காலந்தோறும் கல்வி

காலந்தோறும் கல்வி

“தள்ளாமையால் தள்ளாடும் முதியவர்களின் கையிலுள்ள கைத்தடிக்கும், வகுப்பறையிலுள்ள ஆசிரியரிடமுள்ள கைத்தடிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே இயலாமையின் வெளிப்பாடுதான்” இந்த வாசகத்தைப் இந்நூலில் படித்து விட்டு சிரித்தேன், பின் தீவிரமாக யோசித்தேன். “கோபம், எரிச்சல் என்பதெல்லாம் இயலாமையின் வெளிப்பாடு தானே!..

காலந்தோறும் கல்வி என்னும் இப்புத்தகம் ஆசிரியர், கல்வியாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்க முக்கிய ஆளுமை, கவிஞர், கதை சொல்லி என்னும் பன்முக ஆளுமை கொண்ட ஐயா என்.மாதவன் அவர்களால் எழுதப்பட்டது.

இந்நூல் நீண்ட நெடிய கல்வி வரலாற்றைச் சுருக்கமாகத் தரும் முயற்சி. நான்கு பகுதிகளைக் கொண்டது. கடைசியாக பிற்சேர்க்கை என்னும் பகுதியும் உள்ளது. ஆரம்பத்தில் படிப்பின் பயன் படி நிலைகளா? என்னும் தலைப்பில் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனின் முக்கியமான வாழ்த்துரை உள்ளது. இதில் த.வி.வெ ,”நவீன கல்வி முறைக்கு முன்பே எல்லா சமூகத்திலும் கல்வி இருந்துள்ளது. ஒரு சமூகம் ; வரும் தலைமுறைக்கு வாழ்நெறிகள், உலகப் பார்வை, வழிமுறைகள், அதுவரை அச்சமூகம் தொகுத்துள்ள அறிவின் ஒரு பகுதி, வாழ்க்கையை நடத்துவதற்கான அடிப்படை திறன்கள் முதலியவற்றை கற்பித்துதான் வந்துள்ளது” என்று அக்காலம் தொட்டு சமூகத்தில் கல்வியின் இருப்பைக் குறிப்பிடுகிறார்.

இந்நூலாசிரியர் நான்கு பகுதிகளாக இந்நூலைப் பிரித்துள்ளார்.

முதலாவது பகுதியான “ கல்வி” என்னும் தலைப்பில் கல்வியின் நோக்கங்களையும், இந்த சமூகத்தில் கல்வியின் தேவையையும் விவரிக்கிறார். இச்சமூகத்தில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறார். இந்த அதிகாரம் பரவலாக்கப்பட ஒரு நாட்டில் தழைக்கும் ஜனநாயகமும், கல்விப்பரவலுமே கை கொடுக்கிறது என்கிறார்.

சில காலம் முன்புவரை படித்தவர்கள் தவறு செய்தால், “ ஏம்பா, பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கே”, என்பதுதானே. இதில் சமூகம் படித்தவர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டிருந்ததைக் காணலாம். ஆனால் சம காலத்தில் மிகப்பெரிய தவறுகளெல்லாம் படித்தவர்களாலேயே செய்யப்படுகிறது. எனவே கல்வி என்பது அதன் உண்மையான நோக்கங்களை அடைவதில் இருந்து விலகி வெறும் ஏட்டுக்கல்வியாக, மனப்பாடக் கல்வியாக , அறத்திலிருந்து விலகிய கல்வியாக வளர்ந்திருப்பது எதனால்? என்ற கேள்வியாலும், அதற்கான விடை தேடலுமாக முதலாவது அத்தியாயம்.

விரிகிறது. நூலாசிரியரின் முழு ஆளுமையும் வெளிப்பட்ட பகுதியாக இது உள்ளது. எந்த ஒரு சமூகத்திலும் சமூகத்தின் அடிப்படையாக இருப்பவற்றில் மிகவும் முக்கியமானவையாக, அறிவின் ஆணிவேராய் குடும்பங்களும் பள்ளிகளும் விளங்குவதை பதிவுசெய்கிறார். கல்வி என்பதை பள்ளிக்கூடம், ஆசிரியர், பாடப்புத்தகம் இவற்றையெல்லாம் தாண்டி யோசிப்பது, கல்வி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து வருவது, சமூகத்தில் ஒருவரது நடத்தையினை மேம்படுத்துவதை கல்வியின் பல்வேறு குறிக்கோள்களில் முக்கியமானதாகப் பார்ப்பது, மேலும் அனைவரையும் தனிப்பட்ட முறையில் மதித்தாலும் நியாயத்திற்கும் அவரது கருத்துக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்வது. அவ்வாறான புரிதல்கள் ஏற்பட்ட பிறகு அவர்களுடைய கருத்துக்களோடு மட்டும் வேறுபடுவது. அந்தக் கருத்து வேறுபாடுகளையும் அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக எத்தனிப்பது என கல்வியின் நோக்கங்களையும், சமூக்த்தின் அனைவருக்கும் பரவலாக்கப்பட்ட கல்வியின் அவசியத்தையும் நூலின் முதலாவது அத்தியாயத்தில் தெளிவுபட எடுத்துரைக்கிறார்.

