ஒரு மொழி எப்படி உருவாகியிருக்கலாம், கருத்துகளை பரிமாறிக் கொள்ள நினைப்பதை சொல்வதற்கும் இன்னும் எளிமையா சொல்லனும்னா “தகவல் பரிமாற்றம்” அவ்வளவே. அப்படி பட்ட ஒரு மொழிக்கு உயிர் தரும் அளவுக்கு ஒரு கூட்டம் இருக்குன்னா என்ன காரணமாக இருக்கும்?
உலகத்துல எந்த ஒரு மொழிக்காகவும் யாரும் உயிர குடுத்ததாக சரித்திரம் கிடையாது. ஆனா இங்க மட்டும் அப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கு எல்லாத்துக்கும் என்ன காரணம்? மொழி போர் போராட்டம் ஏன் இங்க மட்டும் நடந்துச்சு? இப்படியான பல கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது இந்த புத்தகத்தில்.
“வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்“
இனி நாவல், கதையின் கால கட்டம் 2037-ல் ஆரம்பமாகிறது. ஜப்பானில் ஒரு சுனாமியில் துடங்கி காலக்கோட்டில் முன்னும் பின்னும் சில ஆயிரம் ஆண்டு பயணிக்கிறது.
வேங்கை நங்கூரம்
தேவ் (மலேசிய தமிழன்) கதையின் நாயகன் ஆராய்ச்சியாளன், ஒரு சுனாமியில் சிக்கி மீள்கிறான், மீளும் பொழுதில் அவன் மூளையின் ஒரு பகுதியில் நினைவு மடிப்புகளும் புத்துயிர் பெறுகிறது. அவன் உறங்கும் (தூங்கும்) நேரத்தில் மூளை விழிக்கிறது, காலபயணம் மேற்கொள்கிறது. அவன் ரத்தமும் சதையுமாக நினைவுகளில் அவனை, அவனே வேறு ஒருவனாக காண்கிறான்.
நான்கு கால கட்டங்களின் நினைவு சங்கிலிகள், தொடர்ச்சி இல்லாமல் திட்டு திட்டாக மூளையை ஆக்கிரமிக்கிறது. ஒரு கட்டத்தில் அவனே நினைவுகளை தொடர நினைத்து கோர்த்து பார்க்கிறான்.
ஒரு ஆதி மொழியின் வரலாற்று படிமங்கள் வெளிவர தொடங்குகிறது நினைவுகளின் வாயிலாக. இடையில் இந்த நினைவு துரத்தலுக்கு மருத்துவரை கலந்து ஆலோசிக்கிறான். அவனை சோதனை செய்யும் மருத்துவர் குழம்பித்தான் போகிறார்.
அவன் – இப்போது அவன் மட்டும் அல்ல “அவர்களது நினைவுகளின் தொகுப்பு”, தமிழ் மொழியின் சில ஆயிரம் ஆண்டு வரலாற்றின் வாழும் வடிவம்.
ராஜேந்திர சோழனின் சொர்ணத் தீவு நோக்கிய (கி.பி 1032) கடல் பயணம் தான் அவனுக்கும் முதலில் வரும் நினைவு, பின்னர் தடாலென 2016 – கெண்டகி ஜான் வில்பர் கெய்ஸெர் ஒரு அமெரிக்க-கிரேக்கன், அங்கே இருக்கும் அமெரிக்க-தமிழன் வீட்டில் சண்டை கோழிகளை பற்றியும் சோழ அரசனின் கொடி பற்றியும் தன்னார்வமாக விசாரிக்கிறான். அடுத்த அடுத்த விவரிப்புகள் ஆச்சரியரகம்.
ஜான் கைது செய்யப்படுகிறான், காரணம் ஒரு விலங்கு நல ஆர்வலரை கொன்றதற்காக, கொலைக்கான காரணம் அவர் சேவல் சண்டையை காட்டுமிராண்டித்தனம் என சொன்னதற்காக. இவனது பின்னனி “இரும்பொறைச் சோழனிடம் வாக்குக் கொடுத்த மூன்று கிரேக்கர்களில் அவனுடைய மூதாதையரும் ஒருவர்.”
இதன் பின் தேவ்–க்கு தமிழ் அறியும் ஆசை வருகிறது, கம்ப்யூட்டரை தட்டுகிறான் ஒரு டாக்குமெண்டரி வருகிறது. அதை பார்க்க துவங்குகிறான் அது ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றியது. காட்சிகள் போக போக, சரவணன் தேவ்–ன் நினைவுக்கும் வருகிறான் தெரிகிறான். இத்தனைக்கு சரவணன் அந்த டாக்குமெண்டரியில் இல்லை அதன் இயக்கம் தான் சரவணன் காலம் 2017.
இப்படியாக சுற்றி சுழலும் நினைவுகளில், கடந்த – நிகழ் காலங்களில் பயணிக்க துவங்குகிறான் தேவ். முதலில் விருப்பம் இல்லாமல் இருந்த அவன், பின் நினைவுகளின் சங்கிலிகளை ஒட்டவைத்து பார்க்க முயற்சிகளை மேற்கொள்கிறான்.
