உங்களுக்கு உண்மையிலேயே இஸ்லாமியர்கள்மீது அக்கறையும் அன்பும் இருந்தால் சில விஷயங்களை நீங்கள் தவிர்க்கவேண்டும். சிறுபான்மையினர் என்பதால் மட்டுமே இஸ்லாமியர்களின் அனைத்து தவறுகளையும் அனைத்து பிற்போக்குத்தனங்களையும் நீங்கள் இனி ஆதரிக்கத் தேவையில்லை. அவர்களைக் கண்டு பரிதாபப்படத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களாகவும், ஆபத்தில் இருப்பவர்களாகவும், பலியாடுகளாகவும் அவர்களை எப்போதும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் அதனை இனியும் விரும்பப்போவதில்லை.
பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்.
தனது India's Muslim Spring : Why is Nobody Talking about it? புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. 'மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.' ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் 'வாட் நான்சென்ஸ்?' என்று சொல்லி சிரிக்கிறார்.
முல்லாக்களின் பிடியில் சிக்கியிருக்க அவர்களுக்கு விருப்பமில்லை. ஃபத்வாக்களில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. நீ முதலில் இந்தியனா அல்லது முஸ்லிமா என்னும் கேள்வி அவர்களைக் குழப்புகிறது. ஓர் இளைஞன் தெளிவாகவே சொல்கிறான். 'எனது நாடு இந்தியா. எனது மதம் இஸ்லாம்.'
பலரும் நினைப்பது போல் அரேபியாவையோ பாகிஸ்தானையோ அவர்கள் தங்கள் தாய்நாடாக நினைத்துக்கொள்வதில்லை. இந்தியாவை அவர்கள் ஓர் அந்நிய நாடாகக் கருதவில்லை. ஆம், இந்துக்கள் இங்கே பெரும்பான்மையினர், அதனாலென்ன என்கிறார்கள். இது எங்கள் நாடும்கூட என்கின்றனர். பலரும் நினைப்பதைப் போல் அல்லாமல் பாகிஸ்தானை அவர்கள் ஒரு தோல்வியடைந்த புராஜெக்டாக நினைக்கிறார்கள். எந்தவோர் இஸ்லாமிய நாட்டில் வாழ்வதைக் காட்டிலும் இந்தியாவில் வாழ்வதையே அவர்கள் விரும்புகின்றனர்.
முஸ்லிம்களில் நாத்திகர்கள் இருக்கிறார்கள். மிதவாதிகள் இருக்கிறார்கள். தீவிர நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என் நம்பிக்கை எனக்கு, உனது நம்பிக்கை உனக்கு என்று நாசூக்காக ஒதுங்கிச்செல்பவர்கள் இருக்கிறார்கள். ஷரியத் சட்டத்தை மட்டுமே மதிப்பவர்கள் இருக்கிறார்கள். காமன் சிவில் கோட் வரவேண்டும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். மதகுருக்களின் பிடியில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் இருவரும் இருக்கிறார்கள். இதுநாள்வரை நாம் மதத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறோம், இனியும் அதையே தொடர்வதில் பொருளில்லை என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இந்து பெரும்பான்மையினர் நமக்கு ஓர் அச்சுறுத்தல் என்று குரல் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
அதே சமயம், இஸ்லாமியர்களின் வாழ்க்கை அப்படியே அடியோடு மாறிவிட்டது என்றும் சொல்வதற்கில்லை. ஹசன் சுரூர் சந்தித்ததைப் போன்ற டாப்ஸ் அணிந்த பெண்களுக்கு மத்தியில் இன்னமும் புர்காவைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். ஷா பானுவின் வழக்கைக் கையில் எடுத்துக்கொண்டு தேவையில்லாமல் குழப்பங்கள் ஏற்படுத்திய முல்லாக்களை இன்றைய இளம்பெண்கள் கூர்மையாக விமரிசிக்கிறார்கள். இந்த வழக்கு எங்களை பல ஆண்டுகள் பின்னுக்கு இழுத்துச் சென்றுவிட்டன என்கிறார்கள். மற்றொரு பக்கம், ஷரியத்தைவிட்டால் வேறு நாதியில்லை என்று சொல்பவர்களும் நீடிக்கிறார்கள்.
