இந்தப் புத்தகத்தை முதலில் இருந்து ஆரம்பிக்காமல் கடைசி சில வரிகளில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
“எல்லாவற்றிற்கும் மேலாக அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தி மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதே தலையாய கடமை ஆகும். தற்போது தனியார் எஞ்சினியரிங் கல்லூரிகள் போல் தனியார் கட்டணப் பள்ளிகளும் காத்தாட வேண்டும். பள்ளிகளை மூடிவிட்டு ஏற்கனவே என்ன தொழில் செய்தார்களோ அங்கு அவர்கள் ஓடோட வேண்டும்”
இந்த வரிகள்தான் இந்நூலாசிரியரான ஐயா.இராஜமாணிக்கம் அவர்களின் அடிமனதில் பதிந்து கிடக்கும் ஆசை. தனியார் கட்டணப் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை, அவர்களின் அடாவடித்தனங்கள் எனக் கண்டு கண்டு, நொந்து நொந்து, இத்தனியார் பள்ளிகளை ஒழித்துக் கட்டியே தீர வேண்டும் என்ற தார்மீகக் கோபத்தில் பிறந்ததுதான் இந்தப் புத்தகம்.
சுதந்திரத்தை முழுமையாக அனுபவித்த யாரும் தன் அடுத்த தலைமுறை அச்சுதந்திரத்தை இழக்கும்போது, அதை அடைய இளைய தலைமுறையை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் செய்கிறார்கள். பொதுப்பள்ளிகளின் வாயிலாகப் பயின்று தன் வாழ்வை மேம்படுத்தி, தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் மேம்படுத்தியுள்ள முன்னோடிகளான இந்நூலாசிரியர், ஐயா ச.மாடசாமி போன்றோர்கள், இந்த தலைமுறையில் கல்வி வியாபாரமாகியதையும், பள்ளி மாணவர்களின் அடிப்படை சுதந்திரம் பறிக்கப்படுவதும் கண்டு மனம்வருந்தியே, தங்கள் மனக் கோபங்களை புத்தகங்கள் வாயிலாக இறக்கி வைக்கிறார்கள். இந்நூலில் நூலாசிரியர் கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளாக பொதுக் கல்வியானது எவ்வாறு மெல்ல மெல்ல அரசிடம் இருந்து நழுவி தனியாரின் கைக்குள் சென்றது, இதைத் திரும்ப மீட்டெடுக்க நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்பதையும் 32 பக்கங்களே ஆன இச்சிறுநூலில் ஆறு கட்டுரைகளில் அறச்சீற்றத்துடன் விளக்கியுள்ளார்.
“முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே
அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே… என்ற பட்டினத்தார் வரிகளை நீட்டித்து
தனியார் கல்வி இட்ட தீ குட(ழ)ந்தையிலே
சாம்பலாய் ஆக்கிய தீ தமிழகத்திலே”
என கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளியின் அலட்சியத்தால் இறந்து போன 94 குழந்தைகளின் மரண வலிகளை முதல் கட்டுரையில் வலிக்க வலிக்கப்பதிவு செய்கிறார். இதனைத் தொடர்ந்து தாம்பரம் தனியார் பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து பலியான குழந்தை, சென்னை பள்ளியின் நீச்சல் குளத்தில் விழுந்து பலியான ரஞ்சன், நாமக்கல் பள்ளி மாணவன் மோகன்ராஜ் தற்கொலை,பள்ளி வேனோடு குளத்தில் விழுந்து பலியான சுகந்தி டீச்சர் மற்றும் ஒன்பது குழந்தைகள் என முதல் அத்தியாயம் முழுவதும் தனியார் பள்ளிகள் நிகழ்த்திய கொலைகளைப் பட்டியலிட்டு இதற்கு இந்த அரசும், தனியார் பள்ளிகளும், சமுதாயமும் என்ன பதில் தரப்போகிறது என்கிறார்.
தனியார் மயம் மக்களிடம், தன் பிள்ளை கலெக்டராக வேண்டும், டாக்டராக வேண்டும் , பன்னாட்டு கம்பெனிகளில் பல இலட்சம் சம்பளம் வாங்க வேண்டும் போன்ற பல கனவுகளையும், ஆசைகளையும் விதைத்ததில் பெரு வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானால் தனியார் பள்ளியின் ஆங்கில வழிக் கல்வி ஒன்றே வழி என்று மக்களை தனியார் மயம் நம்ப வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தியதில் தனியார் பள்ளிகள் அசாத்திய வெற்றி பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாகவே அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன என்று இரண்டாவது கட்டுரையான கனவுகள்+ கற்பனைகள் = கட்டணங்கள் என்பதில் விளக்குகிறார்.
