இந்தியா என்கிற கருத்தாக்கம்: நூல் அறிமுகம்

இந்தியா என்கிற கருத்தாக்கம்: நூல் அறிமுகம்

சுனில் கில்நானி ஆங்கிலத்தில் எழுதியது ‘The idea of India’ என்னும் அற்புதமான நூல். இதனை ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்கிற ஆகப்பொருத்தமான தலைப்போடு அழகு தமிழில் தந்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. பெருமைக்குரிய சென்னை சந்தியா பதிப்பகம் இதனை கொண்டு வந்திருக்கிறது.

இப்படி அரிய நூல்களைஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டு செல்லும் மொழிபெயர்ப்பாளர்களின் அணிவரிசையில் அக்களூர் இரவி குறிப்பிடப்படவேண்டியவர். மூலமொழியிலுள்ள நூலின் விஷயங்களை மிகக்கவனமாக உள்வாங்குதல், அதனைத் தெளிவுற மொழிபெயர்க்கப்பட வேண்டிய புதிய தளத்திற்குக் கொண்டுசெல்லுதல் என்பன மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவிக்கு இலகுவாய் வசப்பட்டிருக்கிறது. மாலதி ராவ் ஆங்கிலத்தில் எழுதி சாகித்ய அகாதெமியின் விருதுபெற்ற நாவலைத் தமிழில் தந்தவர் இரவி. சாகித்ய அகாதெமிக்கென ஜே கேயின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தமிழில் தந்த ஆழமான சிந்தனையாளர். மார்க்சிய நெறிகள், அதனை செயல்படுத்துதலில் தொலைபேசி தொழிற்சங்க அரங்கில் வெகு அனுபவங்கள் அவருக்குண்டு.

சுனில் கில்நானியின் அந்த ஆங்கில நடை அது வாசகனை ‘The idea of India’ என்னும் அவரின் மூல நூலை படிக்கின்றபோது சொக்கவைத்துவிடும். அக்களூர் இரவியின் இந்தியா என்கிற கருத்தாக்கம் என்னும் தமிழ்மொழிபெயர்பை வாசிக்கின்ற போதும் அதே உணர்வினை வாசகன் கண்டுணர நிச்சயம் வாய்க்கும். இதுவே மொழி பெயர்ப்பின் வெற்றி எனலாம். தேவைப்படும் போதெல்லாம் மூல ஆசிரியரைத் தொடர்பு கொண்டு மொழிபெயர்ப்பை ச்செழுமைப்படுத்தியிருக்கிறார். இந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் வெளிவந்த நூல்களில் கவனம் பெற்ற ஒரு படைப்பு இது.

26 ஜனவரி 1997,அன்று எழுதப்பட்ட முன்னுரையில் கில்நானி இந்த நூல் ‘இருபதாம் நூற்றாண்டு இந்தியாவின் பொது வாழ்வை ப்பற்றியது’ என்று மிகச்சரியாகவே குறிப்பிடுகிறார். 2003 ஆம் ஆண்டு பதிப்பிற்கான அறிமுக உரையில் கில்நானி இப்படிப்பேசுகிறார்.

‘வாழ்க்கையை மாற்றும்,வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்,வசீகரம் நிறைந்த, தினந்தினம் மாறும் தொழில் நுட்பத்தின் சாத்தியங்களை பம்பாயில் ஒருவர் உணர்ந்திருக்கலாம். ஆளும் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட அந்தப்படுகொலைகளுக்கு உதவிய தொழில் நுட்பத்தின் ஈவிரக்கமற்ற மிருகத்தன்மையை குஜராத்தில் அவர் உணர்ந்திருக்கமுடியும். இத்தகையச்சூழலில்,இவற்றில் எதைத்தேர்வு செய்வது என்ற தர்மசங்கடமான நிலையில் இந்தியா இருக்கிறது.’

இது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கில்நானி எழுதியது. நாடும் நடப்பும் இன்று நமக்கு முன்னால் எப்படி என்பது நாம் உணர்கிறோம்.ஊழலில் மாட்டிக்கொண்டு நிர்வாணமாகிய அரசு இயந்திரத்தை ப்பார்க்கசகிக்காமல் இந்திய மக்கள் ஒரு மாற்றம் விழைந்தனர். மாற்றம் மாற்றமாக இல்லை.ஏமாற்றமாகவே அனுபவமாதல் நிகழ்கிறது. மாவு எப்படியோ பணியாரம் அப்படி. அன்று நரி.இப்போது குரங்கு .இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு இந்திய நாடு திண்டாடுகிறது.

2017 ஆம் ஆண்டு பதிப்புக்கான முன்னுரையில் ‘மோடியும் அவரது கூட்டணி நண்பர்களும், அனைத்து அரசியல் எதிரிகளையும் துடைத்தெறிந்து,’காங்கிரஸ் இல்லாத இந்தியாவை’ உருவாக்க விரும்புகிறார்கள். விமர்சனங்களும் கருத்து மாறுபாடுகளும், தேசத்திற்கு எதிரானவை என முத்திரை குத்தப்படுகின்றன’என்று சொல்லிப்போகிறார் கில்நானி.

மகாத்மா காந்தி விரும்பியது இந்திய விடுதலைக்குப்பின் காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்பதை. அதன் நோக்கம் புனிதமானது. நாசகார சக்திகள் புனிதமான விடுதலை இயக்கத்தின் விழுமியங்களை சொந்தம் கொண்டாடிச் சுயலாப வேட்டைக்காரர்களாக மாறிப்போவார்கள். கொள்ளைக்கூடாரமாய் இந்தப் புனித இயக்கம் மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் தேசப் பிதா. ஆனால் அந்த விபரீதமும் அரங்கேறியது. மோடி வார்த்தை ஜாலக்காரர் ஆயிற்றே. காந்தி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை விழைந்தார். எனவே அதைத்தான் தான் நிறைவேற்ற விழைவதாகக் குறிப்பிடுகிறார்.

கில்நானியின் அவதானிப்புக்கள் இரவியின் மொழி ஆக்கத்தில் சிறப்பாக வந்திருப்பதை முன்னுரைகள் வாசகனுக்குப்பறை சாற்றுகின்றன.
இந்நூலை வாசிப்பதற்கு கில்நானியின் முன்னுரைகள் மிகச்சிறந்த அடித்தளம் என்று கவனமாகக்குறிப்பிடுகிறார் மொழிபெயர்ப்பாளர். ஆகச்சரியே.
முன்னுரையின் இறுதியில் ஜவஹர்லால் நேரு(1946) குறிப்பிட்டதை கில்நானி நினைவுபடுத்துகிறார்.

‘இந்தியாவின் மனோபாவத்தையும் தோற்றத்தையும் மாற்றி அவளுக்கு நவீனத்துவ துகிலை அணிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் கவலையுடனும் இருந்தேன். இருப்பினும் என்னுள் சந்தேகங்கள் எழுந்துகொண்டுதான் இருந்தன.’

வேத மேத்தா (1970)ல் குறிப்பிட்டதுவும் உடனே அங்கு வருகிறது. சாராம்சம் இதுதான். ஆயிரக்கணக்கானோர் பட்டினியில் வாடும்போது தேசத்தின் தலைவர்கள் பெரிய விருந்தொன்று நடத்தினர்.சிலைகள் பல வைத்து ஆராதனை செய்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கையின் ஐந்து விரல்கள் சுவரில் எதையோ எழுதின.அது இன்னது என்று கூடியிருந்த யாருக்கும் விளங்கவில்லை.

‘எழுதப்பட்டிருப்பதைப் படித்து அதன் பொருளைத் தெரியப்படுத்தக்கூடிய சந்தேகத்தைத் தீர்க்கக்கூடிய அறிவு வெளிச்சமும் புரிதலும் ஞானமும் கொண்டவர் எவரையுமே கண்டுபிடுக்க முடியவில்லை’ இப்படி முடிகிறது அது. முடிச்சுக்கள் ஒரு நாள் அவிழலாம்.

புத்தகத்தின் பின் அட்டையில் அமர்த்தியா சென்னின் வாசகம் இந்நூலைப் பற்றி வாசகனுக்கு கச்சிதமாக உரைக்கிறது.’ எழுச்சியூட்டும் சீற்றம் மிகுந்த உள்முகப்பார்வை கொண்ட படைப்பு’ இப்படி.

