்கு அப்பால் செல்லும் பயணம் எதுவும் இந்நாவலில் இல்லை. உதாரணமாகச் சொல்லத்தக்க நாவல் மைக்கேல் ஷோலகோவின் ‘டான் அமைதியாக ஓடுகிறது’. அதுவும் ஒரு மார்க்ஸிய சட்டகம் உடைய நாவல்தான். அதிலும் பொருண்மைச் சக்திகளின் முரணியக்கம்தான் விவரிக்கப்படுகிறது. ஆனால் அந்நாவல் அதன் உச்சத் தருணங்களில் மானுட மனத்தின் விளங்கிக் கொள்ளமுடியாத குரோதத்தையும், பேராசையையும், இலக்கில்லாத வேகத்தையும் முதன்மையான இயங்கு விசையாக காட்டி நிற்கிறது. கற்றறிந்தவற்றில் இருந்து தன் அனுபவ ஞானம் மூலம் கலைஞன் கொள்ளும் இந்த இயல்பான முன்னகர்வே அவனுடைய தனி முத்திரை.
ஆனால் வெங்கடேசனின் நாவலில் பொருண்மைச் சக்திகள் மட்டுமே வரலாறாக நிற்கின்றன. மனித அகம் உருவாக்கும் மோதல்கள் கொந்தளிப்புகள் எதுவுமே உருவாகவில்லை. பல இடங்களில் நாம் கதாபாத்திரங்களின் அகத்தை காணாமல் உடலையே கண்டுகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்நாவலின் உச்சங்கள் எல்லாமே ஒன்று மதுரைக் கோட்டை இடிபடுவது போல வரலாற்று நிகவுகள். அல்லது பஞ்சம் போன்ற இயற்கை நிகழ்வுகள். அல்லது தனிமனித அழிவுகள்.
அனைத்தையும்விட முக்கியமான குறைபாடு என்றால் ஓர் அரசியல் செயல்பாட்டாளன் என்ற தன்னுணர்வு ஆசிரியருக்கு அளிக்கும் இடக்கரடக்கல் மனநிலையைக் கூறவேண்டும். ‘அரசியல் சரி’களை மீறிவிடக்கூடாது’ என்ற பிரக்ஞையுடனேயே பல இடங்களை எழுதியிருக்கிறார். தாதனூர் மறவர்களின் எதிர்மறைக் கூறுகள் தொட்டும் தொடாமலும் சொல்லிச் செல்லப்பட்டிருக்கின்றன. நாவல் மறவர்களிடம் திருட்டுக் கொடுக்கும் கோனார்கள், நாயக்கர்களின் பார்வையில் விரிந்திருக்கும் என்றால் கள்ளர்கள் எப்படி சித்தரிக்கப்பட்டிருப்பார்கள் என்ற வினா வாசகன் மனதில் எழாமலிருக்காது.
குறிப்பாக சாம்ராஜ் என்ற கதாபாத்திரத்தின் சித்தரிப்பை கூறவேண்டும். ஜேசுசபை பாதிரியார்களால் வளர்க்கப்பட்டு வெள்ளையர் சார்பாளனாக உருவாக்கப்பட்ட இந்தக் கதபாத்திரத்தை அதன் வரலாற்று இயல்பை மீறி வெள்யைடித்துக் காட்ட முயல்கிறார் ஆசிரியர். ஏசுசபை பாதிரியார்கள் கிறித்தவ அறவியலில் நிலைகொண்டவர்கள். ஏகாதிபத்தியத்துடன் அவர்கள் ஒத்துழைத்தமைக்குக் காரணம் அதுதான். ஆனால் அரசின் அடக்குமுறைக்குப் பதிலாக மதத்தின் சீர்திருத்த நோக்கையே அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால் அவர்கள் நோக்கிலும் கள்ளர்கள் குற்றவாளிகளே. ஆனால் ஏசுசபையின் முகமான சாம்ராஜ் அப்படி இல்லை. முற்போக்கு மனிதாபிமானியாக இருக்கிறான்.
பிறமலைக் கள்ளர் குற்றவாளிச் சமூகமாக அறிவிக்கப்பட்டபோது அவர்களின் குழந்தைகள் போலீசால் அவர்களின் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டன. அவற்றை வளர்க்கும்படி ஜேசுசபை பாதிரியார்கள் கேட்டக் கொள்ளப்பட்டார்கள். இந்தப் பாதிரியார்கள் அமைந்த முகாம்களில் அக்குழந்தைகள் கடுமையான தண்டனைகளும் கட்டாய உழைப்பும் அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்கள். இந்தத் தகவல்களை நாம் இன்று ஜேசுசபை பாதிரிமார்களின் குறிப்புகளில் வாசிக்க முடிகிறது. குழந்தைகளுக்கு சாட்டையடி கொடுத்ததைப் பற்றியும், கடுமையான தண்டனைகள் மூலம் அக்குழந்தைகளின் பிறவிக்குணமான வன்முறையை நீக்க முனைந்ததைப் பற்றியும் பல பாதிரியார்கள் எழுதியிருக்கிறார்கள்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம் நீடித்த இந்த கொடிய வழக்கத்தால் பெரிய மானுட அவலம்தான் விளைந்ததே ஒழிய எந்தப் பயனும் உருவாகவில்லை. பெற்றோரிடம் இருந்து பிஞ்சு வயதிலேயே பிரிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் இழந்து கோழைகளகாவும் வன்முறையாளர்களாகவும்தான் ஆனார்கள். பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கம் ஒருவகை நவீனத்துவம் என்றால் கிறித்துவம் இன்னொரு வகை நவீனத்துவம். இரண்டும் இரண்டு வகை வன்முறைகள். முதல் வன்முறை அரசியல் வன்முறை, இரண்டாவது கருத்தியல் வன்முறை.
ஏறத்தாழ இப்படியேதான் ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடமும் அங்கிருந்த வெள்ளைய அரசு நடந்து கொண்டது. சொல்லப்போனால் இங்கே அவர்கள் செய்தது எல்லாமே அங்கே செய்து பார்த்ததைத்தான். அங்கே அப்படி பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட தலைமுறை திருடப்பட்ட தலைமுறை (Stolen Generation) என்று கூறப்படுகிறது. அதைப்பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் இருந்த மேட்டிமை வாதமும் உளவியல் வன்முறையும் வெளிக் கொணரப்பட்டுள்ளது.
உதாரணமாக உலகப்புகழ்பெற்ற சுயசரிதையான ‘முயல்காப்புவேலியைத் தொடர்ந்துசெல்…’ [Follow the Rabbit-Proof Fence : Doris Pilkington] அந்த சோக வரலாற்றைச் சொல்லும் ஒரு பெரும் படைப்பாகும். ஆஸ்திரேலியப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு ஜேசு சபையினரிடம் வளர்ப்பதற்காக கொடுக்கப்படுகிறார்கள். அதில் மூத்தவள் பதிநான்குவயதான மோலி கிரெய்க். இளையவள் எட்டு வயதான டெய்ஸி கிரெய்க். அவர்களின் உறவுக்குழந்தையான பத்துவயதான கிரேஸி ·பீல்ட்ஸ் கூட இருக்கிறாள். பெற்றோரைப் பார்க்கும் ஆவலில் அக்குழந்தைகள் முகாமிலிருந்து தப்பி ஆஸ்திரேலிய பாலை நிலத்தை கடக்க முனைகிறார்கள்
கையில் வரைபடமோ வழி குறித்த தகவல்களோ இல்லாமல் அக்குழந்தைகள் ஆஸ்திரேலிய பாலைநிலத்தை பிற நிலத்தில் இருந்து பிரிக்கும் 1600 கிலோ மீட்டர் நீளமுள்ள முள்வேலியின் ஓரமாக ஓடுகிறார்கள். பின்பக்கம் அவர்களின் சிறைக்காவலிட்டவர்களின் ஆட்கள் துரத்திவர பல வாரங்கள் ஓடி 1500 கிலோமீட்டரைத் தாண்டி குடும்பத்தைக் கண்டடைகிறார்கள். நம்ப முடியாத அவலமும் சாகசமும் கலந்த இந்த வரலாற்றை அவர்களில் ஒருத்தியின் கூற்றை ஒட்டி டோரிஸ் பில்கிங்டன் ப்¢ன்னால் புத்தகமாக எழுதினாள். அது முயல்வேலி என்ற பேரில் மகத்தான திரைப்படமாகவும் வந்தது.
அதற்கிணையான மானுட அவலத்தின் கதைதான் பிறமலைக்கள்ளர்களின் கிறித்தவ தத்தெடுப்பும். அந்தக் குழந்தைகளில் பெரும்பகுதி வேரற்ற மனிதர்களாக தொலைந்து போயினர். பிறமலைக்கள்ளர்களில் கிறித்தவம் இன்றும் ஊடுருவ முடியவில்லை, காரணம் அவர்களின் வேர்ப்பிடிப்பு அத்தகையது. அந்நிலையில் அந்த தத்தெடுப்பு எப்படிபப்ட்ட அவலமாக இருந்திருக்கும்! அதை நல்லெண்ண்ம கொண்ட சாம்ராஜின் சில வரிகள் வழியாக நாசூக்காக வருடிவிட்டு சென்று விடுகிறார் வெங்கடேசன்.
ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் கிறித்தவ மிஷனரிகள் இனவாதத்தாலும், மேட்டிமை நோக்காலும் ஒற்றை நோக்குள்ள மதவெறியாலும் செய்த பிழைகள் வரலாற்றில் ஆவணப்படுத்தப்படுகின்றன. கிறிஸ்தவர்களாலேயே பதிவு செய்யப்பட்டு பாடப்புத்தகங்களிலும் இடம் பெறுகின்றன. இந்தியாவில் மிஷினரிகளைப் பற்றி சாதகமாக மட்டுமே கூறவேண்டும், அவர்களின் பிழைகளைப் பற்றிப் பேசக்கூடாது, என்ற அரசியல் சரி உருவாக்கப்பட்டு கண்டிப்பாக நிலைநாட்டப் பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் மதவெறியர்கள் என்று முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது.
தமிழ்நாட்டு கல்விப்புலத்தில் இன்றும் வலுவான சக்தியாக உள்ள மிஷனரி அமைப்புகள் மூலம் இந்த கெடுபிடி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு வணங்கித்தான் வெங்கடேசன் அவரது கதையின் உண்மையான உச்சங்களில் ஒன்றை தீ£ண்டாமலேயே தாண்டிச் செல்கிறார். ஒரு நாவலாசிரியனின் ஆகப்பெரிய ஆயுதம் வாய்மையே என்னும்போது இந்த இடக்கரடக்கல் என்பது ஒரு பெரும் பிழை என்றே கூறவேண்டியுள்ளது.
முற்போக்குச் சம்பிரதாயத்தின் நெடிகளை மேலும் பல இடங்களில் பார்க்கலாம். கள்ளர்களோ நாயக்கர்களோ இயல்பான வரலாற்றுப் பரிணாமத்தின் புள்ளியில் நிறுத்தப்பட்டு சித்தரிக்கப்பட்டிருக்கும்போது தலித்துக்களும் பிராமணர்களும் மட்டும் இன்றைய அரசியலுக்குரிய நிலைபாடுகளில் நின்று காட்டப்பட்டிருக்கிறார்கள். பிராமணர்கள் பெரும்பாலும் எல்லா இடத்திலும் சாதிய வெறி கொண்டவர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் காட்டப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக, விசுவநாத நாயக்கர் கோட்டையை இடித்துக்கட்டும்போது பிராமணார் செய்யும் அகடவிகடங்களை குறிப்பிட்டிருக்கும் விதத்தைச் சொல்லலாம். தலித்துக்கள் எந்தவித சமூகப்பங்களிப்பும் இல்லாமல் ஒடுக்கப்படும் மக்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள். இரண்டுமே அரைகுறையான நோக்கின் விளைவுகள்.
இந்நாவல் சித்தரிக்கும் காலகட்டத்தில் ஒவ்வொரு சாதியும் அதன் ஆசாரங்களுக்குள் முழுமையாக வாசலை உள்ளே சாத்திக்கொண்டுதான் வாழ்கிறது. அப்படி பிராமணர்கள் வாழ்வது மட்டும் பெரும் பிழை அல்ல. பிராமணர்கள் பிற சமூகத்தை மதத்தைக் காட்டி எத்தி வாழும் கூட்டமும் அல்ல. அந்த நம்பிக்கையே திராவிட இயக்க அரசியலின் விளைவாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். பிற வரலாற்றாசிரியர்களை விடுவோம், டி.டிகோஸாம்பி போன்ற மார்க்ஸிய ஆய்வாளர்களே பிராமணர்களின் சமூகப்பங்களிப்பைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். ஆதிக்க சக்தியாகவோ அல்லது சுரண்டல் சக்தியாகவோ பிராமணர்கள் இருக்கவில்லை. அவர்கள் சமூகங்களை இணைக்கும் கருத்தியலை பரப்பி நிலைநாட்டியவர்கள்.
