எழுத்தாளர்களுக்கும் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து தேவைப்படுகிற காலம் இது. அதற்காக அவர்கள் செய்யும் ‘அரசியல்’ தனித்துவம் வாய்ந்தது. சினிமா நடிகர்கள் ‘பஞ்ச்’ டயலாக் பேசுவதுபோல, எழுத்தாளர்களும் பரபரப்புக்காகவும் தங்கள் மீது கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் எழுதுவது தற்போது நடைமுறையாகிவிட்டது. உயர்ந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று, நான் குதிக்கப்போகிறேன் என்று ஒருவர் சொன்னால், எல்லோரும் அவரை அண்ணாந்து பார்ப்போம். அது போன்ற செயலைத்தான் சில எழுத்தாளர்கள் கடைப்பிடிக்கிறார்கள். மக்கள் மனதில் உயர்ந்து நிற்பவற்றை விமர்சித்தால் தன் பக்கம் கவனம் திரும்பும் என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட உத்திகள் கையாளப்படு கின்றன.
தங்களுடைய அடையாளம் வெளிப்பட்டுவிடாமல், நடுநிலைவாதி என்கிற முகமூடியை அணிந்துகொண்டு, தாங்கள் படித்த மேல்நாட்டு-உள்நாட்டு சங்கதிகளையெல்லாம் இடையிடையே தூவி பிரமிக்கவைத்து, அதன் மூலம் வாசகர்களைக் கவர்வதில் இவர்கள் கெட்டிக்காரர்கள்-கில்லாடிகள். அத்தகைய கெட்டிக்காரர்களில் ஒருவர் ஜெயமோகன். பின்தொடரும் நிழலின் குரல், காடு, விஷ்ணுபுரம் உள்ளிட்ட புதினங் களாலும் ஏராளமான கட்டுரைத் தொகுதிகளாலும் பிரபலமானவர்.
அவருடைய எழுத்து நடையையும், அதில் உள்ள சாரத்தையும், எங்கிருந்து இவருக்கு நேரம் கிடைக்கிறது என்று ஆச்சரியப்படுமளவுக்கு எழுதிக் குவிப்பதையும் பார்த்து சக எழுத்தாளர்கள் – கவிஞர்கள் - இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் - மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் எனப் பலரையும் வியக்கவைத்தவர் ஜெயமோகன். இந்த வியப்பையே தனக்கான நற்சான்றிதழாக எடுத்துக்கொண்டு, எவரையும் – எதைப் பற்றியும் தன் மனத்தில் தோன்றுவதை எழுதி பரபரப்பூட்டிவிடுவது ஜெயமோகனுக்கு கைவந்த கலை.
அத்தகைய ‘கலை’களில் ஒன்றாக அவர் எழுதிய புத்தகம், ‘இன்றைய காந்தி’. இந்தப் புத்தகத்தில் காந்தியைப் பற்றிய அவருடைய பார்வை, மறுவாசிப்பு, அரசியல் அலசல், விமர்சனங்கள் எனப் பலவும் இடம்பெற்றிருக்கின்றன. ஜெயமோகனின் இன்றைய காந்திக்கு திராவிட இயக்க ஆய்வாளரும் எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு மறுமொழியாக ‘இன்றைய காந்தி யார்?’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
இன்றையை காந்தியை அடையாளம் காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு, பெரியாரையும் அம்பேத்கரையும் இடதுசாரி இயக்கங்களையும் தேவையில்லாமல் சீண்டுவதோடு, தவறான செய்திகளால், வரலாற்றை யும் ஜெயமோகன் திரிக்கிறார் என்பதே க.திருநாவுக்கரசு அவர்களின் வாதம். ஜெயமோகன் தன்னுடைய புத்தகத்தில் சொல்வது என்ன, அன்று நடந்த உண்மை என்ன என்பதைத் தகுந்த ஆவணங்களோடு முன் வைக்கும் இன்றைய காந்தி யார்? எனும் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன…
இனி நூலிலிருந்து…
‘இன்றைய காந்தி’ எனும் புத்தகம் புத்தகப் பிரியர்களிடத்திலே பெரும் பரபரபப்பைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைய காந்தியில் காந்தியைப் பற்றி எல்லாச் செய்திகளையும் ஜெயமோகன் விவாதித்துவிட்டு இடையிடையே, ஆங்காங்கே திராவிட இயக்கத்தையும் கம்யூனிஸ்டுகளையும் தாக்கியும் அவதூறுகளைப் பொழிந்தும் இருக் கிறார். எமது பார்வையில் அந்தப் புத்தகத்தை விமர்சனம் செய்து ஒரு நூலாகவே வெளியிட்டிருக்கிறேன்.
ஜெயமோகன்களின் எந்த உருவத்தையும் நாம் கண்டறிந்து நாட்டு மக்களுக்குச் சொல்லுவோம் என்பதன் அறிவாயுதத்தின் அடையாளம்தான் ‘இன்றைய காந்தி யார்?’ என்கிற இந்நூலாகும்.
• காந்தி இலண்டன் வட்டமேசை மாநாட்டில் விக்டோரியா மகாராணியாரைச் சந்தித்தார். மகாராணியார் எதிரில் கோவண உடையுடன் காந்தி அமர்ந்தார் என்று ஜெயமோகன் எழுதி யிருக்கிறார். ஆனால் விக்டோரியா 22ந் தேதி ஜனவரி, 1901லேயே இறந்துவிட்டார். காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வுக்கு வந்தது 1901 அக்டோபர்தான்.
• அம்பேத்கர் ஆடை அணிவதைப் பற்றியும், அதன்மூலம் இந்தியா முழுமையும் அடையாளம் காணப்பட்டவர் அவர் என்றும், இறுதிக் காலத்தில் மெய்ஞானம் கனியப்பெற்ற போது எளிமையான ஆடைகளை நோக்கியே அவர் சென்றார் என்றும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.
காந்தியும் பிறரும் அதே ஊழியில் ‘சூட்டுகளை’ அணிந்தது போல்தான் அம்பேத்கரும் அணிந்தார். அதனை ஏன் ஒரு பெரிய செய்தியாக ஜெயமோகன் எழுதுகிறார்? இன்றைய காந்தியைக் காட்ட எண்ணிய அம்பேத்கரை ஏன் அவமானப்படுத்துகிறார்?
• பெரியாரை மிகை உணர்ச்சிக்காரர் என்று ஜெயமோகன் சொல்கிறார். பாரதி ரௌத்திரம் பழகு என்று சொன்னது சரியானால் பெரியாரின் மிகைஉணர்ச்சியும் சரியானதுதான். தீமையையும் அமைப்பின் பெயரால் சுரண்டலையும் அடிமை வாழ்வையும் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? ஒன்று மிகை உணர்ச்சி வரும். இல்லையானால் ரௌத்திரம் தோன்றும். இது சுயமரியாதை உள்ளவனுக்கு ஆனது.
• ஜெயமோகனோ வைக்கம் போராட்ட அத்தியாயத்தின் இறுதியில் “இந்தப் போராட்டத்தின் நாயகர் அதாவது உண்மையான வைக்கம் வீரர் டி. கே. மாதவன் மட்டுமே” என்று முடித்திருக்கிறார்.
வைக்கம் வீரர் என்று டி. கே. மாதவனையே ஜெயமோகன் எழுதட்டும். அதனால் நமக்கு ஒன்றும் இல்லை. ஆனால் மூத்த தமிழர் ஒருவர் பெரியாருக்கு மட்டுமே சூட்டிய பட்டம் அது.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமது நவசக்தியில் ‘வைக்கம் வீரர்’ என்று பாராட்டி எழுதினார். பெரியார் அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தார். பெரிய பொறுப்பு அது அக்காலத்தில். அவர் வைக்கம் போராட்டத்தில் பங்கு பெற்றதனால் பாராட்டி எழுதினார்.
• வைக்கம் போராட்டத்தில் முழுவதுமாகப் பங்கேற்கவில்லை பெரியார் என்று ஜெயமோகன் எழுதுகிறார். கே. பி. கேசவ மேனன், ‘வைக்கம் சத்தியாகிரகம் பல நிலைகளில் 20 மாத காலம் நீடித்து இருந்தது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். பெரியார் இரண்டு முறை போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு மாதம், 6 மாதம் என்று சிறைத் தண்டனை பெற்றார். 6 மாதம் சிறை தண்டனையில் மன்னர் திருநாடு சேர்ந்தார் (இறந்தார்) என்பதனால் 4 மாதம் தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டு விட்டார். ஆக, 5 மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். 20 மாத காலத்தில் நீடித்த போராட்டத்தில் அழைத்ததால் பங்கேற்று 5 மாதச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவரை கடைசிவரை போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் ஜெயமோகன்.
• காந்தியோடு பெரியாரை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும் என்று ஜெயமோகனிடம் யார் வந்து கேட்டார்கள்?
பெரியார் தமிழர்களுக்கான தலைவர். ‘என்னுடைய தாய்மொழி கன்னடம். அது கர்நாடக மண்ணில் பேசிய தமிழ்’ என்று எழுதியவர், பேசியவர்பெரியார்.எனவே, அவர் தமிழ் மக்களுக்கான தலைவர். அந்த வரலாற்றுப் பேராண்மை சங்கரன் நாயருக்கு இருந்தது. டாக்டர் டி.எம்.நாயருக்கு இருந்தது. ஜெயமோகனுக்கு இல்லை.
• ஜெயமோகனுக்கு காந்தியின் முகமூடி தேவை. அதை அணிந்துகொண்டு அவர் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இதைக்கொண்டு பரப்புரை செய்ய முயலுகிறார். அவர் பார்வையில் கம்யூனிசம் இம்சையானது, காந்தியம்- ஹிந்த்சுயராஜ்ஜியம் அகிம்சையானது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 44 பாராக்கள் கொண்டது, இன்னமும் உயிரோடு இருக்கிறதே, அதை எப்படிப் படிக்கவேண்டும் என்பதற்காக 600 பக்கங்கள் கொண்ட புத்தகம் இருக்கிறதே. அப்படி ஹிந்த்ராஜியத்திற்கு ஓர் உயிர் இருக்கவேண்டும் அல்லவா? ஆகையினால்தான் ஜெயமோகன், ‘காந்திய கிராம தரிசனம் ஒரு முழுமையான சித்தாந்தம் அல்லது திட்டம் என்று நான் கருதவில்லை’ என்று நூலின் முடிவில் கூறுகிறார். ஆகவே இன்றைய காந்தியையும் அவர் நமக்குக் காட்டவில்லை