அறிமுகம் இதனிலிருந்து தொடங்கி இந்நூலை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.’பொருளாதார நவீனத்துவம் நோக்கிய விழைவு,பெருமளவில் இங்கு சமமற்ற சமுதாயச்சித்திரத்தைத்தீட்டியிருக்கிறது. பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு தோல்வியாகவே இது முடிந்திருக்கிறது. இதற்கான காரணங்கள் எண்ணிலடங்கா. இக்காரணங்கள் பெரும்பாலும் தொழில் நுட்பம் சார்ந்தவை. அவை சிக்கல் நிறைந்தவை. சர்ச்சைகளுக்கு உட்பட்டவை என்று கூறமுடியும். மறுக்கப்படும் வாய்ப்புகளும், சமமற்ற விநியோக முறையும்தான் இவற்றிற்கான தர மாதிரிகள்’ என்று சொல்கிறார் கில்நானி.

மிக உச்சத்தை எட்டியமேல்தட்டு மக்கள் ஒரு புறம், அதல பாதாளத்தில் கிடக்கும் சாமானியர்கள் மறுபுறம் என்று இச்சமுதாயம் பிரிந்து பிரிந்து கிடப்பதை கில்நானி சரியாகவே எடை போடுகிறார். மகாத்மா காந்தி, ஜவஹர் லால் நேரு, வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய ஆளுமைகளைத்தொட்டுப்பேசுகிறார். அவர்களின்றி இந்தியா என்பது ஏது என்று வாசகனும் ஒத்துப்போகவே செய்கிறான்.

இறுதியாக இந்த அத்தியாயத்தில் மிகச்சரியான ஒரு விஷயம் வருகிறது.’காந்திக்கு எதிராக அம்பேத்கர் மீண்டும் நிறுத்தப்படுகிறார், நேருவிற்கு எதிரான யுத்தத்திற்காக பட்டேல் மீண்டும் தருவிக்கப்படுகிறார்.’ அற்புதமாக இரவியின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர் நம்மைப் பேசவைத்து விடுகிறார்.

பட்டேல் தருவிக்கப்படுகிறார் என்பதில் ஒரு விஷயம் பொதிந்து கிடக்கிறது. வரலாற்றுப்போக்கில் பட்டேலை மூட்டைகட்டி தூக்கிவைத்துவிட்ட ஒரு அரசியலையும் நமக்கு கில்நானி நினைவுக்குக்கொண்டு வருகிறார். பட்டேல் இருட்டடிப்பு. தேசியக்கட்சிக்கு ஒரு அரசியல் இல்லாமலா இப்படி என்பதை வாசகன் எண்ணிப்பார்க்கிறான். இன்று குஜராத்தில் பட்டேலின் ஆகப்பெரிய சிலைவைக்க ஏற்பாடு நடக்கிறது. சிலையின் உயரம் அச்சம் கொள்ள வைக்கலாம். மனிதர்கள்தான் சிறுத்துப்போகிறார்கள்.

அடுத்த அத்தியாயம் ‘ஜனநாயகம்’. பி. ஆர் அம்பேத்கரின் வாசகத்தோடு தொடங்கும் பகுதி.’முரண்பாடுகள் நிறைந்த இந்தவாழ்க்கையை எவ்வளவு காலம் தொடர்ந்து வாழப்போகிறோம்’ என்னும் கனம் கூடிய அம்பேத்கரின் வாசகம் நம்மை த்தொட்டுப்பார்க்கிறது. அண்மையில் சென்னையில் ஆர் கே நகர் தேர்தலைப் பார்த்துவிட்ட நாம். அது நமது கண்கள் செய்துவிட்ட பாவம். எங்கே போய் முட்டிக்கொள்வது. இருக்கிற அமைப்பில் ஜனநாயகம் தேவலாம் என்போம். அது நடுத்தெருவில் ஈனப்பட்டதை அதன் சிருஷ்டி கர்த்தாக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

‘இந்தச் சமுதாயத்தை ஆட்சி செய்வது சுலபம். ஆனால் மாற்றுவது கடினம்’ என்று இந்தியாவில் நிலவும் சாதியையும் வருணத்தையும் பற்றிக் குறிப்பிடுகிறார் கில்நானி. மிகச்சரியான கணிப்பு இது. அப்படித்தான் அரசியல் அனுபவமாகிறது.

