பொதுவான மக்கள் உரையாடல்களில் காந்திய வழியை அகிம்சைப் போராட்ட வழியென்றும் இலட்சிய வழியென்றும் குறிப்பிடுவதையே நான் கேட்டிருக்கிறேன். வெற்றி பெறுவதற்கான வழி என்று யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. அதனால் ’வெற்றி பெற காந்திய வழி’ என்னும் புத்தகத்தின் தலைப்பைக் கண்டதும் மிகவும் புதுமையாகத் தோன்றியது. அந்த ஈர்ப்புதான் புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. புத்தகத்தை மூல மொழியான ஆங்கிலத்தில் எழுதியவர் ஆலன் ஆக்ஸல்ராட் என்னும் அமெரிக்கர். நடுவயதைக் கடந்த வரலாற்று ஆய்வாளர். வணிகவியல், மேலாண்மையியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை எழுதியிருக்கிறார். காந்தியின் கடிதங்களிலிருந்தும் உரைகளிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் முக்கியமான சில தொடர்களை எடுத்துக்கொண்ட ஆக்ஸல்ராட், அவற்றை விரிவான வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எந்த நோக்கத்துக்காக அந்தச் சொற்கள் எழுதப்பட்டதோ, அதைப்பற்றிய சுருக்கமாக ஓர் அறிமுகத்தை முதலில் வழங்குகிறார். பிறகு, அதன் தொடர்ச்சியாக அந்தக் கருத்தின் மையத்திலிருந்து மேலாண்மை தொடர்பான சிக்கல்களின் மையத்துக்குச் சென்று, அப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்த்துவைக்க காந்தியின் கருத்து உதவும் விதம் பற்றி ஒரு சிறிய வரையறையைக் கொடுக்கிறார். அவ்வரையறைகள் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த உதவும் கொள்கைகளாக விளங்கக்கூடியவை என்றொரு முடிவை நெருங்குகிறார். இறுதியில் காந்திய வழியை வெற்றிக்கான வழியாக வகுத்துச் சொல்கிறார் ஆக்ஸல்ராட்.
காந்தி ஓர் உன்னதமான மனிதர். அற்புதமான ஆன்மிக இயல்புகள் கொண்டவர். உண்மை, சகிப்புத்தன்மை, தியாகம், அகிம்சை ஆகிய கொள்கைகள் மீது பற்று கொண்டவர். அவற்றையே தன் செயல்பாடுகளுக்குரிய வழிகளாக வடிவமைத்துக்கொண்டவர். இவ்வழிகளை நம் தேசம் அடிப்படைக் கோட்பாடாக ஏற்று நடக்கவேண்டும் என அவர் உள்ளூர விழைந்தார். விடுதலைக்கான வழியாக மட்டுமல்ல, மேலான வாழ்க்கைக்கும் அவை துணையிருக்கும் என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை. இந்த நம்பிக்கையை சற்றே நீட்டிக்கும் ஆக்ஸல்ராட், காந்திய வழியை ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தவும், நிர்வாகக்கொள்கைகளை வடிவமைக்கவும் உதவக்கூடிய வழியாக சுட்டிக் காட்டுகிறார். இன்றைய சூழலின் பின்னணியில் காந்தியை சிறப்பு மிகுந்த தலைமை நிர்வாக அதிகாரி என்று சொல்லலாம் என உறுதியாகவும் குறிப்பிடுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூல விசையாக விளங்கிய காந்தியை, ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றி கற்பனை செய்து பார்க்க, சற்றே சிரமமாகவே உள்ளது. ஆனால், காந்தியத்தின் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இன்று ஒரு நிறுவனம் வெற்றிகரமான நிறுவனமாக விளங்கமுடியும் என்பதை உறுதியோடு சுட்டிக் காட்டுகிறார் ஆக்ஸல்ராட்.
