மொழியும் வார்த்தைகளுமே தன்னை நாவலை நோக்கி செலுத்தியதாகக் கூறும் ஜான் பான்வில்லின் பதிமூன்றாவது நாவலான ‘கடல்’, 2005ம் ஆண்டிற்கான மான் புக்கர் பரிசு பெற்றது. ஸ்டீபன் பிரௌனின் இயக்கத்தில் 2013ம் ஆண்டில் திரைப்படமாகவும் வெளியாகியது.
தனது புத்தகங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் முதலிலிருந்து தொடங்க நினைக்கும் ஜான் பான்வில், தனது புத்தகங்கள் மற்ற எல்லோரையும் விட சிறப்பாக இருந்தபோதிலும், தனக்கு போதாமையைத் தருவதாகவும் அவை அவமானத்தின் ஆழமான ஆதாரமாக இருப்பதாகவும் சலிப்புறுகிறார். தனது நாவலை தற்போது இன்னும் சிறப்பாக எழுதிவிட முடியும் என்கிற ஆதங்கம். ஒவ்வொரு நாளும் ஒரு படி மேலேறிச் செல்லத் துடிக்கும் கலைஞனின் தீராத வேட்கை.
‘கடல்’ நாவல் வார்த்தைகளின் அழகில் மிளிர்கிறது. கதைசொல்லியின் நினைவுகளை, அதாவது கடலின் ஓயா அலைகளை, சலனத்தை, சீற்றத்தை நிதானமான கவித்துவ மொழியில் விவரிக்கிறது. பான்வில்லை நபக்கவ்வோடு ஒப்பிடுவது வழக்கம். அதை மறுக்கும் பான்வில், தனது மொழியில் ஒரு இசைத்தன்மையுண்டு. லயம். அது நபக்கவ்விடம் கிடையாது என்கிறார். மொழி மீது வார்த்தைகளின் மீது பான்வில்லிற்கு இருக்கும் காதலை அவரது படைப்புகளின் வாயிலாக அவரது நேர்காணலின் மூலமாக அறிந்துகொள்ளலாம். பான்வில்லின் சிரத்தையான வார்த்தை சேகரத்தை எவ்வித சேதாரமுமின்றி தமிழில் திரட்டித் தந்திருக்கிறார் ஜி.குப்புசாமி. ‘பான்வில்லின் மொழியின் அழகியலை ஐம்பது சதவிகிதம் மட்டுமே தமிழில் சாத்தியப்படுத்தியிருக்கிறேன். அவரது முழுமையான ஆளுமையை அறிந்துகொள்ள ஆங்கிலத்தில் வாசியுங்கள்’ என்றார் ஜி.குப்புசாமி.
பால்யகாலத்தில் நேர்ந்த துர்சம்பவத்தை எண்ணி வாடும் மேக்ஸின் குரலில் பயணிப்பதாக இந்நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது. கதைசொல்லியான மேக்ஸ் எந்நேரமும் இறந்தகாலத்தின் நினைவில் உழல்பவராக இருக்கிறார். நினைவுகளின் மூலம் கடந்தகாலத்தை மீண்டும் வாழ்ந்து பார்ப்பவராக. உலகின் பழகிப்போன யதார்த்தத்தைக் கண்டு சலிப்புறும் மேக்ஸ், மற்றவர்களைப் புறந்தள்ள இயலாமல் அவர்களை எண்ணி தன்னை வருத்துபவராகவும் மகள் க்ளேர் பொழியும் அன்பை மறுப்பவராகவும் இருக்கிறார். வலிதரும் சொத்தைப்பல்லை வேன்றுமென்றே நாக்கால் நிமிண்டி வலியை அதிகப்படுத்துபவராகவும். இதுதான் மேக்ஸின் இயல்பு. யதார்த்தத்தில் ஜான் பான்வில்லும் கூட சிடுசிடுப்புடனும் யாரோடும் உறவாட விரும்பாதவராகவும் இருப்பதாக ஆங்காங்கே சிறு குறிப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன. ஜான் பான்வில்லின் தொட்டாற்சிணுங்கித் தனத்தை மனதில் கொண்டே இந்நாவலை வாசிக்கக் கேட்டுக்கொள்கிறேன் என முன்னுரையில் சிறு ஆலோசனையும் ஜி.குப்புசாமி வழங்குகிறார்.
மனைவியின் பிரிவு தாளாமல் சக மனிதர்களை, வாழும் சமூகத்தை சகிக்க இயலாமல் வாடும் மேக்ஸ், கற்பனையாக இல்லாத ஒன்றை நினைத்துக்கொள்பவராக இருக்கிறார். இது இளவயதிலேயே அவருக்கிருக்கும் சுபாவம். இந்த சுபாவத்தினாலேயேதான் தனது காதலியையும் அவரது குடும்பத்தினரையும் இழக்கிறார். அதாவது அவர்களின் இழப்பிற்கு மேக்ஸின் அதீத கற்பனை காரணமாக அமைகின்றது. பின்னர் அதை எண்ணி எண்ணி மனைவியோடு சரியாக வாழ இயலாமல் அவளையும் கேன்சருக்கு பலி கொடுக்கிறார். மனைவி அன்னா இறந்த பிறகு தனது பால்யத்தை எண்ணி வருந்துவதாக நாவலில் இடம்பெற்றிருந்தாலும் அந்த துர்சம்பவத்திற்கு பின்பாக தனது வாழ்நாள் முழுவதும் மேக்ஸ் அவ்வாறே தன் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்பது சொல்லாமல் சொல்லிச்சென்ற ஒன்று. ஆனால், இல்லாத ஒன்றை கற்பனை செய்யும் தனது சுபாவம் குறித்த சுயபிரக்ஞை மேக்ஸிற்கு உண்டு. அந்த பிரக்ஞையே தன்னைக் குற்ற உணர்விற்குள்ளாக்கி தனது கடந்த காலத்தை அசைபோடச் சொல்கிறது.
மேக்ஸ், தனது பால்ய வயதில் கோடை இல்லத்தில் சந்தித்த கிரேஸ் குடும்பத்துடன் ஏற்பட்ட உறவையும் அவர்களின் இழப்பையும் தனது மனைவியின் மறைவிற்கு பின்பாக அதே கோடை இல்லத்திற்குச் சென்று நினைவை அசைபோடுவதாக எழுதப்பட்டிருக்கும் இந்நாவல், அந்த கோடை இல்லத்திலிருந்து அவரது மகள் அவரை அழைத்துச் சென்ற பிறகே கர்னல் அன்பளித்த பேனாவால் எழுதப்படுகிறது. ஆக, நாவலில் நிகழ்காலமாகவும் கடந்தகாலமாகவும் முன்னும் பின்னும் பயணிக்கும் சம்பவங்கள் அனைத்துமே மேக்ஸின் கடந்தகாலம். அதாவது நாவல் முழுவதும் – நூறு சதவிகிதம் – மேக்ஸின் நினைவுகள் மட்டும்தான். நிகழ்காலமாக நாவலில் சம்பவிக்கும் தருணங்களும் கடந்தகாலமே.
இந்த நினைவுகூரல், மேக்ஸிற்கு விழாவாகவும் சில நேரங்களில் சித்திரவதைக் கூடமாகவும் தோன்றுகிறது. வயதான மேக்ஸ் காலம் கடந்து தனது கடந்தகாலத்தை மீளுருவாக்கம் செய்கையில் அவ்வயதில் முதியவர்களானவர்கள் தற்போது நினைத்துப் பார்க்கையில் தன்னை விட இளையவர்களாகத் தோற்றம் தருகிறார்கள். இப்படியான மீளுருவாக்கம் தனது வாழ்வை முற்றிலும் வேறான கோணத்தில் அணுகுவதாகவும் வேறு மாதிரியாக வாழ்ந்து பார்ப்பதாகவும் இருக்கிறது. ‘கடல்’ நாவலானது தற்போதைய முதிர்ந்த அனுபவத்தில் இறந்தகாலத்தை அளவிடும் முயற்சி என்பதாகவும் கொள்ளலாம்.
‘இறந்தகாலம் என்பது, கைகளைப் பரபரவென்று தேய்த்து, தற்போதைய குளிரையும் அதைவிடக் குளிராக இருக்கப்போகும் எதிர்காலத்தையும் உதறிவிட்டுக்கொண்டு புகலிடம் தேடிச் செல்லும் அத்தகையதோர் ஒதுங்கிடமாக இருக்கிறது. மேலும் இறந்தகாலத்துக்கென்று உண்மையில் என்ன இருப்பு இருக்கிறது? தற்காலம் என்பது ஒரு காலத்தில் என்னவாக இருந்ததோ அதுவாகத்தான் இருக்கும்? அதுவும் கடந்துபோய்விட்ட தற்காலம். அதற்குமேல் வேறு என்ன? இருந்தும்.’ [பக்: 57]
மனைவி அன்னா, மகள் க்ளேர், வாவஸூர், கர்னல் என பிரதான பாத்திரங்களோடு கதை பயணித்தாலும் கிரேஸ் குடும்பத்துடனே ஒவ்வொன்றும் பிணைக்கப்பட்டிருக்கிறது. பால்ய வயதில் எட்ட இருந்து வேடிக்கை பார்த்தும் பின்பு கிட்ட நெருங்கி உறவாடியும் வலம் வரும் மேக்ஸ், அவர்களது நினைவுகளை சுமந்து வாழ்நாள் முழுவதும் வாடித் திரியும்படி அக்குடும்பத்திற்கு என்ன நேர்ந்தது என்பது நாவலின் இறுதியில் வாசகனுக்குத் தெரியவருகிறது. கிரேஸ் குடும்பம் பற்றியும் அங்கத்தினர் பற்றியும் அபிப்ராயங்களை அவர்களின் நடவடிக்கைகள் மூலமாக தானே வேடிக்கை பார்த்தபடி உருவாக்கிக்கொள்கிறான் மேக்ஸ். அவை நிஜம் அல்ல. அபிப்ராயங்கள் மட்டுமே.
ஆடம்பரக் குடும்பம். மரக்குடிலில் வாடகைக்குத் தங்கியிருக்கும் மேக்ஸிற்கு கிரேஸ் குடும்பத்தினர் தெய்வப்பிறவிகளாகத் தெரிகின்றனர். முதலில் கானி கிரேஸ் மீதான ஈர்ப்பு, அவளுடனான சம்பாஷணை, பின்பு அவளது மகள் க்ளோயியுடனான முதிராக் காதல், ரோஸ் மற்றும் கானி கிரேஸ் ஆகியோருக்கிடையேயான உரையாடலின் ஒரு சில வார்த்தைகளைக்கொண்டு தானாக ஒன்றை கற்பனை செய்ததன் மூலமாக க்ளோயியின் மனநிலை மாற்றம், அவளது துர்மரணம், இறுதியாக ரோஸிடமிருந்து உண்மையை அறிந்துகொள்ளுதல் என பல அடுக்குகளாக முன்னும் பின்னும் பயணிக்கிறது. அதாவது, மேக்ஸின் நினைவுகள், அலைகளாக ஓய்வின்றி அவனை அலைக்கழிக்கிறது. எப்போதும் துயரப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பாவைக் கண்டு ‘துயரப்பட்டுக்கொண்டிருப்பது நீங்கள் ஒருவர் மட்டுமல்ல’ என வருந்துகிறாள் க்ளேர். ‘துயரப்பட்டுக்கொண்டிருப்பது என்பது நீ எதைக் குறிப்பிடுகிறாயோ அதைப் பொறுத்தது’ என்கிறார் மேக்ஸ். நாவல் முழுக்க துயரார்ந்த நினைவுகளை, சம்பவங்களைக்கொண்டிருந்தாலும் அவை உணர்ச்சியைத் தூண்டும் மெலோட்ராமாவாக இல்லாமலிருப்பது ஜான் பான்வில்லின் கதை கூறும் யுக்தியின் சிறப்பு; அவரது மொழியின் லாவகம்.
நினைவுகள் கடல் அலைகளைப் போல ஓயாமல் சீற்றத்துடன் கதைசொல்லியைப் பாடாய்ப்படுத்தினாலும், ஜான் பான்வில்லின் மொழி, சலனமற்ற ஓடையில் மிதந்து போகும் சோகப்படகில் பயணிப்பதாய் நம்மை உணரச் செய்கிறது. ஜான் பான்வில்லின் நுணுக்கமான மிக நுணுக்கமான வர்ணனைகள் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் ஒவ்வொரு சம்பவங்களையும் நம்மை நுணுக்கமாக மிக நுணுக்கமாக பின்தொடரப் பணிக்கிறது. வாசிப்புக் கடலில் தத்தளிக்கும் வாசகனைக் கரையேற்ற மிகச் சிறு துருப்பையே கையளிக்கிறது. மிக நிதானமாக அதைப் பற்றிக்கொள்ளத் தவறினால் பேரனுபவமொன்றை தரிசிப்பதை இழந்து அயற்சியில் மூழ்கிப் போகவும் வாய்ப்பிருக்கிறது.
(நன்றி: சாபக்காடு)