அரசுகளின் மேலாதிக்கத்துக்குத்தான் அந்த இணைப்பு உதவியது என்பது உண்மை. ஆனால் அந்தமேலாதிக்கம் மூல உருவான கட்டுப்பாடு என்பது அன்றைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கு ஒரு முற்போக்கான விஷயமே. அந்த இணைப்பு அன்றைய சமூகத்தில் சாதிகள் நடுவேயான உரையாடலுக்கும் சமரசத்துக்கும் பெரிதும் தேவைப்பட்டது. பல்வேறு வழிபாட்டுமுறைகளும் தொன்மங்களும் மைய மதங்களுக்குள் இழுத்துக்கொள்வதன் மூலமே உதிரி சாதிசமூகங்கள் சமூகத்தின் மையக்கட்டுமானத்திற்குள் நுழைந்து இடம் பிடிக்க முடிந்தது. அதிகாரத்தில் பங்குகொள்ள முடிந்தது.
வன்முறையற்ற ஆதிக்க விஸ்தரிப்பு என்று சமூகத்தின் பிராமணமயமாதலை டி.டி.கோஸாம்பி குறிப்பிடுகிறார். அன்று அதற்கு மாற்றாக இருந்தது வன்முறை மிக்க ராணுவ ஆதிக்கம் மட்டுமே. ஆகவே பிராமணர்களின் தொடர்பு, பிராமணியம் நோக்கிய நகர்வு என்பது என்றும் சுமுகமான அதிகாரம் நோக்கிய பயணமாகவே இருந்தது. ஆகவேதான் அத்தனை சாதிகளுக்கும் வேண்டியவர்களாக அவர்கள் இருந்தார்கள். பிராமணர்கள் மீதான அனைத்துச் சமூகங்களுக்கும் இருந்த ஆழமான மதிப்பையே நம் இலக்கியங்கள் மீளமீளப் பேசுகின்றன. ஏன், ஒருபேச்சுக்குச் சொல்வோம் பிறமலைக்கள்ளர் பிராமணர்களின் தொடர்பு பெற்றிருந்தால் மைய அதிகாரத்தின் பகுதிகளாக ஆகி இன்னும் மேலான சமூகப்படிநிலைகளில் சென்றிருப்பார்கள். இதுவே உண்மை.
பிராமண வெறுப்பு என்பது பிராமணசமூகம் பிரிட்டிஷார் வருகைக்குப் பின் தங்கள் மதம்சார்ந்த செயல்தளத்தில் இருந்து விலகிக்கொண்டு தொழில்தளங்களில் விரிந்ததனால் உருவானது. தங்கள் மத அதிகாரத்தை அவர்கள் அதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். தங்கள் பிடியில் அதிகாரத்தை முற்றாக வைத்திருந்தார்கள். அதிகாரத்தின் பங்குக்காக வந்த அடுத்தகட்ட சாதிகளுக்கும் அவர்களுக்குமான போரினாலேயே பிராமணக் கசப்பு உருவாகி வலுவடைந்தது. அந்த சமகால நிகழ்வை நிலப்பிரபுத்துவப் பழங்காலத்தின் இயல்பாக ஏற்றிச்சொல்வது என்பது ஒரே சொல்லில் ‘முதிரா முற்போக்கு’ மட்டுமே.
அதேபோன்றுதான் தலித்துக்கள். இந்நாவல் தலித்துக்களில் ஒருசாராரையே பேசுகிறது. ஏனென்றால் இது குவியம் கொள்ளும் தாதனூர் வட்டாரத்தில் தலித்துக்கள் இல்லை. தாதனூர்க் கள்ளர்களே கிட்டத்தட்ட பழங்குடிகள் போலத்தான் வாழ்கிறார்கள். அங்கே சமூக அடுக்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தாதனூர்க் கள்ளர்களிடம் கிட்டத்தட்ட உடைமைகளே இல்லை, அவர்கள் ஊரில் திண்டும் குறவன் உலக்கைக்குப் போடப்பட்ட பித்தளைப் பூண்களை மட்டுமே திருடிக்கொண்டு செல்கிறான். அவ்வளவுதான் அவர்களிடம் இருக்கும் சொத்து. ஏன் , ஆயுதங்களே குறைவுதான். பெரும்பாலும் கற்களைத்தான் ஆயுதங்களாக பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் நாயக்கர் வரலாற்றைச் சொல்லும்போது வெங்கடேசன் அதில் உள்ள தலித் பிரிவான மாதிகர்களைப் பற்றி அங்கங்கே சித்தரித்துக்கொண்டே செல்கிறார். படைகளில் அவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும் அதேசமயம் சாதிரீதியாக அவர்களுக்கு இருக்கும் இழிவுபடுத்தலும் பல காட்சிகளில் வலுவாகவே சொல்லப்படுகின்றன. கோட்டைகட்டுவதற்கு ஒருவனை பலிகொடுக்கவேண்டும் என்னும்போது மாதிகனைத்தான் இயல்பாக தேர்வுசெய்கிறார்கள். அவ்வாறு அவர்களை இழிவுக்குள்ளாக்குவது அன்றிருந்த ஆதிக்கசாதிகளின் கருத்தியல் என்பது சுட்டப்படுகிறது.
