தன் வாழ்நாளில் அதிகப் பக்கங்கள் எழுதிய இந்திய சிந்தனையாளர்களுள் அம்பேத்கர் முதன்மையானவர். அந்தவகையில் இந்தியாவில் சாதிகள் என்ற தலைப்பில் அவரெழுதிய ஆய்வுக்கட்டுரையே அவரின் முதல்நூலாக அறியப்படுகிறது. அந்த நூல் எழுதப்பட்ட நூறாவது ஆண்டு இது. கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்த அம்பேத்கர், துணைப்பாடங்களில் ஒன்றாக மானுடவியல் படிப்பைக் கொண்டிருந்தார் அப்படிப்பின் ஓராண்டு முடிவில் 09.05.1916-ம் நாள் Castes in india, Their Mechanism, Genesis and Development என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வாசித்தளித்தார். இக்கட்டுரையே சாதியின் அமைப்புத் தோற்றம் வளர்ச்சி என்ற துணைத் தலைப்போடு இன்று அறியப்படும் இந்தியாவில் சாதிகள் என்ற நூலாகும்.
இது அம்பேத்கர் எழுதிய முதல் நூல் என்பதால் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கம் காரணமாகவும் முக்கிய நூலாக விளங்குகிறது. அவரின் பிற்கால அரசியல் செயற்பாடுகளின் செயற்களமாகவும், ஆய்வுச் சிந்தனைகளாகவும் அமைந்த சாதி மறுப்பு அரசியலின் தொடக்கமாக இந்நூலே அமைந்துள்ளது. அவரின் கோட்பாடு மற்றும் அரசியல் பங்களிப்பாக விளங்கும் சாதி ஒழிப்பு என்ற கருத்தியலின் விவாதப்புள்ளியை இந்நூலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். சாதிஒழிப்பு என்கிற அரசியல் முடிவை இந்நூலில் அவர் அறுதியிட்டுக் கூறவில்லையெனினும், அதை ஒழிக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர் அடைவதற்கான காரணமாக சாதியை அவர் புரிந்து கொண்டிருந்த விதம் இந்த நூலிலேயே காணக்கிடக்கிறது. அந்தவகையில் இது ஒரு முழுமையான ஆய்வு நூல்.
அம்பேத்கர் நவீனக்கல்விமுறையில் பயின்றவர். அக்கல்வி முறையின் சட்டகமான ஐரோப்பிய ஆய்வு முறையியல் வழியாகச் சிந்தித்து ஆய்வு செய்தவர். இந்நூல் அத்தகையதேயாகும். முன்னோடி ஆய்வுகள், மேற்கோள்கள், அவற்றின் சாதக பாதகங்களை விவாதித்து தர்க்கத்தின் வழியே தம் பார்வையை நிறுவுதல், வினா எழுப்பி விடை காணுதல் என்று இந்த ஆய்வு அமைந்துள்ளது. தாம் ஆராயப் புகுந்த சாதி என்கிற பொருண்மைதொடர்பாகப் பல புதிய ஆய்வுக்களங்களை தம் விவாதத்தின் வழியே நமக்கு அவர் இனம் காட்டுகிறார். இந்நூல் அம்பேத்கர் சிந்தனையின் முழுமையைக் காட்டுகிறது என்று சொல்லமுடியாது. ஆனால் பிற்காலத்தைப்போல் குறிப்பான அரசியல் முடிவுகளால் கட்டுப்படுத்தப்படாமல் ஓர் ஆய்வு மாணவராக இருந்து எழுதிய காரணத்தால் இந்நூல் முக்கியமானதாகிறது.
