உணர்வின் சொல் வடிவம்தான் கவிதை என்றால், அந்த உணர்வில் கரைவதுவே கவிதை வாசிப்பு. ‘கரைவதும் அனுபவமாவதும் தவிர வேறென்ன இருக்கிறது கவிதையில்’ என்ற லா.ச.ரா வின் வரிகளில் உண்மை இல்லாமல் இல்லை. உணர்வுதான் கவிதை என்றால் பிரவாகித்தல், தணிதல் என்ற இரு பண்புகள் கவிதைக்கு எப்போதும் உள்ளன. மேற்கின் மரபு அதைக் கிளாசிஸம் என்றும் ரொமாண்டிசம் என்றும் பகுக்கிறது. நம் மரபிலும் இந்த இரண்டு பண்புகளும் இருக்கின்றன. சங்க இலக்கியங்கள் கட்டுப்படுத்தப்பட்ட உணர்வுகளால் ஆன செவ்வியல் என்றால் பக்தி இலக்கியம் கட்டுக்கடங்காத உணர்வெழுச்சிகளின் பிரவாகம். எந்த மொழி என்றாலும் இந்த இரண்டு போக்குகளும் மாறிமாறி வருவதும் கூடியும் முயங்கியும் ஒட்டியும் வெட்டியும் வருவதுவே கவிதையியலின் வரலாறாக இருக்கிறது.
தமிழ் கவிதையைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டு மிக முக்கியமான திருப்புமுனை. பாரதி போன்ற நியோ ரொமாண்டிசிஸக் கவி ஒருவரின் தாக்கத்தோடு உருவான நவீன கவிதை, ரொமாண்டிசிஸ வழியை விட்டுவிலகிச் செவ்வியலின் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்ற பாதையில் நுழைந்தது. இதற்கு க.நா.சு ஒரு முக்கியமான காரணம்.
தமிழ் நவீன கவிதையின் தொடக்கம் மேற்கின் நியோ கிளாசிசத்தால் ஆதர்சம் பெற்றது. இன்னும் சொல்லப்போனால் அதைப் போலச் செய்வதாக அதன் பாதிப்பில் உருவானதாக இருந்தது. உண்மையில் இலக்கியத்தில் மட்டும் அல்ல, சென்ற நூற்றாண்டின் தமிழ் வாழ்வு என்பதுவே ஆயிரம் ஆண்டுகால மரபார்ந்த இம்மண்ணின் வாழ்வுடன் திடீரெனக் கத்தரித்துக்கொண்டதாகத்தான் இருந்தது.
குறிப்பாக, இந்திய சுதந்திரத்துக்குப் பிறகான காலத்தைச் சொல்லலாம். தமிழில் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் முழுதும் விடுபடாத நிலையில் முதலாளித்துவத்துக்குள் தமிழ்ச் சமூகம் நுழைந்ததும் நிறைய பண்பாட்டு மாற்றங்களை உருவாக்கின. அப்படி நிகழ்ந்தவற்றுள் தலையாயது இம்மண்ணின் மரபார்ந்த கலை வடிவங்கள், அறிவுமுறைமைகள் அனைத்தும் கைவிடப்பட்டதுதான்.
செந்தமிழ், கொடுந்தமிழ் என செவ்வியல் இலக்கியத்தையும் நாட்டார் இலக்கியத்தையும் வகுத்து வளர்த்த மரபு ஒன்று இங்கிருந்தது. கூத்து போன்ற கலை வடிவங்கள் செவ்வியல் மரபுகளையும் பௌராணிக மரபுகளையும் நாட்டார் மரபுகளையும் இணைக்கும் வேலையையும் செய்தன. அதுமட்டுமல்லாமல் ஒரு மரபின் கலை அறிவை இன்னொரு மரபின் கலை அறிவோடு உரையாடச் செய்யும் வேலையையும் செய்துவந்தன. இன்னொரு பக்கம் நிலப்பிரபுத்துவத்தின் அங்கமாகயிருந்த கோயில் எனும் அமைப்பின் மையப் பொருளாதாரம் சிற்பம், ஓவியம், நடனம், பாடல், காப்பியம், நாடகம் போன்ற செவ்வியல் கலைகளையும் கூத்து போன்ற நாட்டார் கலைகளையும் இணைக்கும் வெளியாகவும் இருந்தன. இப்படியான சூழலில்தான் நம் நவீன காலம் தொடங்கியது.
இது மேற்கின் நவீன காலம் போன்றது அல்ல. மேற்கின் நவீன காலம் அதன் இயல்பான வரலாற்றுப்போக்கிலான சமூக முதிர்ச்சியால் உருவானது. ஆனால், நம் நவீன காலம் சமூக அரசியல் காரணங்களால் மேலிருந்து கீழாகத் திணிக்கப்பட்டது.
ரவிசுப்பிரமணியன் கவிதைகள் எளிமையானவை. நேரடியான அர்த்தங்கள் கொண்டவை. சிக்கலான படிமங்கள், சூட்சுமமான பிரதிகள் அதிகம் இல்லாதவை. இவரின் பல கவிதைகள் மிக நேரடியாகச் சொல்லவந்ததைச் சொல்லிவிடுகின்றன. இவரின் கவிதையில் வரும் விதானம் விதானமாகவே இருக்கிறது. அதற்கு மேலதிகப் படிமத்தன்மை, குறியீட்டுத்தன்மைகளை அவர் வழங்குவதில்லை. இந்தப் பண்பு கவிதைகளுக்கு ஓர் எளிமையையும் தனித்தன்மையையும் கொண்டுவருகிறது.
ரவிசுப்பிரமணியன் கவிதைகளின் பிரதான பண்பு இசைமை. இவரின் பல கவிதைகளில் இசை பற்றிய படிமங்கள், கூற்றுகள், சொல்லாடல்கள் மிக இயல்பாக வெளிப்படுவது ஒரு பக்கம் என்றால், கவிதையின் ஓசை அமைப்பிலும் இசை பிரதான இடம் வகிக்கிறது. பொதுவாக, நவீன கவிதைகள் என்பவை மரபுக் கவிதைகளிலிருந்து வெளியேறியவை என்பதால் அவற்றில் மரபின் சந்த நயம் இருக்காது என்பார்கள். ஆனால், நவீன கவிதைகளிலும் மனதை உறுத்தாத மெல்லிய இசைமை எப்போதும் இருந்து வந்திருப்பதைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் கவனித்திருக்கக்கூடும். ரவிசுப்பிரமணியனின் கவிதைகளிலும் இந்த இசைமை துலக்கமாகப் பல கவிதைகளில் வெளிப்படுகின்றன.
குழலின் துளையில் மறையும் சூரியன்
சாரலிலே அசைந்தாடும் ஜீவஸ்வரங்கள்
ஏறுநிரல் பாதைகளில் ஊதல் காற்று
இறங்கு நிரல் வழியெங்கும் கணுக்கால் வெள்ளம்
மந்திரத்தில் நிற்கையிலே குளிரின் விதிர்ப்பு
குழலின் துளைகளிலே மழைநாளின் சூரியனை
மறைத்தும் விடுத்தும் விளையாடும்
பிரெய்லி விரல்கள்
இவ்வளவு சந்தநயம் மிகுந்த இசைமைக் கவிதைகளை நவீன கவிதைப் பரப்பில் எழுதுபவர்கள் அரிது. ரவி சுப்பிரமணியன் இசையை முறையாகக் கற்றவர் என்பதும் இதற்கு பிரதான காரணமாக இருக்கக்கூடும். மேலே சொன்ன கவிதையைக் கவனியுங்கள். கண் தெரியாத கலைஞன் குழல் ஊதிக்கொண்டிருக்கிறான். இதுதான் லௌகீகம். அவனின் பிரெய்லி விரல்கள் துளையை மறைத்தும் விடுத்தும் விளையாடுவதன் வழியே மழைக்காலத்தின் சூரியன் மறைந்தபடியும் தோன்றியபடியும் இருக்கிறது. ஏறுநிரல் வரும்போது ஊதல் காற்று அதன் சாரலில் ஜீவஸ்வரங்கள் அசைந்தாடுகின்றன. இறங்கு நிரல் வந்தாலோ கணுக்கால் வெள்ளம். இப்படி இசை கேட்கும் அனுபவத்தை மழையில் நனையும் அனுபவமாக மாற்றிப் பார்க்கிறது கவிமனம். இசை என்பது ரவிசுப்பிரமணியத்துக்குப் பொருண்மை வெளியாகவே இருக்கிறது. அந்தப் பொருண்மையான வெளியில் அவருக்கான நிலம் விரிகிறது. அந்த நிலத்தில்தான் அவர் வசித்துக்கொண்டிருக்கிறார். அதிலிருந்து வெளியே வரும் தருணம் அதுதரும் ஆச்சரியம் அல்லது அசௌகரியம் அவருக்குக் கவிதையாகிறது.
