“இன்றைய இந்தியா’’ என்னும் இந்நூல் தோழர் ரஜனி பாமிதத் அவர்களால் எழுதப்பட்டது. இது 1940_ல் "India Today" என்னும் ஆங்கில நூலாக இங்கிலாந்தில் வெளியிடப்பட்டதாகும். இதனை தோழர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து தந்துள்ளார். இந்நூல் கூறும் வரலாறு என்பது 1946_க்கு முற்பட்டதாகும். இருப்பினும் இந்நூலின் தேவை தற்காலத்திற்கும் தேவையாகயுள்ளது.
தோழர் ரஜனி பாமிதத் அவர்கள் உலகப் புகழ் பெற்ற பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு இங்கிலாந்தில் ஆதரவு திரட்டும் நோக்கத்துடனே இந்நூலை எழுதியுள்ளார். இந்திய வரலாற்றை மார்க்சியக் கண்ணோட்டத்துடன் எழுதிய முதல் மற்றும் முதன்மையான நூல் என்று இதனைக் கூறலாம். இந்நூல் எழுதப்பட்டு 68 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இது எழுதப்பட்டதற்கு 7 ஆண்டு-களுக்குப் பிறகு இந்தியா விடுதலையும் பெற்று-விட்டது. இருப்பினும், இந்நூலை ஆழமாகக் கற்க வேண்டிய தேவை தற்போதும் மிகுதியாகவே உள்ளது. இந்நூலை முழுமையாக வாசிப்பதன் மூலம் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று’’ இந்தியா விடுதலை பெறும் முன்னரே மகாகவி பாரதி விடுதலைப் பள்ளு பாடினார். இந்திய விடுதலை குறித்த இத்தகையதொரு கணிப்பு இந்நூல் ஆசிரியருக்கும் இருந்துள்ளது. ஆகையால்தான், “சுதந்திரத்தை நெருங்கும் இந்தியா’’ என்னும் தொடக்கத் தலைப்புடன் இவ்வரலாற்று நூல் எழுதப்பட்டிருக்கிறது. வரலாற்றாசிரியன் இவ்வாறு விடுதலையை அறிவிப்பது, கவிஞனின் தீர்க்கத் தரிசனத்திற்கு முற்றிலும் வேறுபட்டதாகும். ஏனெனில், வரலாற்றாலன் தக்கச் சான்றுகளின்றி இவ்வாறு அறிவிக்க இயலாது. இந்திய வரலாறு குறித்தத் தரவுகள், சான்றாதாரங்கள், புள்ளி விவரங்கள், முழுமையான மற்றும் நுட்பமான சித்திரம் என அனைத்தும் அடங்கிய வரலாற்று ஆவணமாக இந்நூல் அமைந்திருக்கிறது. மேலும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் சமகாலத்தில் உலக நாடுகளுடன் இந்தியா வைத்திருந்த தொடர்பு, அதன் உடன் நிகழ்ச்சியாகத் தோன்றும் விடுதலை எழுச்சி என அனைத்தும் சான்றுகளுடன் விளக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் இங்கிலாந்-தின் ஆட்சி, இந்தியாவை ஆங்கி-லேயர் சுரண்டிய முறைகள் புள்ளி விவரங்-களுடன் ஆய்வு செய்யப்-பட்டுள்ளன. இந்தியா-வில் சுரண்டப்பட்ட செல்வத்தைக் கொண்டே இங்கிலாந்து ஏகாதிபத்தியமாய் உருப்-பெற்றிருக்கிறது. அதே சமயம், இந்திய நாடும் _ இந்திய மக்களும் ஓட்டாண்டிகளாய் மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலை இந்நாள் வரை தொடர்ந்து வருகிறது. தற்போது, இந்தியா மீதான இங்கிலாந்தின் நேரடி ஆதிக்க முறை ஒழிந்து, மறைமுக ஆதிக்கமாகத் தொடர்ந்த-படியுள்ளது. இந்நூல் அதைத் தெளிவுபடுத்துகிறது.
