மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் விரும்பப்படுவதற்குக் காரணம், நமக்குப் பெரிதும் பரிச்சயம் இல்லாத வெளியை அது தனக்குள் கொண்டிருக்கிறது. தாய்மொழி இலக்கியத்தில்கூட இந்தப் பரிச்சயம் இல்லாத வெளியை யார் படைத்துக் காட்டுகிறார்களோ அந்தப் படைப்பே பெரிதும் வாசிக்கப்படுகிறது. மொழி பெயர்ப்பு இலக்கியத்தில் இது எளிதாக நிறைவேறுகிறது.
இப்படியான பிறமொழி இலக்கியங்களைத் தமிழுக்குள் கொண்டுவருவதில் பல்வேறு பதிப்பகங்களும் இன்று மும்முரமாக ஈடுபட்டுள்ளன. குறிப்பாகக் காலச்சுவடு பதிப்பகம் ‘உலக கிளாசிகல் நாவல்’ என்ற வரிசையில் பிறமொழி நாவல்களைக் கவனமாக வெளியிட்டுவருவதில் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது; அந்த வரிசையில் பிரஞ்சுப் பேராசிரியர் ஷெவாலியே எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (1942) பிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துள்ள ஆந்திரேயி மக்கீனின் (1957) ‘La vie d’un homme inconnu’ நாவலை ‘முன்பின்தெரியாத ஒருவனின் வாழ்க்கை’ என்ற தலைப்பில் வெளிக்கொணர்ந்துள்ளது.
இந்த நாவலின் பங்களிப்பாக முதலில் சுட்டிக்கூற விரும்புவது, சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிகையீல் கோர்ப்பச்சேவ் ஆட்சிக்காலத்தில் (1985-1991) அமுல்படுத்திய மறுசீரமைப்பு (Perestroika), வெளிப்படைத்தன்மை (Glasnost) முதலியவற்றால் சோவியத்யூனியன் பல்வேறு நாடுகளாகச் சிதறிய பிறகு ரஷ்யாவில் இன்று மனித வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதைக் கதைசொல்லி எடுத்துரைக்கும் பாங்காகும்.
ஷுட்டோவ் ஓர் எழுத்தாளன். பொதுவுடைமைச் சமூகத்தை எழுப்புவதற்கு முயன்ற சோவியத் ரஷ்யாவில் பிறந்தவன். ஆனால் அனாதை. படித்துவளர்ந்து ஆப்கானிஸ்தானில் இராணுவச் சேவை புரிந்தவன்; நியூயார்க்கில் ஓராண்டு வாழ்ந்தவன். ஐரோப்பா முழுவதையும் சுற்றிப் பார்த்தவன்; பாரிஸ் நகரத்தில் முப்பது ஆண்டுகளாக எழுத்தாளனாக வாழ்கிறான்; அப்போது தன்மகள் என்று சொல்லத்தக்க வயதுடைய லெயா என்ற பெண்மேல் காதல் ஏற்படுகிறது; இவனோடு சேர்ந்து சுற்றிய அவளுக்கு அவள் வயதை ஒத்த இளைஞன் ஒருவன் காதலனாக இருப்பது தெரியவந்தவுடன் நொறுங்கிவிடுகிறான்; எந்த அளவிற்கு என்றால், ‘தன் சாவுக்குத் தானே சாட்சியாக இருக்க முடியாது’ என்று எண்ணித் தன் நாட்டிற்கே திரும்பிவிட முடிவு எடுக்கும் அளவிற்கு.