இடையில் 1924 –ல் ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட சிந்து சமவெளி ஆராய்ச்சியும் அதன் கண்டுபிடிப்புகளும் அவன் நினைவுகளில் வந்து சேர்கிறது.
இவை அனைத்தையும் டாக்டர் மாறனிடம் விவரிக்கிறான். தேவ் ஒரு கட்டற்ற நிலையில் காலத்தை காண்கிறான் என்பதை பற்றி யோசிப்பவருக்கு, இஸ்ரேலில் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. தேவ் பற்றிய விவரங்களை ஒருவன் விசாரிக்கிறான்.இவர் தர மறுக்கிறார்.
தேவுக்கு நினைவுகள் வசபடுகிறது, அது கூட்டி செல்லும் திசை தெரிய துவங்குகிறது. சில ஆயிரம் ஆண்டுகளின் வரலாறுகள் அவனுக்கு அனிச்சையாக பழக்கப்படுகிறது. தமிழ் ஜீன்களில் எழுதப்பட்ட மரபுச் செய்தியாக வரலாறாக இருக்கிறது அவனது ரத்தத்தில்.
இப்படியாக முன் பின் செல்லும் நினைவுகள் ஒன்றை மட்டும் சொல்லி செல்கிறது அது “தமிழ் மற்றும் தமிழ் சார்ந்தவைகள்”.
ஒரு மொழிக்குடும்பத்தின் வரலாறு: தமிழ் நாடு, சந்து சமவெளி,சுமேரியா என நீள்கிறது. வெறும் கட்டு கதையாக இல்லாமல் ஒவ்வொன்றுக்குமான தக்க புள்ளி விவரத்தோடு பயணிக்கிறது.
அதில் சில தகவல்கள் பின்வருமாறு,
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது, ஏன் ஒரு வரலாற்றை ஒரு கும்பல் ஏற்க மறுக்கிறது. சிந்து சமவெளியில் கட்டிடங்களில் நீள – அகலங்கள் 11அடியின் விகிதங்களாக இருந்தன, இங்கேயும் அதே அளவுகளில் கட்டுமானங்கள் இருந்தும் ஆய்வுகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. சிந்து சமவெளியில் ஒரு குதிரை பொம்மை இருப்பதாக சொல்ல இன்னும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் அது அங்கே கிடைக்காது எருது வடிவங்கள் தான் கிடைக்கும்.
ஸ்வாதேஷ் லிஸ்ட் (Swadesh List) தெரியுமா? மொழியின் ஆதார சொற்களை அவர் பட்டியலிட்டார்.அவர் சொன்ன 100 சொற்கள் ஒரு மொழியில் இருந்தால் அது தொன்மையான மொழி.
தமிழில் – பாதை , ஆங்கிலத்தில் – பாத் (path)
தமிழில் – எவர் -> யார் பின்பு அங்கே– வேர் (where)
இங்கே – பேச்சு, அங்கே – ஸ்பீச் (speech)
இங்கே – உடன், அங்கே – சடன் (sudden)
இங்கே – நெருப்பு, எகிப்தில் – நெப்
இங்கே – மழை பெய்தல், அங்கே – பெய்
இப்படி தேடுகையில் உலகில் அத்தனை மொழியிலும் தமிழ் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது. மாறுதல்களோடு நம் மொழி தழைத்து நிற்கிறது.
சுமேரியா வாய்மொழி கதை ஒன்று வருகிறது காலம் கிமு 12,407. ஒரு கண்டம் அழிந்து அதில் இருந்து மீண்டு நீரில் நீந்தி வந்தவனின் வாயிலாக விரிகிறது. இப்படி வந்தவர்களால் செங்கல் வைத்து வீடு கட்டும் பழக்கம் பரவுகிறது. ஒரு நல்ல நாகரீகம் கடல் கடந்து செழிப்படைந்த கதை.
இர்க் (irk – மத்திய கிழக்கு பகுதியில் இருக்கிறது) – என்கிற நகரத்தில் தங்களை கிழக்கில் இருந்து நீந்தி வந்தவர்கள் என்று இன்றும் சொல்கிறார்கள். இர்க் இருக்கும் இடத்தை மேப் –ல் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
தை மாதத்தில் நாம் அறுவடைத் திரு நாள் கொண்டாடி “பொங்கலோ பொங்கல்” என்பது போல், ஜப்பானியர்கள் “ஹொங்கரோ ஹொங்கர்” என்கிறார்கள்.
ஆரிய – திராவிட வேறு பாடும், இவ்விரண்டுக்குமான கருத்தொவ்வாமையும் சில ஆயிரம் வருடங்களாக தொடர்ந்து இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்காது.
சில உதாரணங்கள் : ஜல்லிக்கட்டு, நீட், மோடி, ஹிந்தி, நவோதையா
சிந்து சமவெளியில், வில், புலி, கயல் சின்னங்கள் கிடைக்க பெற்றன, மீனாடு என மற்றொரு பெயரும் உண்டு. சம்பரன் எனும் மன்னனின் பெயர் ருக்கு வேதத்தில் (Rig Veda) 20 முறை வருகிறது.