ஒவ்வொரு தனியார் பள்ளியும் ஒவ்வொரு விதமாக படிப்புக் கட்டணம், வாகனக் கட்டணம், யூனிஃபாம் கட்டணம், புத்தகக் கட்டணம், ஐடி கட்டணம், கம்ப்யூட்டர் கட்டணம், ஸ்மார்ட் கிளாஸ் கட்டணம், திறன் வளர்ப்புக் கட்டணம், நன்கொடைக் கட்டணம், வளர்ச்சி நிதி, நிகழ்ச்சி நிதி என்னும் வகையில் மக்களை ஏமாற்றுவதையும், மக்கள் ஏமாறுவதையும் மூன்றாவது கட்டுரையான “ஏமாற்றாதே, ஏமாற்றாதே… ஏமாறாதே, ஏமாறாதே” என்பதில் விளக்கியுள்ளார்
பள்ளி துவங்குதல் மற்றும் கட்டிட விதிமீறல், மாணவர் சேர்க்கை மற்றும் விடுப்பு விதிமுறை மீறல்கள், கட்டண விதிமுறை மீறல்கள் பாடத்திட்ட விதிமுறை மீறல்கள், ஆசிரியப் பணி விதிமுறை மீறல்கள், தேர்வு மோசடிகள் என தனியார் பள்ளிகளின் விதிமீறல்களைப் பட்டியலிட்டு, இதனை அரசு கண்டிக்கும்போது, இவர்கள் அரசையே மிரட்டும் அளவுக்கு வல்லமை பெற்றுள்ளதையும் நான்காவது கட்டுரையான, “மீறல்கள் – மிரட்டல்கள்” கட்டுரை துணிச்சலுடன் பதிவு செய்கிறது.
மெட்ரிக் பள்ளிகள் தோன்றி வளர்ந்து விதம் பற்றியும், இப்பள்ளிகள் எவ்வாறு அரசுப் பள்ளிகளை நலிவடையச் செய்தன என்பதையும், இதில் அன்று முதல் இன்று வரை அரசுகள் செய்த பிழைகளையும் மிக மூத்த கல்வியாளர் ஐயா. ச.சீ.ராஜகோபாலனின் கருத்துகளுடன் விவாதித்துள்ள ஐந்தாவது கட்டுரையான “ தோன்றியுதும், வளர்ந்ததும்” என்பது மிக முக்கியமான கட்டுரை ஆகும். மெட்ரிக் பள்ளிகள் களைபோல வளர்ந்து எவ்வாறு அரசுப்பள்ளிகளை மூடி மறைத்து வருகின்றன என்பதன் மூலத்தை அறிய விரும்புவர்கள் தவற விடக்கூடாதக் கட்டுரை இது.
தனியார் பள்ளிகளின் அசூர வளர்ச்சியைத் தடுத்து, எவ்வாறு அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது என்பது பற்றியும், இதில் அரசு , பொது மக்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் என்னென்ன செய்தல் வேண்டுமென்று வழிப்படுத்தும் விதமான கருத்துக்களுடன் ஆறாவது கட்டுரை நிறைவடைகிறது.
பதிப்புரையில் வரும் துருக்கிய நெருப்புக் கவிஞன் நசீம் ஹிக்மத் கவிதையான,
“நான் எரியாவிட்டால்
நீ எரியாவிட்டால்
நாம் எரியாவிட்டால்
ஒளி எப்படி
இருளை வெல்லும்?”
என்பதைப் போல அரசுப் பள்ளிகள் தான் எளிய மக்களின் கடைசிப் புகலிடம் என்பதை நினைவில் கொண்டு, அரசுப்பள்ளிகளைக் காப்பதில் நம் ஒவ்வொருவரும் பங்களிப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் 32 பக்கங் களாலேய ஆன இந்நூல் நம் லட்சியப் பயணத்தில் வழிகாட்டும் ஒளிவிளக்கு.
இந்நூலின் ஆசிரியர் ஐயா பொ. இராஜமாணிக்கம் அவர்கள் பல ஆண்டுகள் கல்லூரிப்பேராசிரியராகப் பணியாற்றியவர். அறிவொளி மற்றும் அறிவியல் இயக்கச் செயல்பாடுகளின் முன்னோடி. தற்போது அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் தேசியப் பொதுச் செயலாளராக உள்ளார்.