தொன்மைச் சமுதாயத்தையும் தற்காலச் சமுதாயத்தையும் ஒப்பிட்டுநோக்குவதில் ஈடுபாடுகொண்டுள்ள மாணவர்கள் கலந்து கொண்டுள்ள கருத்தரங்கில் இக்கட்டுரையை வாசித்தளிப்பதாகக் கூறி, தம் ஆய்வுக் கட்டுரையை அம்பேத்கர் ஆரம்பிக்கிறார், மனித இனத்தின் தோற்றம் உள்ளிட்ட தொன்மையை ஆராயும் மானிடவியல் துறை ஆய்வரங்கில் அவர் இதைக் குறிப்பிடுகிறார் என்பது முக்கியமானது. எனவே, தொன்மையானது என்றுகருதியே அவர் இந்திய சாதியமைப்பை அறிய முற்படுகிறார். சாதியை பழமை அல்லது தொன்மை, தற்காலம் அல்லது நவீனம் என்னும் இரட்டை எதிர் மறையில் வைத்துப் பார்க்கும் பார்வை அவருடைய பிற்கால எழுத்துகளில் பெரிய அளவில் விரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது விரிவாக ஆராயத் தக்கதாகும். அவரைப் பொறுத்தவரையில் சாதியென்பது பழமையான சமூகஅமைப்பில் தொடங்கி சமகாலம் வரையிலும் தொடரும் பழமையான வழமை. பழமையான சமூக அமைப்பென்பது காட்டுமிராண்டித்தனமான, மனிதத்தன்மையற்ற ஒழுங்குகளைக் கொண்டது என்பது அவர் கணிப்பு. சாதியென்பது அத்தகையதே. இந்தப் பழமையான வழக்கங்களை, பகுத்தறிவையும் சமத்துவக் கருத்துகளையும் கொண்டிருக்கும் நவீன சமுக அமைப்பின் செயற்பாடுகள் மூலம் மாற்றமுடியும் என்றுகருதி பிற்காலத்தில் சாதிஒழிப்பு என்கிற நவீன அரசியல் கோட்பாட்டை அவர் முன்வைத்தார். இந்த பழமையான சாதி விதிகளை கட்டிக்காக்கும் சனாதனத்தின் பிரதியாக மனுதர்ம சாத்திரமும் அதற்குமாற்றாக நவீனகால இந்திய அரசியல் சட்டமும் அவரால் புரிந்து கொள்ளப்பட்டது. காந்தி, கிராம அமைப்பு ஆகியவற்றின் மீதான அம்பேத்கரின் விமர்சனத்தையும்கூட இப்பின்னணியிலிருந்து நாம் புரிந்துகொள்ளமுடியும். தொடக்க நிலைஆய்வில் தொடங்கும் இந்த இரட்டை எதிர்வு அவர் கடைசிக்காலத்தில் உள்ளூர்மரபிலிருந்து பௌத்தத்தைக் கண்டெடுப்பதுவரையிலும் அவரிடம் செல்வாக்கு செலுத்தியது எனலாம்.
அடுத்ததாக சாதிபற்றி ஆராய்ந்த செனார்ட், நெஸ்பீல்டு, ரிஸ்லி, கெட்கர் ஆகிய நால்வரின் கூற்றுகளிலிருந்து சாதிபற்றிய இயல்புகளை வரையறுக்கிறார். இதில் ஒருவரிடம் உள்ள போதாமையை மற்றொருவரின் கருத்து நிறைவு செய்வதாக அமைந்துள்ளதைச் சுட்டுகிறார். செனார்ட் நெஸ்பீல்டு ஆகியோரின் கூற்றுப்படி தீட்டு, சேர்ந்து உண்ணாமை ஆகியவற்றைச் சுட்டும் அம்பேத்கர், இந்தியரான கெட்கர் விளக்கியுள்ள 1) கலப்பு மணத்தடை, 2) ஒருவர் பிறந்த குழுவிற்குள்ளேயே உறுப்பினராகும் தன்மை ஆகிய இரண்டு இயல்புகளை முக்கியமான சாதியின் முக்கிய அலகுகளாக எடுத்துக்கொள்கிறார். சாதி பற்றிய அவருடைய ஆய்வில் அகமணமுறை முக்கிய இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். எனவே அகமணமுறை எவ்வாறு உருவாகியிருக்க முடியும் என்பதையே அடுத்ததாக அவர் விவாதிக்கிறார். இந்த விவாதத்தின்வழியாகவே சாதிபற்றிய அடுத்தடுத்த அம்சங்களை அவர் திறக்கிறார். இந்த அகமணம் நீடிக்கவேண்டுமெனில் குழுவுக்குள்ளேயே சம எண்ணிக்கை பேணப்படவேண்டும். எனவே சமமின்மையை ஒழுங்குபடுத்தும்போது இந்த அம்சம் நிறைவு காண்கிறது. மணம் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் ஒரேநேரத்தில் இறப்பதற்குச் சாத்தியமில்லை. கணவன் இறந்துபோனால் பெண் கூடுதலாக நிற்கிறாள். அத்தருணத்தைக் கையாளாவிட்டால் அவர் அக்குழுவைத் தாண்டிச்சென்று அகமண வழக்கத்தைக் குலைப்பாள். அதற்காக அவளை விதவையாக்குவதும் உடன்கட்டை ஏற்றுவதும் நடக்கிறது. அவனுக்கு பருவமெய்தாத பெண்ணை மணம் முடிப்பதும் தானேவந்து பிரம்மச்சரியம் ஏற்பதும் நடக்கிறது. அவ்வாறு குலஒழுங்குகளிலிருந்து சாதிக்கான இயல்புகளைத் தொடங்கும் அம்பேத்கர், பிற்கால சாத்திர பிரிதிகளில் அவை அமைதியடைவதை விளக்குகிறார். இவ்விடத்தில் ஒரு பெண்ணை அடக்கி வைப்பது மூலமே அகமணம் வழக்கம் காப்பாற்றப்படுகிறது என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மொத்தத்தில் சாதி உருவான முறை என்பதாக மட்டுமில்லாமல் அது தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுவந்த முறைமையாக அகமணம் இருப்பதை அவர் விளக்கியிருக்கிறார்.
சாதியின் தோற்றுவாய் பற்றி அவர் பேசும் போது, தனித்து ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கம் சாதியென்று கூறும் அம்பேத்கர், அவ்வாறான வர்க்கமாக பிராமணர்களைச் சுட்டுகிறார். அவருடைய இந்தப் பகுதி விரிவாக விளக்கத்தக்க ஒன்றாகும். வர்க்க அமைப்புகள் என்பது மாறக் கூடியதாக இருக்கும். ஆனால் இந்த வர்க்கங்கள் அவ்வாறானவையில்லை. நால்வர்ணமும் வர்க்கங்களே இந்த நிலைமையைப் பாதுகாப்பதற்காக புரோகித வர்க்கம் முதலில் தன்னைத்தானே கதவடைப்பு செய்கிறது. பெரிதும் சிறிதுமாக சிதறிப்போயிருந்த பிறவர்க்கங்களின் உட்பிரிவினர், வர்க்க அமைப்பின் திறந்த வழித்தன்மையை இழந்து, சாதியாகமாறி தம்மைத்தாமே அடைத்துக்கொண்டு தனித்தனி சாதிகளாயினர் என்கிறார். இவ்விடத்தில் சிலர் தாங்களாகவும், சிலர் ஏற்கனவே கதவடைப்பு செய்யப்பட்டதைப் பார்த்தும் சாதிகளாயினர் என்றும் விவரிக்கிறார். இவ்வாறு சாதிபற்றிய தோற்றுவாயில் கதவடைப்பு என்கிற அம்சம் அவரால் முக்கியமானதாகக் காட்டப்படுகிறது.