இன்னமும் முஸ்லிம்களுக்குச் சுலபத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. ஒரே வேலைக்கு சம தகுதி கொண்ட ஓர் இந்துவும் முஸ்லிமும் விண்ணப்பித்தால் காரணங்கள் எதுவுமின்றி அந்த முஸ்லிமின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. தாடி வைத்தவர்கள் இன்னமும் சந்தேகத்துடன்தான் பார்க்கப்படுகிறார்கள். முன்னெச்சரிக்கையுடன் தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். சிறையில் உள்ளவர்களில் முஸ்லிம்கள் அதிகம்.
இன்னமும் ஏழைமை அவர்களை வாட்டி வதைக்கிறது. சேரிகளிலும் நடைபாதைகளிலும் வசிப்பவர்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையே அதிகம். பிற்போக்குத்தனத்தையும் மூடநம்பிக்கைகளையும் இன்னமும் அவர்கள் விட்டொழிக்கவில்லை.
ஆனால் இந்த நிலைமையை மாற்றமுடியும் என்று இன்றைய முஸ்லிம் சமூகம் நம்புகிறது என்கிறார் ஹசன் சரூர். இந்தப் பிரச்னைகளைக் கடந்து செல்லும் துணிச்சல் இன்றைய இஸ்லாமியப் பெண்களிடம் உள்ளது என்கிறார் அவர். அனைத்து குறைபாடுகளையும் போதாமைகளையும் மீறி அவர்களிடையே சத்தமில்லாமல் ஒரு பெரும் மாறுதல் -- ஏன், ஒரு பெரும் எழுச்சியே -- ஏற்பட்டுள்ளது என்கிறார் இவர். இந்தப் புதிய தலைமுறை முஸ்லிம்கள் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவே அவர்களை நான் நம்புகிறேன் என்கிறார்.
ஹசன் சரூர் ஒரு மூத்த பத்திரிகையாளர். வகுப்புவாதம் குறித்தும் இஸ்லாமியச் சமூகம் குறித்தும் எழுதி வருபவர். தி இந்துவுக்காக லண்டனில் இருந்தபடி அங்குள்ள அரசியல், சமூக நிகழ்வுகளை தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த சுரூர், தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கினார்.
இது ஓர் ஆய்வு நூல் அல்ல. அடிக்குறிப்புகள், அட்டவணைகள் எதுவும் இல்லை. அதனாலேயே கைக்குட்டையைக் காட்டிலும் எடை குறைவானதாக உள்ளது.முழுக்க முழுக்க அவருடைய பார்வையில் subjective ஆக புத்தகம் விரிவடைவதால் இதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு தீர்மானமான முடிவுக்கும் வந்துவிடமுடியாதுதான். அதே சமயம், இஸ்லாமிய சமூகத்தினரின், குறிப்பாக புதிய தலைமையினரின் இன்றைய சிந்தனை போக்கு எப்படியுள்ளது என்பதை உணர இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
இவர் காட்டும் சித்திரம் உண்மையென்றால், நம் கண்முன்னே ஓர் அசாதாரணமான பெரு மாற்றம் இஸ்லாமியர்களிடம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை நாம் அங்கீகரிக்கவும் மனம் திறந்து பாராட்டவும் முன்வரவேண்டும்.
ஹசன் சுரூரின் இந்தப் புத்தகத்தைக் கீழ்வருபவர்கள் ஏற்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் : முஸ்லிம்கள் விழிப்புணர்வு பெறுவதும் அடுத்தடுத்த கட்டங்களுக்குத் தாவிச்செல்வதும் இவர்களை நேரடியாகப் பாதிக்கும். காரணம் இவர்களுடைய அதிகார பீடம் முஸ்லிம்களின் பிற்போக்குத்தனத்தின்மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அறிவு பலம் பெறுவது இவர்களைப் பலவீனப்படுத்தும்.
இந்து அடிப்படைவாதிகள் : மேற்கூறிய அதே காரணங்கள்.
இந்தப் புத்தகத்தில் இருந்து சில பகுதிகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்திய முஸ்லிம்கள் குறித்து பொதுவாக நிலவிவரும் சில தவறான கருத்தாக்கங்களை எடுத்துக்கொண்டு தனது புத்தகத்தில் ஆராய்கிறார் ஹசன் சுரூர்.