வேதங்களில் மீன் பற்றிய குறிப்புகள் இல்லை ஆனால் சிந்து சமவெளியில் மீன்கள் அதிக அளவில் உள்ளது.
வேதத்தில் புலி பற்றிய குறிப்புகள் இல்லை ஆனால் சிந்து சமவெளியில் குறிப்புகள் காண கிடைக்கிறது. இப்படியாக ஏராளமான தகவல்கள் கிடைக்கிறது. நம் மொழிக்கு ஆறாயிரம் வருட வரலாறு என்றால், நம்மை எதிர்போர்க்கும் ஒரு மூவாயிரம் ஆண்டு வரலாறு
இருக்கிறது.
தமிழ் மொழியில் உள்ள பெயர்கள் உலகளவில் பல இடங்களில் இன்னும் வழக்கத்தில் உள்ளன அப்கானிஸ்தானில் காவ்ரி, பொர்னை மற்றும் பொருன்ஸ், பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா, பொர்னை, புரோனை, காரியாரோ ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிகளின் பெயர்களை நினைவுறுத்துகின்றன.
ராஜீவ் காந்தி கொலையும் அதன் மறைக்கப்பட்ட பின்னனியும் விரிவாகவே பேசப்படுகிறது, “நரசிம்மராவ் பிரதமாரன” காலகட்டம் இந்திய அரசியலமைப்பில் ஒரு மர்மமான காலகட்டம். அது போக இந்திய நாட்டில் பல வெளி நாட்டு கம்பெனிகள் காலூன்றிய காலகட்டமும் அதுவே ( கோலா, பெப்சி முக்கியமானவை).
தமிழில் வட்டார மொழி நீங்களாக பேச்சுத் தமிழுக்கும், இலக்கிய செந்தமிழுக்கும் இடையே தெளிவான இரு வடிவ தன்மை (diglossia) காணப்படுகிறது.
கரிகால சோழன் அரண்மனையில் பெண் கவிஞர் வெண்ணிக்குயத்தியார் எழுதிய ஆசிரியப்பா. இவர் தான் முதன் முதலில் தமிழ் வரலாற்றை எழுதியவர். .
“ஆதி பண்டையன் வாழி
ஆழி சூழ நாட்டினன் வாழி
மலைச் சேர வாழ்ந்தனன் வாழி
பண்டையன் பாண்டியன் ஆயினன் வாழி
சூழ நாட்டினன் சோழனாய் வாழி.”
திருவள்ளுவரும் பேசப்படுகிறார், அவரின் சிறப்பும் அவர் எழுதிய புதிய வடிவம் தான் குறளாக பின்பு சிறப்பு பெற்றதும், அதன் சிறப்பு தன்மையான பொது வடிவமும் ஒரு உரையாடலாக பேசப்படுகிறது.
எதிர்கால சாத்தியங்கள் பற்றியும் பேசி செல்கிறது,
ஆல் டேப் ( All Tab)
மல்டி லேயர் எஸ்.எஸ்.டி ஸ்கேனர் (Multi layer SSD scanner)
பாஸிரான் எமிஷன் டெஸ்ட் (Positron emission test)
நியூரோ ட்ராண்ஸ்மிஷன் ஸ்கேனர் (Neuro Transmission scanner)
டச் ஷீட் (Touch sheet).. etc.,
பசித்தால் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாக கருவிலேயே வருவது போல தமிழ் மொழி பற்றிய உணர்வும் நமக்குள் நமது ஜீன்–ல் கலந்தே இருக்கிறது. அது தான் நாம் அதை அபரிமிதமாக நேசிப்பதற்கான காரணமாகவும் இருக்கிறது.
“மொழி என்றால் உயிர் ஈவர் தமிழ் மக்கள்.. மேலும் அவர் உயிர்ப் பறித்தல் பாவம்”– இது கதையில் வரும் ஜானின் டயரி குறிப்பில் இருப்பது.
உண்மை எது கற்பனை எது என தெரியா வண்ணம் எழுதப்படிருக்கும் இதில் உண்மைக்கான நியாங்கள் விரிவாகவே விளக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் விவரிக்கலாம் அது புத்தகத்தை இங்கே நகல் எடுப்பதுபோல் ஆகிவிடும். இதுவே கிட்டத்தட்ட அப்படி தான் இருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் அந்த புத்தகத்தின் சிறு துளிகளே. கதையின் ஓட்டத்தில் தகவல்களை தூவி செல்கிறார் தமிழ்மகன்.
மொழி என்ற வடிவத்தை உருவாக்கிய நாள் முதல் அதன் சூடி குறையாமல் பார்த்து கொள்வதனால் தான், உலக மொழிகள் பலவற்றில் தமிழின் தாக்கம் இருக்கிறது.
சில ஆயிரம் ஆண்டு கால வரலாற்றின் மீது தன் ஒளி கற்றையை வீசி செல்கிறது ஒவ்வொரு அத்தியாயமும்.
(நன்றி: தமிழ் கிறுக்கல்கள்)