பிராமணர்களிடமிருந்து பிறந்து, பிற பிரிவினரால் முழுவிருப்பத்தோடு பின்பற்றப்பட்ட இக்கதவடைப்பு செயலோடு அகமணம் என்கிற நிகழ்வை அவர் இணைக்கிறார். அதாவது கதவடைப்பு அகமண வழக்காகவும் காப்பாற்றப்படுகிறது. தம்முடைய பிற்கால எழுத்துகளில் சாதியமைப்பில் பிராமணர்களுக்கான பாத்திரம் விரிவாக திறனாய்ந்துள்ள அம்பேத்கர் வேறுசில விசயங்களையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது அவசியமானதாகும். சாதியக் கதவடைப்பை முதலில் செய்தவர்கள் பிராமணர்கள் என்று கூறும் அவர், சாதியை மனு இயற்றிய சட்டமாகவும் விளக்கவில்லை.
சாதிய சட்டம் ஒருவரால் இயற்றப்பட்டு நடைமுறைக்குக் கொணர முடிந்திருக்காது என்று கருதும் அவர், அது சமூக வளர்ச்சி விதியில் வளர்ந்துவந்ததாகவே இருக்க வேண்டும் என்கிறார். சாதிக்கான அடிப்படை அலகுகள் இங்கேயே இருந்தவை என்றும், அதை அமைப்பொழுங்கு ஆக்கியதே மனுவின் வேலை என்றும், அவர் பின்பு கூறியதற்கான தொடக்கம் இது எனலாம். கதவடைப்பு, உருவாக்கம், திணிப்பு என்பவற்றிற்கிடையேயான நுட்பமான வேறுபாடுகளை அவர் காட்டுகிறார்.
கதவடைப்புக்கு அடுத்து சாதிஇயல்பில் போலச்செய்தல் என்கிற முக்கியமான அம்சத்தின்மீது அவர் கவனத்தை ஈர்க்கிறார். வால்டர் பேகாட் கேப்ரியல் டார்ட் ஆகிய இரு அறிஞர்களிடமிருந்து இந்த அம்சத்தை விவாதிக்கும் அவர், அதன்மீது உளவியல் வாசிப்பை நிகழ்த்த முயற்சிக்கிறார். சாதி நல்லதா கெட்டதா என்ற விவாதத்திற்குச் செல்லும் முன் சமூகமனிதன் ஒருவனுக்குச் சாதி ஏன் தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த உளவியல் வாசிப்பு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மனதின் ஆழத்தில் பதிந்துள்ளது ‘போலச்செய்தல்’ என்கிற மனப்போக்கு என்று குறிப்பிடுகிறார். அது கண்ணுக்குப் புலப்படாமல் செயல்படக்கூடியது அது. ‘போலச் செய்தல்’ மூலம் சாதிகள் உருப்பெற்றிருக்கக் கூடிய இரண்டு விதங்களை அவர் விவரிக்கிறார். போலச் செய்யப்படும் குழுவினர் சமூகத்தில் கௌரவம் பெற்றவராக இருந்திருக்கவேண்டுமென்றும், குழு உறுப்பினர்களிடையே நாள்தோறும் அதிகப்படியான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்கவேண்டுமென்றும் இதை அவர் விவரிக்கிறார். இந்த இரண்டு இயல்புக்குரியவராக பிராமணர்கள் இருப்பதால் அவர்களைப் பார்த்து பின்பற்றுகிறார்கள். அதாவது, அவர்கள் தங்களை கடவுளின் பாதியாக சொல்லுகிறார்கள். அவர்கள் தங்கள் குழுவுக்குள்லேயே அகமணம் கொண்டு தனித்து இருக்கிறார்கள் என்றால், பிறரும் அதைப் பின்பற்றத் தொடங்கினார்கள். அந்த ‘போலச்செய்தலின்’ தாக்கம் பிராமணர்களிடையே தங்களுக்கு இருக்கும் தூரத்திற்கு ஏற்ப கூடவும் குறையவும் செய்கிறார். அவ்விடத்தில் போலச்செய்தலை அவர் பிராமணர் அல்லாத குழுவினரின் மனப்போக்கு என்கிறார். ஏறக்குறைய போலச்செய்தலை அவர் பிராமணர் அல்லாதோர் சாதி ஏற்றுக்கொண்ட விதம் பற்றிய அவரின் புரிந்துகொள்ளும் முயற்சி என்றே கூறலாம்.
