ஸ்டாலின் ராஜாங்கத்தின் புதிய நூலான, ‘எழுதாக் கிளவி : வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்' நூலைச் சென்ற வாரம் வாசித்துமுடித்தேன். காலச்சுவடு, உயிர் எழுத்து உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த 12 கட்டுரைகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரைகளை இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கிவிடமுடியும். முதலாவது பகுதி, தலித் வரலாற்றுப் பதிவுகளில்கூட இடம்பெறாத முக்கியமான அதே சமயம் மறக்கடிக்கப்பட்ட ஆளுமைகளைத் தேடிப்பிடித்து அறிமுகப்படுத்துகிறது. ரெட்டியூர் பாண்டியன், ஆனந்த தீர்த்தர் (இருவரும் அட்டையில் மேல், கீழாக இடம்பெற்றிருக்கிறர்கள்), அங்கம்பாக்கம் குப்புசாமி, வஞ்சிநகரம் கந்தன், டி.எம். மணி என்று வண்ணமயமான நாயகர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் நம்முன் விரிவடைகின்றன. ஸ்டாலின் ராஜாங்கத்தின் தனிப்பட்ட பயணங்களும் தேடுதல்களும் இல்லாவிட்டால் இவர்களில் சிலர் நிரந்தரமாகவே காணாமல் போயிருக்கக்கூடும். ஆய்வாற்றல் கொண்டவர்கள் தீவிர களஆய்வை முன்னெடுத்தால் இவர்களைப் போலவே இருளில் கிடக்கும் வேறு பல ஆளுமைகள்மீதும் வெளிச்சம் பரவ வாய்ப்பு இருக்கிறது.
புத்தகத்தின் இரண்டாவது பகுதி, நன்கு அறியப்பட்ட ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் தலித் வரலாற்றியல் நோக்கில் அணுகி ஆராய்கிறது. கக்கன், சிவாஜி சிலைகள் பற்றிய ஒப்பீட்டுக் கட்டுரை ஓர் உதாரணம். செருப்பு அணியாத கால்களுடன் கைகளை முன்புறமாகத் தொங்கவிட்டுப் பிணைத்தபடி பணிவாக நிற்கிறார் கக்கன். அந்தச் சிலைக்குப் பின்னால் கைகளைப் பின்னுக்குக் கட்டியபடி கம்பீரமாக நிமிர்ந்து பார்க்கிறார் சிவாஜி கணேசன். இந்த இரண்டு சிலைகளுமே மதுரையில் உள்ள அம்பேத்கர் சாலையில் அமைந்திருக்கின்றன. கக்கன் இயல்பிலேயே பணிவானவர் என்பதாலும் சிவாஜி கம்பீரமானவர் என்பதாலும் அவர்களுடைய சிலைகள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்று எடுத்துக்கொள்ளலாமா? முடியாது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். காரணம், ஒருவருடைய பண்புகளை மட்டும் மையப்படுத்தி சிலைகள் வடிக்கப்படுவதில்லை; ஒருவர் எப்படிப் பார்க்கப்படவேண்டும் என்று அதிகார மையம் விரும்புகிறதோ அதுவே சிலையின் இயல்பாக மாறுகிறது என்கிறார் அவர்.
இங்கே அதிகாரம் என்பது உயர் சாதி அரசியல் அதிகாரத்தைக் குறிக்கிறது. எளிய தலித் பின்னணியிலிருந்து உதித்த ஒரு காங்கிரஸ் தலைவராக கக்கன் இங்கு முன்நிறுத்தப்படுவதில்லை.‘கக்கனின் தலித் அடையாளத்தோடு அவரின் எளிமை, பணிவு போன்ற பிம்பங்களும் இணைக்கப்பட்டு தலித்திற்கான ஒரு நிலைத்த குறியீடாக அவர் மாற்றப்பட்டார்’ என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். அதனால்தான் கக்கனின் பணிவையும்விசுவாச உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் அவருடைய சிலை அமைந்துள்ளது.கக்கன் மட்டுமல்ல, எந்தவொரு தலித் தலைவரிடமிருந்தும் ஆதிக்கச் சாதி அரசியல் இவற்றைத்தான் எதிர்பார்க்கும் அல்லவா?
அதே சமயம் சிவாஜி கணேசன் ஒரு நடிகராக மட்டுமின்றி சாதி அடையாளமாகவும் மாற்றப்பட்டுவிட்டார். (அதற்கு சிவாஜியும் பிற்காலத்தில் ஒத்துழைத்தார்!) இந்த அடையாளத்துக்கு அரசியல் செல்வாக்கும் இருப்பதால் அவருடைய சிலை கம்பீரமானதாக அமைந்திருக்கிறது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். உயர் சாதியினரால் தாங்கள் விரும்பியவண்ணம் தங்கள் தலைவர்களின் சிலைகளை அல்லது பிற அடையாளங்களைக் கட்டமைத்துக்கொள்ளமுடிகிறபோது, தலித்துகளுக்கு மட்டும் ஏன் அது மறுக்கப்படுகிறது என்னும் கேள்வியை ராஜாங்கம் எழுப்புகிறார். தேவர் சிலையையும் இம்மானுவேல் சேகரனின் சிலையையும் ஒப்பிட்டால் இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் புரியவரும்.
அடுத்தாக, நீதிக்கட்சி, திராவிட இயக்கம் இரண்டையும் விமரிசனத்துக்கு உட்படுத்துகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். அதே சமயம் தலித் வரலாற்றியலை எதிர்மறை விமரிசனங்களை மட்டுமே கொண்டு கட்டமைத்துவிடமுடியது என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார். நூலின் முன்னுரையில் இடம்பெற்றுள்ள ஒரு பகுதி இது. ‘திராவிட இயக்க வரலாறு, தலித் வரலாற்றுச் செயல்பாடுகளை மறைத்ததை, அரைகுறையாக்கியதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். ஆனால், இத்தொகுப்பின் கட்டுரைகளில் அப்போக்கு தானாகவே குறைந்திருக்கிறது. தலித் வரலாற்றை எதிர்மறையாக அமையும் விமர்சன வரலாறாகவே சுருக்கிவிடக்கூடிய அபாயத்திலிருந்து விலகி தனக்கான சுயமான தரவுகளிலிருந்து தலித் வரலாற்றியல் தன்னை இங்கு கட்டமைத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு தலித்துகளின் வரலாற்றை விரிந்த தளத்தில் விவாதிப்பதேகூட இன்றைய திராவிட இயக்க விடுபடல்களுக்கான பதிலாக இருக்கமுடியும்.’
திராவிட இயக்கம் அப்படி எதை மறைத்துள்ளது அல்லது அரைகுறையாக்கியுள்ளது? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தலித் தம்பதியான மீனாம்பாள், சிவராஜ் இருவருடைய பங்களிப்பும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது; அல்லது அரைகுறையாகவும் பிழையாகவும் அவர்களைத் திராவிட இயக்க வரலாறு நினைவுர்கிறது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். மீனாம்பாள் மட்டுமல்ல, நீதிக்கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான டி.எம். நாயருக்கும்கூட திராவிட இயக்கம் தகுந்த இடத்தை அளிக்கவில்லை என்கிறார் அவர். டி.எம். நாயர் வடிவமைத்த கொள்கைகளை மற்றவர்கள் பின்பற்றமுடியாமல் போனதும், அவருடைய மொழிப் பின்னணி பிற்காலத் தமிழ் அரசியலுக்குப் பொருந்தாமல் போனதும் அதற்கான காரணங்களில் சில.
எம்.சி. ராஜா பற்றிய கட்டுரை சில முக்கிய விவாதங்களை எழுப்புகிறது. பிராமணரல்லாதோர் இயக்கத்திலிருந்து வெளியேறியதால் திராவிட இயக்க வரலாற்றாசிரியர்களும்; இரட்டை வாக்குரிமை பிரச்னையில் அம்பேத்கரிடமிருந்து விலகி காந்தி பக்கம் சேர்ந்துவிட்டதால் தலித்துகளும் அவரைக் கைவிட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டும் ஸ்டாலின் ராஜாங்கம் இந்த இரு நிகழ்வுகளையும் எம்.சி. ராஜாவின் வாழ்க்கை, சிந்தனைகள் வழியே ஆராயவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். தவிரவும், எம்.சி. ராஜாவின் செயல்பாடுகளும் அக்கறையும் விரிவானவை என்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.
எம்.சி. ராஜாவின் பார்வையில் பிராமணரல்லாதோர் இயக்கம் என்பது பிராமணர் தவிர்த்த மற்ற உயர் சாதி இந்துக்களின் திரட்சியாகவே இருந்தது. ‘தொடக்கத்தில் தலித்துகளுக்கு ஆதரவாக இருந்தபோதும் அதிகாரம் கிடைத்ததும் சாதி இந்துக்களுக்குச் சாதகமாக மட்டுமே நடந்துகொள்ள ஆரம்பித்தது நீதிக்கட்சி; சமூக முன்னேற்றத்தின்மீதான அக்கறையையும் அது குறைத்துக்கொண்டது’ என்கிறார் வரலாற்றாய்வாளர் யூஷின் இர்ஷிக்.
எண்ணிக்கை வலுசேர்க்கும் விதமாகத்தான் தொடக்கத்தில் தலித்துகளை நீதிக்கட்சி தங்களுடைய போராட்டங்களில் இணைத்துக்கொண்டது. அதாவது, அவர்களுடைய நோக்கமும் தலித்துகளின் நோக்கமும் ஒன்றாக இருந்தவரை நீதிக்கட்சியினர் தலித்துகளோடு சேர்ந்திருந்தனர் என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். நம்முடைய நலன்களைப் பிரதிபலிக்கும்வரை மட்டுமே நீதிக்கட்சிக்கு ஆதரவு என்பதில் எம்.சி. ராஜா தெளிவுடன் இருந்தார். மற்ற சமயங்களில் அவர்களுக்கு எதிராகவே இருந்தார் எம்.சி. ராஜா.