இந்தியாவைப் பற்றிய காரல்மார்க்சின் கட்டுரை-களும் கண்ணோட்டமும் வரலாற்றறிஞர்களின் மனம் கவர்ந்தவையாகும். அவை இந்தியாவை திட்டவட்ட-மாய் புரிந்து கொள்வதற்கும் இந்திய வரலாறு குறித்த சரியான முடிவுகளைக் கண்டடைவதற்கும் ஆதாரமாய் அமைந்துள்ளன. இதனைப் பின்பற்றியே ரஜனி பாமிதத்தின் வரலாற்று எழுதுமுறை அமைந்திருக்கிறது. இந்தியா பழங்காலம் முதல் இன்றுவரை தேக்கநிலைச் சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. தொடர்ந்து அரசர்கள் மாறினாலும் அரசுகள் மாறினாலும் அவை பெரிதும் மக்களை பாதிக்கவில்லை. அரசனைப் பெரிதளவும் சாராமலே கூட கிராமங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றை “சுய பூர்த்தி கிராமங்கள்’’ (Self efficient Society) என்று காரல்மார்க்ஸ் அழைக்கிறார்.
இப்படிப்பட்ட பொருளாதாரக் சமூக முறையை “ஆசியபாணி உற்பத்தி முறை’’ சமூகம் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இதனை ஆங்கில அரசாங்கம் பச்சாதாபமற்ற முறையில் அடித்து நொறுக்குகிறது. அதேவேளை, அடித்து நொறுக்கப்பட்ட அவ்விடம் வெற்றிடமாகவே விட்டுவிடப்படுகிறது. ஏனெனில், இந்தியாவைச் சுரண்டுவதையே ஆங்கிலேயர் நோக்க-மாகக் கொண்டிருந்தனர். அதனை வளர்த்தெடுப்பதை அவர்கள் விரும்பவில்லை. இருப்பினும், ஆங்கிலேயர் தங்களை அறியாமலேயே இந்தியச் சமூகத்தில் மாறுதல் ஏற்படுவதற்கும் அடித்தளமிட்டனர். மார்க்சின் இந்தக் கருத்துகள் மிகவும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டியவையாகும். ஏனெனில், ஆங்கிலேயர் வருகைக்கு முந்தைய இந்தியச் சமூகம் பிற்போக்கான நிலைமைகளுடனே அமைந்திருந்தது.
“இந்தச் சிறு சமூகங்கள் ஜாதி வேறுபாடுகளாலும் அடிமை முறைகளாலும் கலக்கமடைந்திருந்தன. மனிதனைச் சூழ்நிலையின் எஜமானன் ஆக்குவதற்குப் பதில் அவனைச் சுற்றுச் சார்புக்கு அடிமைப்படுத்தின. தன்னைத் தானே மாற்றிக் கொண்டிருந்த சமூக அமைப்பை என்றுமே மாறாத விதியாக்கியது. இந்த விதத்தில் இயற்கையையே மனிதன் கும்பிட்டு வணங்கும் மிருகத்தனமான நிலையை சிருஷ்டித்தது. இயற்கையின் எஜமானாகிய மனிதன், குரங்காகிய ஹனுமான் முன்னால், பசு தெய்வத்தின் முன்னால் தண்டனிட்டு வணங்கியதில் இந்தச் சிறுமை காட்சியளித்தது’’ (நூல்: 138_139)
பாம்பு, குரங்கு போன்றவற்றை வணங்குவது, மூட நம்பிக்கைகளில் மூழ்கித் திளைப்பது இன்னும் கூடத் தொடர்ந்தபடிதான் உள்ளது. இந்திய விஞ்ஞானிகள் சிறப்பு வழிபாடு செய்த பின்னர்தான் செயற்கைக்-கோளைக் கூட விண்ணுக்குச் செலுத்துகின்றனர். இது மேலும் நமக்கு அதிர்ச்சியூட்டுகிறது. இவை-யெல்லாம் ஆசியபாணி உற்பத்தி முறையும், அதன் கலாசார முறையும் நவீன வேடமிட்டு இந்தியாவில் இருப்பதையே உணர்த்துகின்றன. ஆகையால், இந்தியச் சமூகம் மீண்டும் மீண்டும் தேக்கநிலையில் சிக்கித் தவிக்கிறது. புரட்சிகர மாற்றம் ஏற்பட்டால் தவிர இந்நிலை மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. இது ஆய்வுக்குரியதாகும். இவ்விவாதம் தொடர இந்நூல் கருவியாக அமையும்.
(நன்றி: கீற்று)