முஸ்லிம்களுக்கு நாடு அல்ல, மதமே பிரதான அடையாளம் என்று சொல்லப்படுவது உண்மையல்ல. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மதம் அவர்களை ஒரு குழுவாக ஒன்றிணைக்கிறது என்னும் பார்வையும் தவறு. தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் வட இந்தியாவில் உள்ள முஸ்லிம்களோடு எந்தவித தொடர்பையும் உறவையும் வைத்துக்கொள்ளவில்லை. மாறாக, தென்னிந்திய இந்துக்களுடன்தான் அவர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள்.
ஆக இந்திய முஸ்லிம்கள் என்றொரு குழுவேகூட இல்லை என்று ஆகிவிடுகிறது. வர்க்கம், கல்வி, தொழில் என்று முஸ்லிம்களுக்கு இடையிலும்கூட பல பிரிவுகள் உள்ளன. தென் இந்தியா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் வட இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களைவிட லிபரலாகவும், கற்றவர்களாகவும் இருக்கின்றனர் என்கிறார் சுரூர்.
இவை போக, ஷியா, சுன்னி என்னும் இரு பெரும் பிரிவுகள் இஸ்லாத்தில் உள்ளன. இருவருமே முஸ்லிம்கள்தான் என்றாலும் வழிபாட்டு முறை, சடங்குகள் என்று பல வேறுபாடுகள் இவர்களுக்கிடையில் உள்ளன. ஒப்பீட்டளவில் ஷியாக்கள் லிபரல்களாகவும் கற்றவர்களாகவும் நல்ல சமூகநிலையிலும் உள்ளனர். இந்த இரு பெரும் பிரிவுகளுக்குள் பல உட்பிரிவுகள் உள்ளன.
மதம், கலாசாரம், நம்பிக்கை, சமூக நிலை என்று இப்படிப் பல வேறுபாடுகள் இருக்கும்பொழுது முஸ்லிம் என்று மொத்தமாக அவர்களைப் பொட்டலம் கட்டி ஒன்றைத் தன்மை கொண்டவர்களாக முஸ்லிம்களை முன்னிறுத்துவது பெரும் தவறு என்கிறார் சுரூர். சிலருடைய தவறுகளை, சிலருடைய குறைகளை "முஸ்லிம்களின்" தவறுகளாக, "முஸ்லிம்களின்" குறைகளாகப் பொதுப்படுத்தி காட்டும் பிழையான அணுகுமுறைக்கே இப்படிப்பட்ட பார்வைகள் இட்டுச்செல்லும்.
பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களிடமோ வங்கதேசத்தில் உள்ள முஸ்லிம்களிடமோ அல்லது இந்தோனேஷியாவில் உள்ள முஸ்லிம்களிடமோ இந்திய முஸ்லிம்கள் உணர்வுபூர்வமான உறவுகள் வைத்துக்கொண்டிருக்கவில்லை. ஒரே பொட்டலமாக அவர்களைச் சித்தரிக்க முயற்சி செய்பவர்கள் மூவர். 1) முஸ்லிம்களைத் தன் பிடிக்குள் வைத்திருக்க விரும்பும் முல்லாக்கள். 2) முஸ்லிம்கள் பற்றிய பொதுவான (அதிலும் தவறான) ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் அடையத் துடிக்கும் இந்து அடிப்படைவாதிகள். 3) ஒரே பிரிவாக, ஒரே வாக்கு வங்கியாக முஸ்லிம்களைக் கருதும் அரசியல்வாதிகள்.
முஸ்லிம்களை இந்தியர்களாக ஏற்கும் மனநிலை இன்னமும்கூட பலரிடம் இல்லை. குறிப்பாக இந்து அடிப்படைவாதிகளுக்கு. உனக்கு இங்கே வசிக்கச் சிரமமாக இருந்தால் உன்னுடைய அரேபியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ தாராளமாகச் சென்றுவிடலாமே என்று பலர் வெளிப்படையாகச் சொல்வதை இன்றும் பார்க்கிறோம்.
பாபரின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் முஸ்லிம்கள் குடியேறத் தொடங்கினார்கள் என்று சிலர் நினைக்கின்றனர். இந்தியாவுடனான முஸ்லிம்களின் உறவு கிபி 7ம் நூற்றாண்டு முதலே நீடிக்கிறது. முதலில் இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்கள் படை வீரர்கள் அல்லர். இந்தியாவை ஆக்கிரமிப்பதற்காக அவர்கள் வரவில்லை. தங்கள் மதத்தைக் கத்தி முனையிலோ அல்லது அமைதி வழியிலோ பரப்புவதற்காகவும் அவர்கள் வரவில்லை. வர்த்தகமே அவர்கள் நோக்கம். 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களின் (ஹென்ரி எலியட், ஜான் டாசன்) கூற்றுப்படி கிபி 630 வாக்கில் முதல்முறையாக முஸ்லிம்களை ஏற்றிவந்த கப்பல்கள் இந்தியக் கடற்பகுதியில் காணப்பட்டன.
பாபர் அல்லது பிற முகலாய மன்னர்களோடு தொடர்புபடுத்தி முஸ்லிம்களை ஆக்கிரமிப்பாளர்களாகச் சித்தரிக்கும் போக்கு வரலாற்றுக்கு முரணானது; தெளிவான உள்நோக்கங்கள் கொண்டது.
மனத்தளவில் ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் பாகிஸ்தானைத் தனது தாய் நாடாகக் கருதுவதாகப் பலர் நினைக்கின்றனர். அவ்வாறு சில முஸ்லிம்கள் முன்பு கருதியது உண்மைதான் என்கிறார் ஹசன் சுரூர். பிரிவினைக்குப் பிறகு வசதி படைத்த முஸ்லிம்கள் இந்தியாவைவிட்டு வெளியேறி பாகிஸ்தானில் குடியேறினர். புதிய தேசம் அங்கு கட்டமைக்கப்படவிருந்த நிலையில் பல்வேறு தொழில் பின்னணி கொண்டவர்களுக்கான தேவை அங்கிருந்தது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.
பாகிஸ்தான் செல்லும் ஆசையிருந்தும் பணம் இல்லாததால் செல்லமுடியாத பலரும் இருக்கவே செய்தனர். இந்தியாவில் இருந்து சென்று குடியேறி பிறகு கனவு கலைந்து உண்மை புரிந்து மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிய முஸ்லிம்களின் எண்ணிக்கையும் கணிசமானதுதான். இந்தத் தலைமுறையினர் யாரும் இப்போது இல்லை.
பல இந்திய முஸ்லிம்களுக்கு ஹசன் சுரூரைப் போலவே பாகிஸ்தானில் உறவினர் இருந்தனர். எனவே அவர்களுக்கு பாகிஸ்தானுடன் உணர்வுபூர்வமான தொடர்பு இருந்தது. தலைமுறை மாற்றத்துக்குப் பிறகு உறவுகள் தொலைந்துபோன நிலையில் பாகிஸ்தானுடனான உறவு முற்றிலும் அவர்களுக்கு அறுபட்டுவிட்டது.
பாகிஸ்தான் என்பதே மேல்தட்டு முஸ்லிம்களின் உருவாக்கம்தான் என்கிறார் ஹசன் சுரூர். அவர்களுடைய அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காகவே அத்தேசம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் இருந்த பிற முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான்மீது இருந்த ஏக்கம் வெகு விரைவில் மறைந்துவிட்டது. ஹசன் சரூர் சந்தித்த முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் என்பது தோற்றுப்போன ஒரு நாடு. எனவே பாகிஸ்தானோடு இந்திய முஸலிம்களைத் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது என்கிறார் ஹசன் சுரூர்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு அதிகம் பலியானவர்கள் இஸ்லாமியர்கள். ஷா பானு விவகாரம் ஒரு நல்ல உதாரணம். ஐந்து குழந்தைகளுக்குத் தாயான 62 வயதான ஷா பானு அவருடைய கணவரால் விவாகரத்து செய்யப்படுகிறார். கணவர் ஒரு வழக்கறிஞர். ஏற்கெனவே இன்னொரு திருமணமும் செய்துகொண்டவர். பராமரிப்பு பணம் கொடுக்கமுடியாது என்று அவர் மறுத்துவிட்டதால் நாதியற்ற ஷா பானு வழக்கு தொடுத்தார். நீண்டு நீண்டு சென்ற அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று இறுதியில் ஷா பானுவுக்கு ஆதரவான தீர்ப்புடன் முடிவடைந்தது. ஏப்ரல் 1985ம் ஆண்டு வெளிவந்த அந்தத் தீர்ப்பு, விவாகரத்து பெற்ற அனைத்து பெண்களும் ஜீவனாம்சம் பெறமுடியும் என்பதையும் இஸ்லாமியப் பெண்களுக்கும் இது பொருந்தும் என்பதையும் சுட்டிக்காட்டியது.