தமிழ்ச் சமூகம் கைவிட்டுவிட்ட நம் மரபார்ந்த கலைகளான இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்கள் குறித்தும் அதன் கலைஞர்கள் குறித்தும் பெரும் அக்கறை ரவிசுப்பிரமணியத்துக்கு இருக்கிறது. நம்மால் கைவிடப்பட்ட பெரும் பண்பாட்டின் எச்சமாக நம்முடைய பழங்கோயில்களைப் பார்க்கிறார் கவிஞர். கோயில்கள் என்பவை வழிபடுவதற்கான, புலம்புவதற்கான, கோரிக்கைகளுக்கான இடம் மட்டுமில்லை. ரவிசுப்பிரமணியத்தைப் பொறுத்தவரை கோயில்கள் என்பவை இழந்த பண்பாட்டின் குறியீடு. கருணையற்ற காலத்தால் விழுங்கப்படும் பெருநிலம். மறக்கமுடியாமல் தொண்டைக்குழிக்குள் நின்றுகொண்டிருக்கும் துக்கம்போல, இம்மண்ணில் வீற்றிருக்கும் துயர நினைவு. யாருமற்ற பிராகாரங்கள், வௌவால்கள் வசிக்கும் மண்டபங்கள், நிசப்தமான விதானங்கள் என நிர்க்கதியையும் கைவிடுதலையும் பேசும் புறக்கணிப்பின் வலி நிறைந்த இடங்கள்.
கவிஞரின் பூர்விகமான கும்பகோணம், காவிரிக்கும் அரிசிலாற்றுக்கும் நடுவே இருக்கிறது. இந்த இரண்டில் எது வைத்தரணி எது விரஜை என்று தெரியாது. ஆனால், இந்த இரண்டுக்கும் நடுவேதான் கும்பகோணம் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் நடுவேதான் கோயில்கள் இருக்கின்றன. இந்த இரண்டுக்கும் நடுவேதான் நம் மண்ணின் மரபார்ந்த கலைகள் இருக்கின்றன. நம் கட்டடக் கலையும் சிற்பக் கலையும் நாட்டியமும் ஓவியமும் இசையும் இந்தச் சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் நடுவேதான் இருக்கின்றன. இங்குதான் ரவிசுப்பிரமணியனின் கவிதை உலகமும் இருக்கிறது. இப்படித்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டியதாய் இருக்கிறது. இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் வழியாக ஒலிக்கும் குரலில் அடிநாதமாய் இருந்துகொண்டிருப்பது சொர்க்கத்துக்கும் நரகத்துக்குமான ஸ்திதிபோல சொர்க்கமாகவும் நரகமாகவும் இருக்கும் கோயில் பண்பாடுதான். அந்தப் பண்பாட்டின் செழுமையையும் ஆழத்தையும் உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த ஒரு மனிதனின் எளிய பாடுகள், அக்கறைகள், புலம்பல்கள், தன்னிலை விளக்கங்கள், கோபங்கள் கவிதைகளாகியிருக்கின்றன.
ரவிசுப்பிரமணியனின் கவிதைகளில் திணை மிகச் சிறப்பாக இயங்குகிறது. கோயில் பிராகாரங்கள், மகிழ மரம், மைனாக்கள், காக்கைகள், பூனைகள், கொய்யாப் பூக்கள், தட்டாரப் பூச்சிகள், தாமரைச் செண்டுகள், மழைக்காலம், மாலை நேரம், வெயில் காலம் என கவிதை நிலம் முழுதும் தொழிற்படும் உரிப்பொருட்களும் கருப்பொருட்களும் பெரும்பொழுதுகளும் சிறுபொழுதுகளும் கவிதைகளை மிகவும் தமிழ்த்தன்மை உடையதாக மாற்றுகின்றன. தமிழ் நவீன கவிதைகள் ஐரோப்பியத் தாக்கத்திலிருந்து இன்னமுமே விடுபடாதவை. தொடர்ந்து படையெடுக்கும் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தாக்கத்தால் ஒருவிதத் திருகலான மொழிக்குள்ளும் நிலமற்ற வெளியிலும் உலவிக்கொண்டிருக்கும் கவிதைகளுக்கிடையே ரவிசுப்பிரமணியனின் கவிதைகள் தனித்துத் தெரிகின்றன.
இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதப்படும் கவிதைகளின் பிரதான அம்சம், கவிதைகளில் கதை சொல்வது. ரவி சுப்பிரமணியத்தின் முதல் தொகுப்பில் இருந்தே கதை சொல்லும் கவிதைகள் இருக்கின்றன என்றாலும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் தமிழில் தற்போது எழுதப்படும் சமகாலக் கவிதைகளின் தன்மையோடு இருப்பதைக் குறிப்பிட வேண்டும். உதாரணமாக, ‘நாம் ஏன் அவனை அப்படி ஆக்கினோம்’ என்ற கவிதையைச் சொல்லலாம்.
இந்தக் கவிதையில் நல்ல சிறுகதை உள்ளது. மோர்சிங் கலைஞன் ஒருவன் ஏதோ ஒரு சூழ்நிலையில் கொலை செய்துவிடுகிறான். இந்தக் கவிதை சொல்லப்பட்ட விதம் அதன் சொற்பிரயோகம் போன்றவை பழைய ரவி சுப்பிரமணியத்தின் கதை சொல்லும் கவிதை முறைகளில் இருந்து சற்று விலகியிருப்பதைப் பார்க்கலாம். மொழியைக் கையாள்வதில் தற்போதிய கவிகளிடம் காணப்படும் தாராளமும் மெலிதான பகடியும் விலகலான சித்திரிப்புமுள்ள கவிதை இது. இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் பல கவிதைகள் சிறந்த முறையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஓரிரு கவிதைகள் முழுமையான கவிதையாகாமலேயே போயிருக்கின்றன. ரவிசுப்பிரமணியன் எனும் சமூக மனிதனின் கோபம் பதிவாகியுள்ள கவிதைகளும் இதில் உள்ளன. மிக நல்ல கவிதைகளாக வந்திருக்க வேண்டிய கவிதைகள் அவை. ஒப்பீட்டளவில் இந்தத் தொகுப்பின் பலவீனமான கவிதைகளாக அவையே இருக்கின்றன.
இந்தத் தொகுப்பின் இன்னொரு சிறப்பு இதன் வடிவமைப்பு. இந்தத் தொகுப்பின் முன் அட்டை, உட்புற ஓவியங்களை பாலாஜி ஸ்ரீநிவாசன் வரைந்திருக்கிறார். முன் அட்டை ஓவியம் குறித்து ஓவியரின் குறிப்பு ஒன்று உள்ளது. காவிரியையும் அரசலாற்றையும் இடையில் உறை நிலத்தையும் குறியீடாக்கி, காலத்தைத் தன்னைத் தானே விழுங்கும் யாழியாக்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறார் ஓவியர். உட்புறத்தில் கவிதையின் மனநிலைக்கு ஏற்ப ஆங்காங்கே நம் கூத்து மரபில் உள்ள மனுநீதிச்சோழன் நாடகம், அமுது படையல் நாடகம் முதல் கோணங்கிதாசர் உருவம்வரை பல்வேறு ஓவியங்கள் உள்ளன. முதல் பார்வைக்கு எளிமையையும் யோசிக்கயோசிக்க ஆழங்களையும் கொண்டுள்ள அற்புதமான ஓவியங்கள் இவை. கவிதைத் தொகுப்பின் ஒட்டுமொத்த மனநிலையையும் உட்பிரதியையும் வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்லும் ஓவியங்களாகவும் இவை இருக்கின்றன.
மின்னஞ்சல்: ilango.krishnan@gmail.com
(நன்றி: காலச்சுவடு)