தியோடர் பாஸ்கரன் அவர்களின் இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப் பார்வை நூலை வாசித்து முடித்தேன். காட்டுயிர் சார்ந்த அவருடைய நூல்கள் சிலவை தனிப்பட்ட முறையில் எனக்குப் பல துலக்கங்களைத் தந்திருக்கின்றன. அதேப்போல இந்த நூலும் எனக்கு முக்கியமானதாகிறது.
கென்னல் க்ளப் ஆஃப் இந்தியா (இந்திய நாய்கள் மன்றம்) உறுப்பினராக இருந்த ஆசிரியருக்கு, இந்திய நாய் இனங்கள் குறித்து பல அரிதான தரவுகளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளும், அறிமுகங்களும், தொடர்புகளும் வாய்த்திருக்கின்றன. அதனை மிகச் சரியாகப் பயன்படுத்தி, ஓர் அவசியமான ஆவணத்தைத் தமிழில் தந்திருக்கிறார்.
தமிழ் இலக்கியங்கள் தொடங்கி, நடுகற்கள், குகை, பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், கோயில்கள், புடைப்புச் சிற்பம், சமாதிகள், நாடோடி இனக்குழு, ஜமீன்கள், ஐரோப்பியர், எகிப்து, ஜப்பான், பாரசீகர் என்று எங்கெல்லாம் நாய்கள் குறித்தான தகவல்கள் இடம்பெற்றிருக்கிறதோ அங்கிருந்தெல்லாம் விசயங்களைத் திரட்டி ஒருமுகப் படுத்தியிருக்கிறார்.
சான்றாக மருது சகோதரர்கள் கோட்டையில் காவல் காத்த கோம்பை நாய்கள் முதல் காவல்கோட்டத்தில் வரும் காவல் நாய்கள் பற்றிய குறிப்புகள் வரை பலதும் தொகுக்கப்பட்ட நூல் இது. தொகுக்கப்பட்ட என்ற வார்த்தை சரிதான் என்று நினைக்கிறேன். காரணம், இம்மாதிரியான ஆய்வு நூல்களில் களப்பணிகளின் பங்களிப்பும், நேரடி அனுபவங்களும் ஒன்றுசேரும்போது அது ஆசிரியரின் நேரடி நூலாக இருக்கும்.
ஆனால், அப்படியான களச் சேகரிப்புகள் இந்நூலில் சொற்பமாகவே அல்லது மேம்போக்காக வெளிப்பட்டிருக்கிறது.
பத்திரிகைத்துறையில் டெஸ்க்கை விட்டு நகராமல் சம்பவ இடத்தில் நேரேசென்று பார்த்ததுபோல கதை அடிக்கிறவர்களை டேபிள் ஜர்னலிஸ்ட் என்று கிண்டலடிப்பார்கள். தியோடர் பாஸ்கரன் அவர்கள்போல கதை எல்லாம் எழுதவில்லை. ஆனால், 'அவர் அப்படிச் சொல்கிறார்'. 'இவர் இப்படிச் சொல்கிறார்', 'அதுபற்றி எனக்குத் தெரியவில்லை'. 'அதை நான் பார்த்ததில்லை'. 'இதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்', 'இவரிடம் போனில் கேட்டேன்','அவர் நேரில் பார்த்தபோது சொன்னார்' என்பது மாதிரியான வழுகலான வார்த்தைகளை பக்கங்கள் முழுக்க விரவி விட்டிருக்கிறார்.
சரி நூல் தலைப்புக்கு ஏற்ப வரலாற்றுப் பார்வையில் ஆசிரியர் இறுதியாக என்ன சொல்ல வருகிறார் என்று காத்திருந்தால் நாய் வளர்ப்பு முறை பற்றி சில வகுப்புகள் எடுக்கிறார். தெருநாய்களுக்குச் செய்யும் கருத்தடை நடவடிக்கைகளில் உள்ள சிக்கலையும், அவற்றின் பாதிப்புகளையும் பேசுகிறார். அவை நூல் தலைப்புக்கு சத்து தராத கட்டுரைகளாகின்றன.
பிறமொழிகளில் நாய் இனங்கள் குறித்தும், அவற்றின் பூர்வீகம், வேட்டைத்திறன், இனக்கலப்புகள், குறித்தும் பல ஆய்வுகளும், கட்டுரைகளும், வளர்ப்பாளர்களின் அனுபவ நூல்கள், குறிப்புகள் நிறையவே உள்ளன. தமிழில் அதுமாதிரி தனித்த நூல்கள் வெகு அரிது. தியோடர் பாஸ்கரன் போன்ற காட்டுயிர் ஆர்வலர்கள் முயலும்போதுதான் அந்தத் தேவை சற்றேனும் பூர்த்தியடைகிறது.
ஆக இவ்வாறான பதிவுகளின் போது அறியத்தகும் விபரங்களை மட்டும் தந்துவிட்டுப் போவது 140 பக்க புத்தகத்தை 190ரூபாய் கொடுத்து வாங்குகிற வாசகனுக்குப் போதாமையைத் தந்துவிடும். குறிப்பாக விபரங்கள் தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புள்ள வடக்கிந்திய நாயினங்களை விபரமாகப் பேசிவிட்டு, தென்னிந்திய அல்லது தமிழக நாயினங்கள் பற்றிப் பேச வாய்ப்புள்ள இடங்களில் கதையடித்துவிட்டுப் போவது பெரும் ஏமாற்றம். (பக்கம் 112,113).
இந்திய நாயினங்கள் பலவற்றுக்கும் உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, பல உள்நாட்டு நாய் இனங்கள் அழிந்துபோயின. வெளிநாட்டுக் கலப்பினங்களால் உள்ளூர் நாட்டு இனங்களை இழந்துவிட்டோம் என்ற கருத்துகளையே அடியாழமாக இந்நூல் வெளிப்படுத்துகிறது.
எனில், தமிழ்நாட்டளவில், இலக்கியம், பக்தி இயக்கம், பொதுச்சமூக வரலாறு என தொடர்ந்து நாகரிக வளர்ச்சியில் மனிதர்களோடு இயைந்து வரும் தமிழக நாய் இனங்களைப் பற்றி இவ்வளவு மேம்போக்காகக் கதை சொல்லிவிட்டுப் போனால் பன்னாட்டு அங்கீகாரம் எங்கிருந்து கிடைக்கும்? வரலாற்றுப் பார்வை என்பது ஒரு தொடர்ச்சியின் கண்ணியைக் கண்டடையக் கூட செய்யாமல் பரிதாபகரமாக செய்தி வாசிக்கிறது இந்நூல். ஆனபோதும் முக்கியப் பதிவு என்பதில் வேறு கருத்தில்லை.
- கார்த்திக் புகழேந்தி
18-01-18