சோவியத்தில் அவனுக்குக் காதலி இருந்தாள்; அவள் பெயர் ‘யானா’. யார்யாரிடமோ தொடர்புகொண்டு அவளது தொலைபேசி எண்ணைப் பிடிக்கிறான். அவள் இப்போது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஹோட்டல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்; அவனுக்கு அவளோடு பேசும்போது ‘பீட்டர்ஸ்பர்க்’ என்று வரமாட்டேன் என்கிறது; ‘லெனின்கிராடு’ என்றே உச்சரித்துப் பிறகு மாற்றிக்கொள்கிறான்; கோர்ப்பச்சேவின் சீர்திருத்த நடவடிக்கைக்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டன என்பதற்கு இது குறியீடாக இருக்கிறது, இந்த நகரம் 1703இல் பேரரசன் ஜார்பீட்டர் பேரில் நிறுவப்பட்டது; தலைநகராகவும் விளங்கியது; பிறகுதான் மாஸ்கோ தலைநகரானது. 1914இல் இந்நகரத்தின் பெயர் ‘பெட்ரோகிராடு’ என்று மாற்றப்பட்டது. 1924இல் உல்ரீச் லெனின், இறந்தசூழலில் ‘லெனின்கிராடு’ என்று ஆனது. 1991இல் இருந்து செயிண்ட்பீட்டர்ஸ் பர்க் என்று அழைக்கப்படுகிறது. அவன் அந்தநகரத்தில் போய் இறங்கும்போது நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது; நகரத்தின் முந்நூறாவது ஆண்டுவிழா; நாற்பத்தைந்து நாட்டு உலகத் தலைவர்கள் வந்து கலந்துகொள்ளும் பெருவிழா. இவன் யானாவோடு தொலைபேசியில் பேசும்போது இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் (1997 முதல் 2007 வரை பிரதமராக இருந்தார்) நகரத்தில் இறங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி ‘இரும்புத்திரை போடப்பட்ட நாடு’ என்று பனிப்போர் நடந்தகாலத்தில் வர்ணிக்கப்பட்ட சோவியத் எல்லோருக்கும் திறந்துவிடப்பட்ட நாடாக மாறிவிட்டது; இந்த மாற்றமும் யாருக்கானது?
ஓரிடத்தில் எழுத்தாளன் ஷுட்டோவ், “நான் திரும்பி இங்கு வந்தது தவறு: பாரிஸில் இருந்ததைவிட இங்கு மேலும் அந்நியனாக உணர்கிறேன்” என்கிறான்; இப்படி இவன் அந்நியனாகத் தன் தாய் நாட்டிலேயே உணர்வதற்குத் தன் பழைய காதலிக்குத் திருமணம் நடந்து விவாகரத்தும் நடந்துவிட்டது; அவளுக்கு ‘விலாது’ என்றொரு பெரிய பையன் இருக்கிறான், புதிய காதலனும் இருக்கிறான் என்பன மட்டும் அல்ல காரணம், நடந்திருக்கும் மாற்றங்கள் அவனுக்குள் கலக்கத்தையும் பீதியையும் எழுப்புகின்றன.
ஷுட்டோவ் மைதானத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறான். அங்கே வட்டமடித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் குடித்துவிட்டுக் காலிப்பாட்டில்களைத் தூக்கி எறிந்து கலவரம் செய்கிறார்கள். ஒருவன் இறந்தவர்களுக்கான நினைவிடத்தில் எரிந்துகொண்டிருந்த சுடரொளிமீது சிறுநீர் கழிக்கப் பட்டனைக் கழற்றுவதைப் பார்த்துப் பதறிப்போய் அவனைத் திட்டுகிறான்; சிலர் காதில் விழுகிறது “கிழவா, உன்னைஅறுத்து உப்புக் கண்டம் போட்டுவிடுவோம்” என்று கத்துகிறார்கள்; அழுகை வருகிறது. ஒரு சோக யாத்திரிகனாக வந்த அவனைச் சூழ்ந்திருப்பவை அமெரிக்கர்களின் அதீத படாடோபமும் ரஷ்ய கோமாளித்தனமும்தான். வாய்விட்டுச் சிரிக்கிறான், இப்படிச் செய்துதான் இழந்த சொர்க்கத்தை நினைத்து அவனால் அழாமல் இருக்கமுடியும்! இழந்தது சொர்க்கமா? அனாதை ஆசிரமத்தில் கழித்த குழந்தைப் பருவமா? அல்லது ஏழ்மையில் கழித்த இளமைக்காலமா? அல்லது இரண்டு முள்வேலிகளுக்கிடையே மாட்டிக்கொண்ட இந்நாட்டு வரலாறா? எது சொர்க்கம்?”
