போர், குற்றம், வெறுப்பு போன்ற எதிர்மறையான நடத்தைகளைப் பற்றி சமூக அறிவியலாளர்கள் பல்லாயிரம் ஆய்வுகள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், வாழ்க்கைக்கு ஆதாரமான காதல் குறித்து ஏன் குறைந்த அளவிலேயே ஆராய்ச்சிகள் உள்ளன?
அறிவுக்குப் புலப்படாத நுண்ணுணர்வாக, பித்துப்பிடித்த நிலையாகக் கருதப்படுவதாலேயே கதைகளுக்கும் கவிதைகளுக்கும் உயிரூட்டும் காதல் என்னும் மகத்தான உணர்வை அறிவியல்ரீதியாகப் பார்க்க பெரும்பாலானோர் துணிவதில்லை. மேலும் அன்றாட வாழ்வுக்கு காதல் அநாவசியமாகக் கருதப்படுகிறது. அந்த மனத்தடையை தன்னுடைய பல்துறை அறிவு வளத்தாலும் புனைவுத் திறத்தாலும் வென்றெடுத்தவர் இயற்கையியலாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட டயன் அக்கர்மென்.
தத்துவம், மானுடவியல், புராணம், வரலாறு, கலை-இலக்கியம், உடலியல், வெகுமக்கள் கலாச்சாரம் எனப் பல்வேறு அறிவுத் துறைகளின் அடிப்படையிலிருந்து ஆய்வு ஆதாரங்களைத் திரட்டி டயன் அக்கர்மென் உருவாக்கிய ஆய்வு நூல், ‘காதல் வரலாறு’. வரலாறையும் தத்துவத்தையும் கதையோடு இணைத்து எழுதப்பட்ட ராகுல் சாங்கிருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலுக்கு இணையாக ‘காதல் வரலாறு’ புத்தகமும் கொண்டாடப்படுகிறது.
1995-ல் ஆங்கிலத்தில் ‘ஏ நேச்சுரல் ஹிஸ்ட்ரி ஆஃப் லவ்’ என்று எழுதப்பட்ட இப்புத்தகம் 2007-ல் தமிழில் ச.சரவணன் மொழிபெயர்த்து சந்தியா பதிப்பகத்தால் ‘காதல் வரலாறு’ என்று வெளியிடப்பட்டது. காதல் என்னும் கருத்து கிரேக்கர்களால் கண்டுபிடிக்கப்பட்டது, ரொமாண்டிக் காதல் மத்தியக் காலங்களில் உருவானது என்பது போன்ற கருத்துகள் தவறானவை என்பதை ஆய்வுகள் வழியாக இப்புத்தகம் நிறுவியது. பழங்காலத்திலும் நவீன காலத்திலும் மேற்கத்திய நாடுகளில் காதல் எவ்வாறெல்லாம் மாறிவந்திருக்கிறது என்பது இதில் துல்லியமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளையில் பழக்கவழக்கம், கலாச்சாரம், ரசனை ஆகியவற்றால் வேறுபடுபவர்களும் ஒரே விதமாகக் காதல் வயப்படுவது ஏன் என்பதைப் பல்துறை ஆய்வுகளின் ஊடாக நுட்பமாக அலசி ஆராய்கிறது. அரூபமான காதலை அறிவுபூர்வமாகவும் அறிவியல்ரீதியாகவும் வரலாற்று அடிப்படையிலும் அணுகிப் புரிந்துகொள்ள முடியும் என்பதை டயன் அக்கர்மென் தன்னுடைய சிந்தனை வளத்தால் நிரூபித்துள்ளார்.
நுரையீரல், குடல், சிறுநீரகம் போலவே இதயமும், ரத்தத்தாலும் சதையாலுமான ஒரு உறுப்புதானே. அப்படியிருக்கக் காதலுக்கான இடத்தை இதயத்திடம் கொடுத்தது ஏன்? ஒரு முறை பூத்தால் மட்டும்தான் அது காதலா? – இப்படிக் காதலைப் பற்றி காலங்காலமாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு நேர்மையான விசாரணை மூலம் பதில் கண்டறிந்துள்ளார் டயன்.
‘காதலின் வேதியியல்’ என்ற அத்தியாயத்தில், “தந்தைகள் நாய்க்குட்டிகளுடன் சில மணிநேரம் செலவிட்டு அவற்றுடன் பழக்கப்பட்டுப்போனவுடன், அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெற்றோர்களாக மாறுகிறார்கள். தாய்மார்கள் தங்களைக் குழந்தை வளர்ப்பிற்குத் தயார்படுத்தும் ஹார்மோன்களின் (ஆக்சிடாசின்) எழுச்சிக்கு உட்படுபவர்களாய் இருக்கிறார்கள்... தாயின் காதலில் இருந்து குழந்தை எவ்வாறு காதலிப்பது என்று கற்றுக்கொள்கிறது.
தந்தையின் காதலிலிருந்து ஒரு குழந்தை தன்னைக் காதலுக்கு உகந்ததாய் உணருகிறது” என்று ‘தாயின் காதல், தந்தையின் காதல்’ என்கிற பகுதியில் எரிக் ஃபிராம், கார்ல் யுங் உள்ளிட்ட உளவியலாளர்களின் சிந்தனை வழியாக விவாதிக்கிறார். இப்படி, ஆண்-பெண் என்கிற காதல் உறவு மட்டுமின்றி, தன்பால் உறவு, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான அன்பு, வளர்ப்பு பிராணிகளிடம் காதல், விலங்குகளின் காதல்-அன்பு- தனக்கு மட்டுமே சொந்தம் என்கிற உணர்வு, என விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
இதயத்தை அருங்காட்சியகத்தோடு ஒப்பிட்டுக்கூட ஒரு அத்தியாயத்தைப் படைத்திருக்கிறார். “நம்முடைய இதயமும் அரும்பொருள் காட்சியமாகவும், நம் வாழ்வில் ஏற்பட்டுள்ள காதல்களுக்கு சான்றுப் பொருள்களாகவும் கொண்டதாயிருக்கிறது. அவை காலத்தால் உறைய வைக்கப்பட்டும், தொலைவினால் உயிரூட்டப்பட்டும்…சிறப்பானதாக உள்ளது. அவை உயிர்பெற்று நம்மைத் தழுவிக்கொள்ள இயலுமா? இல்லை!” என்று கவித்துவமான உவமைகளின் மூலம் விவரிக்கிறார்.
அமெரிக்கப் பெண்ணான டயன் அக்கர்மென் தன்னுடைய காதல் கணவரான நாவலாசிரியர் பால் வெஸ்டுடன் நியூயார்க் நகரில் உள்ள அழகிய சின்னஞ்சிறிய ஊரான இத்தக்கவில் வசித்துவருகிறார். நுண்கலையில் முதுநிலை பட்டமும் முனைவர் பட்டமும் பெற்ற டயன் கொலம்பியா, கார்னெல் உள்படப் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராக வகுப்புகள் நடத்துகிறார். அப்படி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும்போது சுருக்கமாக, சுயமாக, விவரமாக, வழக்கொழிந்த சொற்றொடர்களையும் கடின வார்த்தைகளையும் உபயோகிக்காமல் காதல் கவிதை எழுதும் பயிற்சி கொடுப்பதுண்டு.
ஏனென்றால், காதல் என்கிற உணர்வு எவ்வளவுதூரம் கொண்டாடப்படுகிறதோ அதே அளவுக்கு ஒருவிதமான சங்கட உணர்வோடு பார்க்கப்படுகிறது. காதலை புரிந்துகொள்வது வாழ்க்கையையும் வெவ்வேறு மனிதர்களையும் வண்ணமயமான உலகையும் புரிந்துகொள்வதற்கு அத்தியாவசியம் என டயன் கருதுவதால் இத்தகைய சோதனை முயற்சியை, புதிய பயிற்சியை அவர் தொடர்ந்து செய்துவருகிறார்.
இயற்கை குறித்து குழந்தைகளுக்காக அவர் எழுதிய புத்தகங்களான, ‘Animal Sense’, ‘Monk Seal Hideaway’, ‘Bats: Shadow in the Night’ ஆகியவை உலகப் புகழ்பெற்றவை. பூமிக் கோளின் மீது மனிதகுலம் செலுத்தும் ஆதிக்கத்தையும் சக உயிர்களின் முக்கியத்துவத்தையும் குறித்து அவர் எழுதி நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட ‘The Human age: the World Shaped by Us’ புத்தகம் பென்-ஹென்றி டேவிட் தோரோ விருதை வென்றது.
தி நியூ யார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல பிரபல பத்திரிகைகளில் தொடர்கள் எழுதிவரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன்னால், ‘The Brain on Love’ என்கிற கட்டுரை மூலமாக மூளையை காதல் புதுப்பிக்கும் என்பதை உறவுசார் நரம்புஉயிரியல் (Interpersonal Neurobiology) ஆய்வுகள் வழியாக நிரூபித்தார். அதில் இவ்வாறு எழுதினார்:
“நம் துணையைத் தேர்ந்தெடுத்த பிறகு நாம் எவ்வளவு கற்றுக்கொள்கிறோம் என்று யோசித்துப்பாருங்கள். மனஎழுச்சி பொங்க ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் அதேவேளையில் உலகை வேறொருவர் விழியாக நாம் காணத் தொடங்குகிறோம்; சில பழக்கங்களை கைவிடுகிறோம் அதேநேரம் நல்லதும் தீயதுமான புதியப் பழக்கங்களைப் பற்றிக்கொள்கிறோம்;
புதிய கருத்துகள், சம்பிரதாயங்கள், உணவுப் பண்டங்கள், நிலப்பரப்புகளை நாம் நுகர்கிறோம்; அன்பும் காதலும் கலந்த அந்த நெருக்கமான தருணங்களில் லயித்துப்போகிறோம்; இவற்றோடு ஈர்ப்பும் பற்றுதலும் உண்டாக்கும் ஹார்மோன்களின் வெள்ளப் பெருக்கும் ஏற்படுகிறது; இத்தனையும் சேர்ந்து மூளையைப் புதுப்பிக்கின்றன.
இரண்டு நபர்கள் சேர்ந்து தம்பதிகளாகும்போது, சுயம் குறித்த புரிதலை மூளை விரிவுபடுத்தி சக உயிரை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறது. ‘நான்’ என்கிற நிலையிலிருந்து ‘நாம்’ என்கிற பன்மைத்தன்மைக்கு பரிணமிக்கிறது. அப்போது மற்றவரின் நன்மைகளையும் பலத்தையும் வாங்கிக்கொள்கிறது. இப்போது ‘நாம் யார்’ என்பது மூளைக்கு தெரியவருகிறது.
‘நாம் யார் அல்ல’ என்பது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்திக்கு புலப்படுகிறது. காதலில் திளைப்பவர்கள் உடலும் மனமும் கலப்பது மட்டுமின்றி ஒருவர் மற்றொருவரை உள்வாங்கிக்கொள்கிறார்கள். காதலே சிறந்த பள்ளி, ஆனால் அதில் சிறப்பு வகுப்புக்கள் மிக அதிகம், வீட்டுப்பாடமும் வலி தருவதாய் இருக்கும்.”
(நன்றி: தி இந்து)