ஷா பானுவுக்கும் அவரைப் போல் பாதிக்கப்பட்ட பிற இஸ்லாமியப் பெண்களுக்கும் இந்தத் தீர்ப்பு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. ஆனால் அடிப்படைவாதிகளின் அரசியல் விளையாட்டு இந்த வெற்றியைத் தடுத்து நிறுத்தியது. ஷா பானுவுக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை ஏற்கமுடியாது என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினார்கள். காமன் சிவில் சட்டத்தை இஸ்லாமியர்கள்மீது செலுத்தும் முயற்சியே இந்தத் தீர்ப்பு என்றும் இஸ்லாமியர்களை வழிநடத்த இஸ்லாமியச் சட்டங்களே போதுமானது என்றும் அவர்கள் வாதிட்டனர். இந்த வாதத்தைத் தெருவுக்குக் கொண்டு வந்து அவர்கள் போராடியபோது பல இஸ்லாமியர்களின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. புதிய சட்டத்தைக் கொண்டுவந்து இந்தத் தீர்ப்பை மாற்றவேண்டும் என்னும் கோரிக்கை வலு பெறத் தொடங்கியது.
ஆட்சியில் இருந்த ராஜிவ் காந்தி இந்தக் குரலுக்கு அடிபணிந்தார். முஸ்லிம்களின் வாக்குகளை இழக்கவேண்டிவரும் என்று அஞ்சிய அவர், சிறப்புச் சட்டத் திருத்தம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். மற்றொரு பக்கம், ஷா பானுவுக்கும் அடிப்படைவாதிகள் அழுத்தம் கொடுத்தனர். தீர்ப்பையும் ஜீவனாம்சத்தையும் அவர் ஏற்றுக்கொண்டால் அது இஸ்லாமிய சமூகத்தைப் பாதிக்கும் என்றும் மிரட்டினர். பணம், மகனுக்குப் பதவி என்று ஆசையும் காட்டினர். ராஜிவ் காந்தியே அடிபணிந்தபோது ஷா பானுவால் தப்ப முடியுமா என்ன? பத்திரிகையாளர்களைக் கூட்டி நீதிமன்றத் தீர்ப்பைவிட ஷரியத் சட்டமே முக்கியம் என்று பேட்டியளித்தார்.
முஸ்லிம் அடிப்படைவாதிகளின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. 1992ல் ஷா பானு இறந்துபோனார். அதே ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. காங்கிரஸ் இங்கும் அதே தவறைத்தான் செய்தது என்கிறார் ஹசன் சுரூர். இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் திருப்திபடுத்துவதற்காக ஷா பானுவைப் பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ் இந்து அடிப்படைவாதிகளைத் திருப்திப்படுத்த பாபர் மசூதி இடிப்புக்கு இடம் கொடுத்தது. 1949 தொடங்கி பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதி வளாகம் முதல் முறையாக இந்துக்களின் வழிபாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டது. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆயிரக்கணக்கான காவி இந்துக்களை இறக்கிவிட்டது. ராமர் கோயில் கோரிக்கையுடன் செப்டெம்பர் 1990ல் அத்வானி தலைமையில் ரத யாத்திரை தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் மசூதி இடிக்கப்பட்டது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் போலவே இந்து அடிப்படைவாதிகளும் மகிழ்ச்சியடைந்தனர். இரு தரப்பு அடிப்படைவாதிகளைத் திருப்திபடுத்தும் பணியை காங்கிரஸ் இனிதே செய்துமுடித்தது. தவிர்க்கவியலாதபடி சில நல்ல காரியங்களும் இதனால் அரங்கேறின.
காங்கிரஸின் ஆதிக்கம் குறைந்தது. இன்றுவரை அக்கட்சியால் அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாமல் போனது.
காங்கிரஸின் பலம் குறையக் குறைய இஸ்லாமியர்களின் விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியது. இன்னொரு ஷா பானு நடக்கக்கூடாது என்று அவர்கள் உறுதி பூண்டனர்.