உலகம் ஒரு கார்னிவல்; அதில் ரஷ்யர்களும் சேர்ந்துகொண்டார்கள்; மூளையைப்போட்டுக் கலக்கிக்கொள்வதில் பயனில்லை என்று சமாதானம் கொள்கிறான். கதைசொல்லி சமூகத்தின் சிந்தனைப் புலமாகச் செயல்படும் புத்தகப் பதிப்புத் துறையும் எப்படி அமெரிக்க மயமாகிவிட்டது என்பதை நுட்பமாக முன்வைக்கிறார்; புத்தகத்தின் ஒவ்வொரு தலைப்புடனும் ஒரு பெண்ணின் பெயர் சேர்க்கப்படுகிறது. புத்தக நிறுவனத்தின் விளம்பரப்பிரிவில் பணியாற்றும் விலாத், தன் புதிய வெளியீட்டு உத்திகளைக் குறித்து ஷுட்டோவிடம் எடுத்துரைக்கிறான்; முப்பதுவயதிற்கும் ஐம்பது வயதிற்கும் இடைப்பட்ட, அறிவுஜீவிகளாக இல்லாத பெண் வாசகர்களை நோக்கித்தான் நூல் உற்பத்தி செய்ய வேண்டுமாம்; குறைந்த அளவில் இருக்கும் ஆண் வாசகர்களுக்கு எப்படியும் ஏதோ ஒருவகையான பாலுணர்வுப் பிரச்சனை இருக்கலாம்; அதற்கேற்றாற்போல் நூல் தயாரித்தால் அவர்கள் வாங்கும் சத்தமில்லாமல் படிப்பார்களாம். எழுத்தாளர்கள் கூடுமானவரையில் ஓர் அமெரிக்கப் பெயரையும் வைத்துக்கொள்ள வேண்டும். பிசாசுகள் நடமாடுவது போன்ற பயங்கரமான விளம்பர அட்டைகள் பயன்படுத்தப்பட வேண்டும். அவன் முதலாளியின் குறிக்கோள்களை, “கண் தெரியாதவர்கள் மட்டுமே நம் புத்தகங்களை வாங்காமல் இருந்தால் மன்னிக்கலாம்” என்பதுதான்; அந்தளவிற்கு நிர்வாணப் படம் உட்படக் கவர்ச்சியாக நூல் தயாரித்தால் மட்டும் போதாது; விற்பதற்கான தந்திரங்களையும் கையாள வேண்டும். ஸ்டாலினைப்பற்றிய எங்கள் நூல் வந்தபோது ‘ஸ்டாலின் டாச்சாவில்’ கூட்டிப்பெருக்கிய ஒரு பெண்மணியைக் கண்டுபிடித்துத் தொலைக்காட்சியில் நேர்காணல் செய்தோம். 100 வயதான அந்தப் பாட்டியை எங்கள் நேர்காணல் மூலம் ஸ்டாலினின் காதலியாக இருந்தவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினோம். மறுநாளே அனைத்துப் படிகளும் விற்றுவிட்டன. இப்படித் தான்மாஸ் கோவிலுள்ள தாதாக்கள் போகும் விபச்சார விடுதி பற்றிய ‘பொல்லா அல்லது தடைக்கட்டுகள் இல்லாதவள்’ என்ற நாவலை வெளியிடும்போது தொலைக்காட்சியின் ஐந்து விபச்சாரப் பெண்களைப் பேச வைத்தோம். புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் உண்மை என்று சத்தியம் செய்தார்கள்; அச்சடித்த அனைத்துப் படிகளும் மறுநாளே விற்றுவிட்டன.