உதாரணத்துக்கு, சிவில் சர்வீஸ் தேர்வுகள் சென்னையில் நடத்தப்படவேண்டும் என்று பிராமணரல்லாதோர் இயக்கம் போராடியபோது தலித்துகள் அவர்களுக்கு எதிராக நின்றனர். இந்தத் தேர்வுகள் சென்னையில் நடத்தப்பட்டால் மேலும் பல சாதி இந்துக்கள் முக்கியப் பதவிகளில் அமர நேரிடும்; அவ்வாறு நடந்தால் அவர்களுடைய பலம் பெருகி ஒடுக்குமுறையும் அதிகரிக்கும் என்று அவர்கள் அஞ்சினர். எம்.சி. ராஜா மட்டுமின்றி தலித்துகள் பலரும் சுதேசி இயக்கத்துக்கு எதிராகவும் பிரிட்டிஷ் ஆட்சியதிகாரத்துக்குச் சாதகமாகவும் பலமுறை நடந்துகொண்டதற்குக் காரணம் இதுதான். சாதி இந்துக்களைவிட பிரிட்டிஷாரிடமிருந்து கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றைக் கோரியும் போராடியும் பெறமுடியும் என்று அவர்கள் கருதினர். எம்.சி. ராஜாவின் நிலைப்பாடும் இதுவேதான்.
நீதிக்கட்சியை எம்.சி. ராஜா விமரிசித்ததற்கு அவருடைய அனுபவங்களே காரணமாக இருந்தன என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பின்னி தொழிற்சாலை வேலைநிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை புளியந்தோப்பு கலவரமாக (1921) மாறியதைத் தொடர்ந்து நீதிக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘சாதி இந்துக்கள் தலித்துகளைக் கண்டு அஞ்சுகிறார்கள், எனவே தலித்துகளை ஓரிடத்தில் குடியமர்த்தக்கூடாது என்றும் சென்னைக்கு வெளியில் தனித்தனியே வைக்கவேண்டும்’ என்றும் குறிப்பிட்டது.
நீதிக்கட்சி சாதி இந்துக்களின் கூடாரமாக மாறியதால்தான் இது நடைபெற்றது என்று எம்.சி. ராஜா கருதினார். பின்னி ஆலை விவகாரத்தில் இடதுசாரிகளின் கோபத்துக்கும் எம்.சி. ராஜா ஆளாகவேண்டியிருந்தது. உயர் சாதி இந்துக்களோடும் இஸ்லாமியர்களோடும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்குப் பதில் அவர்களுக்கு எதிராகத் தலித்துகள் நின்றனர், அதற்கு எம்.சி. ராஜாவும் ஒரு காரணம் என்பது இடதுசாரிகளின் குற்றச்சாட்டு. ஆனால் வேலை நிறுத்தத்தைவிடவும் வேலையில் நீடிப்பது தலித்துகளுக்கு முக்கியமாக இருந்ததை ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக்காட்டுகிறார்.
நீதிக்கட்சியோடு மட்டுமல்ல காங்கிரஸோடும்கூட அவ்வப்போது இணைந்தும் விலகியும்நின்று செயல்பட்டிருக்கிறார் எம்.சி. ராஜா. நீதிக்கட்சித் தலைவர்களில் டி.எம். நாயர் குறித்து மட்டும் இறுதிவரை சாதகமான கருத்தை அவர் கொண்டிருந்தார். நாயர் நீதிக்கட்சியின் தலைவராக நீடித்திருந்தால் (1919ல் அவர் இறந்துபோனார்) அவர் தலித்துகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டிருப்பார்; பல முன்னேற்றத் திட்டங்களை அவர்களுக்காக முன்னெடுத்திருப்பார் என்பதே எம்.சி. ராஜாவின் நம்பிக்கையாக இருக்கிறது. அவருக்குப் பிந்தைய நீதிக்கட்சி, முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இணைத்துக்கொண்ட அளவுக்கு தலித்துகளை இணைத்துக்கொள்ளவில்லை என்பது எம்.சி. ராஜாவின் ஆதங்கமாக இருந்தது.
எம்.சி. ராஜாவைப் போலவே அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரும் புதிய கோணத்தில் இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளனர். இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஸ்பர்டாங்க் கூட்டம், காந்தியின் அரிஜன் சேவை தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம், தலித் இதழியல், திராவிடன் தமிழன் பறையன் போன்ற அடையாளங்கள், சாதி அரசியல், பண்பாட்டு அரசியல் என்று பல நிகழ்வுகளும் கோட்பாடுகளும் விவாதங்களும் நூல் முழுக்கப் பரவிக்கிடக்கின்றன. திராவிட இயக்கம், தலித் இயக்கம், இடதுசாரி இயக்கம் மூன்றின்மீதும் அக்கறை கொண்டிருப்பவர்கள் இந்நூலை அவசியம் வாசிக்கவேண்டும். ஸ்டாலின் ராஜாங்கத்தின் பார்வையையும் அவர் எழுப்பும் கேள்விகளையும் அவர்கள் ஏற்கலாம், விவாதிக்கலாம், மறுக்கவும் செய்யலாம். ஆனால் நிச்சயம் புறக்கணிக்கமுடியாது.
(நன்றி: மருதன்)