ஆனால் இந்தப்பார்வையும் மிகவும் சம்பிரதாயமான ஒன்றாகவே உள்ளது. ஒரு சரியான மார்க்ஸிய முரணியக்கப் பார்வையில் எந்த ஒரு சமூக படிநிலையும் கருத்தியலில் இருந்து உருவாகி கீழே வருவதல்ல. நில உடைமை போன்ற பொருளியல் கூறுகளின் விளைவாக கீழிருந்து உருவாகி மேலே செல்வதுதான் அது. மாதிகர்களின் சமூக இடம் தீர்மானிக்கப்பட்டது சிலருடைய சதியினால் அல்ல, அச்சமூகக் கட்டுமானத்தின் உள்ளார்ந்த பொருளியல் நோக்கங்களினால்தான். ஆனால் ஒட்டுமொத்த நாவலையும் மார்க்ஸியச் சித்தாந்த நோக்கில் அமைக்கும் வெங்கடேசன் இங்கு மட்டும் அரசியல் சரிகளை நோக்கிச் செல்கிறார்.
காவல்கோட்டம் நாவலை எப்படி தொகுத்துக்கொள்ளலாம்? வரலாற்றுத்தகவல்களாலேயே மாற்றுவரலாற்றை எழுதும் வரலாற்றுநாவல் என்ற வகைமையில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த நாவல் இதுவே. எழுதப்பட்ட பெருமொழிபு வரலாற்றுக்கும் எழுதப்படாத சிறுமொழிபு வரலாற்றுக்கும் இடையே உள்ள முரணியக்கமாக இது வரலாற்றை உருவகித்துக் காட்டுகிறது. அதில் எழுதப்பட்ட வரலாற்றை எழுதபப்ட்டபடியே சொல்லி எழுதப்படாத வரலாற்றை அதிக அழுத்தக் கொடுத்து அதுவே வரலாறு என்று நிலைநாட்ட முயல்கிறது. எழுதப்படாத வரலாற்றால் எழுதபப்ட்ட வரலாற்றின் இறுக்கமான பக்கங்களில் வண்ணம் சேர்க்க முயல்கிறது.
கள்ளர் சமூகத்தின் பண்பாட்டு வெளியை மிக விரிவான தகவல்துல்லியத்துடன் சித்தரிக்கும் இந்நாவலின் வாசிப்புத்தன்மையும் கலைத்தன்மையும் அந்த நுண்தகவல்களாலேயே சாத்தியமாகின்றன. ஒரு இனக்குழுவின் வரலாற்றுப் பாத்திரத்தை மிக விரிவாகக் காட்டியவகையிலும் இந்நாவல் முதலிடம் வகிக்கிறது. பழங்குடிப் பண்பாட்டில் வேர்கொண்ட அந்த இனக்குழு நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் தன் இடத்தை பெற்று நவீனகாலகட்டத்தில் அதை இழந்து மீண்டும் பெறுவதற்காக போராடும் இடத்தில் முடியும் நாவல் இது.
எழுதப்பட்ட வரலாற்றின் காலகட்ட நகர்வுகளை மிகுந்த வீச்சுடன் சித்தரிக்கிறது இந்நாவல். அதற்கு எழுதப்படாத நாட்டார் வரலாற்றின் கூறுகளை பயன்படுத்துகிறது – உதாரணம் நாயக்கர்காலக் கோட்டை வெள்ளையரால் இடிக்கப்படுதல். அதேபோல எழுதப்படாத வரலாற்றின் உக்கிரமான போராட்டக்களத்தை விரிவாகச் சித்தரிக்கிறது, அதற்கு எழுதப்பட்ட வரலாற்றை அழுத்தமான பின்னணியாக அமைக்கிறது- உதாரணம், கைரேகைச்சட்டத்துக்கு எதிரான சமர்.
இந்த முரணியக்கத்தை செவ்வியல் மார்க்ஸியத்தின் வரலாற்று முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்கில் அமைத்திருக்கிறது காவல்கோட்டம். ஆனால் அதை கோட்பாட்டுச் சட்டகமாக அல்லாமல் மிகவிரிவான மானுட கதையாக அமைத்திருப்பதனால் இந்நாவல் முக்கியமான கலைப்படைப்பாக ஆகிறது.தமிழில் இந்நாவலின் இடம் இதுவே.
(நன்றி: ஜெயமோகன்)