இவ்வாறு அமெரிக்க பாணித் தந்திரங்களைப் பேசும் விலாத், ஷுட்டோவிடம் “நீங்கள் சொல்லும் உயர் கவிஞர்களின் எழுத்துக்களை நான் வெளியிட்டுக்கொண்டிருந்தால் என்னால் இதுபோன்ற கார்களை வாங்கவே முடியாது” என்று சொல்லிச் சிரிக்கிறான் தொலைபேசியில், கொச்சை ஆங்கிலம் பேசிக்கொண்டே. ஷுட்டோ தன் அறைக்குத் திரும்புகிறான்; பழைய காலத்தை நினைத்துப் பார்க்கிறான்; அது ஒரு கவிதைத் தொகுதி, ஒருவனின் வாழ்க்கையையே மாற்றிய காலம்; ஒரு தனிப்பாடல், அதை எழுதியவனின் சாவுக்குக் காரணமான காலம்; வரிகளின் நீளத்தைப் பொறுத்து வடதுருவப் பனிவெளியில் கவிஞர்களின் தண்டனை நீடித்த காலம்; அப்பனி வெளியில் பல கவிஞர்கள் செத்துப்போகும் சம்பவங்கள் நிகழ்ந்த காலம். குழம்பிப் போகிறான் ஷுட்டோ. “ரஷ்யா ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கித் திரும்புகிறது என்று எண்ணியது ஏதோ அவசரப்பட்ட முடிவு” என்று கருதிக்கொண்டான். கோர்ப்பச்சேவின் மறுசீரமைப்பு, வெளிப்படைத் தன்மை ரஷ்யர்களுக்கு என்ன கொண்டுவந்துள்ளது? கதைசொல்லி எந்த இடத்திலும் கேட்கவில்லை; நம்மைக் கேட்க வைத்துவிடுகிறார். மாற்றம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற முழக்கத்தோடு 90களில் நரசிம்மராவ் அறிமுகப்படுத்திய சந்தைப் பொருளாதாரத்தின் கொடூர விளைவை அனுபவிக்கிற ஓர் இந்திய வாசகனுக்குள் கேள்விகள் எழுவதைத் தவிர்த்துவிட முடியாதுதானே.
ஷுட்டோவுக்குத் தங்குவதற்குத் தனது பல அறைகள் கொண்ட குடியிருப்பு வீட்டில் ஓர் அறையை ஒதுக்கித் தந்தாள் யானா. அந்த அறைக்குப் பக்கத்தில் முதியவர் படுத்துக்கிடந்தார்; தன் காதலியோடு ஊர்சுற்றுவதற்கு வாய்ப்பைத் தேடிக் கிடந்த விலாத், கிழவரைப் பார்த்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான். அந்தக் கிழவரிடம் போய்ப் பேச்சுக் கொடுப்பதா வேண்டாமா என்று வழக்கம்போல் கொஞ்ச நேரம் அப்படி இப்படி எண்ணிப் பார்த்துவிட்டுத் தொலைக்காட்சியை அவர் பார்க்கும்படி திருப்பி வைக்கிறான். நவீன ரஷ்யாவின் புதிய வளத்தைப் பறைசாற்றும்படியான காட்சிகள் ஓடுகின்றன. ஓரிடம் வரும்போது, “அந்த இடத்தில்தான் அந்தக் காலத்தில் நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடினோம்! தாய்நாடு என்று அப்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த நாட்டிற்காக” என்று கிழவர் கத்துகிறார்; யானா சொல்லியதுபோல இவர் ஊமையில்லை, போர்வீரன் என்று தெரிந்துகொள்கிறான். பிறகு நாவல் முழுவதும் அவர் கதைதான் பதிவாகிறது.