நூலின் இரண்டாவது அத்தியாயம் “பள்ளிகளின் பரிணாமம்” என்பது, இதில் உலக நாடுகளில் மன்னராட்சி காலம் தொட்டு இப்போதைய மக்களாட்சி காலம் வரை பள்ளி என்னும் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ரத்தினச் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன. இதில் ஆரம்பத்தில் மன்னராட்சி முறையில் கல்விக்கு அடிப்படை தகுதியாக உடல் வலிமை, போர்ப்பயிற்சி போன்றவை இருந்ததையும், இந்தக் கல்வியும் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினருக்கே கிடைத்ததையும் குறிப்பிடுகிறார். பிறகு 14-17 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இத்தாலியில் தோன்றி பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவிய மறுமலர்ச்சி காலத்தில் கல்வி சிறிது பரவலாக்கப்படுகிறது. இலக்கியம், தத்துவம், அரசியல், மதம், உள்ளிட்ட மனிதர்கள் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் மறுமலர்ச்சியின் தாக்கம் ஆதிக்கம் செலுத்தியது. அடுத்து மத ரீதியான கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. உலகில் மதங்களின் தோற்றங்களோடு பல்வேறு விதமான சாதக, பாதக விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும்.ஒரு ஆரோக்கியமான விஷயம் என்னவென்றால், பல்வேறு மதம் தொடர்புடைய இடங்களும் மதம் தொடர்புடைய கல்வியினை வழங்கின. 1464 ன் தொடக்கத்தில் ஜான் கூட்டன்பர்க் வடிவமைத்த அச்சு இயந்திரம் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தது. இதன் மூலம் அச்சடிக்கப்பட்ட பைபிளின் அநேக பிரதிகள் அதிகமானோரைச் சென்றடைந்தது. அடுத்து சமய சீர்திருத்தத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட மற்றொரு சமூக நிகழ்வான தொழிற்புரட்சியும் கல்வி பரவலுக்கான பணியின் ஒரு சிறு தொடக்கமாகக் கொள்ள முடியும் என்கிறார் நூலாசிரியர். இத்தொழிற்புரட்சியின் காரணமாக ஆண்களோடு குறிப்பிடத்தகுந்த அளவு பெண்களும் தொழிற்சாலைகளில் பணிபுரியத் தொடங்கினர். இதனால் குழந்தை காப்பகங்களின் தேவை உணரப்பட்டது. அதற்கான ஏற்பாடாக உருவானதுதான் நர்சரிகளாகும். இப்படி பணிக்குச் செல்லும் சாதாரண மக்களின் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட நர்சரி பள்ளிகள்தான் இப்போதும் வெவ்வேறு பெயர்களில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. உலக நாடுகளின் ஆரம்பக்கல்வி சட்டங்களையும் இந்த இரண்டாவது அத்தியாயத்தில் விளக்கியுள்ளார்.

மூன்றாவது பகுதியின் தலைப்பு “இந்தியாவில் கல்விப் பரவல்” என்பதாகும்.மகாபாரதம் போன்ற புராண காப்பிய காலம் தொட்டு, பிராமணர்கள் மட்டுமே கற்பிக்கும் கற்கும் உரிமை பெற்றிருந்த வேத காலம், பிராமண ஆதிக்கத்திற்கெதிராக வெகுண்டெழுந்த புத்த, சமண கல்வி முறை, முஸ்லீம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த இஸ்லாமியக் கல்விமுறை. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பிருந்த திண்ணைப் பள்ளிகள் என நீண்ட நெடிய கல்வி வரலாற்றை இந்த அத்தியாயத்தில் சுருக்கமாக விவரித்துள்ளார். பிறகு ஆங்கில ஆட்சியில் கி.பி 1757 பிளாசிப் போருக்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சி வலுப்பட கல்கத்தா, மதராஸ் போன்ற இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. பின் 1813 ல் நிறைவேற்றப்பட்ட சாசனச்சட்டமானது இந்தியக்குழந்தைகளின் கல்விக்கு ஒரு லட்சம் ஒதுக்கப்படுகிறது. பின் மிஷனரி பள்ளிகள் கல்வி அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோகலே போன்றவர்கள் தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை அளித்து செயல்படுகின்றனர். பிறகு காந்தியும் இந்திய விடுதலையோடு கல்விக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதையும் அழகாகத் தொகுத்துத் தருகிறார் நூலாசிரியர். பிறகு சுதந்திர இந்தியாவில் சமீப காலம் வரை அனைவருக்கும் கல்வி அளிக்க இந்திய அரசு உருவாக்கிய சட்டங்களையும், அவர்களின் திட்டங்களையும் தொகுத்து பட்டியலிடுகிறார்.