மசூதியைக் காப்பதைவிடவும் மேலான காரியங்கள் செய்யப்படவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
இரு தேசக் கொள்கையை முன்வைத்து ஒரு சித்தாந்த வடிவமைப்பு முன்பு உருவாக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் உருவான பிறகு அதன் இடத்தை வேறு எந்தச் சித்தாந்தமும் இங்குள்ள இந்திய முஸ்லிம்களைப் பற்றிக்கொள்ளவில்லை என்கிறார் ஹசன் சுரூர். அவர்களை வழிநடத்த அறிவார்ந்த தலைமை உருவாகவில்லை. சுதந்தரம், முன்னேற்றம், சமூக நீதி ஆகிய தளங்களில் நின்று போராடவும் குரல் கொடுக்கவும் ஒரு காத்திரமான தலைமை இல்லை. (இன்றுவரை இந்த இடம் கிட்டத்தட்ட நிரப்பப்படாமல்தான் இருக்கிறது). இந்த வெற்றிடத்தை முல்லாக்கள் கைப்பற்றிக்கொண்டதன் விளைவாகவே அடிப்படைவாதம் இஸ்லாமிய சமூகத்தில் உருவானது.
இந்துத்துவ அடிப்படைவாதத்தைத் தாவிச்சென்று ஏற்றுக்கொண்ட சில இந்துக்களைப் போல் சில முஸ்லிம்களும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தழுவிக்கொண்டனர் என்கிறார் ஹசன் சுரூர். தாங்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்ல இது உதவும் என்று அவர்கள் நம்பினர். 1982ல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்த இர்ஃபான் ஹபீப் இத்தகைய எதிர்ப்புகளுக்கு ஆளானார். தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி என்னும் ஹபீபின் முடிவை எதிர்த்து முஸ்லிம்கள் அனைவரையும் இணைத்துக்கொள்ளும்படி சில அடிப்படைவாத முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த இர்ஃபான் ஹபீப் தாக்கப்பட்டார்.
இத்தகைய அடிப்படைவாதப் போக்கை அரசு நினைத்தால் மாற்றலாம் என்கிறார் சுரூர். அதற்கு உதாரணமாக அவர் குறிப்பிடுவது வி.பி. சிங் அரசின் முயற்சிகளை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று பொதுத்துறை நிறுவனங்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இது அடிப்படைவாத மனோபாவத்தில் இருந்தும் ஏழைமையில் இருந்தும் பல முஸ்லிம்களை மீட்டெடுத்தது.
ஒரு பக்கம் அடிப்படைவாத முல்லாக்கள். இன்னொரு பக்கம் நாத்திக இடதுசாரிகள். இந்த இருவருக்கும் இடையில்தான் பெரும்பாலான முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஹசன் சுரூர். முல்லாக்கள் இஸ்லாமியர்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்கள். இடதுசாரிகளால் பெரும்பான்மை முஸ்லிம்களுடன் உரையாட முடியவில்லை என்பதால் அந்நியப்பட்டு போகிறார்கள். ஒரு லிபரல் முஸ்லிம் நாத்திகவாதியாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை என்கிறார் ஹசன் சுரூர். (இவர் ஒரு நாத்திகவாதி).
இன்றைய முஸ்லிம்கள் பலர் லிபரல்களாக இருக்கவே விரும்புவதாக சுரூரிடம் சொல்லியிருக்கின்றனர். மத நம்பிக்கைகளைத் தனிப்பட்ட விருப்பங்களாக மட்டுமே கொண்டிருக்கவும் அவர்கள் விரும்புகின்றனர். தங்கள் பெற்றோரும் அவர்களுடைய பெற்றோரும் சந்தித்த அடையாளச் சிக்கல்களை அவர்கள் இன்று கொண்டிருக்கவில்லை. பாகிஸ்தான் என்பது அவர்களில் பலருக்கு மற்றொரு நாடு மட்டுமே. பிரிவினை என்பது இந்திய வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமே. இந்நிகழ்வுகளுடன் அவர்களுக்கு எந்தவித உணர்வுபூர்வமான பிணைப்பும் இல்லை. எங்களுக்குத் தனிக்கவனம் வேண்டாம், சிறப்பு சலுகைகள் வேண்டாம் என்கின்றனர் இவர்கள். இவர்களை நெருங்குவது இன்றைய முல்லாக்களுக்குக் கடினமானதாக இருக்கிறது.
