இலக்கியத்தில் உணர்வினைக் கையாளும் விதமும் அப்படைப்பை கலையாக மாற்றுவதில் பேருதவி புரிகின்றன. மென் உணர்வைத் தீண்டி எளிதில் கண்ணீர் உகுக்கச் செய்யும் எழுத்து கலையாகாது. பணத்தேவையின் பொருட்டு விலைமாதானாள், குழந்தையின் கண்களில் அமிலமூற்றி குருடாக்கி பிச்சையெடுக்கச் செய்தான், அவளை வன்புணர்ந்து பின் இரும்பு ராடைச் சொருகினான், காதலியின் கண்களில் தனது அம்மாவின் கண்களைப் பார்த்தான் போன்ற ஒரே ஒரு வாக்கியம் அந்த வேலையைச் செய்துவிடும். தமிழ் சினிமாவின் அநேக திரைப்படங்கள் இதைத் தான் செய்துகொண்டிருக்கின்றன. அதற்கு பார்வையாளர்கள் தொடர்ந்து சோரம் போவது துரதிருஷ்டமானது. அதற்கு சற்றும் சளைக்காமல் இலக்கியமும் தன் பங்கை ஆற்றிக்கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது தேய்வழக்கான உணர்வினைக் கையாள்வதும் சலிப்பூட்டக்கூடியவை.
இச்சுழலுக்குள் சிக்கிய ‘முகம்’ கதை தவிர்த்து பிற அனைத்தும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன.
புதிதாக எழுதத்தொடங்குபவர்களும் சினிமாவிற்குள் நுழைபவர்களும் திருநங்கை, விலைமாது, ஓரினச்சேர்க்கை, பொருந்தாக் காமம் வகையறா கதைகள் புனைவதைக் காண முடியும். இம்மனநிலை ஆய்விற்குட்படுத்தப்படவேண்டியது. இவ்வகையறா கதைகள் பெரும்பாலும் மென் உணர்வைத் தூண்டி அழ வைப்பவை. இத்தொகுப்பின் அநேக கதைகளில் இதே விஷயங்கள் மிக நுட்பமாக கையாளப்பட்டிருக்கின்றன. அவை வாசகனின் பச்சாதாபத்தை மட்டும் எதிர்பாராமல் அவர்களது வாழ்வியலை – மனதினை – கூர்ந்து அணுகியிருப்பதும் சிறப்பாக புனைவாக்கியிருப்பதும் தூயனின் பலம்.
இத்தொகுப்பின் முதல் கதையான ‘இன்னொருவனி’ல், காணாமல் போதல் என்பதையும் கதையின் தலைப்பையும் முடிவையும் கையாண்டிருக்கும் விதம் – ‘ஒற்றைக்கைத் துலையனி’ல் ராசாத்தி அக்காவையும் இருளாத்தியையும் இணைத்திருக்கும் விதம் ஆகியவை தூயனின் எழுத்துகளில் வெளிப்படும் சிறப்பை உணர்ந்துகொள்ள உதவும் தருணங்களுள் சில.
ஊரை, உறவை, மொழியை இழந்து பிழைப்பிற்காக தமிழகத்தை நாடி வந்த ஏழை பீகார் இளைஞனும் அவனுடன் பழகும் தமிழக இளைஞனுக்குமான உறவும் தான் ‘இன்னொருவன்’ கதையின் பிரதான அம்சம். ஹோட்டலில் வேலை பார்க்கும் வட மாநிலத்தவர்களை மூடர்களைப்போல நடத்துவதைப் பார்த்திருப்போம், பாவம் என்பதைத்தாண்டி வேறெந்த பார்வையையும் நாம் அவர்களுக்குத் தந்ததில்லை. அவர்கள் மீதான நமது பொதுபுத்தியை இக்கதை உடைக்கிறது. இந்திய வரைபடத்தை பாரத மாதாவின் உருவத்துடன் தமிழ் இளைஞன் ஒப்பிடுகையில் சிலுவையோடு பொருத்திப்பார்க்கிறான் அமிர்தி. அதே வேளையில் தனது விரல்களை இரயிலாக்கி வரைபடத்தில் சொந்த ஊரை அடையுமிடத்தில் வெளிப்படும் வெகுளித்தனம், அவனது கதையை நண்பனிடம் பகிர்ந்துகொள்கையில் வெளிப்படும் துயரம் என அமிர்தியை நாமும் நெருங்குகிறோம். தமிழ் இளைஞனின் பார்வையில் கதை பயணமாவது இதற்கு முக்கிய காரணம். தமிழ் இளைஞனை விட்டு அமிர்தி விலகிச்செல்கையில் அத்துயரம் நம்மையும் வாட்டுகிறது (வெறும் கழிவிரக்கம் அல்ல).
இக்கதையை வாசிக்கையில் நாஞ்சில் நாடனின் கூர்க்கா குறித்த கதையொன்று நினைவிற்கு வந்தது.
மிகப்பொருத்தமான உவமைகளும் தூயனின் எழுத்திற்கு வலு சேர்க்கின்றன. வட இந்தியனான அமிர்தி, தமிழ் எழுதுகிறபோது ‘அவ்வெழுத்து ஊர்ந்து செல்லும் எறும்புகள் போலிருக்கும்’ என எழுதுகிறார். எல்லோரிடமும் தன்னை புனிதாத்மாவாகக் காட்டிக்கொள்ளும் இருதயசாமி மொட்டைமாடியில் தொழில்காரியுடன் உறவுகொள்வதை எழுதுகையில், ‘அவரின் இயக்கம் ஒரு கொலையை மென்மையாக செய்ய ஆயத்தப்படுவது போன்றிருந்தது’ என்கிறார். வாலில்லாத பெரிய சைஸ் பல்லி போலிலிருந்தது அவனின் குறி – அந்திவேளையில் படுத்தெழுந்தது போலவொரு வெறுமை மனதுக்குள் சூழந்திருந்தது – பேருந்துகள் பன்றியின் முலைப்பால் குடிக்க முண்டும் குட்டிகளாக இடம் கிடைக்காமல் திணறியபடி ஒன்றொடொன்று முட்டிக்கொண்டிருந்தன – மாட்டின் கருத்த மூக்குபோன்ற பழையபாணி உருண்டை சுவிட்ச்கள்.
அட்டைப்படத்திலிருக்கும் ஓவியத்தை சிலுவையில் தொங்கும் இயேசு என்றிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. யோனி என பதறியிருக்கிறார் தூயன். என்னவொரு முரண்!
(நன்றி: சாபக்காடு)