நான்காவது பகுதி, “தீர்வின் திசைவழியில்”…

சமூகம் முழுமையும் தரமான கல்வி கற்று நல்ல சமூகம் அமைவதான் நூலாசிரியர் உட்பட அனைவரின் லட்சியம் ஆகும். இது எளிமையான ஒன்று போல தெரிந்தாலும் சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டாகியும் இன்னும் அந்த இலக்கை அடைய முடியாத நிலையில்தான் இருக்கிறோம். அனைவருக்கும் கல்வி என்ற லட்சியத்தை அடைய முடியாமல் அடுத்தடுத்த பத்தாண்டுகள் என தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறோம். இந்த இலக்கை அடைவதற்கான பல்வேறு காரணிகளான குழந்தைகள், குழந்தை தொழிலாளர் முறை, ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி மற்றும் போதனா முறை, தேர்வு முறை சீர்திருத்தம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்குகளைப் பற்றி இப்பகுதியில் விவரித்துள்ளார்.

“ஆண்குழந்தைகளின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் வெளியே சுதந்திரமாக அனுமதிக்கப்படும் நிலையில், பெண் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்படுகிறது” என்ற பேராசிரியர் கிருஷ்ணகுமாரின் பெண்கல்வி குறித்த கவலையோடு நூலாசிரியரும் கவலை கொள்கிறார்.

“குழந்தைகளைத் தொழிலாளர்களாக அமர்த்தும் போக்கு நீடிக்கும்வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பது சாத்தியமில்லாததே” என்று சத்தியம் செய்கிறார்.

“ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது” என்ற ஹென்றி ஆடம்ஸின் கருத்தைக் கூறி ஆசிரியர்களை ஊக்கப்படுத்துகிறார்.

ஒட்டுமொத்தத்தில் இந்த நான்காம் பகுதி முழுவதும் கல்வியின் வளர்ச்சிக்கும், அனைத்து குழந்தைகளையும் கல்வி பெற வேண்டும் என்னும் இலக்கை அடையவும் ஒரு தேர்ந்த கல்வியாளராய் ஐயா மாதவன் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

கடைசியாக பிற்சேர்க்கை என்னும் தலைப்பில் சுருக்கமாக தமிழ்நாட்டின்.கல்வி வரலாற்றைத் தந்துள்ளார். கல்விப் பரவலாக்கத்தில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முண்ணனியில் நிற்பதாகக் குறிப்பிடுகிறார். 1854ல் தாமஸ் மன்றோ காலத்தில் DPI என்னும் கல்வி இயக்குநரகம் உருவாக்கப்பட்டது. 1921ல் அமல்படுத்தப்பட்ட துவக்கக் கல்வி விதிகள், 1924 ல் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டும் அமல்படுத்திப் பார்க்கப்பட்ட கட்டாய ஆரம்பக்கல்வி என சுதந்திரத்துக்கு முந்தைய தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை விவரிக்கிறார். பின் சுதந்திரத்திற்குப் பிறகு காமராஜரின் மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆரின் சத்துணவு மற்றும் புத்தகம், காலணி, சீருடை போன்ற பள்ளி அவசியப் பொருள்கள் இலவசத் திட்டம், வயது வந்தோருக்கான கல்வி அளிக்கும் திட்டமான அறிவொளி இயக்கம் போன்றவற்றின் செயல்பாடுகளால் தமிழகம் மற்ற பல இந்திய மாநிலங்களை விட கல்வி பரவலாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதை சுருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

உலக, இந்திய, தமிழகக் கல்வி வரலாற்றைப் பற்றிய சுருக்கமான, தெளிவான, நிறைவான தகவல்களை இந்நூலினை வாசிப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும் கல்வியின் நோக்கம், தேவை மற்றும் அனைவருக்கும் கல்வி பரவலாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதற்கு நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் இந்த நூல் அழகுற விவரிக்கிறது. கல்வியின் மீதும் மாணவர்களின் மீதும் மிக்க பற்று கொண்ட ஆசிரியர், ஐயா என்.மாதவன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலானது கல்வியின் மீதும், மாணவர்கள் மீதும் பற்று கொண்ட அனைவருக்கும் மிக்க பயனுள்ளதாக இருப்பது நிச்சயம்.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp