இந்தியப் பொருளாதாரத்தின் ஞான மரபு

இந்தியப் பொருளாதாரத்தின் ஞான மரபு

சவூதி அரேபியாவின் பாலைவனங்களில் வசித்துவரும் பழங்குடியினரை நாகரிகப்படுத்தும் முகமாக நவீன வசதிகள் உடைய ஒரே மாதிரி அடுக்ககங்களை நகரங்களில் கட்டியது அந்நாட்டரசு. அதில் வலுக்கட்டாயமாக அவர்களைக் குடியேற்றியது. ஆனால், இரண்டொரு நாட்களிலேயே “எங்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று குச்சியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் பாலைவன வாழ்க்கைக்கு மீண்டார்கள்.

நாம் வேண்டுமென்றால் இதைப் புரிந்துகொள்ளச் சுணங்கலாம். ஆனால், இயற்கைக்குள் வாழும் தொல்குடிகள் தங்கள்மீது திணிக்கப்படும் இவ்வகையான பிறழ்வுகளை உணருவதற்கு நெடுங்காலம் ஆவதில்லை.

ஒற்றை அச்சில் வார்க்கப்பட்டது போன்ற வீடுகளுக்குள் அவர்களால் எப்படிப் பொருந்திக்கொள்ள இயலும்? அடுக்ககங்களில் நவீன வசதிகள் இருக்கலாம். ஆனால், அவர்களின் வாழ்வியல், பண்பாட்டுச் சூழலைப் பெயர்த்து அங்கு வைக்க முடியுமா?

இதைச் ‘சிக்கலான வாழ்க்கை முறை’ என வரையறுக்கும் ஜே.சி. குமரப்பா, மனித வாழ்க்கை ‘வாழ்தல்’ என்ற நிலையிலிருந்து ‘உயிரோடு இருத்தல்’ அல்லது ‘பிழைத்திருத்தல்’ என்ற கீழ் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என்கிறார். இந்தச் சிக்கலைத் தனித்த விஷயமாகப் பார்க்க இயலாது. இது மக்களின் வாழ்விடத்தில் தொடங்கி உடை, உணவு, பண்பாடு, மொழி, விளையாட்டு என அனைத்திலுமாக விரிந்துகொண்டே செல்கின்றது. இந்தப் பார்வை பொருளாதாரத்திற்குள்ளும் தனது ஆக்கிரமிப்பை நடத்தியுள்ளது.

“எல்லோரும் ஏற்றுக் கடைப்பிடிக்கின்ற வாழ்க்கைத் தரத்திலிருந்து சற்றே விலகினாலும் மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றியே மக்கள் கவலைப்படுகின்றார்கள். குடும்ப வாழ்க்கை கூட மேட்டுத்தர மக்களின் தொழில், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றினால் வரையறுக்கப்படுகின்ற புறத்தோற்றங்களாலும் நடப்பு வழக்குகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.”

ஜே.சி. குமரப்பாவின் வரிகள் அப்படியே சமூக நிகழ்வாக இன்று மாற்றமடைந்திருக்கின்றன. அவர்களிருவரும் மனமொத்த இணையர். அழகான இரண்டு குழந்தைகள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியியலாளர் வேலை. தேவைக்கும் மேலான சம்பளம், நல்ல சமூக அந்தஸ்து. திடீரென்று ஒரு நாள் கணவன் தற்கொலை செய்துகொண்டார். வாழ்வதை நிறுத்தியதற்கான காரணத்தைத் துண்டுச்சீட்டில் எழுதி வைத்திருந்தார். பல லட்சங்கள் மதிப்புள்ள நாற்சக்கர ஊர்தி, ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட அடுக்ககக் குடியிருப்பு போன்றவற்றை மாதத் தவணைகளில் இணையர் இருவரும் பெற்றிருந்தனர். கடனை ஒழுங்காகத் திரும்பச் செலுத்தியும் வந்தனர். திடீரென ஒரு நாள் கணவனின் மாத ஊதியத்தில் கணிசமான வெட்டு விழுந்தது. திகைத்து நின்றவரிடம் ‘‘நிறுவனத்தின் தற்போதிய நிதிநிலையில் இதுதான் சாத்தியம். கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களை வேலையை விட்டு ஒன்றும் நாங்கள் தூக்கிவிடவில்லையே...” என்றது நிர்வாகம். அடுக்ககக் குடியிருப்பு, ஊர்தி இவற்றிற்கான தவணைகள் நொடியில் வண்ணத்துப் பூச்சிமேல் வைத்த பாறாங்கல்லாக மாறியது. சம்பளத்துடன் சமூக அந்தஸ்தும் வசதியான வாழ்க்கைக்குரிய கனவுகளும் சரிந்துவிழுந்த புள்ளியில் வாழ்க்கை மீதான முற்றுப்புள்ளியும் வந்து இணைந்துகொண்டது.

விலை மதிக்கமுடியாத அருட்கொடைகளான மனித உயிரும் வாழ்வும் தன்மானமும் நம்பிக்கையும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் நுகர்வு வேட்கைக்கும் நகர மாயையின் தரத்திற்கும் மிகத் தாழ்வாக வைக்கப்பட்ட கீழ்மை.

பண மையப் பொருளாதாரத்தின் தொடர்விளைவான நகர மயமாக்கல் வாழ்க்கை பற்றிய உண்மையான கோட்பாட்டைப் புரட்டிப்போட்டுவிட்டு அதைத்தான் நேரானது, சரியானது என அடித்துச் சொல்கின்றது.

புரண்டவற்றை நமதாக்கிக்கொண்டு காந்தியையும் காந்தியப் பொருளாதார நிபுணர் ஜே.சி. குமரப்பாவையும் நாம் கைவிட்டதன் கைம்மாற்றை இளம் குடும்பத்தின் வாழ்க்கைக்குள் மட்டுமல்ல சமூகத்தின் பெரும் பகுதிக்குள்ளும் செருகிவிட்டோம்.

ஜே.சி. குமரப்பா முன்வைக்கும் காந்தியப் பொருளா தாரக் கோட்பாட்டில் மக்கள், மண், சூழலியல், கைத்திறன்தொழில், குறைந்த அளவிலான அதே நேரத்தில் தனி மனிதனுக்கும் போதுமான வாழ்வாதாரம், அனைவருக்கும் வருவாய், கிராமங்களில் கால் பதித்து மேலெழும்பும் வளர்ச்சி போன்ற அனைத்து நல அம்சங்களும் கண்ணுங்கருத்துமாய்க் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், தேசத் தந்தை காந்தியின் கண்கள் எதிரிலேயே அவரது பொருளாதார கொள்கைகளை நேரு தலைமையிலான இந்திய அரசு முற்றிலுமாகக் கைவிட்டது.

இன்றைய சிக்கலான பொருளாதாரமுறைக்கு மாற்றாக ஜே.சி. குமரப்பா முன்வைக்கும் நிலைத்த பொருளாதாரம் என்பது எண் இலக்கங்கள், தங்கம், பணத்தாள்கள், ஆதாயம், இழப்பு போன்றவற்றை மட்டும் சுற்றிச்சுற்றி வரும் வறட்டுச் சித்தாந்தம் அல்ல.

நேரெதிர் தீவிர நிலைப்பாடுகளுடைய முதலாளித்துவ, பொதுவுடைமை பொருளாதாரச் சித்தாந்தங்களையும் அவர் பின்தொடரவில்லை. அவற்றை விமர்சனப்பூர்வமாக நிராகரித்து முன்செல்லும் அவர் பொதுவாக மக்களிடையே புழங்கிக்கொண்டிருக்கும் தலையாய பிரச்சினையாகப் பண மையப் பொருளாதாரத்தையே அடையாளங் காணுகின்றார். அதற்கான சான்றுகளை மக்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகளின் குவியலிலிருந்து கிள்ளி எடுத்துக்காட்டுகின்றார்.

விவசாயத்தையும் கைத்திறன் தொழில்களையும் கிராமத்தையும் மையமாகக் கொண்ட, பிற வாழ்க்கைத் துறைகளுடன் நன்கு ஒத்திசைந்து இயங்குகின்ற, நமது நாட்டின் நாகரிகத்திலிருந்தும் இங்கு நிலை நிற்கும் அனைத்து ஞான மரபுகளிலிருந்தும் மலரக்கூடிய மலராகவே இந்தியப் பொருளாதாரத்தை அவர் காண்கின்றார்.

தத்துவவியலையும் மானிட நேயத்தையும் அறத்தையும் தார்மிக மதிப்பீடுகளையும் பிரபஞ்சத்தின் இயங்கு விதிகளையும் அதில் இணைத்ததின் வழியாக அவர் இந்தியாவிற்கான பொருளாதாரக்கொள்கையை இயற்கையின் லயத்தோடு மீண்டும் பிணைத்தார்.

உயிர்த்துளி மின்னும் இந்தக் கலவையிலிருந்து இந்தியப் பொருளாதாரக் கொள்கை தன் ஆன்மாவைச் சோதித் தறியும் ஓர் இதயத்தையும் சேர்த்தே பெற்றுக்கொண்டது.

‘பழையதே சிறந்தது’ என்ற முற்காலப் பொற்காலக் கொண்டாட்ட வாதத்திற்குள்ளும் தன்னை முடக்கிக் கொண்டு நிகழ்காலப் பருண்மைகளைக் கண்மூடித் தனமாகக் குமரப்பா நிராகரித்து விடவில்லை. இயந்திர மயமாக்கலையும் அவர் முற்றாக மறுக்கவில்லை.

மனித வாழ்க்கையிலுள்ள கடினங்களை எளிதாக்கும் விதத்தில்தான் இயந்திரங்களின் பயன்பாடு இருக்க வேண்டும். அது நம்மை அடிமைப்படுத்தி நமது அன்றாட வாழ்வின் வெளியிலிருந்து சக மனிதர்களின் உழைப்பை வெளியேற்றும் வகையில் மனித நீக்கத்தைச் செய்துவிடக் கூடாது என எச்சரிக்கின்றார்.

பேராசை, போட்டி, ஒரு சிலருக்கான வளர்ச்சி, சமூகக் கூட்டு உணர்வின்மை, கொல்லும் உளச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, அவ நம்பிக்கை போன்ற எதிர்மறை அம்சங்களையே நடைமுறையில் இருக்கும் பொருளாதாரக்கொள்கை விளைவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெளியிலிருந்தோ ஆதிக்கக் குறியாளர்களின் மூளையிலிருந்தோ வரக்கூடாது. அது தூய்மையாக்கப்பட்ட அகத்திலிருந்து முளைவிட்டு சமூகத்தின் கடைக்காலிலிருந்துதான் எழும்ப வேண்டும். பின்னர் அது கோபுரம் நோக்கிச் சமஅளவில் வளர்ந்து உயர்ந்து செல்ல வேண்டும்.

அப்படி அமைதியாகவும் உறுதியாகவும் நிலைபெறும் வளர்ச்சியில் எவருடைய தனித்தன்மையும் தளையற்ற தன்மையும் பறிக்கப்படாது. எல்லாப் பிரிவு மனிதர்களும் பிற உயிரினங்களும் இயற்கையின் எல்லா கூறுகளும் தங்களுக்குரிய நீதமான பங்கை எவ்வித வன்முறையோ அதீத எத்தனங்களோ இன்றிப் பெற உறுதியளிக்கப்படும்.

இந்தப் பொருளாதாரக்கொள்கையைத் தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புதுக் கொள்கை என எந்த இடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை.

மனித அறிவின் பரப்பு எல்லைக்குட்பட்டதுதான். மனித வாழ்வைவிடப் பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் கடவுளுடன் கொண்டு இணைப்பதன் வாயிலாக அவர் செய்ததெல்லாம் பொருளாதாரத்தை அதன் இயல்பான வடிவில் மீட்டுருவாக்கம் செய்ததுதான் என ஆன்ம பணிதல் செய்கின்றார் குமரப்பா.

குருவி, மலை, நாணல் செடி, பழம், ஆறு போன்ற இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகள் தங்களுடைய இயல்பான அன்றாடச் செயல்பாடுகளின் வழியாகவே இயற்கையின் மற்ற அனைத்துக் கூறுகளுடனும் எவ்வித நெருக்குதலும் இல்லாமல் ஒத்திசைகின்றன. ஒன்று மற்றதை வாழ்ந்து செழிக்க வைக்கின்றன.

இயற்கையின் மற்றெல்லா உயிரற்ற உயிருள்ள அசையும் அசையாப் படைப்புகளுக்கும் இது பொருந்தும். முரண்களும் மோதல்களும் நீக்கப்பட்ட அன்பும் அமைதியும் ததும்பும் சூழலில் இயற்கையின் உள்வெளி லயத்துடன் பொருளாதாரத்தைக் கச்சிதமாகக் கொண்டு பொருத்தி அதற்கு நிலைத்த தன்மை என்ற அமரத் தன்மையைப் பெற்றுக் கொடுக்கின்றது இந்த நூல்.

இந்த நூலை மொழியாக்கிய அ.கி. வேங்கட சுப்ரமணியனின் நடை சிறப்பாக உள்ளது. நூலின் எழுத்துரு, பத்தியமைப்பு, வெளி அட்டை வடிவமைப்பு, உள் ஓவியங்கள், தரமான அச்சுத்தாள் என அனைத்திலும் செய்நேர்த்தி மிளிர்கின்றது.

மின்னஞ்சல்: Shalai_basheer@yahoo.com

(நன்றி: காலச்சுவடு)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp