ச.முகமது அலி எழுதி பொள்ளாச்சி இயற்கை வரலாற்று அறக்கட்டளை சமீபத்தில் வெளியிட்டுள்ள 'இயற்கை : செய்திகள், சிந்தனைகள்' என்ற புத்தகம் இயற்கை வரலாறு தொடர்பான ஒரு குறு கலைக்களஞ்சியம். வெகுமக்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், தமிழ் இயற்கையியல் புத்தகங்களில் ஒரு மைல்கல்.
தமிழின் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டுமே உள்ள காட்டுயிர் எழுத்தாளர்களில் ச. முகமது அலி முதல் வரிசையில் இருப்பவர். அவர் எழுதிய 'இயற்கை: செய்திகள்-சிந்தனைகள்' எனும் புத்தகம் சமீபத்தில் வெளிவந்துள்ளது. முன்னோடி முயற்சியான இந்தப் புத்தகம், தமிழின் மிகச் சிறந்த காட்டுயிர் புத்தகங்களில் ஒன்றாகத் திகழும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
இயற்கையின் பல்வேறு கூறுகளை, முக்கிய தலைப்புகளின் கீழ் இப்புத்தகம் தொகுத்துள்ளது. தற்போதுள்ள நிலையில் அறிவியல் தகவல்கள், அதை முன்வைக்கும் பாங்கு, நடை காரணமாக புத்தகம் சிறப்பாக உள்ளது. இதை மேம்படுத்தும் வகையில் அகர வரிசைப்படி, பகுப்பு முறைகளின் கீழ் தகவல்களைத் தொகுக்கலாம். ஓவியங்களை அதிகரித்து அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு கலைக்களஞ்சியமாக, காலகாலத்துக்கும் முன்னோடி முயற்சியாக இப்புத்தகத்தை ஆக்க வேண்டும் என்று இப்புத்தகத்தை படித்து முடித்தவுடன் யோசனை தோன்றியது. தமிழில் காட்டுயிர்கள் பற்றி மா. கிருஷ்ணன், சு. தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட சிலரே வெகுமக்களுக்கு தொடர்ச்சியாக எழுதியுள்ளனர். தமிழில் காட்டுயிர்கள் தொடர்பாக 20க்கும் குறைவான சிறந்த புத்தகங்களே வந்துள்ளன. அவற்றில் முதல்வரிசையில் வைத்து பாராட்டத்தக்க முன்னோடி புத்தகம் இது.
அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால் முகமது அலி ஒரு 'தீவிரமான இயற்கை விரும்பி'. இயற்கை வரலாற்று அடிப்படையைப் புரிந்து, நுகர்ந்து இயற்கை வளம் காக்கும் பொருட்டு எந்த வகைப் பரிமாணங்களையும் எதற்கும் விட்டுக் கொடுக்காதவர். அவரது இந்த அரிய முயற்சியை நெஞ்சு நிமிர்த்தி வரவேற்க வேண்டும்.
பறவையியல் அறிஞர் சாலிம் அலி,நெருப்புக் குழியில் குருவி ஆகிய புத்தகங்களை முன்னரே அவர் எழுதியிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான 'யானைகள்: அழியும் பேருயிர்' என்ற புத்தகம் அவரது முழுத் திறனை சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருந்தது.
முக்கியஸ்தர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரிடமும் நிலவும் காட்டுயிர் விழிப்புணர்வின்மை பற்றி 'நெருப்புக் குழியில் குருவி' புத்தகத்தில் முகமது அலி வெளிப்படுத்தியிருந்தார். இப்புத்தகத்துக்கு பல விமர்சனங்கள் வந்தன. நவீனத் தமிழில் காட்டுயிர்கள் பற்றிய அறிவும், எழுத்துகளும் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. காட்டுயிர்கள் தொடர்பான பல்வேறு அடிப்படை தகவல்களைக் கொண்ட புத்தகம் அவசியம் தேவை என்ற விமர்சனக் கருத்து அப்பொழுது முன்வைக்கப்பட்டது. வெளியான காலத்திலேயே அந்தப் புத்தகத்தை படித்த எனக்கும் இதே கருத்து இருந்தது. 'அரும்பு' இதழில் அப்புத்தகத்தை அறிமுகப்படுத்தி எழுதியபோது, இதை குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் பிறகு வந்த யானைகள் புத்தகம், குறிப்பிட்ட ஒரு காட்டுயிர் பற்றி தமிழில் வெளியான முழுமையான புத்தகங்களில் ஒன்று. யானைகளின் வாழ்க்கை பற்றி அடி முதல் நுனி வரை ஆராய்ந்திருந்தது அந்தப் புத்தகம். நமது சொல்வளத்தை, நமது பாரம்பரியத்தை, பண்பாட்டுத் தொடர்பை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் மொழி, சமூகம் பற்றி அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு அவசியம் தேவை. அந்தப் பணியில் மற்றுமொரு முக்கிய அடியை எடுத்து வைத்திருக்கிறது 'இயற்கை: செய்திகள், சிந்தனைகள்' புத்தகம்.
இப்புத்தகம் பல்வேறு முன்னோடிப் பணிகளைச் செய்துள்ளது. என்னைப் போன்று இயற்கை மீது ஆர்வமிக்கவர்கள், எழுதுபவர்கள், பேசுவர்களுக்கு அவசியமான பல்வேறு சொற்பிரயோகங்கள், உண்மைத் தகவல்கள், அவசிய அறிவை மகிரமகிர தந்துள்ளது.
இயற்கை தொடர்பான 10க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அடிப்படைத் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இயற்கை இயல்கள், அறிஞர்களின் மணிமொழிகள், விழாக்கள், முக்கிய நூல்கள், பூமியின் வரலாற்றுச் சுருக்கம், இயற்கை வள வரைபடங்கள் போன்றவை 'போனஸ்' போல கூடுதலாகத் தரப்பட்டுள்ளன.
கவரிமா என்றொரு மானே கிடையாது. இமயத்தில் வாழும் காட்டுமாடு, சடை போன்ற முடி உடையது. கவரி என்றால் மயிர், மா என்றால் விலங்கு. இதுவே கவரிமா. இமயமலையில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே வாழும் இந்த மாடு உடலிலுள்ள மயிரை இழந்துவிட்டால் உயிர் துறந்துவிடும். இதையே வள்ளுவர் உவமையாக 'மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமா' என்று குறிப்பிட்டார். பின்னால் வந்தவர்கள் தங்கள் வசதிக்கேற்ப 'நாங்களெல்லாம் கவரிமான் பரம்பரை' என்று கூறி இல்லாத ஒரு மான் இனத்தை உருவாக்கிவிட்டனர்.
குயில்களில் ஆண் குயில்தான் கூவுகிறது. ஆனால் பாடகிகளுக்கு 'இசைக் குயில்' என்று பட்டம் வழங்கப்படுகிறது. வானம்பாடிகள் எனப்படும் பறவைகள் பாடுவதில் தேர்ந்தவை அல்ல. இப்பறவைகளால் முழு மெட்டில் பாட இயலாது, கீச்சிடவே முடியும். ஆனால் இலக்கியவாதிகள் வானம்பாடி பறவையைப் பற்றி அதிகமாகவே தவறாக உருவாகப்படுத்திவிட்டார்கள். பாலையும் நீரையும் தனித்தனியாகப் பிரிக்கும் என்று தவறாக நம்பப்படும் அந்த அன்னபறவை நம் நாட்டில் கிடையாது. தமிழ் இலக்கியங்களில் அன்னம் என்று கூறப்படுவது நம்மூர் வாத்துகளைத்தான். இதுபோன்ற பல மூடநம்பிக்கைகளை அறிவியல்பூர்வமாகக் களைகிறது இப்புத்தகம்.
காட்டுயிர்கள் பற்றி தமிழில் எழுதுபவர்கள் புதிய பதங்களை அறிமுகப்படுத்தப்படுத்த முயற்சிக்க வேண்டும். காலப்போக்கில் அதன் நுண்மையை ஆராய்ந்து தரப்படுத்திக் கொள்ளலாம். அந்த தரப்படுத்தும் பணியை மேற்கொண்டு 'தரப்படுத்தப்பட்ட துறைசார் சொற்கள்' பட்டியலை தந்துள்ளார் ஆசிரியர். எனும் பறவையை தமிழில் கல்குருவி என்கிறோம். தமிழில் கல்குருவி எனும் பறவையை கல் கௌதாரி என்னும் இப்புத்தக ஆசிரியர், நட்சத்திர ஆமை என்று அறியப்பட்ட ஆமைக்கு கல்ஆமை என்று பெயர் தருகிறார். அதேபோல பட்டாம்பூச்சி என்பதை வண்ணத்துப்பூச்சி என்று அழைக்க வேண்டும் என்கிறார். வழக்கமாகிவிட்டது என்பதற்காகவே ஒரு தவறான சொல்லை பயன்படுத்துவது தவறு. இதனால் அறிவியல் ரீதியில் தகவல்களை தருவதில் நிறைய குழப்பங்கள் ஏற்படும். அப்போது சொற்களை தரப்படுத்த வேண்டும். இந்தப் பணியை இப்புத்தகம் சிறப்புறச் செய்துள்ளது.
அதேபோல பல ஆங்கில சொற்களுக்கு இணையான சிறந்த தமிழ்ச் சொற்களை ஆசிரியர் இப்புத்தகத்தில் கொடுத்துள்ளார். காட்டுயிர், பல்லுயிரியம், அறிதுயில், அகவொலி, இயல்பூக்கம், உருமறைவம், கூருணர்வு, நெகிழி, வளங்குன்றா வளர்ச்சி, செழிப்பிடம் என பல்வேறு துறைசார் சொற்கள் தரப்பட்டுள்ளன. இந்த வகையில் காட்டுயிர்கள் பற்றிய கலந்துரையாடலை உருவாக்குவதில் இப்புத்தகம் பெரும் பங்கை ஆற்றும்.
நல்ல பாம்பு என்றே குறிப்பிட வேண்டும். நாகபாம்பு என்று கூறுவதன் மூலம் மத நம்பிக்கையை, பிறமொழிக் கலப்பை புகுத்துவது தவறான முன்முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் ஆசிரியர். இப்புத்தகத்துக்கு காட்டுயிரியலாளர் யோகானந்த் வழங்கியுள்ள முன்னுரை இதே கருத்தை அடியொற்றி, காட்டுயிர்களை மத நம்பிக்கை சார்ந்து அடையாளப்படுத்துவதில் உள்ள மூடத்தனத்தை ஆணித்தரமாக எதிர்க்கிறது. அந்த மூடத்தனத்தால் விளையும் ஆதிக்கப்போக்கையும் தெளிவுபடுத்துகிறது.
பொதுப்புத்தியில் நிலவும் மூடநம்பிக்கைகளைக் களைய, இவர்கள் இருவரும் வலியுறுத்தும் பணியை முதலில் செய்ய வேண்டும். முதலில் மத நம்பிக்கைகளில் இருந்து காட்டுயிர்களை விடுவிக்க வேண்டும். பிறகு, அறிவியல்பூர்வமாக காட்டுயிர்களை புரிந்து கொள்ளத் தேவையான தகவல்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்தப் பணியை இப்புத்தகம் செவ்வனே செய்துள்ளது.
எளிமையான, தெளிவான, நேர்த்தியான வடிவமைப்பு. அத்துடன் ஆங்காங்கு கொடுக்கப்பட்டுள்ள கறுப்புவெள்ளை ஓவியங்கள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
இந்தப் புத்தகத்தில் குறை கண்டுபிடிப்பது அவசியமற்றது. இழுது மீன், சொறி மீன் என இரண்டு பதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது போன்று ஒரு பொருளைக் குறிக்கும் இரண்டு பெயர்ச் சொற்களை அடுத்தடுத்து தந்திருக்கலாம். அதைவிட அயல்நாட்டினம் என்னும் சொல் இன்னும் தெளிவானதாக இருக்கிறது. அத்துடன் பொருளடைவு சேர்ப்பது வாசகர்களின் தேடுதலை எளிதாக்கும்.
'இயற்கை: செய்திகள், சிந்தனைகள்' புத்தகத்தை ஒரு குறு கலைக்களஞ்சியம், தகவல்தொகுப்பு, காட்டுயிர் பொக்கிஷம் என்று கூறலாம். சூழலியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்மிக்க அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டியது இப்புத்தகம்.
(நன்றி: பூவுலகின் நண்பர்கள்)