கதவடைப்புநடந்து மற்றவர்களும் அடைபட்டதை சாதிய உருவாக்கத்தின் இயந்திர கதி என்கிறார் அம்பேத்கர். அதன் தொடர்ச்சியின் சிறிய அளவில் சில முக்கிய அவதானிப்புகளை முன்வைக்கிறார். அதாவது சாதியென்பது தனி அலகு அல்ல. மாறாகச் சாதிய அமைப்பு முறைமையின் அங்கம் அது என்கிறார். இதன்மூலம் சாதியானது ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை என்கிறார். சாதியிலிருந்து சமூகத்தின் பிற அம்சங்களையோ பிற அம்சங்களை விடுத்து சாதியையோ அணுகஇயலாது என்பது இப்புரிதலின் அடிப்படை. ஒட்டுமொத்த சமூகம் பற்றிப் பேசுபவர் சாதியை விடுத்தோ அல்லது குறைவாக மதிப்பிட்டோ பேசமுடியாத அளவிற்கு அது ஆழமானது. இதையே அம்பேத்கார் சாதியை தனி அலகாக பார்த்ததே அதை புரிந்துகொள்ள முடியாமைக்குக் காரணம் என்கிறார். அம்பேத்கரின் முக்கிய அவதானிப்பு இது.
சாதி பற்றிய இந்த ஆய்வில் அம்பேத்கரிடம் இரண்டு போக்குகள் காணப்படுகின்றன. மனித இனம் தோன்றிவளர்ந்த குலக்குழு முறைமை, அக்கால பழக்கவழக்கங்கள் ஆகியவையும் அதன்மீது பிராமணர்கள் என்னும் புரோகித வர்க்கமும் அவர்தம் பிரதிகளைச் சாஸ்திர நம்பிக்கைகள் ஆகியவையும் தொழிற்பட்டதை குறுக்கும்நெடுக்கமாக வைத்து ஆராய்ந்திருக்கிறார். சிந்தனையாளர்களின் தொடக்ககாலக் கருத்துகள் பல பின்னாளில் வளர்த்தெடுக்கப்படும்; சில தொடக்கநிலை கருத்தாகவே அமையும். அந்தவகையில் அம்பேத்கர் பின்னாளில் இந்துமத வேதங்களையும் சாதியமைப்பையும் விரிவாக திறனாய்வு செய்வதற்கான வேர் இந்நூலிலேயே இருக்கின்றன என்பதை அறியமுடிகிறது. சாதியின் பல்வேறு சாத்தியங்களை விவாதித்துப் பார்ப்பதற்கான வெளியும், மொழியும் இருக்கிறது என்பதே இந்நூலின் பலம். சாதி பற்றிய ஒரு ஆய்வு, அம்பேத்கரின் முதல் நூல் என்பதோடு நில்லாமல் நூறாண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவின் பிரதான சமூகப் பிரச்சனை விவாதிக்கப்படவேண்டிய முதன்மையான கருத்துகளைக் கொண்டதாக இருப்பதால்தான் முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது. நம்மில் சாதிபற்றிய சீரிய மறுஆய்வுகள் அதிகமாகவும் ஆழமாகவும் வெளிவரவில்லை என்பதும் இந்நூலின் அத்தியாவசியத்தை அறுதியிடுகிறது. இந்நூலை மறுபடியும் வாசிக்கவேண்டும் என்பதன் பொருள்; இதன் கருத்துகளை அப்படியே ஏற்க வேண்டும் என்பதல்ல. அது விவாதிக்கப்பட வேண்டும் என்பதே.
(நன்றி: புத்தகம் பேசுது)