காந்தியின் தலைமையை ஆக்ஸல்ராட் ‘தொண்டுத் தலைமை’ என்னும் மேலாண்மையியல் சொல்லால் குறிப்பிடுகிறார். ஓர் அமைப்பில் உச்சபட்சமான திறமையை தொண்டுத்தலைமையின் மூலம் ஈட்டமுடியும் என்பதை உணர்த்தியவர் காந்தி. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான வலிமை மிக்க சக்தியாக நிலைநிறுத்தமுடியும் என்பதைச் செய்து காட்டியவர் அவர். காங்கிரஸின் இலட்சியங்களும் செயல்பாட்டுமுறைகளும் மிகவும் துல்லியமாக அவரால் வகுக்கப்பட்டன. எது தேவையோ, அதன்மீது மட்டுமே மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. வன்முறை, நிதானமின்மை, பொய்மை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் ஒதுக்கத்தக்கவையோ அல்லது மறுக்கத்தக்கவையோ அல்ல என்பது காந்தியின் கருத்து. அவருடைய அரவணைக்கும் அணுகுமுறை எல்லோருடைய ஆற்றலையும் குவித்து இலட்சியத்தை எட்ட உதவியது. காந்தியின் வரவுக்குப் பிறகே, சுதந்திரத்துக்கான முயற்சிகள் வேகமடைந்தன. அதுவே மெல்லமெல்ல விடுதலைப் போராட்டமாக வடிவெடுத்தது. பல மதங்கள், பல இனங்கள், பல மொழிகள் கொண்ட கலவையான இந்தியப்பண்பாடு மேற்குலகுக்கு வியப்பும் குழப்பமும் தருவதாக இருந்தது. காந்தி காலத்தில், காந்தியின் செயல்பாட்டு முறைகள்கூட பிரிட்டிஷாருக்குப் புரியாததாகவும் பழக்கப்படாத அணுகுமுறையாகவும் இருந்தது. இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் பயணம் செய்த காந்தி மக்களைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து தம் இதழ்களில் தம் கருத்துகளை கட்டுரைகளாகவும் கடிதங்களாகவும் எழுதினார். ஏறத்தாழ நூறு தொகுதிகள் அளவுக்கு அவர் எழுத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவருடைய கட்டுரைகளிலிருந்து நூறு முக்கியமான வாக்கியங்களைத் தேடியெடுத்த ஆலன் ஆக்ஸல்ராட், அவ்வாக்கியங்களின் அடிப்படைக்கூறுகள் மேலாண்மையியலுக்கு நெருக்கமாக விளங்குவதை விரிவாக விளக்கி
எழுதியுள்ளார். நேர்மையும் திறமையும் மிக்க ஒரு நிறுவன அதிகாரிக்கு காந்தியக் கருத்துகள் அடிப்படைப் பாடங்களாக விளங்கக்கூடியவை. நவீனத் தொழில் நிர்வாகிகளுக்கு நேர்மையும் லாபமும் ஒன்றாக சேர்ந்திருக்கமுடியுமா என்கிற தயக்கம் எழக்கூடும். ஆனால் அறநெறியுடன் கூடிய வணிகம் மட்டுமே தொடர்ந்து நிலைபெற முடியும் என்பது இந்தப் புத்தாயிரத்தாண்டின் தொடக்கம் விடுத்திருக்கும் செய்தியாகும். அவ்வகையில் ஒரு நவீன தொழில் நிறுவனத்துக்கு காந்தியத்தின் வழிகள் பயன் தரக்கூடியவை. 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகம் நான்காண்டு கால இடைவெளியிலேயே தமிழில் படிக்கக் கிடைப்பதை நல்லூழ் என்றே சொல்லவேண்டும். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் டாக்டர் ஜீவானந்தம்.
காந்தியின் நூறு கருத்துகளை மேலாண்மையியலுக்கு நெருக்கமான பன்னிரண்டு தலைப்புகளின் கீழே பொருத்தமாக தொகுத்துள்ளார் ஆக்ஸல்ராட். முடிவெடுங்கள், செய் அல்லது செத்துமடி, ஒத்துழைப்பைப் பெற வழிகாட்டும் ஒத்துழையாமை, பொறுப்புகள் சுமையல்ல என்பதைப்போன்ற வசீகரமான தலைப்புகள் வாசகர்களைப் படிக்கத் தூண்டும் வகையில் உள்ளன.
