ஒரு நாள் மதிய வேளையில் வகுப்பில் இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு மேசையில் வைத்திருந்தேன். இரு மாணவிகள் மேசைக்கருகில் வந்து எட்டிப்பார்த்து புத்தகத் தலைப்பைப் பார்த்து இது யாருடைய வகுப்பறை எனப் படித்தனர். பின் அவர்களுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டனர். “என்ன?” என்றேன். “இல்ல சார். இந்த புத்தகத்துல இது யாருடைய வகுப்பறை? என்று எழுதி இருக்குது சார்.. இதிலென்ன சந்தேகம் சார். இது எங்க வகுப்பறைதானே ” என்றார்கள். சொல்லி விட்டு அவர்கள் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டனர். ஆனால் வெகு நாட்கள் இந்தக் கேள்வி என் மனதில் வட்டமடித்துக் கொண்டே இருந்தது,இருக்கிறது.
இது இந்த மாணவிகளின் விருப்பம் மட்டுமா? இல்லை ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கும். இந்த நூலின் நோக்கமும் இதுவே. ஏற்கனவே ஆயிஷா என்னும் குறுநாவலின் மூலம் நம் மனதையே கொள்ளை கொண்ட இரா. நடராசன்தான் இந்த நூலின் ஆசிரியர்.
என்ன உழைப்பு.. என்ன உழைப்பு! பல்கலைக் கழகங்கள் உற்பத்தி செய்யும் எத்தனையோ ஆய்வேடுகளை விட ஆய்வுக் கருத்துக்களால் இந்த நூல் நிரம்பி வழிகிறது.
பேராசிரியர் ச.மாடசாமி இந்நூலைப்பற்றி,
பலவிதமான எண்ணங்கள், உணர்வுகள் ஒரு வரலாற்று நூலை வாசித்த பரவசம் ஒரு நேரம். ஆராய்ச்சி நூலை வாசித்த பெருமிதம் இன்னொரு நேரம். தகவல்கள் நிரம்பிய ஒரு என்சைக்ளோபீடியாவைப் புரட்டிய பிரமிப்பு எந்த நேரமும். உண்மைதான். இது கல்வி குறித்த ஒரு என்சைக்ளோபீடியோ போல.. தமிழ் என்சைக்ளோபீடியா என்று சிலாகிக்கிறார்.
கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி இந்நூலைப்பற்றி,
மிக முக்கியமானது என்னவென்றால், கல்வியில் காலூன்றி வேலை செய்பவர்களுக்கு இந்த நூல் அவர்களின் தேடலையும், தெளிவையும் அதிகரிக்க நிச்சயம் உதவும். கல்விப் பணியில் கால்பதிக்க ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களின் கல்வித் தேடல் பயணத்தைத் துவங்க உதவும் என்று குறிப்பிடுகிறார்.
புதிய தலைமுறை கல்வி இதழின் ஆசிரியர் பொன் தனசேகரன்,
உலகில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளில்தான் கல்வியும் நிறைவாக உள்ளது. அங்கே ஆசிரியர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வகுப்பறைகளும் குதூகலமாய் உள்ளன. ஆனால் இங்கு எப்போது? இதுதான் ஆசிரியர் எழுப்பும் கேள்வி. அதுதான் புத்தகத்தின் மைய நீரோட்டமும் கூட என குறிப்பிடுகிறார்.
இந்த புகழ்ச்சிகளையும் தாண்டி மிகப்பெரும் சாதனைகளைக் கொண்டது இந்த நூல். இது ஏழு பெரும் கட்டுரைகளைக் கொண்டது.
முதலாவது கட்டுரையின் தலைப்பு “ஆசிரியர்களே தேவையில்லை என்றார் ரூசோ..!” என்பது. இந்த கட்டுரை பழங்காலத்தில் இருந்து இப்போது வரை குருகுலம், திண்ணைப்பள்ளி, மதரஸா, தேவாலயக்கல்வி , மறுமலர்ச்சி யுகக் கல்வி என கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறது. ‘குழந்தைகளை எதுவுமே சொல்லக்கூடாது, கண்டிக்கக் கூடாது, தண்டிக்கக் கூடாது, கையில் கோலெடுத்தால் கைது,வகுப்பில் கண்டிப்பாய் இருந்தால் ஜெயில்….. என்றால் எப்படி பாடம் நடத்துவது?”. ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திலும் பட்டு எதிரொலிக்கும் இன்றைய ஒற்றைக்குரல் அது. இந்தக் கல்வி ஆசிரியர் மையக் கல்வி இல்லை. ஆசிரியர் மையக்கல்வியில் இம்மாதிரி அரசும் அதன் கல்வித் துறையும் தலையீடு செய்ய முடியாது. இது குழந்தை மையக் கல்வியும் அல்ல. குழந்தை மையக் கல்வியில் ஆசிரியர்க்கான அதிகார மையமே முதலில் ஏற்பட்டிருக்காது.
இது அதிகாரிகளை மையப்படுத்திய அரசின் அடக்குமுறைக் கல்வி என்று பல கல்வியியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். எல்லாமே முன் தயாரிக்கப்பட்டுவிட்ட ராஜ தர்பாராகக் கல்வியைக் கொண்டு சென்றுவிடலாம் என ஆளும் வர்க்கம் அதனை அதிகாரத்தின் படிநிலைகளாகக் கட்டமைத்து வழிநடத்துவதை நாம் காணலாம். இங்கே ஆசிரியர்கள் அரசுத்துறை சார்ந்த நான்காம் படிக்கட்டில் உள்ளவர்கள். ஊதியக்குழு பரிந்துரை சார்ந்த அரசுப் பணியாளர்கள். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் சறுக்கல்களுக்கெல்லாம் குற்றவாளி என சமூகத்தின் ஆட்காட்டி விரல் ஆசிரியர்கள் மீது மட்டும் பதிவதை இந்தக் கட்டுரையில் இரா.நடராசன் குறிப்பிடுகிறார்.
இரண்டாவது கட்டுரையின் தலைப்பு “இது யாருடைய வகுப்பறை?” . கல்வியில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியவை ரூசோவின் சிந்தனைகளும், ஜான் டூயியின் சிந்தனைகளும். ரூஸோ கல்வியை(Education) முன் வைக்க, ஜான் டூயி பள்ளியை(Schooling) முன் வைத்தார் என்கிறார் நடராசன். “ கல்வி என்பது பரந்துபட்ட செயலாக்கம்; ஆனால் பள்ளி ஒரு குறுகிய செயலாக்கம்.” என இரண்டையும் வேறுபடுத்தி காட்டுகிறார். பள்ளி என்ற கருத்தாக்கமே நாளுக்கு நாள் வலுப்பெற்றது. அது கல்வியை வேலைக்கான அடையாளச்சீட்டாக மாற்றிவிட்டது. விடைகளின் பின்னாலும் , மதிப்பெண்களைத் துரத்தியும் வகுப்பறையை ஓடவைத்துவிட்டது. மகிழ்ச்சியான குழந்தைகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 116 வது இடம்.
மூன்றாவது இயலின் தலைப்பு ‘அறிவியல் தெரியும் ராமலிங்கத்தைத் தெரியுமா?’ என்பது. ஓர் அறிவியல் ஆசிரியர்க்கு அறிவியலும் தெரிந்திருக்க வேண்டும். அறிவியல் கற்கும் மாணவன் ராமலிங்கத்தைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்கம். “ குழந்தையைப் புரிந்து கொள்வதே ஒரு ஆசிரியனின் அடிப்படைத் தகுதி” என்று பெருங்குரலெடுத்து நூலாசிரியர் கூறுகிறார்.
நான்காவது கட்டுரையின் தலைப்பு “ வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது” என்பதாகும். துள்ளி ஓட வேண்டிய குழந்தைகள் கை கட்டி வாய் பொத்தி நெருப்பில் வெந்து மடிந்த கும்பகோணத்துத் துயரத்தை நினைவூட்டிப் பதைக்க வைக்கும் கட்டுரை இதுவாகும்.
ஐந்தாவது கட்டுரையின் தலைப்பு “ உள்ளேன் டீச்சர்” என்பதாகும். எங்கு மாணவர்கள் பாதுகாப்பை உணருகிறார்களோ, எங்கு பயம் இல்லாமல் இருக்கிறதோ அப்படிப்பட்ட வகுப்பறைச் சூழலே வல்லமையுள்ள கற்றுணரும் சரியான இடம் ஆகும் என்கிறார் நூலாசிரியர்.
ஆறாவது கட்டுரையின் தலைப்பு, “ அவங்க வகுப்பறை நம்ம வகுப்பறை” என்பதாகும். பிறநாட்டு வகுப்பறைகளை அலசும் இக்கட்டுரை , பின்லாந்து, கியூபா நாடுகளின் கல்விமுறையைப் பரவசத்துடன் பகிர்ந்து கொள்கிறது. கெடுபிடியும் இறுக்கமும் அற்ற வகுப்பறைகளை உருவாக்கி இன்று கல்வித்தரத்தில் முன்னுக்கு நிற்கிறது பின்லாந்து. கியூபாவில்வகுப்பறை என்பது பாடப்புத்தக ஆதிக்கத்தில் சிக்கிய வகுப்பறை அல்ல. முழு மனிதனை உருவாக்கும் பட்டறை அது. ஜப்பானின் சுமையற்ற யுட்டோரி கல்வித்திட்டமும் வெகுவாக நம்மை ஈர்க்கிறது.
இந்நூலின் கடைசி கட்டுரை “ வகுப்பறையின் சுவர்களைத் தகர்த்தெறிவோம்” என்பது ஆகும். ஆசிரியர் என்பவர் பாடம் நடத்திப் போகிறவர் மட்டுமல்லர். அவர் வகிக்க வேண்டிய பாத்திரங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பட்டியலிடுகிறது இக்கட்டுரை.
இவ்வாறாக கல்வி பற்றிய பலப்பல தகவல்களை உள்ளடக்கிய களஞ்சியம் போன்ற இந்த புத்தகம் கடைசி வரியாக,
“எந்த சமூகமும் தனது ஆசிரியர்களின் நிலையைத் தாண்டும் சிறப்பை அடைய முடியாது” – சிசெரோ. என்று முடிகிறது. வாய்ப்பை உருவாக்கி இந்நூலை வாசிக்க முயல்வோம். வெளியிட்ட ஓராண்டுக்குள்ளேயே ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்பனையான புத்தகம் இது.