காந்தி கொலையைப் பொறுத்துவரை அதை கொண்டாடவும், கோட்சேயை தலைவனாக ஏற்கவும் செய்கிறார்கள் இந்துத்துவவாதிகள். இந்து மகாசபை போன்ற அமைப்புகள் இன்றும் கூட இதை வெளிப்படையாக அறிவித்துக்கொள்கிறார்கள். ஆனால் தங்களை காந்தி ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஜெயமோகன் போன்ற வலதுசாரிகளும், தன்னை ‘இடதுசாரி என்றால் வலது நோக்கியும் கொஞ்சம் நகரும்’ கமல் போன்றவர்களும் காந்தி கொலை பற்றிய தங்களது கதையாடலின் மையமாக முஸ்லிம்களையும், அவர்கள் செய்த கலவரங்களையும் கட்டமைக்கிறார்கள்.
‘காந்தி இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய சகல மதத்தவரும் ஒன்றிணைந்த இந்தியாவை கனவுகண்டவர். ஆனால் இதற்கு முஸ்லிம்கள் சரிபட்டுவரவில்லை. அவர்கள் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். அதனால் ஆத்திரமடைந்த சில இந்துக்கள் காந்தியைக் கொலைசெய்யும் தவறான முடிவை எடுத்தார்கள்’ என்று காந்தி கொலைக்கான காரணத்தை இவர்கள் சனாதன-வைதீக சுயத்துக்கு வெளியே புறவயமாக மட்டுமே கட்டமைப்பார்கள். இவ்வாறு ஒரு முஸ்லிமின் அருகாமையும் அவனது இயல்பும், நலவு (virtue), அகிம்சை, ஜீவகாருண்யம் ஆகியவற்றை மட்டுமே உள்ளீடாகக் கொண்ட இந்து சுயத்தை பாதித்து இவ்வாறான முடிவை எடுக்கவைத்தது, இல்லையென்றால் இத்தகைய ஒரு துக்ககரமான சம்பவம் நடந்திருக்காது என வாதிடுவார்கள். இதைத்தான் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் பேசுகிறார்கள். இதைத்தான் கமல்ஹாசன் போன்றவர்கள் தனது திரைமொழியின் வாயிலாக பிரச்சாரம் செய்கிறார்கள். இவ்வாறு காந்தி கொலையை கண்டிப்பது போன்ற இவர்களின் பாவனைகளுக்கு உள்ளே இந்துத்துவ மற்றும் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் தான் ஒளிந்திருக்கிறது.
இவ்வாறு வர்க்க/சாதி ரீதியாக அரசியல், கருத்தியல் மேலாண்மையையும், பொருளியல் மற்றும் கலாச்சார மூலதனங்களையும் அனுபவிக்கும் ஆளும் தரப்பு தன்னை சுயபரிசுத்தப்படுத்திக்கொண்டு தனது தவறுகளுக்கு காரணமாக ‘மற்றமையை’ குற்றம் சுமத்துவது மிகச் சுலபமாக நடைபெற்றுவிடுகிறது. ஃபாசிஸம் எப்போதுமே அதைத்தான் செய்யும். இம்மாதிரியான சூழலில் காந்தி மற்றும் அவரது கொலை பற்றிய ஒரு முக்கியமான மறுவாசிப்பை நிகழ்த்திய ஆக்கமாக பேராசிரியர் அ. மார்க்ஸின் ‘காந்தியும் தமிழ்ச்சனாதனிகளும்’ நூல் இருக்கிறது. ‘காந்தி முஸ்லிம்களை ஆதரித்தார்; சனாதனிகளுக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது; அதனால் சனாதனிகள் காந்தியைக் கொன்றார்கள்’ என்ற நன்னோக்கம் கொண்ட செக்குலர் இந்துக்களின் பொதுப்புத்தியை நூலாசிரியர் கேள்விக்குள்ளாக்குகிறார். இது வெறுமனே ஒரு மதவெறி மதநல்லிணக்கத்தை பிரசங்கித்தவரை கொலை செய்தது மட்டும் கிடையாது, மாறாக சனாதனிகள் தாங்கள் காக்க விரும்பிய கலாச்சார மேலாண்மை என்னும் கோட்டையில் விரிசல் விழுவதை தடுக்கும் இடத்தில் இருக்கும் காந்தி, அதைச்செய்யாமல் அது மேலும் விரிசலடைவதை அனுமதிக்கிறார்,அதுமட்டுமல்லாது ஒரு அளவில் அந்த விரிசலுக்கு அவரும் காரணமாக இருக்கிறார், மேலும் விரிசல் ஏற்படுத்துபவர்களுக்கு ஒரு வகையான அங்கீகாரத்தையும் வழங்குகிறார், அத்தோடு சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் தங்களது இந்துத்துவ ஃபாசிஸ ஆட்சி அமைவதற்கு அவர் தடையாக இருப்பார் என்பதும்தான். இந்திய தேசியத்தின் மனசாட்சியாக உருவாகிவந்த காந்தியிடமிருந்து ஆலய நுழைவு போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, இந்து மகாசபை போன்ற அமைப்புகள் முன்வைத்த விலக்கல் தேசியத்தை எதிர்த்தல் ஆகியவையெல்லாம் தங்களது மேலாண்மையைக் கவிழ்ப்பதற்கு அவர் வழங்கும் அங்கீகாரங்கள் என்பதாக சனாதனிகள் உணர்ந்தனர். இவைதான் காந்தி மீது இவர்களிடம் உருவான காழ்ப்பின் தொடக்கப்புள்ளி. இந்த மன அமைப்பிலிருந்துதான் காந்தியுடனான இவர்களது முரண்பாடுகள் தோன்றுகிறது. அதன் தர்க்கப்பூர்வ நீட்சியாக அவரது கொலை அமைகிறது. இதை காந்தியை தமிழ்ச்சனாதனிகள் எவ்வாறு அணுகினார்கள் என்பதன் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார் நூலாசிரியர்.
இதுகுறித்து நூலாசிரியர் இவ்வாறு கூறுகிறார்:-
“நிச்சயமாக காந்தி குறித்த எனது ஆர்வம் அவரது கொலையிலிருந்துதான் தொடங்குகிறது. கிட்டத்தட்ட ஏழு முறைகள் அவர் மீது கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஐந்து குறித்து விரிவான பதிவுகள் உள்ளன. புனாவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்கள் இதில் முன்னணியில் இருந்தனர். இறுதி மூன்று முயற்சிகளையும் கோட்ஸே குழுவினர் மேற்கொண்டனர். பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக இருந்ததற்காகவும், 55 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்று இந்தியாவை நிர்பந்தித்ததற்காகவும்தான் காந்தியைக் கொன்றேன் என்றது நீதிமன்றத்தில் கோட்ஸே சொன்ன காரணம்.
ஆனால் காந்தி மீதான முதல் கொலை முயற்சி 1930 களில் தொடங்குகிறது. அப்போது பாகிஸ்தான் என்கிற பேச்சே இல்லை. பின் ஏன் அப்போது அந்த முயற்சி? தீண்டாமைக்கெதிராக அரிஜன யாத்திரை ஒன்றின்போது புனா நகர் மன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின்போது தான் முதல் கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதைக் கவனிக்கும்போதுதான் தமிழ்நாட்டில் சங்கராச்சாரி போலவே அங்கும் பார்ப்பனர்கள் காந்தியால் வருண சங்காரம் ஏற்பட்டுவிடுவோமா என அஞ்சியது விளங்குகிறது” என்கிறார். (கா. த. ப. XXIII)
காந்தியின் மீது சனாதனிகளும், வருணசிரமவாதிகளும் கோபம் கொண்ட தருணங்களில் ஒருசிலவற்றை குறிப்பிடுவது உதவிகரமாக இருக்கும். பீகாரில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு அதற்கு நிவாரணம் திரட்டும்போது அவர் இந்துமதத்தில் உள்ள தீண்டாமைக் கொடுமைகளால் தான் இத்தகைய பூகம்பங்கள் ஏற்படுகிறது என்று பேசுகிறார். இதை வண்மையாக கண்டித்து ‘மெயில்’ ஒரு தலையங்கமே எழுதியிருக்கிறது (காந்தியும் தமிழ்ச்சனாதனிகளும் பக்கம். 45). மேலும் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் அதற்குப்பின்பு கலந்துகொண்ட கூட்டங்களிலெல்லாம் பால்யமணத்தையும், தேவதாசி முறையையும் கண்டித்து பேசியிருக்கிறார் (கா. த. ப. 10). பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் பால்ய விவாஹத்தைக் கண்டித்தும், விதவை மறுமணத்தை ஆதரித்தும் பேசினார். மேலும் தங்களது சமூகத்தில் திருமணம் செய்வதற்கு கைம்பெண்கள் கிடைக்காவிட்டால் பிராமணர்கள் மற்ற சாதிகளில் உள்ள கைம்பெண்களை திருமணம் செய்வதற்கும் தயங்கக்கூடாது என்றார். இதற்கு சனாதனிகளிடமிருந்து நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கின்றன. இதுகுறித்து தமிழ் நாட்டில் காந்தி என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடப்படுவதை நூலாசிரியர் மேற்கோள்காட்டுகிறார்:-
“காந்தியின் இத்தகைய பேச்சுக்களும் முத்துலெட்சுமி ரெட்டி, ஹரவிலாச சாரதர் போன்றோர் சட்டமன்றங்களில் கொண்டு வந்த சீர்திருத்தச் சட்டங்களும் சனாதனிகளை நிலை குலைய வைத்தன. முத்துலெட்சுமி போன்ற இந்து மரபின் மீது நம்பிக்கையற்றவர்களின் முயற்சிக்கு பெரும் மக்கள் செல்வாக்குள்ள காந்தியடிகளின் ஆதரவு கிடைப்பது அவர்களுக்கு எரிச்சலூட்டியது. வருணாசிரமிகள் கூட்டம் கூட்டமாக வந்து காந்தியை சந்தித்து முறையிட்டனர். கூட்டங்கள் கூட்டிக் கண்டனத்தீர்மானங்கள் இயற்றினர். பச்சையப்பன் கல்லூரிப்பேச்சைக் கண்டித்து கும்பகோணத்தில் இவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமஸ்கிருதப் பண்டிதர் ஆர்.வி.கிருஷ்ணமாசாரியார் தலைமையில் ஏழு பண்டிதர்கள் காந்தியைச் சந்தித்து தம் மறுப்பைத் தெரிவிக்கவும் செய்தனர்.” (கா.த. பக் 48)
காந்தியுடனான மறைந்த காஞ்சி சங்கராச்சாரி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி 1927 ஆம் ஆண்டு காந்தியை சந்திக்க வேண்டி வந்தது. அப்போது சங்கராச்சாரி சமஸ்கிருதத்திலும், காந்தி இந்தியிலும் ஒருவருக்கொருவர் உரையாடியிருக்கின்றனர். அப்போது சங்கராச்சாரி, “ஹரிஜன ஆலயப்பிரவேச விஷயத்தில் சாத்திரங்களையும், வழக்கங்களையும் நம்பியிருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கிறதென்றும் கூறினார்” என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாது, காஞ்சி பீடம் ‘ஆர்ய தர்மம்’ என்ற இதழையும் தொடங்கினார். 1927 ஆண்டு தொடங்கப்பட்ட அவ்விதழில் அவ்வாண்டு சென்னையில் நடைபெற இருந்த தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும் தருவாயில் வர்ணாசிரம் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்ற அறிவிப்பையும் வெளியிடுகிறது. இம்மாநாடு கூட்டப்படவேண்டியதன் அவசியத்தைக்குறிப்பிடும்போது “காந்தி தென்னாடு வந்தபிறகு அத்வாசியமாக இதைக்கூட்டியே ஆகவேண்டுமெனப் பலர் நினைக்கின்றனர்” எனவும் குறிப்பிடப்படுகிறது. தீண்டத்தகாதவர்களும் நம்மைப்போல மனிதர்கள்தானே என்று சொன்னதற்காக, சங்கராச்சாரியாருக்கு தெரியாததெல்லாம் காந்திக்கு தெரிந்துவிட்டது என்று அவர் எள்ளி நகையாடப்படுகிறார்.
மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப்போராட்டம் வெற்றிகரமாக நடந்ததற்குப் பின்பு ஆலயம் தீட்டப்பட்டுவிட்டதாகவும், ஆலயத்தை விட்டு மீனாட்சி போய்விட்டதாகவும் சொல்லி வழக்கறிஞர் நடேசய்யர் வீட்டில் ஒரு சிறு மீனாட்சி விக்ரகத்தை வைத்து வழிபடவும் தொடங்கினர். அர்ச்சகர்களைக் கடத்துதல், ஆலயத்தைப் பூட்டி சாவிகளை எடுத்துச் செல்லுதல் போன்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. (கா. த. பக் 54)
காந்தி கொல்லப்பட்ட சமயம் அதற்கான காரணமாக காந்தி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக பேசியதனாலும், சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதனால்தான் என்று பெரியாரும் பேசியிருக்கிறார். காந்தி பற்றிய பெரியாரது மதிப்பீட்டுடன் ஒத்துப்போவது போன்று அமையும் பூரி சங்கராச்சாரியின் கூற்று சுவாரசியமானது:- “காந்தி சனாதனியுமல்ல, வர்ணாஸ்ரம தர்மத்தைக் கடைப்பிடிப்பவருமல்ல… வேதங்களிலோ, ஆலயங்களிலோ அவருக்கு நம்பிக்கையும் இல்லை” என்று கூறுவது கூர்ந்துநோக்கத்தக்கது. காந்தியின் சனாதனமின்மை குறித்து சனாதனிகள் கொடுத்த சான்றிதழ் இது.
ஆக காந்தியின் மதச்சீர்திருத்த அழைப்பு, அது மக்கள் ஏற்பை பெறும் அபாயம், சனாதனத்தின் அரசியல் வடிவமான விலக்கல் தேசியத்தை எதிர்ப்பது, பார்ப்பனல்லாதார் இயக்கம், தலித்கள், பெண்கள், மதச்சிறுபான்மையினர் போன்ற தொகுதிகளின் உரிமைக்குரல்களை ‘பிரிவினைவாதம், தேசவிரோதம்’ என்றெல்லாம் குற்றப்படுத்தாமல் அவை உருவானதற்கான சமூக காரணங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுடன் விவாதித்தது, மேலும் அவற்றில் இருந்த நியாயங்களை இதர சலுகைபெற்ற வர்க்கங்கள் ஏற்க அழைப்புவிடுத்தது… இதெல்லாம்தான் காந்தி மீது சனாதனிகள் எரிச்சல் கொள்ள காரணம். அதன் காரணமாக தான் இறுதியாக அவர் கொல்லவும்படுகிறார் என்பதும் தெளிவாகிறது.
மேலும் ‘காந்தியும் தமிழ்ச்சனாதனிகளும்’ என்ற இப்புத்தகம் வெளிவந்ததற்கு சில ஆண்டுகள் பின்னர் Gita Press and the making of Hindu India என்ற நூலை எழுதிய அறிஞர் அக்ஷய் முகுல் இம்முடிவை உறுதிப்படுத்துவது போன்று சில சம்பவங்களைக் குறிப்பிடுகிறார். அவர் கொடுத்த நேர்காணல் ஒன்றில் அவர், கீதா பிரஸ் நிர்மாணித்தவர்களில் ஒருவரான அனுமன் பிரசாத் போத்தார் காந்தியின் ஆலய நுழைவுப்போராட்டங்களை கடுமையாக விமர்சித்தார் என்றும், காந்தி கொலை சம்பந்தமாக விசாரணை வளையத்துக்குள் வந்தவர்களில் அவரும் ஒருத்தர் என்றும், தான் விடுவிக்கப்பட உதவி செய்யவேண்டி கோடீஸ்வரர் பிர்லாவிடம் அவர் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு பிர்லா, “நீங்கள் செய்வது சனாதன தர்மா இல்லை, ஷைத்தான் தர்மா” என்று கூறி அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். இவ்வாறு காந்தி கொலையில் சனாதன-வர்ணாசிரமவாதிகளுக்குள்ள பங்கு மறுக்கப்பட முடியாததாக இருக்கிறது.
நூலாசிரியர் ‘யார் காந்தியின் எதிரிகள்’ என்ற அத்தியாயத்தின் தொடக்கபத்தியை நிறைவாகத் தருவது பொருத்தமாக இருக்கும்.
“காந்தியின் எதிரிகள் யார் என்கிற கேள்விக்கு இன்றைய இளைஞர்கள் குறிப்பாக இயக்கங்கள் சார்ந்த இளைஞர்களின் பதில்கள் பல உண்மைகளைக் கணக்கில் கொள்ளப்படாமல் சொல்லப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இவர்கள் உருவாக்கக்கூடிய பட்டியலில் அம்பேத்கர், பெரியார் போன்ற சாதி எதிர்ப்பு போராளிகள், கம்யூனிஸ்டுகள், பிரிட்டிஷ் ஆட்சி என்கிற வரிசையின் இறுதியாகவே இந்துத்துவவாதிகள் அமைவர். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. வரிசையைத் தலைகீழாக மாற்றிப்போட்டாக வேண்டும். இந்துத்துவவாதிகள் என்கிற சற்றே அகன்ற அரசியல் அடையாளத்தைக் காட்டிலும் வருணாசிரமிகள், பார்ப்பனர்கள் என்றே காந்தி எதிர்ப்பாளர்களின் பட்டியல் தொடங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்டுகள் எல்லாம் காந்தி எதிர்ப்பாளர்களே ஒழிய, காந்தியைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடுமையாக விமர்சித்தவர்களே ஒழிய காந்தியின் எதிரிகள் அல்லர்.” (கா. த. பக் 40)
ஆக காந்தியை மறுவாசிப்பு செய்கிறோம் என்ற பெயரில் கம்யூனிஸ்டுகளையும், திராவிடர்களையும், இஸ்லாமியர்களையும் கருவறுக்க முனையும் ஜெயமோகன் போன்ற ஃபாசிஸ்டுகளின் முயற்சியை முறியடிக்கவும், ‘காந்தியைக் கொன்றது நீ’ என்று இவர் போன்றவர்களைப் பார்த்து உரத்துச்சொல்லவும், காந்தியின் மீது பற்றுகொண்ட மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுடைய இந்துக்களை அவர் கொல்லப்பட்டதற்கான அரசியலைப் புரியவைப்பதன் வழி அவர்களது அரசியலைக் கூர்மைப்படுத்தி ஃபாசிஸத்துக்கெதிரான முகாமை வலுப்படுத்துவதற்கும் இத்தகைய குரல்கள் உதவி செய்யும்.