கோபிகிருஷ்ணன், தன் படைப்புகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். தன் அற்புத கணத்தை, ஆசா பாசத்தை, அவமானத்தை, வாழ்க்கை கொண்டுவந்து சேர்த்த கடைசிப் படியை எந்த தன்னிரக்கமும் இன்றி, ஒரு மூன்றாம் மனிதனின் கதையைச் சொல்வதைப் போல தள்ளி நின்று எழுதிக்கொண்டு போனார். அந்தரங்கம் என்ற ஒன்று தனக்கானது என்றுகூட அவர் விலக்கி வைக்கவில்லை. விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பால் தன் மனதை இருத்தி வைத்துக்கொண்டு எழுதினார். ஆங்கிலத்தில் நிறை புலமையும் தொழில் திறமைகளும் நிறைந்த அவர் அவற்றைக்கொண்டு அடிப்படைத் தேவைகளையும்கூட பூர்த்திசெய்துகொள்ள முடியவில்லை. எழுத்தைத் தன் விருப்பம் தாண்டி, அந்த அலாவுதீன் பூதத்திடம் அற்புத விளக்கு ஒன்று இருப்பதை அவர் அறியார். அறிந்திருந்தால் அந்த விளக்கில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருப்பார். அந்த விளக்கின் அற்புதப் பயன்பாட்டை அவர் லட்சியம் செய்திருக்க மாட்டார்.
– பிரபஞ்சன்
ஓரளவு முற்போக்காக சிந்திக்கக் கூடியவர்களும் கூட ஜாதி, மதம், கலாச்சாரம் என்றால் வேறு மாதிரியாக உருமாறுவதைக் காணலாம். மதத்தை, மதத்தின் கொள்கைகளை எவ்வித கேள்விகளுக்கும் உட்படுத்தாமல் உள்ளது உள்ளபடியே வெகு தீவிரமாக கடைபிடிக்கும் வழக்கம் பலருக்கும் உண்டு. இவை அனைத்தும் அந்தந்த காலத்திற்கேற்ப மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அதற்கெல்லாம் சாத்தியமில்லை எனும் போது அவை மாபெரும் அபத்தங்களாக உருவெடுக்கின்றன. இதனால் தனி மனிதனும் அவனைச் சார்ந்தவர்களும் சமூகமும் எத்தகைய பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்பதுதான் கோபிகிருஷ்ணன் படைப்புகளின் அடிநாதங்களுள் பிரதானமானது. அவரது கதாமாந்தர்களில் ஒரு சிலரை எடுத்துக்கொண்டு அவர்களது இயல்பை ஆராய்ந்து அல்லது கதைகளின் சம்பவங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு அலசுவதென்பது மிகக் குறுகிய வட்டத்தில் சுருக்கிவிடும் என்றெண்ணியதால் ஒட்டுமொத்தமாக அவரது படைப்புகள் பேசும் சாராம்சத்தை அவரது வரிகளிலே மேற்கோள் காட்டிச் செல்வது ஓரளவிற்கு நல்லதொரு அறிமுகமாகவும் ஏற்கனவே கோபிகிருஷ்ணனை வாசித்தவர்களுக்கு நினைவினை மீட்டெடுக்கும்படியாகவும் இருக்குமெனத் தோன்றியது. தவிரவும் இவரது எழுத்துகளில் பூடகமான விஷயங்கள் என்று ஏதுமில்லை. தேர்ந்த, எளிமையான வார்த்தைகளால் நேரடியான கதை சொல்லல் முறையினையுடையது (‘டேபிள் டென்னிஸ்’ மற்றும் ஒரு சில கதைகள் தவிர்த்து). கோபிகிருஷ்ணன் படைப்புகளில் ஒரு சிலவற்றைத் தவிர அநேகமானவை தன்னிலையில் எழுதப்பட்டிருக்கின்றன. படர்க்கையில் எழுதப்பட்டிருப்பவைகளும் கூட அவரது சொந்த அனுபவங்களென்றே உணர்ந்துகொள்ள இயலும். எனது எண்ணங்களையும் அனுபவங்களையும்தான் நான் எழுதுகிறேன் என்கிறார் கோபிகிருஷ்ணன். ஜோடனையையோ சூசகமாக விஷயங்களைச் சொல்வதையோ தனது கதைமொழியாக அவர் கையாளவில்லை.
ஒட்டுமொத்தமாக கோபிகிருஷ்ணனின் படைப்புகள் பேசும் சாராம்சத்தை ‘மனதின் புதிர் மொழி’ (கோபிகிருஷ்ணன் படைப்புகள் குறித்து பிரபஞ்சன் எழுதிய கட்டுரையின் தலைப்பு) எனும் மூன்று வார்த்தைகளில் குறிப்பிடலாம். கலாச்சாரம், பண்பாடு என சமூகத்தில் நிகழும் அபத்தம், அதனால் பாதிப்புள்ளாகும் மனங்கள், மனதின் விசித்திர குணத்தால் உறவுகளுக்குள் நிகழும் விரிசல்கள், மதம் எனும் பெயரால் மனிதன் நிகழ்த்தும் அட்டூழியம், மதத்தாலும் சடங்குகளாலும் தான் அறியாமல் இயல்பாகவே பாதிப்பிற்குள்ளாகும் மனங்கள், சமூக அமைப்பிலிருக்கும் சுரண்டலை அங்கீகரிக்கும் அவல நிலை, அடிப்படை நாகரீகமின்றி நடந்துகொள்ளும் கயவாளித்தனம், அங்கீகரிக்கப்பட்ட அநியாயங்கள், மந்தமான மனங்கள், சுற்றி நடக்கும் எதைக்குறித்தும் கவலையின்றியிருக்கும் சுயநலத்தன்மை, எதிர்காலத்தை எண்ணி எண்ணியே நிகழ்காலத்தை இழக்கும் அவலச் சூழல், ஆண் ஆதிக்கத்தின் வக்கிர குணம் போன்றவைகள்தாம் இவரது படைப்புகளில் வெளிப்படும் பிரதான அம்சம். தனது ஆதங்கத்தை அங்கதமும் பகடியுமான மொழியிலேயே வெளிப்படுத்துகிறார். நகைச்சுவை இழையோடு எழுதியிருந்தாலும் கூட கோபமும் ஆதங்கமும் வெளிப்படும் காத்திரமான வரிகளையும் ஆங்காங்கே காணமுடிகிறது; நம் சமூக அமைப்பிலிருக்கும் அவலங்களை எண்ணி மனம் புழுங்கியிருப்பதன் வெளிப்பாடுகள் அவை.
சிந்திக்கக்கூடிய கூட்டங்கள் இங்கே பெரும்பாலும் மிகக்குறைவு. இது குறையென்றில்லை, அதுவே இயல்பாகிப்போனது. சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் இங்கே இல்லை. நண்பர்களிடையே, அலுவலகத்தில், குடும்பத்தில் என எங்கேனும் ஆரோக்கியமான உரையாடல்கள், விவாதங்கள் நிகழ்வதென்பது பேரதிசயம் தான். சொற்களே உறவுகளின் பிணைப்பிற்கும் விரிசலுக்கும் மூலகாரணம் எனும்போதும் உறவுகளைக் காட்டிலும் வார்த்தைகளைத் தூக்கிப்பிடித்துத் திரியும் மனங்களே அதிகம். அதேபோல தனிமனிதனின் எண்ணங்கள், செயல்பாடுகள் சமூகம் சார்ந்தும் வெளிப்படுவது நிதர்சனம். கோபிகிருஷ்ணனின் எழுத்துகள் தளிர்விடுவது இங்கே தான். ‘நம் கலாச்சாரம் பைத்தியம் பிடித்து, சட்டையைக் கிழித்துக் கொண்டு வலம் வந்து, நம்மைப் பார்த்து, அட்டகாசமாகக் கொக்கரித்து அனைவரையும் ஒருவகையில் உற்சாகமாக ஹிம்சித்துக்கொண்டிருக்கிறது’. நமது கலாச்சாரம் சீரான சிந்தனையைத் தூக்கி எரிந்துகொண்டிருக்கும் முரண்பாடுகளின் ஒரு பெரிய அழுக்கு மூட்டை என்கிறார்.
ஆண்கள் முறைகேடாக நடக்க நம் சமூகம் செய்துகொடுத்திருக்கும் ‘மகத்தான சௌகரியங்களைக்’ கண்டு ஆதங்கம் கொள்கிறார். வீட்டிற்கு தாமதமாக வந்துவிட்டு கதவைத் திறக்க சிறிது நேரமானால் மனைவியைத் திட்டித் தீர்க்கும் கணவனின் செயற்பாட்டை ஆண் ஆதிக்கத்தின் உச்சகட்ட வெறிச்செயல் என எழுதுகிறார். ‘ஆண்-பெண் உறவே பல வேளைகளில் ஒருவகைச் சுரண்டலாகத் தோன்றுகிறது’. பெண்களெல்லாம் ஆண் ஆதிக்கத்தின் வெறிச்செயலுக்கு கட்டுப்பட்டு போக வேண்டியதுதான் நமது கலாச்சாரத்தின் அடையாளமாகவும் இருக்கிறதே! ‘இந்த அன்னியோன்னிய லட்சிய தம்பதிகள் இல்லாமல்தான் நம் கலாச்சார தர்மங்கள் எப்படி செழித்தோங்க முடியும்?’. ‘சமூக நியதிகள் முரண்பாடுகள் எந்தக் காலக்கட்டத்திலும் பிறழ்வுகளை ஏற்படுத்த வல்லவை’.
வசதி படைத்தவனுக்கு அனுகூலமாகவே சமூகம் இருப்பதைச் சாடுகிறார். ஆட்டோக்காரனைக் குறித்த கதையில் வெளிப்படும் அன்பு, வசதி படைத்த ஊதாரியைக் குறித்து பேசுகையில் ஆத்திரமாக வெளிப்படுகிறது. ‘ஜீன்ஸில் ஷர்ட்டை உள்செருகியிருக்கும் ஓர் இளம்பெண்ணின் இடுப்பைச் சுற்றிக் கையை வைத்துக்கொண்டு மறு கையில் ஒரு புகைக் குழாயைப் பிடித்துக்கொண்டு நடு நடுவில் புகைத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றால் ஒரு தனி அந்தஸ்து. ‘என்ன ஒரு குதூகலமான ஜோடி! வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த புண்ணியவான்கள்.’ சாயம் போன தறிப்புடவை கட்டிய, வாயில் வெற்றிலை புகையிலையை மென்றுகொண்டிருக்கும் நாட்டுப்புறத்துடன், லுங்கி தரித்து, பீடியைப் புகைத்துக்கொண்டு கை கோர்த்து நடந்து சென்றால் ‘தள்ளல் கேஸும்மா மச்சான்!’.
நாளிதழ்களின் அபத்தத்தை பகடியின் உச்சத்தில் வெளிப்படுத்தும் கதை ‘மக்கள் தினசரி – ஒரு தேசிய நாளேடு’. சமூக மாற்றங்களுக்காக மிகப்பெரும் கடமை ஆற்ற வேண்டிய பத்திரிகைத் துறை இத்தகைய கீழ்த்தரமான செய்திகளை வெளியிடுகிறது எனும் எரிச்சலின் வெளிப்பாடே இந்தக் கதை பிறந்ததற்கான காரணமாக இருக்கக்கூடும். இந்தக் கதை எழுதப்பட்டு கால் நூற்றாண்டு ஆன பின்பும் இந்த அபத்தம் தொடர்வதுதான் நம் சமூகத்தின் மகத்துவம்! வருங்கால சந்ததி இக்கதையை அபத்தமாக உணரும் காலம் வாய்க்க பிராத்திப்போமாக!
‘இடாகினிப் பேய்களும்’ குறுநாவலானது ‘சமூகப்பணி’ (சமூகசேவை என்று குறிப்பிடுவதைத் தனது படைப்புகளில் கண்டிக்கிறார்) மையங்களில் நடக்கும் முறைகேடுகளை, தனிமனித அதிகார வக்கிரத்தைப் பற்றியது. சேவை எனும் பெயரில் அதிகாரமட்டம் நடத்தும் களியாட்டத்தையும், உதவி பெற வரும் எளியவர்களை ஏளனம் செய்வதையும், சாப்பாடு விநியோகிக்கையில் சிறுவர்களைப் பார்த்து ‘அலையாதீங்கடா’ போன்ற வார்த்தைகளை உதிர்ப்பதையும் கண்டு வருந்துகிறார். சமூகப்பணி என்றால் என்ன, யார் சமூகப்பணிக்குத் தகுதியானவர்கள் என்பது குறித்து குழந்தைகளுக்குச் சொல்வது போல நீண்ட கட்டுரை (‘சமூகப்பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி’) ஒன்றினையும் அவரது நண்பரான சஃபியுடன் இணைந்து எழுதியிருக்கிறார். இக்கட்டுரை சமூகப்பணி மேற்கொள்பவர்களால் உதாசீனப்படுத்தப்படும் என்பதே நிதர்சனம்! எங்கேனும் சிறு மாற்றங்கள் நிகழ்ந்துவிடக்கூடும் என்ற நப்பாசையின் வெளிப்பாடாகவே அவரது கதைகளையும் கட்டுரைகளையும் காண முடிகிறது.
இதுபோன்ற அபத்தங்களையெல்லாம் எழுத நேர்கையில் எழுத்தாளரின் மேதாவித்தனம் வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். அல்லது புலம்பல் தொனி. மேதாவித்தனம் வெளிப்படாமலும், எள்ளலான பகடியின் மூலம் அபத்தத்தை சாடுவதும், சமூகம் மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதும், இப்படியான அபத்தத்திற்கு இயைந்து செல்ல நேரும் சூழலில் தன்னையே விமர்சனத்திற்குள்ளாக்கி ‘சரியான தொனி’யைத் தனது படைப்புகளில் கையாள்வதுமே கோபிகிருஷ்ணனின் சிறப்பம்சம். சமூக அமைப்புகளில் கலாச்சாரத்தின் அவலங்களையும் இப்படிப்பட்டச் சூழலை அண்டி வாழும் மனித உறவுகளின் பிரச்சனைகளையும் உளவியல் ரீதியில் அணுகுகின்றன இவரது படைப்புகள். அதற்காக ‘ஓர் உறவை, உறவின் அடிப்படையை, உணர்வுகளை சித்திரவதை செய்து, காரண அலசலில் மூழ்கி, மூர்க்கத்தனமான அர்த்தங்களை ஏற்படுத்தி’ என்றில்லாமல் மிகையற்ற தொனியில் யதார்த்தமாக படைக்கிறார். நாம் அன்றாடம் காணும் அபத்தங்கள் குறித்து யோசிக்க மறந்தவற்றை இவரது எழுத்துகள் சிந்திக்கத்தூண்டுவதாலேயே அவரது ஒவ்வொரு வரிகளோடும் வாசகரால் ஒன்றிப்போக முடிகிறது.
கதவில்லாத குளியறையில் ‘தாரா வீட்டுக்காரர்’ குளித்துக்கொண்டிருப்பதை எதேச்சையாக பார்த்துவிடுகிறாள் ஒரு மூதாட்டி. ‘அதோடு விட்டிராமல் தாராவிடம், ‘இனிமேல் உன் புருஷனை ஜட்டி போட்டுக்கொண்டு குளிக்கச் சொல்’ என்று வேறு சொல்லி வைத்தாள். தான் செய்த குற்றத்தை மறைக்க மற்றொருவன் மேல் குற்றச்சாட்டு. வீட்டுக்காரம்மாள் ஒரு கட்டளை பிறப்பித்தாள். எல்லா ஆண்களும் ஜட்டி போட்டுக் கொண்டுதான் குளிக்க வேண்டும். எனக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது.’ பிறரைக்குறித்து அக்கறை கொள்ளவேண்டிய இடத்தில் மௌனம் காப்பதும் தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைப்பதும் இவரது கதைமாந்தர்களின் இயல்பு! ‘சாப்பிட்டுக்கொண்டிருப்பவனை நோக்கி ‘என்ன பலமான சாப்பாடா?’ தூங்கிக்கொண்டிருப்பவனை உசுப்பி எழுப்பி, ‘என்ன நல்ல தூக்கம் போலெ இருக்கு?’ தெளிந்த முக பாவத்துடன் இருப்பவனைப் பார்த்து பொறாமை ததும்ப, ‘என்ன இன்னெக்கி ரொம்ப குஷியா இருக்கீங்க போலெ இருக்கு!’ நிம்மதியாக இருக்க விடாதபடிக்கு நிலவும் பாரதக் குசலங்கள்’.
இருவேறு எதிர்நிலைகளில் இயங்கும் மனம் விசித்திரமானது. ஒருபுறம் உன்னத நிலையிலும் கணநேரத்தில் கீழ்மையிலும் செயல்படுவதை விசித்திரம் என்றே சொல்லத் தோன்றுகிறது. பரவலாக இத்தகைய மனநிலையுடையவர்களைக் காண நேர்வதால் இயல்பானதும்தான் என்றும் தோன்றுகிறது. கோபிகிருஷ்ணனின் பாத்திரங்கள் இவ்விரு எல்லைகளுக்குள் மேலும் கீழும் விஸ்தாரமாக பயணிப்பவர்கள். இரட்டைத்தன்மை மனநிலையினைத் தனது பாத்திரங்கள் சிலவற்றில் அபாரமாகச் சித்தரித்திருக்கிறார். புதிதாக குடிவந்திருக்கும் வாலிபர்களுடன் தாரா சிரித்து பேசுவதைக் கண்டிக்கும்படி புகார் சொல்கிறாள் வீட்டுக்காரம்மாள். பின்பொருநாள் இன்னொரு பகுதியில் குடியிருக்கும் சாயுபுவிடம் பேசியதாக புகார். ‘நீ மட்டும் என்னுடன் பேசவில்லையா என்று நுனிநாக்கு வரை வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு உள்ளே சென்றேன்’. பக்கத்துவீட்டுப்பெண் தாராவின் கணவருடன் பேசுவதைக் கண்டிக்கும்படி தாராவிடம் சொல்கிறாள் வீட்டுக்காரம்மாள். ‘‘அந்தப் பொண்ணுக்கு ஒம் புருஷன்கிட்ட என்ன வேண்டியிருக்கு? என்ன சுத்த விவரம் புரியாதவளா இருக்கே. ஏடா கூடமா ஏதாச்சும் நடந்துட்டா? மொதல்ல கட் பண்ணி வை. இதெல்லாம் வம்பு. ஒனக்கு இதெல்லாம் தெரியாது. நான் வயசுல மூத்தவ. ஒனக்கு நல்லதுக்குத்தான் சொல்றேன்.’ வீட்டுக்காரம்மாள் அறிவுரைகளின் சிகரம். இதில் ஒரு double standard. இவளுடைய மகள் என்னிடம் ஒரு மணிநேரம் பாடம் சொல்லிக்கொள்ளலாமாம். ஆனால், ஸ்வர்ணலதா கிட்டத்தட்ட தூர இருந்து அதைச் செய்தால் அது பெருங்குற்றம். Double Standard உள்ள அனைவரும் schizophrenia (split personality) மன நோயாளிகளே. இதில் ஐயப்பாடு ஏதுமில்லை. இந்தக் கண்ணோட்டப்படிக் கணக்கெடுத்தால் ஜனத்தொகையில் 85%ஐ இந்தச் சீக்குப்பிடித்தவர்களாகவே கொள்ளலாம்’.
இதைப் போலவே விதவிதமான மன நோய்களைப் பட்டியலிடுவதால் கோபிகிருஷ்ணன் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் பலவற்றிலும், ‘இவரது எழுத்துகளை தொடர்ந்து வாசிக்க முடியாது, சுவாதீனத்திற்கும் சுவாதீனமில்லாத நிலைக்கும் உள்ள மெல்லிய இழையை அறுத்துவிடுகிறார், தன்னையே மனநலம் பிறழ்ந்தவனென எண்ணச் செய்கிறார்’ போன்ற வரிகளைக் காண முடிகிறது. ‘பொருளாதார பிரச்சனைகள் தவிர வாழ்வில் வேறு எந்தப் பிரச்சனைகளுக்கும் விடிவுகாலம் நிகழ்வதில்லை. வாழ்க்கைப் பிரச்சனை. வாழ்க்கையே பிரச்சனை. பிரச்சனையே வாழ்க்கை. பழகிப் போவதால் பிரச்சனைகள் வாழ்க்கையின் முக்கியமான அம்சமாக அமைந்து விடுகின்றன’. பலநேரங்களில் நமது பிரச்சனைகளுக்கு நாமே காரணமாக இருக்கிறோம், நம்மையே நாம் சித்திரவதை செய்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை.
கோபிகிருஷ்ணன் படைப்புகள் குறித்து பேசுகையில் மனித மனங்கள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தமிழ் மனங்களென சுருக்கிக்கொள்வதே சரியாகயிருக்கும். தமிழ் மனங்களின் வெளிப்பாடுகளானது நமது சமூகம், பண்பாடு, கலாச்சாரம் சார்ந்தும் இருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். இவரது கதைக்களம் மிகவும் குறுகிய பரப்பினையுடையது; குடித்தனங்கள் – அதிகமும் நடுத்தரவர்க்கக் குடும்பம், இரண்டு தெருக்கள், அலுவலகங்கள், அலுவலகங்களின் அதிகார வர்க்கம். கதாப்பாத்திரங்களோ அன்றாடம் நாம் காணும் மனிதர்கள்; அதாவது ‘தனித்து அல்லாமல்’ இயல்பாக நம்முடன் வலம் வருபவர்கள். வாசகர் தன்னையே ஆங்காங்கே இனங்காணமுடியம். இவரது எழுத்துகளை மிக நெருக்கமாக உணர்வதற்கு இதுவும் ஒரு முக்கிய அம்சம். நம்மை அறியாமலே பல அபத்தங்களின் நடுவே வீழ்ந்துகிடக்கும் அவலத்தை வாசகர் அறியக்கூடும். இவரது கதைகள் முழுவதும் மனிதர்கள். மனிதர்கள். மனிதர்கள். விதவிதமான மனிதர்கள்! இப்படி குறிப்பிடுவதற்குக் காரணம் மனிதர்களைத் தாண்டி வேறெதிலும் அவர் கவனம் கொள்ளவில்லை. வர்ணனைகள் மூலம் நிலத்தினை, சூழலை விவரிப்பதோ கவித்துவமான மொழியினைக் கையாள வேண்டுமென்பதோ அவரது நோக்கம் அல்ல. பிரபஞ்சன் குறிப்பிடுவது போல ‘எழுத்தைத் தன் விருப்பம் தாண்டி, அந்த அலாவுதீன் பூதத்திடம் அற்புத விளக்கு ஒன்று இருப்பதை அவர் அறியார். அறிந்திருந்தால் அந்த விளக்கில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருப்பார். அந்த விளக்கின் அற்புதப் பயன்பாட்டை அவர் லட்சியம் செய்திருக்க மாட்டார்.’ கோபிகிருஷ்ணனின் படைப்புகளை ‘தமிழ் மனங்களின் ஆவணம்’ என்றும் வகைப்படுத்தலாம்.
மதம் மற்றும் கடவுளின் மீதும் அதன் பெயரில் மனிதர்கள் செய்துவைத்திருக்கும் அபத்தங்களின் மீதும் பெரும் எரிச்சலை கோபிகிருஷ்ணனின் எழுத்துகளில் பார்க்கமுடிகிறது. ‘சகல சம்பத்துகளும்’ கதையானது கோவிலில் நடக்கும் அபத்தங்களைப் பட்டியலிடுகிறது. கோவிலுக்குள் நுழைந்து, கோவில் முழுவதையும் சுற்றிவிட்டு வெளியேறுவது தான் கதை. ‘அம்மன் விளையாட்டு’, ‘பகவானும் பகவதியும் பக்தையும் நாத்திகனும்’ போன்ற கதைகளில் இதன் உச்சபட்ச நையாண்டியை தரிசிக்க முடியும். இந்தக்கதைகள் மட்டுமல்லாமல் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் இத்தகைய அவலத்தைச் சாடியபடியிருக்கிறார். ஒரு கதையின் தலைப்பு ‘மயிரே துணை’! ‘மீனோ கறியோ விரத நாட்களில் தவிர்த்து பிற நாட்களில் செய்தால் மட்டும் எப்படி புண்ணியமாகிவிடப்போகிறது, முப்பத்து முக்கோடி தெய்வங்களில் பாதிக்குப் பாதியாவது இடம்பெயர்ந்தால்தான் இங்குள்ள புனிதம் அயல்நாடுகளில் பரவ வாய்ப்புண்டு – தெய்வ நெரிசலும் பாரதத்தில் பாதி குறையும், அர்ச்சகர் தற்போது அர்ச்சக விற்பனை சிப்பந்தியாகிவிட்டார், தெய்வீகச்சூழலில் காதலர்கள் – அப்படியானால் அது தெய்வீகக் காதலாகத்தான் இருக்க முடியும், ‘அண்மையில் நான் வாசித்த நூலில், ஃபிரட்ரீஹ் நீட்சே ‘கடவுளைப் புதைப்போம் வாரீர்’ என்று கூக்குரலிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீட்சேயின் குரலுக்கு மனமொப்பிச் செவி சாய்த்தோ என்னமோ நம் சனங்கள் காரியத்தை நேர்த்தியாகவும் கவனத்துடனும் செய்து முடித்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றிற்று, அநேகமாக சரியாக.’’
‘சாமி கண்ணைக் குத்தும் என்று பயமுறுத்தும் மதமும், உன் வீட்டில் நடக்கும் சம்பாஷணைகளை ஆண்டவர் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார் என்று சொல்லும் மதமும் Paranoia நோய்க்கு வித்திடுகின்றன’. படித்தவர் படிப்பறிவில்லாதவர் என்ற பேதமின்றி மேற்குறிப்பிட்ட உதாரணத்தைப்போல சமூகம், கலாச்சாரம் பண்பாடு இத்யாதி காரணிகளால் கண்மூடித்தனமாக இவற்றைக் கடைபிடிப்பதும் நம்புவதும் நம் சமூகத்தில் பரவலாக நிகழும் அவலம். இதன் மூலம் தனிமனிதனும் அவனைச் சாரந்தவர்களும் பாதிப்பிற்குள்ளாவதை இவரது படைப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டியபடி இருக்கின்றன. இந்த அவலங்களையெல்லாம் கலைவது மட்டுமே நம் சமூகம் மேலோங்குவதற்கும் சுமூகமான வாழ்வு அமைவதற்கும் அடிகோலும் என்பது கோபிகிருஷ்ணனின் எண்ணமாக இருக்கக்கூடும்.
கோபிகிருஷ்ணனின் எழுத்துகளில் வெளிப்படும் பகடியை, நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடவில்லையென்றால் இக்கட்டுரை முழுமை பெறாது. சமூக அவலங்களை இப்படியான ஓர் எள்ளலான நடையில் வெளிப்படுத்தாமல் வேறொரு பாணியைத் தேர்ந்தெடுத்திருந்தால் புலம்பல் தொனிக்கு இட்டுச்சென்றிருக்கும். கோபிகிருஷ்ணனின் பாதிப்பில் எழுத முயற்சிக்கும் வேறு சிலரின் கதைகளில் இத்தகைய தன்மையைக் காணலாம். தவிரவும் தனது வறுமையை, சலிப்பினை அழுகாச்சி காவியமாக்காமல் தன்னையும் பகடி செய்து நையாண்டியாக வெளிப்படுத்துவது கோபிகிருஷ்ணன் எனும் ஆளுமையின் மீது பெரும் மரியாதையை எழச் செய்கிறது. தனது சோகத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் படைப்பாளிகள் மீது கூடுதல் நெருக்கம் எப்போதுமுண்டு. வைக்கம் முகமது பஷீரின் ‘பாத்துமாவின் ஆடு’ நாவல் முழுவதும் நகைச்சுவை வெளிப்பட்டாலும், அதனோடு இழையோடிருக்கும் சோகத்தையும் உணர முடியும். கோபிகிருஷ்ணனின் எழுத்துகளும் இவ்வகையைச் சார்ந்தது.
‘கொள்ளை அழகு அந்த ரோமானிய மூக்கு. பார்த்தால் பசி தீரும் மூக்கு. மதிய உணவுக்குக் காசில்லாத சமயங்களில் ஃபிலோமியின் மூக்கை என் மனக்கண் முன் கொண்டுவந்து பார்ப்பேன்.’ [கதை: தணிக்கையிலிருந்து தப்பிய கதை]
‘கூட்டத்தில் மூக்குத்தி அணிந்த பெண் ஒருத்தி இருந்தாள். சாமிக்கண்ணுவிடம் காசும் காதலியும் இருந்திருந்தால் அந்த மாதிரி ஒரு மூக்குத்தியை வாங்கி அவன் தன் காதலிக்குப் பரிசளித்திருப்பான்.’ [கதை: கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை]
‘தனவந்தர் வீட்டுக்காரரிடம் ‘மழை பெய்தால் வீடு ஒழுகுமா?’ என்று கேட்டார். ‘ஒரு துளி உள்ளே சொட்டினால் செருப்பெடுத்து அடியுங்கள்’ என்று உணர்ச்சிவசப்பட்டார் முதியவர். என் செருப்புகளில் ஒன்றைத் தனவந்தரிடம் கொடுக்கலாம் என்று என்னுள் ஒரே துடிப்பு.’ [கதை: காணி நிலம் வேண்டும்]
‘கதவைத் திறந்து கொண்டே ‘மணி என்னா பன்னெண்டு…’ என்று ஏதோ ஒரு பெரிய பத்தியை ஆக்ரோஷத்துடன் ஆரம்பித்தாள். மணிகாட்டியில் 12 இலக்கங்கள் மட்டுமே இருப்பதால் அவள் ‘மணி 5549’ என்று சொல்ல எந்தவித வாய்ப்பும் அமையவில்லை.’ [கதை: குற்றமும் தண்டனையும்]
‘காணாமல் போனவரின் முக்கிய அடையாளம்: இவர் சற்று புத்தி ஸ்வாதீனமுள்ளவர்.’ [கதை: மக்கள் தினசரி – ஒரு தேசிய நாளேடு]
‘செய்திகளை முந்தித்தரும் பத்திரிக்கை என்ற பெயருக்கேற்ப அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதை இனி மக்கள் தினசரி முன்கூட்டியே வெளியிடும். இதற்காகத் தீர்க்கதரிசிகள் ஐவர் கொண்ட குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும்.’ [கதை: மக்கள் தினசரி – ஒரு தேசிய நாளேடு]
‘செயலரை எங்களுள் சிலர் பைத்தியக்காரச்சி என்று அழைப்போம். கொஞ்சம் மரியாதை கொடுப்பவர்கள் பைத்தியக்கார அம்மையார் என்றும் ஆங்கிலத் தாக்கம் உள்ளவர்கள் பைத்தியக்கார மேடம் என்றும் அழைப்பார்கள்.’ [கதை: சடங்கு]
‘என் மகிழ்வில் ஒரு லாரி (இந்த அளவை, கணிதவியலில் இடம் பெறாதது) மண்ணை அள்ளிப் போட்ட சந்தோசம் அவனைச் சாரும்.’ [கதை: விழிப்புணர்வு]
‘பாருவின் பிற குணாதியங்கள்: முன்கோபி, பட்டென்று பேசிவிடுவாள். சிரித்துக்கொண்டே ஜோக் அடிப்பாள். இரண்டு காரியங்களையும் ஒன்றாகச் செய்வதால் ஜோக் புரியாது.’ [கதை: அம்மன் விளையாட்டு]
‘ஒரு நாள் சிகப்புச் சட்டை போட்டுக்கொண்டு வந்தார். அதிபராசக்கி என்றார். இல்லை பாதி பராசக்திதான். முழுக்கால் சட்டையையும் சிகப்பு நிறத்தில் போட்டுக்கொண்டிருந்தால்தான் முழுநீள ஆதிபராசக்தி என்றேன். என்னுடைய ஜோக் அவருக்குப் பிடிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கெட்ட பழக்கம்; அவருக்கு பராசக்தி, எனக்கு சிகரெட்.’ [கதை: அம்மன் விளையாட்டு]
‘வீட்டில் கரப்புகள் இருப்பது லட்சுமி கடாட்சமாம். ஆனாலும், இந்த விவரம் புரியாத பல்லி, லட்சுமியையெல்லாம் கபளீகரம் செய்துகொண்டிருந்தது. நல்ல வேலை பூரான் இந்தக் கடாட்சமும் இல்லை.’ [குறுநாவல்: பிறழ்வு – விடிவு]
‘எல்லாக் கட்சிகளும் மக்களுக்குத் தொண்டாற்றுவதாகக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஒரு கட்சிக்கும் இன்னொரு கட்சிக்கும் எப்பொழுதும் பயங்கர மோதல். விந்தை! பரஸ்பர முதுகு சொறிந்து சுகிப்பதில் பாரத அரசியல் ஜீவிகள் கை தெரிந்தவர்களே.’ [குறுநாவல்: காத்திருந்த போது]
கோபிகிருஷ்ணனின் படைப்புகள் குறித்த அசோகமித்திரனின் வரிகளை இங்கே நினைவு கூறுவது சரியாக இருக்கும். ‘கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப்பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை – இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதின் நிதரிசனங்கள். ஒரு சாதாரண, விசேஷ சமூக முக்கியத்துவம் பெறாத, சிந்திக்கக் கூடிய மனிதனுக்கு இச்சூழ்நிலையில் ஏற்படக் கூடியது அலுப்புதான். உறவு, அன்பு, பொறுப்பு, நிதானம், பிறருக்காக வழிவிடும் தியாக மனப்பான்மை இத்துடன் கூடவே ஒரு அலுப்பும் விலகாத புகை மூட்டமாக இருக்கும். ஒரு சாதாரண மனிதன் இந்த அலுப்பைத் தனக்குப் பொருத்தமான அல்லது பொருத்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தவிர்க்க முயலுகிறான். இந்த அலுப்பை மனதார ஒப்புக்கொண்டு எழுத்தில் பதிவுசெய்வதுதான் கோபிகிருஷ்ணனின் படைப்புகள். இந்த அலுப்புணர்ச்சியோடு வரிக்கு வரி இழைந்திருக்கும் நகைச்சுவை அவர் அலுப்பினால் வீழ்ச்சியுறாத திட மனிதன் என்பதையே காட்டுகிறது.’
கோபிகிருஷ்ணன் மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாலும் உளவியல் படித்திருந்ததாலும் பிறழ்வுகளையும் தனது படைப்புகளில் முக்கியக் கருப்பொருளாக கையாண்டிருக்கிறார். கோபிகிருஷ்ணன் படைப்புகளில் மிக முக்கியமானதொன்றாகக் கருதப்படும் ‘டேபிள் டென்னிஸ்’ குறுநாவலானது ஒரு பிறழ்வு மனநிலையில் எழுதப்பட்டது. இதுகுறித்து தனது நேர்காணலில் இவ்வாறு கூறுகிறார்: ‘1993 பிப்ரவரியிலிருந்து மே வரை ஒரு வினோத மனநிலையிலிருந்தேன். அது மிகவும் பிரகாசமான மனநிலை. அந்த மனநிலையில் எழுதப்பட்டது தான் ‘டேபிள் டென்னிஸ்’. அது ஒரு பறத்தல் போன்ற உணர்வு. அந்தப் பறத்தல் மனநிலையில் அறிவு பாதிக்கப்பட்டு விடவில்லை. எம்.ஏ. நான்கு பேப்பர் பரீட்சை எழுதி மூன்றில் தேர்ச்சி பெற்றேன். வேறு எந்தப் படைப்பையும் பாதிப்பான மனநிலையில் எழுதியதில்லை’. மேலும் ‘டேபிள் டென்னிஸ்’ குறுநாவலின் முன்னுரையில் இப்படைப்பிலுள்ள சம்பவங்களை மனப்பதிவுகளாகக் கொள்ளப்படவேண்டுமென்றும் இதை ஒரு முக்கியமான உளவியல் ஆவணம் என்றும் குறிப்பிடுகிறார்.
‘மனநோய் என்பது வேறொரு மனோநிலை. அவ்வளவே. சிகிச்சை தேவையென்றாலும் அது துர்பாக்கியமானதோ துரதிருஷ்டவசமானதோ அபாக்கியமானதோ அல்ல. உண்மையில் நோய்க்குறிகளைத் தனக்கு அனுகூலமானதாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தால் அதுவே ஒரு வரப்பிரசாதமாகவும் அமைய வாய்ப்புண்டு’ என்பதுதான் பிறழ்வு சார்ந்த இவரது படைப்புகளின் தன்மை. மனம்பிறழ்ந்தவர்களின் அகம் சூதுவாது அறியாத குழந்தையைப் போல மாறிவிடக்கூடியது. மனம்பிறழ்ந்தவர்களின் சுதந்திரம் ஒரு போதும் பறிக்கப்பட்டுவிடக்கூடாதென்பது கோபிகிருஷ்ணனின் நிலைப்பாடுகளுள் ஒன்று.
‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ ஒரு மிகப்பெரும் பணி. மனநலம் பாதிக்கட்டவர்களிடம் பேட்டிகண்டு தொகுக்கப்பட்டிருக்கும் மிக முக்கிய ஆவணம். புனைவிற்கு நிகரான பிரமிப்புகளை, உணர்வுகளை இதன் பக்கங்கள் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் சில கேள்விகள் கேட்டும் மனநலம் பாதிக்கட்டவர்கள் சிலரை தங்களுக்குள் உரையாடச் செய்தும் ‘நிலை’ எனும் பகுதியில் தொகுத்திருக்கிறார். ‘அன்பே சிவம்னு எல்லா மதமும் சொல்லுது. அன்பே பொய்யாயிடறப்ப சிவம் எங்க இருக்கு சொல்லுங்க’, ‘எனக்கென்னவோ எல்லாருமே பைத்தியக்காரங்களோன்னு தோணுது. எங்காதலியும் இந்த வயசானவரும் ஒரே தினுசு தான். வயசானவரு எல்லாக் கடவுகளெப்பத்தியும் பேசுறாரு. எங்காதலி எல்லா ஆம்பிளைங்களெப்பத்தியும் பேசுறா. ரெண்டு பேருக்கும் கேள்வி கேட்டாக்கக் கோபம் வருது’, ‘காதல்ங்குறது ஒரு உன்னதமான விஷயம். அதெ வியாதியா நெனெச்சி இங்கே சிகிச்சை தர்றது ஆச்சர்யமாவும் கொடூரமாவும் இருக்கு’, ‘மென்டலா இருந்ததுனால சட்டுனு அந்தப் பையனே நம்பியிருக்கேன்’.
‘காட்சி’ எனும் பகுதியில் மனநலக்காப்பகம் குறித்த சித்திரங்களையும் காட்டுகிறார். ‘பெரிஸ்ஸா எங்க கஷ்டங்களைப் புரிஞ்சிக்க வந்துட்டே. நீயே மெண்டல் ஆனாத்தான் ஒனக்கு எங்க கஷ்டம் புரியும். உருப்படியா வேற வேலெ இருந்தாப் போய்ப் பாரு’ என தன்னைப் பேட்டி காண்பவரிடம் ஒருவர் கூறுகிறார். கதவு உடைபடும் சப்தத்தைக் கேட்டு டூட்டி ரூமிலிருந்து செவிலி கேட்கிறாள், ‘கார்பெண்டர் வந்தாச்சா இல்லே இந்த பேஷண்ட்ஸ் கதவே ஒடைக்கிறாங்களா?’. இந்த வரிகளை வாசித்துவிட்டு, இதனுள் ஒளிந்திருக்கும் நையாண்டியை எண்ணி வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்!
‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ நூலின் முதல் சில பத்திகள், சி.மோகன் தொகுத்து நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘கோபிகிருஷ்ணன் படைப்புகள்’ நூலில் இடம்பெறவில்லை. கோபிகிருஷ்ணனின் முன்னுரையைக் கூட தேடிப்பிடித்து தொகுத்திருக்கும் சி.மோகன், இதனையும் கத்தரிக்காமல் இருந்திருக்கலாம்.
O
படைப்புகளின் வாயிலாக வெளிப்படும் கோபிகிருஷ்ணனின் கனவு மிகப்பெரியது; அவலமற்று அபத்தங்கள் களைந்து அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கத்துடிக்கிறார். இப்படிப்பட்ட சமூகம் உருவாக வேண்டுமெனில் தனிமனிதனிடம் மட்டுமல்லாமல் சமூகம் பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றிலும் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதே அவரது கனவு. மனிதர்கள் என்பதற்காகவே சில சலுகைகளை எடுத்துக்கொள்கிறோம். மனிதர்கள் மனிதர்களிடம் கரிசனம் காட்டுவதே கேள்விக்குறியாய் இருக்க சக ஜீவன்களிடம் கரிசனம் காட்டச்சொல்லி எதிர்பார்க்கிறார்! ‘அங்கீகரிக்கப்பட்ட அநியாயங்கள்தான் மனிதனுடைய வன்முறைகள் வெளிப்படுவதற்கு எவ்வளவு சௌகரியத்தைச் செய்து கொடுத்திருக்கின்றன’ என ஆதங்கப்படுகிறார். கோபிகிருஷ்ணனின் படைப்புகளில் பலவும் ஆட்டோஃபிக்ஷன் வகையைச் சார்ந்தது. நேர்காணலில் தனது படைப்புகள் குறித்து இப்படிச் சொல்கிறார்: ‘என் எண்ணங்களை, அனுபவங்களை மற்றவர்களுடன் பகிரந்துகொள்வதற்காகத்தான் எழுதுகிறேன். எனக்கு வாழ்க்கை இம்மாதரி அமைந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி… என்பது போலத்தான். என் சில கதைகளில் அக்கிரமங்களையும் முறைகேடுகளையும் வெளிப்படுகின்றன’. தனது எழுத்தைப்போல தான் அவருடைய வாழ்க்கையும் இருந்தது என அவரோடு பழகியவர்கள் சொல்லக்கேட்கிறோம். அவருமே நேர்காணலில், ‘எழுதுகிற எழுத்து எழுத்தாளன் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. அப்போதுதான் அதில் நேர்மையிருக்கும். எழுத்தை மிக உணரந்துதான் எழுதுகிறோம். ஆகையால் அந்த உணர்வோடு வாழ்க்கை சம்பந்தப்பட்டிருக்கிறது’ என்கிறார்.
படைப்புகளின் வழியே அறிந்துணரும் கோபிகிருஷ்ணன் எனும் ஆளுமையின் மீது மிகப்பெரும் மரியாதை எழுகிறது. படைப்புகள் மீதான கடுமையான விமர்சனங்களையும் அவர் விரும்புவதில்லை. எழுத்து ஒரு உழைப்பு, அதற்கான மரியாதையைத் தர வேண்டும், விமர்சனம் என்ற பெயரில் காட்டுத்தனமான தாக்குதல் கூடாது, இதெல்லாம் குப்பை என்கிற மாதிரி சொல்லக்கூடாது, எந்த ரூபத்திலும் தன்னால் குரூரத்தை சகித்துக்கொள்ள இயலவில்லை என்கிறார். ‘மனநிலைப் பிறழ்வு பற்றிய படைப்புகள்’ எனும் கட்டுரையில் பிறழ்வு சார்ந்து தமிழில் வெளியான படைப்புகள் சிலவற்றைக் குறித்து பேசுகிறார். அதில் தான் எழுதிய கதைகள் சிலவற்றையும் குறிப்பிடுகிறார். ‘என் கதைகளைப் பற்றிச் சொல்ல, அவற்றை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை என்றபோதிலும், பிறழ்வு குறித்தான இக்கட்டுரையில் இவ்விரண்டையும் ஒதுக்க முடியவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று எழுகிறார். இவ்வரிகளை வாசிக்க நேர்ந்ததும் சாஷ்டாங்கமாக அவரை வணங்கத் தோன்றியது. சில எழுத்தாளர்கள், வாசிக்க வேண்டிய முக்கியமான படைப்புகள் எனும் பட்டியலில் தனது படைப்புகளைக் கூச்சமின்றிக் குறிப்பிடுவதையும் தனது படைப்புகள் குறித்து தானே புகழுரை ஆற்றுவதையும் இங்கே நினைத்துப் பார்க்கிறேன்.
‘எல்லாம் மனம். சர்வமும் அதுவே’!
O
(கபாடபுரம் நான்காவது இதழில் வெளியான கட்டுரை)
(நன்றி: சாபக்காடு)