இதில் இன்னொரு முரண்பாடும் இருக்கிறது என்கிறார் ஹசன் சுரூர். பழைய கதைகள் எதுவும் தெரியாததால் இவர்கள் தயக்கமின்றி தங்கள் மத அடையாளங்களை வெளிப்படுத்துகிறார்கள். மசூதிகளுக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. புர்கா இன்னமும் இருக்கிறது. குறிப்பிட்ட நேரங்களில் நமாஸ் செய்கிறார்கள். தாடி வளர்க்கிறார்கள். ஆனால் இந்த அடையாளங்களை அவர்கள் மத அடிப்படைவாத நோக்கில் அல்லாமல் சுதந்தரமாக வெளிப்படுத்துகிறார்கள்.
முஸ்லிம்களைப் பழமைவாதிகளாகவும் கடந்த காலங்களில் மட்டுமே வலுவாகக் காலூன்றி நிற்பவர்களாகவும் பலர் சித்திரிக்கிறார்கள். புதிய கண்ணோட்டங்களை அவர்களால் ஏற்கமுடியாது, ஒரு லிபரலாக என்றுமே அவர்களால் மாறமுடியாது என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால் இன்றைய முஸ்லிம்கள் பலர் இந்த நம்பிக்கைகளை உடைத்தெறிய ஆர்வமாக இருக்கிறார்கள்.
உங்களுக்கு என்ன தேவை என்று முஸ்லிம்களிடம் கேட்டால், நாங்கள் இயல்பாக இருக்க விரும்புகிறோம் என்பதே அவர்களுடைய பதிலாக இருக்கும் என்கிறார் ஹசன் சுரூர். நீ ஒரு முஸ்லிம், நீ ஒரு முஸ்லிம் என்று ஓயாமல் அவர்களுக்கு யாரேனும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் என்பதாலேயே அவரைப் பற்றிய ஒரு முன்முடிவை யாரேனும் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். கலவரம் எங்கேனும் நடந்ததாகக் கேள்விப்பட்டால் உடனே நான் என் வீட்டுக்கு ஓடிவந்துவிடுவேன் என்கிறார் ஹசன் சுரூர் சந்தித்த ஒரு முஸ்லிம். இல்லாவிட்டால், சந்தேகப்பட்டு என்னையும் பிடித்துச்சென்றுவிடுவார்கள் என்பதே அவருடைய அச்சம்.
'நான் இந்துக்களை விமரிசித்தால் முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். முஸ்லிம்களின் குறைகளைச் சுட்டிக்காடடினால் இந்துக்கள் மகிழ்கிறார்கள். ஆனால் அவர்கள்மீதே விமரிசனம் திரும்பும்போது இருவருமே என்னைக் கண்டு சீறுகிறார்கள்' என்கிறார் ஹசன் சுரூர். நான் இந்துக்களிடம் விலை போய்விட்டதாக முஸ்லிம்கள் சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் உன் முஸ்லிம் புத்தியைக் காட்டிவிட்டாய் என்கிறார்கள் இந்துக்கள்.
பிரிவினைக்குப் பிறகான இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான விரோதம் மறையவில்லை. இடதுசாரிகளைத் தவிர பிற கட்சிகள் அனைத்துமே இந்து முஸ்லிம் இடைவெளியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதிலேயே குறியாக இருக்கின்றன என்கிறார் சுரூர். பெரும்பான்மை இந்துக்கள் பற்றிய முஸ்லிம்களின் அச்சங்களை ஊதிப் பெரிதாக்கி ஆதாயம் தேடிக்கொள்கிறது காங்கிரஸ். பாஜக, சிவ சேனா போன்ற வலதுசாரி கட்சிகள் முஸ்லிம்களை ஓர் அச்சுறுத்தலாக மட்டுமே காட்டி இந்து வாக்குகளைக் கவர முயற்சி செய்கின்றன.
முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் அவர்களேதான் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். அதில் அவர்களுடைய பங்கும் இருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் 170 மில்லியன் முஸ்லிம் குடிமக்கள் பின்தங்கியிருக்கும்போது அவர்களைப் புறக்கணித்துவிட்டு இந்தியாவை மட்டும் முன்னேற்றப் பாதையில் இழுத்துச் சென்றுவிடலாம் என்று நினைப்பது பிழையானது என்கிறார் ஹசன் சுரூர். முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு என்ன செய்யவேண்டும் என்று சச்சார் கமிட்டி தெளிவான பரிந்துரைகளை அளித்தபிறகும் அவை செயல்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதற்கு இஸ்லாத்தில் உள்ள பிற்பாக்குத்தனங்கள், பெண்கள் பற்றிய அவர்களுடைய பார்வை, கருத்து சுதந்தரத்துக்கு உள்ள தடை ஆகியவையும் காரணம். இவற்றை பயன்படுத்தியே முல்லாக்கள் தங்கள் அதிகாரத்தைக் கட்டமைத்துக்கொள்கிறார்கள். இவர்களுடைய பிடியில் சிக்கிக்கொள்வதை முஸ்லிம்கள் தவிர்க்கவேண்டும் என்கிறார் சுரூர். இன்றைய தலைமுறையினர் பலர் முல்லாக்களின் அதிகாரத்தைத் துணிச்சலாகக் கேள்விக்கு உட்படுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் இன்றைய முஸ்லிம்களில் பலர் மாற்றத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள் என்று உறுதிபடுத்துகிறார் ஹசன் சுரூர். அதற்கு நான்கு காரணங்களை அவர் முன்வைக்கிறார்.
கருத்துரிமை, பேச்சுரிமை ஆகியவற்றை அவர்கள் மதிக்கிறார்கள். சல்மான் ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்வது அன்று சுலபமாக இருந்தது. அதற்கு அன்றைய முஸ்லிம்கள் பெருமளவில் ஆதரவு அளித்தனர். இன்றும் முஸ்லிம்கள் சாத்தானின் வேதத்தைப் புறக்கணிக்கிறார்கள், ருஷ்டிமீதான அவர்களுடைய கோபமும்கூட குறையவில்லை என்றபோதும் ருஷ்டியின் தலையைக் கேட்கும் அளவுக்கு அவர்கள் தீவிரதத்தன்மையுடன் இல்லை. எம்.எஃப். ஹுசேனுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதை அவர்கள் ஏற்கத் தயாராகயில்லை. இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் படத்தை பாகிஸ்தானிய முஸ்லிம்கள் எதிர்த்ததைப் போல் இந்திய முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. பெரும்பாலான இந்திய முஸ்லிம்களை அதைப் பொருட்படுத்தக்கூட இல்லை. சில அமைப்புகளே அடையாள எதிர்ப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன.
தமக்கு என்ன தேவை என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. மதமே பிரதான தேவை, மத நம்பிக்கைகளைக் காப்பதே பிரதான பணி என்று அவர்கள் இனியும் கருதுவதில்லை. முஸ்லிம்கள் பலருக்கு கல்வியில்லை, வேலையில்லை, அரசியல் களத்தில் பிரதிநிதித்துவம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இவையே முதன்மையான தேவைகள் என்றும் அவற்றை அடைவதே உடனடியான நோக்கம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
பெண்கள் பற்றிய பார்வை. இன்னொரு ஷா பானு நம் சமூகத்தில் தோன்றக்கூடாது என்பதில் இன்றைய முஸ்லிம்கள் தெளிவுடன் இருக்கிறார்கள். முஸ்லிம் பெண்களிடையிலும் அவர்களுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இருக்கிறது. புர்காவை அவர்கள்மீது திணிப்பது இன்று கடினம். அவ்வாறு திணிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது. நான் ஒரு முஸ்லிம், இது என் அடையாளம் என்று அறிவித்து புர்காவைத் தேர்ந்தெடுக்கிறார்கள் சிலர். தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அவர்கள் இன்று அஞ்சுவதில்லை. ஆடைகள் தொடங்கி வேலை வாய்ப்பு, திருமணம் என்று பலவற்றை அவர்கள் சுதந்தரமாகத் தேர்வு செய்கிறார்கள்.
பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் திறன். நமது எதிர்காலம் எப்படி அமையவேண்டும் என்பது பற்றிய பார்வை அவர்களிடம் இருக்கிறது. கடந்த காலத் தவறுகளுக்கு அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.