‘எப்போதெல்லாம் எதைச் செய்வது என்ற தடுமாற்றம் வரும்போது வறியவனின், பலவீனனின் முகத்தை நினைவில் கொண்டு உன் செயல் அவனுக்குப் பயன் தருமா என யோசி’ என்பது காந்தியின் கருத்து. ஒரு பத்திரிகையாளர் ஒரு இக்கட்டான சூழலில் எத்தகைய முடிவை தான் எடுக்கவேண்டும் என்ற தனது தடுமாற்றத்தை காந்தியிடம் தெரிவித்தார். அவருக்கு வழிகாட்டும் விதமாக சொல்லப்பட்ட வரிகளே இவை. ஆக்ஸல்ராட் இக்கருத்தை மேலாண்மையியல் நோக்கிலிருந்து அணுகி தன் எண்ணத்தைப் பதிவு செய்கிறார். ஒரு செயல் சரியானதா என சோதித்து அறிவதற்கான அளவுகோல், அச்செயல் பலவீனமான மனிதருக்கு எந்த அளவுக்கு உதவும் வகையில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதாகும். கடையனுக்கும் கைகொடுக்கும் ஒருவரின் செயல், சமூகம் முழுமைக்கும் பயன் தருவதாக அமையும். லாபத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் கொள்கை தனிநபர் நலனுக்கு எதிரானதாகவே இருக்கிறது. ஆனால் காந்தியின் கருத்து தனிநபர் நலனை கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கொள்கைக்காக தனிநபர் தியாகம் செய்வது தவறில்லை என்பது லெனின், மாவோ, ஸ்டாலின் போன்ற உலகத்தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது. ”ஒரு மரணம் என்பது துக்கம். ஆயிரம் மரணங்கள் என்பது கணக்கு. அவ்வளவே” என்பதுதான் போரின்போது ஸ்டாலினின் கருத்தாக இருந்தது.
எண்ணிக்கைக்கணக்கால் மட்டும் லாபம் நஷ்டம் என்பதை முடிவு செய்வதாக இருக்கக்கூடாது என்பதுதான் காந்தியின் கொள்கை. கொள்கைக்கு மனிதமுகம் வேண்டும் என்கிறார் காந்தி. நமது கொள்கை எதற்காக, யாருக்காக என்பதை நாம் முதலிலேயே முடிவு செய்தாக வேண்டும். நாம் ஸ்டாலினைப் பின்பற்றுவதா, காந்தியைப் பின்பற்றுவதா என்பதையும் நாம் முடிவு செய்தாக வேண்டும். முடிவு நம் கையில். அதுபோலவே நமது வாடிக்கையாளர்களும் கணக்கா, மனிதாபிமானமா என்று முடிவெடுக்கும் உரிமை பெற்றவர்களே என்பதை நல்ல நிர்வாகி நினைவில் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வாக்கியத்தையையும் ஒட்டி விரிவான அளவில் சாதகபாதகங்களை தொகுத்துப் பரிசீலனை செய்துபார்க்கும் விதமாக ஆக்ஸல்ராட் எழுதியுள்ள கருத்துகள் சுவாரசியமாக உள்ளன.
“நான் வன்முறையின் சமரசமற்ற எதிர்ப்பாளன். எந்த உன்னத லட்சியத்துக்காகவும் வன்முறை கூடாது. வன்முறையும் நானும் சங்கமிக்கும் களம் எதுவுமில்லை” என்பது காந்தியின் முக்கியமான நிலைபாடு. ஒரு தலைவனுக்கு சமரசம் என்பது மிகவும் தேவைப்படும் குணம். சமரசத்துக்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிடும் தலைவனின் எதிர்காலமும் வெற்றியும் விரைவில் முடிந்துபோகக்கூடும். எனினும் ஒரு தலைவனோ, நிர்வாகியோ தான் சமரசம் செய்துகொள்ளாத ஒரு களம் இது என ஒருசில விஷயங்களையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இந்த சமரசமற்ற கொள்கைகளை சுயநலத்துக்காகவோ அல்லது வெற்றிக்கான சமரசத்துக்காகவோ விட்டுவிடக்கூடாது. ஒரு நிறுவனத்தில் ஆக்கபூர்வமான அடையாளமான செயல்பாட்டு உத்தியை எவ்வித சமரசமுமின்றி பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வன்முறை சார்ந்த வெற்றியை காந்தி ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல. அதை உணர்த்துவதற்கு ருஷ்யப்புரட்சியை ஒட்டி காந்தி வெளிப்படுத்திய சொற்களை ஆக்ஸல்ராட் நினைவுகூர்ந்து எழுதும் விதம் பொருத்தமாக இருக்கிறது.