மெக்காலே வகுத்த கல்விமுறை பற்றி அழகாகக் குறிப்பிடும் கில்நானி இப்படிச் சொல்கிறார்.

‘நிறத்திலும் இரத்தத்திலும் இந்தியனாகவும், சுவைஉணர்வில், எண்ணங்களில் நீதி நெறியில், அறிவுத்திறனில் ஆங்கிலேயனாகவும் இருக்கக்கூடிய மனிதனை உருவாக்குதல்’ இதுவே கச்சிதமாக இங்கே சாத்தியமாகியது.கோட்டும் சட்டையும் போட்ட அடிமைகள் உருவாக்கப்பட்டார்கள். ஆங்கிலம் பேசினார்கள். கைகட்டி நின்றார்கள். அது ஒரு தொடர்கதை.

அரசியலில் தவறாக நடப்போருக்கு எதிராக மக்கள் தம் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு உபாயமே தேர்தல் என்கிற எளிமையான தட்டையான விவேகமற்ற புரிதல் நிலைபெற்று நடைமுறைக்கு வந்திருப்பதை இந்திய மக்கள் சரி என்று உணர ஆரம்பித்து வெகுகாலம் ஆகிவிட்டது. திறமான ஆளுமையும் பொருளாதார நாணயமும் நேர்மையும் நாட்டின் ஒட்டு வளர்ச்சியும் சமூக த்தரம் உயர்தலும் உலகம் பற்றிய சரியான புரிதலும் மறக்கப்பட்டுவிட்டன. காசுபணம் சம்பாதிக்கக் கல்வியும், காலை நீட்டிப்படுக்க அமெரிக்காவில் ஒரு இடமும் வேண்டுமே என இறைவனிடம் மன்றாடும் இந்திய மக்களை மட்டுமே பெருவாரியாக பார்க்க வாய்த்திருக்கிறது. இதனை கில்நானி சரியாக அவதானித்து இது எப்படி எங்கே தொடங்கியது என்பதை இந்திரா அம்மையாரின் நெருக்கடி நிலமையும் அதற்குப் பிறகுமான நடப்புக்களும் என்பவைகளோடு தொடர்புபடுத்திப் பேசுகிறார்.

கில்நானியின் வார்த்தைகளில், இந்திய அரசிற்கும் தன் சமுதாயத்திற்கும் ஜனநாயகம் என்பதன் பொருளை திருமதி காந்தி மாற்றி அமைத்தார் என்று வருவதைக் காண்கிறோம். ஜனநாயகம் என்றால் தேர்தலில் வெல்லுவது மட்டுமே என்கிற நிலமை பிரத்தியட்சமானது. இந்திரா காந்தியின் சோக முடிவோடு, ராஜிவ் காந்தியின் கோர முடிவையும் கில்நானி ஆராய்கிறார். சீக்கியர்கள் பழிவாங்கப்பட்டதையும் விவரிக்கிறார்.

மாயாவதியை பிற்பட்ட வகுப்பைச்சார்ந்தவர் என்று கில்நானி தவறாகப்பதிவு செய்கிறார். அட்டவணை இனத்தவரான மாயாவதியை ஏன் அப்படிக் குறிப்பிடுகிறார் என்பது சற்று நெருடலாகவே உள்ளது.

மூன்றாவது தலைப்பாக ‘எதிர்காலக் கோவில்கள்’ என்கிற விஷயம் பேசப்படுகிறது. ‘மனிதகுல நன்மைக்காக மனிதர்கள் வேலை செய்யும் இடங்கள்தான் மிகப்பெரிய கோவிலாக மசூதியாக அல்லது குருத்வாராவாக இந்நாட்களில் இருக்கமுடியும் என்று எண்ணினேன்.’ என்று நேரு பிரான் கூறியதைக்குறிப்பிட்டு இந்த அத்தியாயம் ஆரம்பமாகிறது.

பக்ரா அணை கட்டிய விவரணையை இந்நூல் சிறப்பாகச்செய்து இருக்கிறது.மைசூர் மஹாராஜாவிடம் பணிபுரிந்த விசுவேசுவரய்யா பற்றிய குறிப்பும் இந்த ப்பகுதியில் வருகிறது. ‘தொழிமயமாகு இல்லையேல் அழிந்துபோ.’ இது விசுவேசுரய்யாவின் கோஷம். தேசபிதா கந்தியோ ‘தொழில் மயமாகு அழிந்து போ’ என்று தொடர்ந்து வாதிட்டார்.

நேரு விரும்பிய பொதுத்றை நேரு விழைந்த மாற்றத்தை கொண்டு வரவில்லை. அவை நாட்டின் சுமைகளாக உருவெடுக்க ஆரம்பித்தன. ஆனால் தொழிற்சங்கங்கள் மட்டும் பொதுத்துறை காக்கப்படவேண்டும் என்பதில் குறியாகத்தான் இருந்தன.

மூன்றாவதாக ‘நகரங்கள்’ என்னும் தலைப்பு வருகிறது. இந்திய மக்கள் தொகையில் சரிபாதிக்கு நகரங்களில் வாழ்வதை நாம் காண்கிறோம். விவசாயத்தின் மீதிருந்த கவர்ச்சி அல்லது மரியாதை தொலைந்துபோய்விட்டது. கல்விக்கூடங்களும்,தொழிற்கூடங்களும், மருத்துவ மனைகளும் நகரத்தை விட்டு நகர மறுக்கும்போது வேறு என்ன செய்வது? நகரங்கள் வீங்கிப்போய்க்கிடக்கின்றன. கில்நானி இந்திய நகரங்கள் குறித்து விரிவான அறிக்கை தருகிறார். அகமதாபாத்,கொச்சி,சூரத் இவை பொருளாதார வர்த்தக மையங்கள், பனாரஸ், பூரி,மதுரை போன்றவை புனித நகரங்கள், டில்லி, ஆக்ரா என்பவை நிர்வாக நகரங்கள் என எழுதிச்செல்கிறார். காசி நகரம் எப்படி நாறிக்கிடக்கிறது என்பதனை மகாத்மாவின் மேற்கொளோடு சுட்டுகிறார்.டில்லியைப்பற்றிய விவரணை விளக்கமாக உள்ளது. சண்டிகர் எப்படி பாகிஸ்தானின் லாகூருக்கு ஒரு மாற்றாக வடிவமைக்கப்பட்டது என்பதனை க்குறிப்பிடுகிறார். பம்பாய் நகரை சிவசேனா எப்படி க்கையாள்கிறது என்பதனையும் தவறாமல் கில்நானி குறிப்பிடுகிறார். மைசூரும் பெங்களூரும் அவர் பார்வைக்குத்தப்பவில்லை. மொழிபெயர்ப்பாளர் இரவி சிறப்பாக இப்பகுதியை மொழிபெயர்த்து இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதையே மறக்க வைத்துவிடுகிறார்.

இந்தியன் யார்? என்பது நான்காவது அத்தியாயம். 1989ல் நிகழ்ந்த அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல் என்கிற முஸ்தீபு குறித்துத் தொடங்குகிறது.
‘தங்களது நிலப்பரப்பை அந்நியர்கள் வெற்றி கொண்டார்கள், காலனியத்திடம் அடிமைப்பட்டுப்போனோம் என்ற உண்மைதான்,தேசிய இனம் ஒன்றிற்கான சுய தேடலை இந்தியர்களுக்குச்சாத்தியமாக்கியது’என்று சரியாகவே கில்நானி வரையரை செய்கிறார். ஐநூற்று ஐம்பத்தாறு தேசங்கள் தாமே பண்டைய பாரதம். தமிழ் மண்ணிலேயும் எத்தனையோ அரசு பிரிவுகள். ஓயாத சண்டை. அதிலே தமிழற்குப் பெருமை. காதலும் வீரமும் அவையே இரண்டு கண்கள். அதனைப்பேசிப்பேசி அகமும் புறமும் எமக்கு மூச்சு என்று முழங்கியது தமிழர் வரலாறு.

‘பிளவற்ற ஹிந்து வரலாற்றைக்கடந்த காலங்களில் தேடியவர்களை மிகவும் வசீகரிக்கும் அரசியல் புள்ளியாக விநாயக் தாமோதர் சாவர்க்கர் இருக்கிறார். இவரது படைப்புகளில் இருந்துதான் பிற்காலத்தில் பி.ஜே.பி. ‘ஹிந்துத்வம்’ என்ற தனது மந்திரத்தின் இலக்கணத்தை எடுத்துக்கொண்டது’என்று வரையறை தருகிறார் கில்நானி. ஹென்றி மிஷா என்னும் பிரான்சில் குடியேறிய பெல்ஜியக்கவிஞர் இந்தியா பற்றிக் குறிப்பிடுவதை வாசகனுக்கு நினைவூட்டுகிறார் ஆசிரியர்.

‘இந்தியாவின் மிகச்சிறந்த மக்கள் தொடக்கத்திலேயே இந்தியாவையும் இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் கைவிட்டு விட்டனர்.இப்போது ஹிந்துக்கள் அவற்றைப்பற்றி அக்கறை கொள்ளச்செய்ததுதான் ஆங்கிலேயர் செய்த மிக அற்புதமான செயல்’ இதனை மறுத்திட முடியாது.
வள ஆதாரங்கள் மீதான கட்டுப்பாட்டை உன்மையான பரிசு என்று கருதும் அரசின் இருப்பும்,அந்தப்பரிசை அடைவதற்கான விளையாட்டில் பெரும்பாலான மக்களை ஈடுபட வைத்திருக்கும் உறுதியுடன் நீடித்திருக்கும் ஜனநாயக அரசியலும்தான் போட்டியின் பொருளாக அதனை வைத்திருக்கின்றன. இப்படிப்பேசும் கில்நானி இந்திய அரசியலை சமூகத்தை நிகழ்வுகளை எத்தனை ஆழமாக அலசியிருக்கிறார் என்பதை எண்ணி நாம் திகைத்துப் போகிறோம்.

முடிவுரைக்கு வருவோம். நவீனத்துவம் என்கிற துகில். சற்று தூரத்திலிருந்து பார்த்தால்தான் பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்னும் ஏ. கே. ராமானுஜனின் வார்த்தைகளோடு தொடங்குகிறது. அது இந்த நூலின் ஆசிரியருக்கும் கூடச் சரியாகவே பொருந்தும். அவரும் லண்டனில் இருந்து இந்தியாவைப் பார்த்துக் கருத்துக்கள் உரைக்க அதுவே இந்தியா என்னும் கருத்தாக்கமாக மலர்ந்து பெருமை பெறுகிறது.

சிதறுண்ட சோஷலிச அமைப்பு இந்திய ராணுவப்பாதுகாப்பின் கடையாணியாக இருந்த சோவியத் யூனியனைக்கழற்றிவிட்டது. இன்று சோஷலிசமா? சந்தைக்களமா? எது வென்றது எனில் சந்தைப்பொருளாதாரமே. இந்தியாவைச்சுற்றி ஜன நாயகம் மறந்த பாகிஸ்தான், சீனா, பர்மா என அமைதி குலைக்கும் நாடுகள்.

இந்தியா இப்போது உலக அரங்கில் ஒரு நவீன தோற்றத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டிய சரியான தருணம்.மனிதத்திறமைகளை மட்டுமே அது நம்பியிருக்கிறது என்கிறார் சுனில் கில்நானி.

அற்புதமான ஒரு நூல். கடின உழைப்பு. ஆழ்ந்த சிந்தனை,சம தள ஆய்வு,எடுத்துக்கொண்ட பொருளில் இணையில்லா ஈடுபாடு, அழகு மொழி ஆளுமை இவை அத்தனையும் ஒருங்கே அமைந்த சுனில் கில்நானியை அடிமனதிலிருந்து பாராட்டுவோம். உயர்ந்த பொருள் கொண்ட புத்தகத்தை காலம் அறிந்து தேர்ந்து மொழியாக்கம்செய்து வென்று நிற்கும் அக்களூர் இரவி தமிழ்ச் சிந்தனைத் தளத்திற்கு சாதனை ஒன்றை நிகழ்த்திப் பெருமை கொள்கிறார்.

(நன்றி: புது திண்ணை)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp