“அண்மையில் வெளியான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில், தமிழர்களுக்கிருந்த கடைசி நம்பிக்கையும் இற்று வீழ்ந்தது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், கர்நாடகத்தில் உள்ள நிலத்தடி நீரைக் கருத்தில் கொள்ளாதது ஏன்? பெங்களூரு நகரவாழ் மக்களின் குடிநீருக்கான தேவை குறித்துக் கவலைப்படுகிற உச்சநீதிமன்றம், பெருநகர் சென்னைவாழ் மக்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதது ஏன்? பாதிப்பானது, தமிழர்களுக்குத்தான் என்கிற நிலையில் யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது எனத் தீர்ப்பில் கூறியது ஏன்?
உச்சநீதிமன்றத்தின் இத்தகைய ஓரவஞ்சனையான அணுகுமுறைகளையும்; கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி குறித்த காலவரம்புக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தவிர்க்க முயலும் இந்திய அரசின் தமிழர்விரோத நிலைப்பாட்டையும்; நடுவர்மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த இடைக்கால – இறுதித் தீர்ப்புகளை ஒருபோதும் ஏற்காத – மதிக்காத கர்நாடக அரசின் அடாவடிப் போக்குகளையும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் இந்நூலின்வழி உரிய ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறார்.”
காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொன்மையைப் பறைச்சாற்றும் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் காவிரி குறித்த பதிவுகள் தொடங்கி, காவிரி பிரச்சினையின் சுருக்கமான வரலாறு; காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு; தமிழகத்தின் நிலத்தடி நீர் குறித்த நிலவரம்; நிலத்தடி நீர் குறித்த உச்சநீதிமன்றத்தின் தப்புக் கணக்கு; நம்பகமற்ற வடகிழக்கு பருவமழை; விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள்; எண்ணெய்வயல்களாக்கப்படும் நெல்வயல்கள் குறித்து என விரிந்த பார்வையில் அதே நேரம் மிகவும் சுருக்கமாகவும் இச்சிக்கலை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். உரிய நேரத்தில் அரிய முயற்சி.
(நன்றி: வினவு)