1917 ஆம் ஆண்டில் நிகழ்ந்த உலகைக் குலுக்கிய புரட்சியின் விளைவாக ஜார் மன்னராட்சி தகர்ந்தது. ஜார் கொல்லப்பட்டார். போல்ஷ்விக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 1924 ஆம் ஆண்டில் காந்தியின் ஆதரவைப் பெற போல்ஷ்விக்குகள் முயற்சி செய்தார்கள். அப்போது, “என்மீது அக்கறை கொண்டு அணுகும் போல்ஷ்விக் நண்பர்கள் ஒன்றைத் தெளிவாக உணரவேண்டும். அவர்களின் உன்னதமான லட்சியத்தின்மீதும் செயல்பாடுகள்மீதும் நான் அனுதாபமும் பாராட்டுணர்வும் கொண்டிருந்தபோதும், நான் வன்முறையின் சமரசமற்ற எதிரியே. எவ்விதமான புனித லட்சியத்தையும் எட்ட வன்முறை வழியல்ல என்பதுதான் என் நிலைபாடு” என்று உறுதிபட தெரிவித்தார் காந்தி. அவர் வன்முறை சார்ந்த வெற்றியை எந்நிலையிலும் ஏற்றுக்கொண்டவர் அல்ல. அப்படி ஏற்றுக்கொண்டால், இலட்சியமே களங்கப்பட்டுவிடக்கூடும். காந்தி ரத்தம் தோய்ந்த போல்ஷ்விக் புரட்சிக்கு தனது அங்கீகாரத்தையும் ஆதரவையும் தராதபோதும், அவர் கம்யூனிஸ்டுகளுடனான தொடர்பையும் உறவுகளையும் ஒருபோதும் துண்டித்துக்கொள்ளவில்லை. விமர்சனங்களுடன் அவர் அவர்களை அங்கீகரித்தார். இக்குறிப்பை விரிவாக எழுதும் ஆக்ஸல்ராட், இறுதியாக அதை மேலாண்மையியல் கருத்தோடு பொருத்தமான வகையில் இணைத்து முடிக்கிறார். ஒரு சிறந்த தலைமை நிர்வாகி தனது சமரசமற்ற கொள்கை எது என்பதை முடிவுசெய்து, அதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாதவராக இருக்கவேண்டும். சமரசம் செய்துகொள்வது, உறவை இழக்காது நட்பைத் தக்கவைத்துக்கொள்வது ஆகிய இரண்டையும் குழப்பிக் கொள்ளாமல் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
‘எதைச் செய்தும் எப்படியாவது குறிக்கோளை அடைவது என்பது தவறு’ என தனது நீண்ட விடுதலைக்கான அறப்போராட்டத்தில் பலமுறை காந்தி வலியுறுத்தி வந்துள்ளார். தமது முதல்நூலான ‘ஹிந்த் ஸ்வராஜ்’-ல் முரட்டு பலம் என்னும் தலைப்பில் அதைப்பற்றி விரிவாகவே காந்தி எழுதியிருக்கிறார். நமது குறிக்கோள் நல்லதாக உள்ளபோது, அதை ஏதேனும் ஒரு வழியில் வன்முறையை துணையாகக் கொண்டாவது அடைந்தால் என்ன தவறு இருக்கமுடியும் என தானாகவே ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டு அதற்கான விடையை அழகான ஓர் எடுத்துக்காட்டுமூலம் குறிப்பிடுகிறார் காந்தி. ஒரு கைக்கடிகாரம் ஒருவரிடம் உள்ளது. அதை வன்முறையால் அடித்துப் பிடுங்கலாம். அப்போது அது திருடிய சொத்து. அல்லது அதை அவரிடமிருந்து விலைகொடுத்து வாங்கலாம். அப்போது அது சட்டப்படியாக உங்கள் உடைமையாகிறது. அல்லது நட்பாகக் கேட்டு பரிசாகப் பெறலாம். அப்போது அது நமக்கு வெகுமதியாகக் கிடைக்கிறது. இந்த மூன்று வழிகளிலும் அந்தக் கடிகாரத்தை நம்மால் பெறமுடியும். நாம் பிடுங்கிக்கொள்ளப் போகிறோமா, அல்லது விலைக்கு வாங்கிக்கொள்ளப் போகிறோமா, அன்பளிப்பாகப் பெறப் போகிறோமா