‘மாதொருபாகன்’ நாவலின் முடிவிலிருந்து இருவிதத் தொடக்கத்தைக் கொண்டு ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ என்னும் தலைப்புகளில் இரண்டு நாவல்கள் எழுதினேன். அவை தனித்தனி நூல்களாக 2014 டிசம்பரில் வெளியாயின. ஒரு பதிப்போடு நின்ற அவை 2016 முதல் மீண்டும் அச்சுக்கு வந்தன. தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுப் ‘பெங்குவின்’ வெளியீடாக வந்துள்ளன. ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு தொடர்பான ஓர் உரையாடலில் எனக்குத் தமிழின் முதல் நாவலாசிரியரான மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளை எழுதிய இரண்டு நாவல்களும் ஒரே நூலாகப் பதிப்பிக்கப்பட்ட செய்தி நினைவுக்கு வந்து கண்ணனிடம் தெரிவித்தேன். ‘அந்த முறையில் தமிழில் வெளியிடலாமே’ என்று கண்ணன் ஆர்வமானார். அவர் ஆர்வம் செயல் வடிவம் பெற்று அவ்வடிவில் இப்போது (2018, டிசம்பர்) ‘ஆலவாயனும் அர்த்தநாரியும்’ ஒரே நூலாக வெளியாகின்றன.
இப்பதிப்புக்கு முன்னோடி, சக்தி காரியாலயம் 1957ஆம் ஆண்டு வெளியிட்ட ‘பிரதாப முதலியார் சரித்திரம்,’ ‘சுகுணசுந்தரி’ பதிப்பாகும். சக்தி வை. கோவிந்தன் தமிழ்ப் பதிப்பிலும் அச்சிலும் பல சோதனை முயற்சிகளை முன்னெடுத்து வெற்றிகரமாக அவற்றைச் செயல்படுத்திய பதிப்பாளர். ‘மலிவு விலைப் பதிப்பு’ என்னும் வரிசை ஒன்றைத் தொடங்கி ‘மகாகவி பாரதியார் கவிதைகள்’ நூலை வெளியிட்டார். அதற்குப் பெரும் ஆதரவு
கிடைத்தது. தொடர்ந்து ‘திருக்குறள் பரிமேலழகர் உரை’ நூலையும் அதே வரிசையில் வெளியிட்டார். மூன்றாவதாகத் தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்தை’ வெளியிடலாம் என முடிவு செய்து அறிவிப்பு செய்தார். மலிவு விலைப் பதிப்பின் நோக்கமாக இரண்டை அவர் கொண்டிருந்தார். முக்கியமான நூல் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகச் சென்றடைய வேண்டும்; அவர்களின் பொருளாதார நிலைக்குகேற்ப விரும்பி வாங்கும் விலையில் இருக்க வேண்டும். குறைந்த பிரதிகள் அச்சிட்டால் அதிகமான விலை வைக்க வேண்டியிருக்கும். பிரதிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் விலையைக் குறைக்கலாம். இதுதான் அவர் திட்டம்.
பதிப்புரையில் ‘இந்த அரிய புத்தகம் இன்றுள்ள காகித விலை, அச்சுக்கூலி, மற்ற செலவுகள் இருக்கும் நிலையில் ஆயிரம் புத்தகங்கள் அச்சிட்டால் மூன்றரை ரூபாய் விலை வைத்து விற்றால்தான் பதிப்பாளர் ஒரு சிறிது லாபம் பெறலாம். மூன்றரை ரூபாய் விலைக்குப் புத்தகம் என்கிற நிலையில் பெரும்பாலான தமிழ் மக்களின் பொருளாதார நிலை இல்லை. இந்த அரிய புத்தகத்தைப் பெரும்பாலான தமிழ் மக்கள் படிக்க வேண்டும் என்று எண்ணினோம்’ (ப.5) என்று எழுதுகிறார். இந்த நாவலை ஒன்றரை ரூபாய் விலைக்குக் கொடுக்கலாம் என முடிவு செய்கிறார். கணக்கிட்டுப் பார்க்கும்போது முந்நூறு பக்கங்கள் வருகின்றன. அதற்கு ஒன்றரை ரூபாய் அதிகம் எனக் கருதுகிறார். அப்போது வேதநாயகம் பிள்ளையின் பேரர் வந்து ‘சுகுண சுந்தரி’யைக் கொடுக்கிறார். இரண்டையும் சேர்த்து வெளியிட்டால் நானூறு பக்கம் வரும், ஒன்றரை ரூபாய்க்குக் கொடுக்கலாம் என முடிவு செய்து அறிவிப்பும் வெளியிடுகிறார். ஆயிரமாயிரம் மக்கள் நூல் வேண்டும் எனப் பதிவு செய்கிறார்கள். ஆனால் அச்சுக் கோக்கும் போதுதான் நானூறு பக்கம் வராது, குறையும் எனத் தெரிகிறது. எனவே உடனடியாக விலையைக் குறைத்து ரு.1.25 என மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடுகிறார். ஆறாயிரம் பிரதிகள் அச்சிடச் சொன்னார். ஆனால் ஏழாயிரம் பிரதிக்கு ‘ஆர்டர்’ வந்துவிடுகிறது. மிகவும் மகிழ்ச்சியுடன் பிரதிகளின் எண்ணிக் கையைக் கூட்டிப் பத்தாயிரம் அச்சிடச் சொல்கிறார்.
ஒரு நூலை எப்படி வெளியிட வேண்டும் என்பதில் உள்ளடக்கம், வடிவமைப்பு இரண்டிலும் அவருக்குத் தெளிவும் படைப்புணர்வும் இருந்துள்ளன என்பதை இன்று இந்த நூலைக் காண்கையிலும் உணர முடிகிறது. உள்ளடக்கம் பற்றிய தம் கருத்தை ‘இந்தப் புத்தகத்தை வெளியிடும்போது ஆசிரியர் எழுதியபடியே கூடுதல் குறைச்சல் இல்லாமல் அப்படியே வெளியிடத் துணிந்தோம். அவர்கள் எழுதிய சொற்களை மாற்றியோ கூட்டியோ குறைத்தோ வெளியிடுவது ஆசிரியரை அவமதிப்பதாகும் என்றுகூட எண்ணுகிறோம். அது மட்டுமல்லாமல் புத்தகத்தைச் சுருக்கி வெளியிடுவதும் எங்களுக்குப் பிடிக்காத விஷயம். சுருக்கம் செய்யும்போது ஆசிரியர் எந்த விஷயத்தை மக்கள் படிக்க வேண்டும் என்று எண்ணினாரோ அந்த விஷயங்களைச் ‘சுருக்காளர்’ சுருக்கிடவும் கூடும். ஆகையால் அப்படி வெளியிடவும் எங்களுக்கு மனத்துணிவு இல்லை’ (ப.6) என்று விவரிக்கிறார்.
ஆனால் புத்தக வடிவமைப்பைப் பற்றிப் ‘புதிய முறையில் புத்தகத்தின் மேலட்டையைத் தயாரித்துத் தந்த ‘சித்திரக்காரரைப்’ பாராட்டும் குறிப்பு ஒன்றைத் தவிர வேறெதுவும் அவர் சொல்லவில்லை. நூலைக் கொண்டு நாம்தான் அறிந்துகொள்ள வேண்டும். பக்கக் குறைவுக்காக நூலின் உள்ளடக்கப் பகுதி சற்றே சிறிய எழுத்துக்களிலும் வரி இடைவெளியைக் குறைத்தும் அச்சுக் கோக்கப்பட்டுள்ளது. புதிதாக வார்க்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு அச்சுக் கோத்திருப்பதாலும் நல்ல தாளில் அச்சிட்டிருப்பதாலும் அழகும் தெளிவும் கொண்டு வாசிப்புக்கு உகந்ததாக நூல் அமைந்திருக்கின்றது.
இது ஒரு நூலல்ல; இரண்டு நூல்கள். ஒரு நூல் கட்டமைப்புக்குள் இரண்டு நூல்கள். மாயூரம் ச.வேதநாயகம் பிள்ளை 1879ஆம் ஆண்டு (1876 என்று இப்பதிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது பிழை.) ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலை எழுதினார். இது முதல் தமிழ் நாவல் என்னும் பெருமை பெற்றதாகும். பின் 1887ஆம் ஆண்டு அவரே ‘சுகுண சுந்தரி’ நாவலை வெளியிட்டார். தமிழகத்தில் வெளியான இரண்டாம் நாவல் இது. சக்தி காரியாலய வெளியீட்டில் இரண்டு நூல்களும் உள்ளன. ஒரு நூல் முடிந்த பிறகு இன்னொரு நூல் தொடங்கும் முறையில் இதன் வடிவமைப்பு அமையவில்லை. நூலுக்கு முன்புறம் உண்டே தவிரப் பின்புறம் கிடையாது. அதாவது நூலின் ஒருபுறம் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்குகிறது; இன்னொரு புறம் ‘சுகுணசுந்தரி’ தொடங்குகிறது. நூலின் இருபுறமும் முன்புறம்தான். ஒருபுறத்தில் இருந்து இன்னொரு புறத்திற்குச் செல்லும்போது தலைகீழாகத் திருப்பிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். ஒருபுற அட்டையில் பெரிய எழுத்தில் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எனப் பெரிய எழுத்திலும் ‘சுகுணசுந்தரியும்’ எனச் சிறிய எழுத்திலும் தலைப்பு. அதே போல இன்னொருபுற அட்டையில் ‘சுகுண சுந்தரி’ எனப் பெரிய எழுத்திலும் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எனச் சிறிய எழுத்திலும் தலைப்பு.
பின்புறமற்ற, இரண்டு முன்புறம் கொண்ட இவ் வடிவமைப்பில் தமிழில் வெளியிடப்பட்ட ஒரே நூல் இதுதான் என்று கருதுகிறேன். அவ்வெளியீடு வந்து அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது அவ்வடி வமைப்பைப் பின்பற்றி ‘ஆலவாயனும் அர்த்தநாரியும்’, அல்ல அல்ல, ‘அர்த்தநாரியும் ஆலவாயனும்’ - சரி, எதையாவது ஒன்றை முதலில் சொல்லித்தானே ஆக வேண்டும் - வெளியாகின்றன. ‘மலிவு விலைப் பதிப்பு’ போலவே காலச்சுவடும் ‘விலையடக்கப் பதிப்பில்’ ரூ.225/- விலைக்கு வெளியிடுகிறது. முன்னோடிப் பதிப்பின் வடிவமைப்பில் என் நூல்கள் வெளியாவது குறித்துப் பெருமகிழ்ச்சி.
மின்னஞ்சல்: murugutcd@gmail.com
(நன்றி: காலச்சுவடு)