தமிழகத்தில் முஸ்லிம்கள் பற்றிய புரிதலும் ஆய்வும் ஒர் அத்தியாவசிய தேவையாக உருவாகியிருப்பதை உணர்கிறோம். இன, மத, மொழி மற்றும் பண்பாடு போன்றவற்றில் பன்மைத்துவம் என்கிற உயர் மனோநிலையை எய்திய சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் மிளிர வேண்டுமெனில், தமிழக முஸ்லிம்கள் பற்றிய சரியான புரிதல் அவசியம். அந்த அவசியத்தைப் பூர்த்திசெய்யும் விதமாக, மேலதிகமான வரலாற்று ஆதாரங்களுடன், ஆய்வுபூர்வமாகவும் ‘நட்பு’ தோய்ந்த குரலுடனும் எழுதப்பட்ட முக்கியமான நூல், ‘தமிழகத்தில் முஸ்லிம்கள்’. ஆசிரியர் எஸ்.எம்.கமால்.
எஸ்.எம்.கமால் (1928-2007), ராமநாதபுரத்தில் பிறந்தவர். மிக முக்கியமான வரலாற்றாய்வாளர். ராமநாதபுரம் வரலாற்றுக் குறிப்புகள் (1984), விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987), மாவீரர் மருது பாண்டியர் (1998) உள்ளிட்ட 18 நூல்களின் ஆசிரியர் இவர். 1988-ம் ஆண்டையொட்டி, கமால் அவர்கள் எழுதிப் பரிசு பெற்ற ‘தமிழகத்தில் முஸ்லிம்கள்’ நூலின் மறுபதிப்பு, இப்போது ‘அடையாளம்’ பதிப்பகம் மூலம் (புத்தாநத்தம் - 621 310) அழகுறப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
பொன் வெள்ளிக் காசுகள்
‘கிழக்கும் மேற்கும்’ என்ற முதல் கட்டுரையில் தமிழகத்துக்கும், கிரேக்க ரோம, பாபிலோனிய, பாரசீக, அரபு நாடுகளுக்கும் இடையே இருந்த வணிக உறவைப் பதிவுசெய்கிறார் கமால். தமிழகத்தின் அகில், பருத்தி, துகில், பவளமும் முத்தும், மிளகும் வாசனைப் பொருட்களையும் பெற்றுக்கொண்டு, கிரேக்க மதுரசம், கண்ணாடிக் கலசங்கள், ஈயம், தகரம், மற்றும் அந்நாட்டு வணிகர்கள் தந்த பொன் வெள்ளிக் காசுகளும் தமிழர்களைக் கவர்ந்துள்ளன.
கி.மு.1000-ல் சாலமன் கட்டிய தேவாலயத்தைக் காணச் சென்ற ஏமன் நட்டு அரசி ஷீபா, சாலமனுக்குத் தமிழ்நாட்டு மணப் பொருட்களைக் கொடுத்ததை விவிலியத்தின் ‘புதிய ஏற்பாடு’ குறிப்பிடுகிறது. பேரரசன் ஜுலியஸ் சீசர், நண்பன் புரூட்டஸின் தாயாருக்கு அன்பளித்த முத்துகள், தமிழகக் கடல் தந்தவை. பேரழகி கிளியோபாத்ராவின் காதணிகள் மற்றும் 1,51,457 பவுன் பெறுமானமுள்ள முத்துகள் நம்முடைய கடல்வளம். கி.மு. 5-ம் நூற்றாண்டிலேயே பாபிலோனில் தமிழகக் குடியிருப்பு அமைந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக ஏகத்துவம் நல்கிய, மகத்தான நபிக் கொடையை அரபு வணிகர்கள் தமிழகத்துக்குக் கொண்டுவந்தார்கள்.
நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர்கள் தமீமுன் அன்சாரி, முகம்மது உக்காசா ஆகியோரின் இறுதி வாழ்க்கை, சமயத் தொண்டில் தம்மைச் சமர்ப்பித்துக்கொண்டு தமிழகத்தில் அமைந்தது. அவர்கள் அடக்கத் தலங்கள் முறையே பரங்கிப்பேட்டையிலும் கோவளத்திலும் அமைந்துள்ளதே, அரபு தேசத்துக்கும், தமிழ் தேசத்துக்கும் உள்ள உறவை நிரூபிக்கும்.
முதல் தொழுகைப் பள்ளி
சோழர்த் தலைநகர் உறையூரில் கி.பி.734-ல் தென் இந்தியாவின் முதல் தொழுகைப் பள்ளியை இஸ்லாமியர்கள் கட்டி யிருக்கிறார்கள் என்பது தமிழ் வரலாற்றின் பெருமைப் பகுதியாகும். இஸ்லாம் தோன்றிய 7-ம் நூற்றாண்டு முதல் ‘யவனர்’ என்ற தமிழ்ச் சொல் தமிழக இஸ்லாமியரைக் குறிக்கும் சொல்லாகயிருந்தது.
இஸ்லாமியர்களை ‘துலுக்கர்’ போன்ற சொற்களால் குறிக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது என்பதை கமால் விரிவாக எழுதியிருக்கிறார். கம்பன், ஒட்டக்கூத்தர், ஜெயங்கொண்டார் போன்ற பழந்தமிழ்க் கவிகள், இஸ்லாமியர்களைக் குறிக்க ‘துருக்கர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். துருக்கியில் இருந்து வந்தவர்கள் என்று அர்த்தம் வர, ‘துருக்கியர்’, ‘துருக்கர்’ என்ற சொல் பயன்பட்டது. துருக்கரே ‘துலுக்கர்’ என்றாயிற்று.
தமிழகத்தில் நிறைந்திருக்கும் துலுக்கர்கள்பட்டி, துலுக்கன் குளம், துலுக்கன் குறிச்சி, துலுக்கமுந்தூர் போன்ற ஊர்கள் துருக்கர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவைச் சொல்கிறது. துலுக்கரின் ஆட்சி, ‘துலுக்காணியம்’ என்ற புதுச் சொல்லால் குறிப்பிடப்பட்டது. துலுக்கர் நாடு என்று நிலம் இருந்ததை திருவிளையாடல் புராணம் எடுத்தியம் புகிறது.
இஸ்லாமியத் துருக்கர்களுக்கு ‘சோனகர்’ என்ற பெயரும் வழங்கப் பட்டது. பாலி மொழி பேசும் சொல்லாக, ‘சோனகர்’ என்ற சொல் இருக்கலாம். பொன்னுக்கு ‘சொர்ணம்’ அல்லது ‘சோன’ என்ற பெயர் உண்டு. அரபிகள், பொன்னைக் கொடுத்துப் பொருள் பெற்றுச் சென்றதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம். (‘பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ - என்பது சங்க இலக்கியம்) ராஜராஜனின் பெரிய கோயில் கல்வெட்டில் ‘சோனகன் சாவூர்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. 15-ம் நூற்றாண்டு இலக்கியம் பல்சந்த மாலை, சோனகர், வணிகத்தில் மற்றும் கொடையில் தன்னிகரற்றவர் என்கிறது.
‘வானது நாணக் கொடையால் உலகை வளர்த்தருளும்
சோனகர் வாழும் செழும்பொழில்...’ - எனப் பாராட்டுகிறது, அந்த நூல்.
‘மாமயில் ஏறும் ராவுத்தனே’
’ராவுத்தர்’ என்ற சொல்லும் இஸ்லாமியர்களைக் குறிக்கும் இன்னு மொரு சொல்லாகும். 10-ம் நூற்றாண்டையொட்டிக் குதிரை வணிகம், ஒரு பெரிய சந்தையைத் தமிழகத்தில் உருவாக்கியது. மாணிக்கவாசகர் முன் சிவபெருமான், குதிரை ராவுத்தனாகத் தோன்றினார் என்கிறது திருவிளையாடல் புராணம். அருணகிரி நாதருக்கு முருகன், ராவுத்தனாகக் காட்சி அளிக்கிறான். ‘மாமயில் ஏறும் ராவுத்தனே’ என்கிறார் அருணகிரிநாதர். முதலில் குதிரை வணிகர்களான அரபிகளைக் குறிக்கும் ராவுத்தன் என்ற சொல், பின் வீரர்கள், வீரம் என்று குறிக்கத் தொடங்கியது. குதிரை களைப் பழக்கியவர்கள் ராவுத்தர், போருக்குச் சித்தமாக இருப்பவர்கள் என்ற பொருளும் ‘ராபித்தூ’ என்ற அரபிச் சொல்லுக்கு உண்டு. இஸ்லாமியத் தமிழர்களைக் குறிக்கும் சொல்லாக இப்போது இது விளங்குகிறது. ராஜராஜசோழன் தன் விருதுப் பெயர்களில் ஒன்றாக ‘ராகுத்த மிண்டன்’ என்பதையும் கொண்டான்.
மரைக்காயர் என்ற சொல்லும் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரைக் குறிக்கும். கடலின் ஆழத்தையும், காற்றின் பேச்சையும் முதன் முதலில் அறிந்து கடல் வணிகத்தை மேம்படுத்திய அரபியர்கள், பின் நாட் களில் பரங்கிகளின் கடல் கொள்ளையாலும், வலிமையாலும் உள் நாட்டு வணிகத்தை மேற்கொண்டார்கள்.
தமிழக இஸ்லாமியர் கடலோர வணிகம் மேற்கொண்டவர்கள் வங்காளம், இலங்கை, பர்மா ஆகிய அண்டை நாடுகளுடன் அரிசி, தேக்குமரம், கைத்தறித் துணிகள், ஆடு மாடுகள் ஆகியவற்றை மரக்கலங்களில் கொண்டுச்சென்று வியாபாரம் செய்தார்கள். இவர்கள் தோணி, டிங்கி, சாம்பான் என்ற வகையான மரக்கலங்களைப் பயன்படுத்தித் தொழில் செய்தார்கள். மரக்கல ராயர்கள் என்ற சொல்லே மரைக்காயர் என்றாயிற்று. ‘லெப்பைகள்’ என்போர் மார்க்கப் பணியில் இருப்பவர்கள்.
கமால், ஒரு மிக நீண்ட வரலாற்றை மிக அழகாக தந்துள்ளார். இஸ்லாம் தோன்றிய 7-ம் நூற்றாண்டு தொடங்கி 20-ம் நூற்றாண்டு வரைக்கும் கொண்டுச் சென்றிருக்கிறார். கடல் வணிகர்கள், இஸ்லாமியராக ஆவதற்கு முன்பும், பின் அவர்களோடு கலந்து, தமிழ்மயப்பட்டுத் தமிழர்களான வரலாறு அவர் பேசும் பொருளாகி இருக்கிறது. இறைநேசர்கள் வரலாறு இந்த நூலில் மிக முக்கியப் பகுதியாகும்.
ஒரு அழகிய செய்தி
பாண்டியன் சடையவர்மன் காலத்தில், ஒரு இந்துக் கோயிலுக்குத் திருப்பணி செய்த இஸ்லாமியர் செய்தி அது. இந்துக்களின் சகல சாதியரும், அவர்களோடு இஸலாமியரும் சேர்ந்து அந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளார்கள். இந்துக்களின் இறைப் பணிகளில் இஸ்லாமியரின் கை இருந்துள்ளது. மதுரை வெற்றிலைக் குன்று இந்து ஆலயத்தைப் பராமரித்தவர் எலவை ராவுத்தர். காஞ்சி மடத்துக்குப் பேரரசன் பகதூர்ஷா 115 வராகன் தானம் வழங்கியிருக்கிறார்.
இறைநேசன் புனிதர் நாகூர் சாகுல்ஹமீது ஆண்டகையார் ஒரு சமயம் சேதுக்கு பக்கத்தில் தங்கி இருந்தார். அப்போது ராமேசுவரம் போகிற தஞ்சாவூர்ப் பிராமணப் பெண்கள் ஏழு பேரைக் கள்வர்கள் சுற்றிக் கொண்டார்கள். பெண்கள் உதவிக் கோரிக் கதறினார்கள். ஆண்டகை, கள்வர்களை கண்டு பேசி நல்உபதேசம் செய்தார். பெண்களைக் காக்க முயற்சித்தார். அந்தப் போரில் ஆண்டகை கொல்லப் படுகிறார். அவர் அடக்கத் தலமே, புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள காட்டுபாவா சாகிபு பள்ளிவாசல் .
செஞ்சி மன்னன் தேசிங்குராஜனுக்காக, மண மேடையில் அமர்ந்திருந்த மகமத்கான், நேரிடையாகப் போர்க்களம் சென்று நண்பனுக்காகப் போரிட்டு, அந்தப் போரில் உயிரை இழந்து தியாகியானார். இருவரையும் இணைத்தது மனிதம். 16-ம் நூற்றாண்டு தொடங்கி, இல்லாமல் போன தமிழ் இலக்கிய முயற்சிகளுக்கு மறு உயிர் கொடுத்தவர்கள் இஸ்லாமியப் புலவர்களே . சீறாப் புராணம் தொடங்கி மாலை, மசலா என்று எண்ணற்ற இலக்கியங்கள் இஸ்லாமியர்களால் இயற்றப்பட்டுள்ளன.
சகிப்புத்தன்மை குறைந்து வரும் காலம் நமது. அடுத்த மனிதனை, அடுத்த மதத்தை, அடுத்த தத்துவத்தைப் பகைத்துப் புறக்கணிக்கும் ஒற்றை மனதை விலக்கி, பன்மைத்துவத்தைப் போற்றித் துலங்கச் செய்யும் எழுத்தே இன்றைய தேவை. எஸ்.எம்.கமாலின் ‘தமிழகத்தில் முஸ்லிம்கள்’ எனும் இந்த நூல், அந்த வகையில் மிக முக்கியமான வரலாறு!
(நன்றி: தி இந்து)