என்னும் கேள்வியை காந்தி முன்வைக்கிறார். வழியுடன் இணைந்ததே முடிவு. எந்த வழியில் எவ்விதம் ஒரு முடிவை அடைகிறாய் என்பது முக்கியமானது. அழுக்குக் கையால் பிசைந்து ஒரு நல்ல ரொட்டியை சமைத்துவிடமுடியாது. அது போலவே ஒரு நிறுவனத்தில், தன் ஊழியரை மோசமாக நடத்தும் நிர்வாகி தனது குறிக்கோளை எட்டிவிடலாம். ஆனால் மோசமான செயல்பாட்டால், நிர்வாகியின் தகுதியும் மதிப்பும் குறைவதுடன் நிறுவனத்தின் நீண்டகால நலனுக்கும் உயர்வுக்கும் உதவாமல் போய்விடும்.
“உண்மையில் ஆங்கிலேயர் நம்மிடமிருந்து நாட்டைப் பறிக்கவில்லை. மாறாக நாமாகவே அவர்களுக்கு நாட்டைத் தந்தோம்” என்பது காந்தி தன்னுடைய ஹிந்த் ஸ்வராஜ் நூலில் எழுதியிருக்கும் ஒரு வரி. முழுக்கமுழுக்க அரசியல் தொடர்பான வரி. அந்த வாக்கியத்தை முன்வைக்கும் ஆக்ஸல்ராட், எதிர்பாராத ஒரு கோணத்திலிருந்து அதை அணுகி, அதை மேலாண்மையியலுக்கு நெருக்கமான ஒரு கருத்தாக மாற்றியெழுதியிருக்கும் விதம் பாராட்டுக்குரியதாக இருக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவில் இருப்பது அவர்களுடைய பலத்தால் அல்ல. இந்தியாவில் இருப்பது அவர்களுடைய பலத்தால் அல்ல. மாறாக, நாமே அவர்களை வைத்திருக்கிறோம் என்று குறிப்பிடுகிறார் காந்தி. அதை இரு நிறுவனங்களுக்கிடையேயான உறவாக மாற்றிப் பார்க்கிறார் ஆக்ஸல்ராட். ஒரு நல்ல நிர்வாகி தனது பலவீனத்தாலும் தன்னிரக்கத்தாலும் எதிரியின் வலிமைக்குப் பணிவதன்மூலமே தான் தோல்வியடைகிறோம் என்பதை உணர்வார். தனது பொறுப்பை உணர்ந்து, அடுத்தவர்களைக் குறை கூறுவதைவிட்டு, கவனத்துடன் தவறான மனிதர்களின் உறவையும் தவறான ஒப்பந்தங்களையும் தவிர்க்க முயற்சி செய்யவேண்டும். இதன்மூலம் பாதிப்பிலிருந்து தப்பலாம். நமது மதிப்பைக் கணிப்பதும் உறுதி செய்வதும் பிறரல்ல. தனது இலக்கை உறுதி செய்து சமநிலையோடு செயல்படுவது நிறுவனத்தின் வெற்றிக்கு உதவும். தன் பொறுப்பை மறந்தவன் தனக்குத்தானே விளைவுகளைத் தேடிக் கொள்கிறான். தொடக்கத்தில் இந்தியர்கள் இங்கிலாந்தின் வணிகத்தை விரும்பினார்கள். அதை இழக்க அவர்கள் தயாராக இல்லை. வியாபாரத்துக்கு மாற்றாக நம் மண்ணை நாமே அவர்களுக்குத் தந்தோம் என்பது காந்தியின் கருத்து. இந்தியாவுக்கு வியாபாரம் கிடைத்தது. பிரிட்டனுக்கு நாடு கிடைத்தது. இதில் இந்தியா பாதிக்கப்பட்டது என வருந்த என்ன உள்ளது? அதுபோல மோசமான பேரத்தில் தன் நிறுவனத்தை உட்படுத்திவிட்ட நிர்வாக அதிகாரி நிறுவனம் பாதிக்கப்பட்டு விட்டது என வருந்துவதில் என்ன நியாயம் உள்ளது? பேரத்தில் உருவான பாதிப்புக்கும் இழப்புக்கும் யார் காரணம்? யாருக்கு இழப்பு? யார் பாதிக்கப்பட்டவர்கள்? யார் காரணம்? அரசியல் தொடர்பான ஒரு வரியிலிருந்து இவ்வளவு நீண்ட தொலைவுக்கு ஆக்ஸல்ராடால் கடந்து வர முடிவதை ஆச்சரியமான ஒரு பயணமாகவே சொல்லவேண்டும்.
’தன்னைத் தியாகம் செய்வது, பிறரைத் தியாகம் செய்யத் தூண்டுவதைவிட மிகமிக உன்னதமான செயல்’ என்பது காந்தியின் வாக்கியம். சமூக வாழ்வை முன்னிலைப்படுத்தி சொல்லப்பட்ட வாக்கியம் என்றாலும், அதைப் பகுத்துப்பகுத்து மேலாண்மையியலுக்கும் பொருத்தமான வாக்கியமாக மாற்றிவிடும் ஆக்ஸல்ராடின் திறமை பாராட்டுக்குரியது. தவறான சட்டத்தை ஏற்க மறுத்து, அரசின் நீதிக்குக் கட்டுப்பட்டு அதற்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்வதும் ஒருவகையான தியாகம் என்பது காந்தியின் கொள்கை. காந்தி மறுக்கவும் எதிர்க்கவும் சொன்னது குறிப்பிட்ட சட்டத்திற்கும் அரசுக்குமே பொருந்தும். பொதுநலனுக்கான சட்டங்கள் மதிக்கப்படவும் பணிந்து ஏற்கப்படவும் வேண்டும். அநீதியான சட்டம் மட்டுமே எதிர்க்கப்படலாம். அறவழி என்பது அரசு சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்பது அல்ல. நல்ல சட்டத்திற்குப் பணிவதும் அநீதியான சட்டத்தை மறுப்பதும் நீதியின்பாற்பட்டதே. இதைச் செய்ய மிக உயர்ந்த மனவலிமை தேவை. அரசின் கடுமையான தண்டனையை ஏற்கும் மனத்துணிவு பெற்றவரே அரசின் சட்டத்தை மறுக்க முடியும். மற்றவர்களையும் அதைச் செய்விக்க அளவற்ற துணிவு தேவை. மக்கள் தலைவர் முதலில் தனக்கு வரும் துன்பங்களை எதிர்கொள்ளவும் தியாகம் செய்யவும் முன்வருவார். அவருடைய தியாகமே பிறரை ஈர்த்து, வழிநடக்கத் தூண்டவேண்டும்.
அதுவே ஒரு பேரியக்கத்தின் தொடக்கம். தியாகத்தைக்கூட யார்மீதும் திணிக்கக்கூடாது. மக்கள் தலைவர் அவ்வியக்கத்தின் நன்மை தீமைகளுக்கு தானே பொறுப்பேற்கவேண்டும்.
தன் தொண்டாலும் அர்ப்பணிப்புணர்வாலும் ஒரு நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொள்பவர், அந்நிறுவனத்துக்கு வலிமையைச் சேர்க்கிறார். கட்டாயத்துக்காக ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டு உழைக்கிற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிறுவனம் வலிமையிழந்து செயலற்றதாகிறது. மாறாக, ஒன்றுபட்ட கருத்துடனும் இணக்கத்துடனும் ஒரு கொள்கையை எந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஏற்றுச் செயல்படுகிறார்களோ, அந்த நிறுவனம் வலிமையடைகிறது. நிறுவனத்தின் தலைவர் தன்னுடைய தொண்டுணர்வாலும் தியாகத்தாலும் நிறுவனத்தை முன்னடத்துகிறார். மற்ற ஊழியர்கள் மனமார்ந்த ஈடுபாட்டோடு நிறுவனத்தின் நலனுக்காக எவ்விதத் தியாகத்தையும் செய்ய தாமே முன்வருகின்றனர். ஒரு நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒத்த உணர்வோடு செயல்படுகிறவர்களாக இருக்கவேண்டும். பொது இலட்சியத்துக்காக தனிப்பட்ட சுகதுக்கங்களை பெரிதுபடுத்தாது ஏற்று முன்மாதிரியாகும் தலைமையே, ஒரு நிறுவனத்துக்கு முக்கியமான தேவையாகும். நல்ல நிர்வாகி, நல்ல இலட்சியத்தை வரிந்து கொள்பவராக, நல்ல இலட்சியத்தை அடைய எவ்வித இழப்பையும் துன்பத்தையும் ஏற்கத் தயங்காதவராக தானே முன்மாதிரியாகத் திகழவேண்டும். காந்தியின் சொற்களை, ஒரு நிறுவனத்தின் மேன்மைக்கும் வெற்றிக்கும் பயன்படுத்திக்கொள்ளும் சூழல்களை அனுபவபூர்வமாக அறிந்து, ஒன்றுடன் மற்றொன்றை அழகாகவும் சுவாரசியமாகவும் இணைத்துக் காட்டுகிறார் ஆக்ஸல்ராட்.
“யுக்தியும் செயலும் இல்லாவிடில் நாம் எங்கே நிற்கிறோமோ, அங்கேயே தங்கிவிடுவோம்”, “எல்லா மாற்றங்களும் ஒரு மனிதனில் இருந்தே தொடங்குகின்றன என்பது வரலாறு”, “எனக்கு அகிம்சை ஒரு வாழ்வுமுறை. நான் தணித்திருக்கும்போதும் கூட்டத்தில் இருக்கும்போதும் அதையே கடைபிடிப்பேன்.”, “ஒரு சொட்டு நீர் ஒரு ஏரியின் சிறுவடிவம்” , ”நீதி கேட்பவர்கள் பிறருக்கு நீதி வழங்குகிறவர்களாக இருத்தல் வேண்டும்”, “தவறுகளைச் சரிசெய்யவேண்டும் என்பதற்காக முழுக் கட்டிடத்தையும் இடித்துவிடக்கூடாது” போன்ற காந்தியின் புகழ்பெற்ற வாக்கியங்களையெல்லாம் தேடியெடுத்து பொருத்தமாக பயன்படுத்தியுள்ளார் ஆக்ஸல்ராட். ஆக்ஸல்ராட் இதற்கென கடுமையான உழைப்பை அளித்திருக்கிறார். ஆயிரக்கணக்கான வாக்கியங்களைத் தொகுத்துவைத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் மனத்துக்குள் அசைபோட்டு அசைபோட்டு நூறு வாக்கியங்களைமட்டும் தேர்ந்தெடுத்து, சமகால வணிகப் போட்டியில் வெற்றி பெறும் நிறுவனங்களின் செயல்பாடுகளைப்பற்றிய உண்மைகளை அறிந்திருக்கும் பின்னணியில், ஒவ்வொரு வாக்கியத்தையும் மேலாண்மையியலுக்குரிய கலைச்சொற்களோடு பொருத்தி எழுதியிருப்பதை ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். காந்திய வழிமுறைகளைப்பற்றிய முழுஞானமும் ஈடுபாடும் கொண்டிருப்பதால் மட்டுமே அது ஆக்ஸல்ராடுக்கு சாத்தியமாகியிருக்கிறது. காலம்தோறும் காந்தியக் கருத்துகளுக்கு ஒரு புதுவடிவம் கிட்டும் வகையில் முன்னெடுத்துச் செல்வதுகூட காந்தியத்தைப் பரப்பும் ஒரு வழிமுறை என்றே சொல்லவேண்டும். வெற்றி என்னும் சொல்லோடும் மேலாண்மை என்னும் சொல்லோடும் காந்தியை வெற்றிகரமாக இணைத்துச் சித்தரித்திருப்பதைப் படிப்பது ஒரு நல்ல அனுபவம் என்றே சொல்லவேண்டும்.
(நன்றி: பாவண்ணன்)