அந்தக் கிழவரின் பெயர் வோல்ஸ்கி. ஒரு குடியானவனின் பிள்ளை. பாட்டுத் திறத்தாலே தான் பிழைத்துக்கொள்ளலாமென்று புகழ்பெற்ற லெனின்கிராடு நகரத்திற்குள் வந்தவன். ஆனால் இரண்டாம் உலகப்போர் தொடங்கிவிட்டது; லெனின் கிராடு நாஜிப் படையின் முற்றுகைக்கு உள்ளானது. 1941, செப்டம்பர் 8இல் தொடங்கிய முற்றுகை ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் நீடித்தது. 1944, ஜனவரி 27இல் தான் நாஜிப்படை தோற்றதால் முற்றுகை முடிந்தது; 30 லட்சம் மக்களைக் கொண்ட லெனின்கிராடு தனது 10 லட்சம் மக்களை முற்றுகையில் காவுகொடுத்தது; நீரில்லை, மின்சாரமில்லை, சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ரேஷனில் காத்துக்கிடந்தால் வெறும் 120 கிராம் காய்ந்த ரொட்டி மட்டுமே. குளிரோ பூஜ்ஜியத்திற்குக் கீழே 27 டிகிரி. நெவா ஆறு பனிக்கட்டியால் மூடப்பட்டுச் சமவெளியாயிற்று; குண்டுவீச்சுக்கள் வேறு. 20 லட்சம் பேருக்கு ஒரு மாதத்திற்குப் பயன்படும் உணவுப் பண்டகசாலை குண்டுவீச்சினால் தீயில் எரிந்துபோகிறது. மக்கள் வாழும் கட்டடங்கள் எல்லாம் கல்லறைகளாக மாறும் வகையில் தினம்தினம் ஆயிரமாயிரம் பேர் இறந்துகொண்டிருந்தனர்; இறந்தவர்களுக்கும் இறக்காதவர்களுக்குமான எல்லைக்கோடு சுருங்கிக்கொண்டே போனது; தெருவெங்கும் பிணங்கள். நகரத்திற்கு வாழ வந்த வால்ஸ்கி, தன் உயிரைப் பணயம் வைத்து முடிந்த அளவு மற்ற உயிர்களைக் காப்பாற்ற முயல்வதும், இறந்தவர் உடலைக் கல்லறைக்கு இழுத்துச் செல்வதுமாகச் சேவை செய்துகொண்டிருந்தான். வானத்தைப் பார்க்கிறான்; தெளிவாகவும் நீலமாகவும் இருந்தது; அதை ‘அற்புதமான சவத்துணி’ என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறான். இவனோடு அவன் காதலி மிலாவும் சேர்ந்துகொள்கிறாள். வோல்ஸ்கி போர் வீரர்களுக்கு நடுவே பாட்டுப் பாடிக் கிளர்ச்சியைத் தூண்டுகின்ற பாடகனாகப் போரில் கலந்துகொள்ளுகிறான். தன் காதலி மிலா என்ன ஆனாள் என்றே தெரியாத நிலையில் போரில் ஆர்வத்தோடு கலந்துகொள்ளுகிறான். குண்டுவீச்சில் தூக்கி எறியப்படுகிறான்; முகமே மாறிப்போகும் அளவிற்குக் காயப்படுகிறான். இரண்டரை ஆண்டுகள் நடந்த முற்றுகைப் போர் முடிகிறது; அப்போது அவன் பெர்லினுக்கு அருகில் பீரங்கியால் பாழான குளத்தின் ஓரத்தில் இருந்தான்; ரஷ்யாவிற்குப் பயணிக்கும்போது அவன் காதலியிடம் பாடும் ‘உன்னிடம் மட்டுமே என் கனவுகளை ஒப்படைக்கிறேன்’ என்று உற்சாகமாகப் பாடினான்.
நகரம் மீண்டும் வாழத்தொடங்கியது. பக்கத்து நகரங்கள், ஊர்கள் எல்லாம் தடம் தெரியாமல் போரில் அழிந்துவிட்டதால் லெனின்கிராடு குடியிருப்புகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது; இவனோ தன் காதலி மிலாவைத் தேடி அலைகிறான்; அவளோ முற்றுகைப் போரினால் அனாதை ஆகிவிட்ட குழந்தைகளைப் பேணுகிற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாள். போர் முடிந்த பிறகும் லெனின் கிராடில் வாழ்ந்த 20 லட்சம் மக்களும் மரணத்தை எதிர்பார்த்துத்தான் கிடந்தார்கள்; ரொட்டிப் பஞ்சம் தீர்ந்த பாடில்லை. இவள் அனாதைக் குழந்தைகளுக்காக நெடுஞ்சாலையில் செல்லும் இராணுவ வண்டிகளை மறித்து அவர்கள் தரும் ரொட்டித் துண்டுகளைக் கொண்டுவந்தாள்; அதுவும் ஒரு கட்டத்தில் முடியாதபோது, ராணுவ வீரனுக்குத் தன் உடலை ஒப்படைத்து ரொட்டித் துண்டைப் பெற்றுவந்தாள்.
முற்றுகை முடிந்த லெனின்கிராடில் ஸ்டாலின் அரசாங்கத்தின் அராஜகம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது; இடிபாடுகளுக்கிடையே யாரும் யாரோடும் பேச முன்வருவதில்லை; ஆபத்தாகிவிடும்; எங்கும் ஸ்டாலின் உருவப்படம்; ஊர்வலம்; உளவு அதிகாரிகளின் வருகை; வேண்டாதவர்களை நீக்கும் நடவடிக்கை என்ற பேரில் அராஜகம். “ஒருவர் கைது செய்யப்பட்டார்” என்றுகூடச் சொல்ல முடியாத நிலை; “அவருக்குச் சில பிரச்சனைகள் இருந்தன” என்று கைது செய்யப்பட்டதை சங்கேத மொழியில் பரிமாறிக்கொண்டனர்; இரவில்தான் கைது நடவடிக்கை நடந்தது; எனவே பலரும் உடுத்தியிருந்த உடையைக் கழற்றாமல் உறங்கினர்; சிலர் பைத்தியமாகிவிட்டனர்; எங்கும் தண்டனை முகாம்கள். ஒருநாள் ‘கருப்புக் காக்கைகள்’ என்ற புனைபெயருடைய சீருடைக்காரர்கள் “பிற்போக்குவாதிகள், ஸ்டாலின் பெருமைக்கு எதிராகச் சதிசெய்கிறார்கள்” என்று குற்றம்சாட்டி வோல்ஸ்கியையும் மிலாவையும் கைதுசெய்கிறார்கள்; காதலர்கள் இருவரையும் வெவ்வேறு காரில் தூக்கிப் போகும்போது கிடைத்த இடைவெளியில் இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்டு, “ஒவ்வொரு நாளும் ஒரு கணமாவது வானத்தைப் பார்; நானும் அப்படியே செய்வேன்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
தண்டனை முகாமில் வோல்ஸ்கி கொடுமைப்படுத்தப்படுகிறான். ‘கட்சிவிரோதிகள்’ எனக் குற்றவாளியாகப் புனைந்துகொன்றுவிட எண்ணுகிறார்கள்; ஆனாலும் முகாமில் தைரியமாக இருக்கிறான். தினமும் மிலாவின் முகத்தை வானத்தைப் பார்ப்பதன் மூலம் பார்ப்பதாக நினைத்து மகிழ்ச்சி அடைகிறான். போருக்குப் பிறகு உண்டான அடக்குமுறைகள் எந்த இலக்கணத்திற்கும் ஒத்துப்போகாமல் இருப்பதை நினைத்துப் பார்த்தான். லெனின்கிராடைக் குண்டுவைத்து தாக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு. தண்டனைக் காலம் நான்கரை ஆண்டுகள்; துன்பம் பாவத்தைக் கழுவிச் சுத்தப்படுத்துமாமே! அப்படியென்றால் லெனின் கிராடில் உயிர்பிழைத்த 20 லட்சம் பேரும் பரிசுத்தவான்களாகியிருக்க வேண்டுமே! ஆனால் இன்றும்கூட ஒரு ரொட்டித் துண்டுக்காக மற்றொரு கைதியைக் கொல்லத் துணிகிறானே மனிதன்! என்ன சொல்ல? வானத்தைப் பார்க்கும் அந்த நேரத்தைத் தவிர வேறெதற்கும் அர்த்தமில்லை! இதை அவளிடமும் சொல்ல வேண்டுமே!
இரண்டரை ஆண்டுகள் சிறையில் கழித்திருப்பான்; ஸ்டாலின் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைக்கிறது; தண்டனைக் கூடாரத்திலிருந்து வெளியேறி ஓடிய கூட்டத்தில் எப்படியும் காதலியைக் கண்டுபிடித்து விடலாம் என்று நம்புகிறான். போரினாலும் ஸ்டாலின் இழைத்த படுகொலைகளாலும் அநாதைக் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பெருகிவிட்டனர். அவர்களுக்குப் பாட்டுப்பாட கற்றுக்கொடுக்கிறான். கொடூரமான மனிதர்கள் வாழும் இந்த உலகில் வாழ்வது எப்படியென்று கற்றுக்கொடுக்கிறான். திருமணமும் முடித்துக் கொள்கிறான். மகனும் பிறக்கிறான். ஆனால் இவனின் நாடோடி வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து நடக்கிறது. மகன் பெரியவனாகி ஜெர்மனியில் போய்த் தங்கிவிட்டான். இது என்ன அபத்தம்! வோல்ஸ்கி சொந்தக் கிராமத்திற்குப் போகிறான். இப்போது கிராமம் இல்லை. பெரிய வணிக வளாகம் நின்றுகொண்டிருக்கிறது. முதியோர் இல்லத்தில் உயிர் பிரிகிறது. ஷுட்டோ தொலைபேசி மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறான். கல்லறைக்குப் போகிறான். பல சமாதிகளில் ஹி... கீ அல்லது ஹி... வி (அதாவது unknown woman, unknownman என்பதன் சுருக்கம்) என்று மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. ஷுட்டோ, வோல்ஸ்கி சமாதியில் முழு விவரத்தையும் பொறிக்க அனுமதி பெறுகிறான். ஆனாலும் மனம்மாறி எந்தவிதத்தில் அவை பெரிதாக - uஸீளீஸீஷீஷ்ஸீ னீணீஸீ - முன்பின் தெரியாதவன் என்பதைவிட பெரிதாகப் பயன்படப் போகிறது என்ற நினைப்பில் அந்த முயற்சியையும் விட்டுவிடுகிறான்.
தன் காதலியின் தியாகம்தான் தன்னைக் காப்பாற்றியது என்று தெரியவரும்போது வோல்ஸ்கி சொல்கிறான். “எண்ணிப் பார்த்தால் ஒரு மனித உயிரின் மனோதிடம் உலகிலுள்ள தீமைகள் அனைத்தையும் விரட்டி விடுவதுபோல் தோன்றுகிறது.” (பக்.86) அநாதைகளையும் பஞ்சங்களையும் கொள்ளை லாபங்களையும் கொத்துக்கொத்தாய்க் கொலைகளையும் உருவாக்கும் போரற்ற ஒரு மனித சமுதாயம் என்பது வெறும் நம்பிக்கைதானா? நாவல் மனத்தில் வலியையே விதைக்கிறது.
மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியர் பயன்படுத்தும் ரஷ்ய மொழிச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்க்காமல் அப்படியே (ஸ்தகானேவிட், டாச்சா, காயரில்...) தமிழில் தந்துள்ளார். அதற்கும் காரணம் இருக்கும். ஒவ்வொன்றையும் கவனமாகச் சல்லடையில் சலிப்பதுபோல சலித்துத் துல்லியங்களை நோக்கிக் காத்திருந்து செயல்படுபவர் பேராசிரியர். ரஷ்ய மொழி தெரிந்தால்தான் அவற்றை மொழிபெயர்ப்பது சரி; மற்றவர்களிடம் கேட்டு மொழிபெயர்ப்பது சரியாகாது என்று எண்ணியிருப்பார். ஆனால் வாசிக்கும்போது அவை கொஞ்சம் நெருடலாக இருக்கின்றன.
(நன்றி: காலச்சுவடு)