"யூஜினி" பால்ஸாக் எழுதிய ப்ரெஞ்ச் நாவல். சி.சு. செல்லப்பா மொழி பெயர்த்தது. பிரான்ஸ் நாட்டின் கிராமத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மனிதர்களை கதை பேசுகிறது. கடினமாக இருந்தது அந்த காலகட்டத்து பிரான்ஸ் வாழ்க்கைமுறைக்குள் பிரவேசிக்க. முதலில் படிக்க ஆரம்பித்து கதைக்குள் புகமுடியாமல் திக்கி திணறிக்கொண்டிருந்தேன். ஆசிரியரின் நுணுக்கமான பல விவரணைகள் கொஞ்சம் அயர்ச்சியடைய வைத்தது. க்ராந்தே, க்ரான்சே, மதாம் க்ரான்சே, குருஷோ போன்ற கேரக்டர்களை யார் யார் என விளங்கிகொள்வதில் இருந்த சிரமம் காரணமாக..
க்ராந்தே சோமூரின் விவசாயி. மற்றும் மரபீர் பிப்பாய் வியாபாரத்துடன், திராட்சை பயிரிட்டு ஒயின் விற்பனை என நல்ல வருமானம் பார்த்தாலும் படுகஞ்சன். வீட்டில் ஏற்றும் மெழுகுவர்த்தியில் இருந்து சமைப்பதற்கு கொடுக்கும் பொருட்கள் வரை அளந்து கொடுப்பவன்.
மனைவி மற்றும் மகள் யூஜினி. இருவருக்கும் வீடு தாண்டிய உலகம் தெரியாது. தையல் வேலைப்பாடுகள் செய்வது, வழிபடுவது மற்றுமே பொழுதுபோக்கு. க்ராந்தே சொல்லுக்கு இருவருமே கீழ்படிந்து செல்பவர்கள்.யூஜினியின் சொத்துக்காக அவளை மணமுடிக்க பலரும் போட்டி போடுகிறார்கள். ஆனால் க்ராந்தே யாருக்கும் பிடிகொடுக்காமல் தவிர்த்து வருகிறார். யூஜினியின் பிறந்தநாள் வருகிறது. யூஜினியை மயக்க பரிசு பொருட்களுடன் அந்த ஊரில் உள்ள சிலர் தங்கள் பையனை அழைத்துகொண்டு விருந்துக்கு வருகிறார்கள்.
க்ராந்தேவின் நம்பிக்கையான வேலைக்காரி நானோ விருந்துக்கு ஏற்பாடு செய்கிறாள். அப்போது பாரீஸ் நகரத்தில் இருந்து வருகிறான் சார்லஸஸ் என்ற க்ராந்தேவின் அண்ணன் மகன் அவனை பார்த்தவுடன் யூஜினி காதல்வயப்படுகிறாள் (ப்ரான்ஸில் ஒன்று விட்ட சகோதரனை மணக்கும் வழக்கமுண்டு) சார்லஸ் செல்லமாக பகட்டாக வளர்க்கப்பட்ட குழந்தை. அவன் தந்தை திவாலாகிவிட தம்பிக்கு ஒரு கடிதம் எழுதி தன் மகனுக்கு வழிகாட்ட சொல்கிறார்.அவனுக்கு திவாலானது தெரியாது நான் உயிருடன் இருக்கமாட்டேன் நீ தான் பொறுப்பு என க்ராந்தே எரிச்சலுறுகிறார். காலையில் பேசலாம் என வீட்டு பெண்களிடம் அவன் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்ய சொல்கிறார். காதலின் பரவசத்தில் யூஜினி தாயுடனும் வேலைக்காரியுடன் சேர்ந்த இயன்ற அளவு அழகாக்குகிறாள்.
முதல்முறை காதலில் விழும் பெண்ணின் பரவசத்தை நுணுக்கமாக விவரித்திருக்கும் விதமும் அதில் இருக்கும் இலக்கிய தெறிப்பும் அதன் பின் புத்தகத்தை கீழே வைக்கவிடாமல் செய்கிறது. கஞ்சனான க்ராந்தேவுக்கு இந்த ஏற்பாடுகள் எரிச்சலை தருகிறது. அவனை அப்புறப்படுத்த என்ன வழி என யோசிக்கிறார்.
மறுநாளே சார்லஸ் தந்தை தற்கொலை செய்து கொண்ட செய்தி வருகிறது. குடும்பத்தாரிடம் அவனிடம் நான் வந்து சொல்லும்வரை சொல்ல வேண்டாம் என சொல்லி வெளியே செல்கிறார். அவனுக்கு பார்த்து பார்த்து செய்கிறாள் யூஜினி. அம்மாவும் வேலைக்காரியும் அவள் உணர்வை புரிந்து உதவுகிறார்கள். மகளின் காதல் வெறும்பயலுடன் என்பதை லோபி க்ராந்தேவால் ஏற்கமுடியவில்லை. சீக்கிரம் அப்பறப்படுத்த வேண்டும் என அதற்கான ஏற்பாடுகளை செய்துவர வீட்டுக்கு வந்து சார்லஸிடம் தந்தை இறந்ததையும் திவாலானதையும் சொல்கிறார்.
அழுது துடித்து துவள்கிறான். யூஜினி ஆறுதலில் ஆசுவாசமடைய முயற்சிக்கிறான் மெல்ல மெல்ல உண்மை சுட தான் செல்ல சீமான் இல்லை பொருளீட்ட வேண்டியதன் அவசியமும் பணம் இல்லாமல் பாரீஸ் செல்ல முடியாதென்பதை உணர்கிறான். அவன் ஏற்கனவே காதலிக்கும் பெண்ணிடம் உறவை தொடர முடியாது. பொருளீட்ட வெளிநாடு ப்ராயணம் செய்ய போவதாகவும் அதற்கான பணம் கூட இல்லாமல் இருக்கும் நிலையை சொல்லி கடிதம் எழுதுகிறான். அந்த கடிதத்தை பார்த்துவிடும் யூஜினி அவள் தந்தைக்கு தெரியாமல் தனது சேமிப்பை தருகிறாள். அதற்கு ஈடாக அவன் ஒரு தங்க பெட்டியை கொடுத்து பத்திரமாக வைத்துகொள் நான் சம்பாரித்து உன் பணத்தை கொடுத்து அதை பெற்று கொள்வேன் என்கிறான்.
யூஜினியின் அன்பும் காதலும் அவனுக்கு நம்பிக்கை எதிர்காலத்துக்கான பிடிப்பை தர அவளை காதலிக்கிறான் சாகாவரம் பெற்ற வார்த்தைகளால் யூஜினியின் மனம் முழுதும் நிறைகிறான். அவளுக்கு இரண்டு முத்தங்கள் வழங்குகிறான். அவர்கள் அதிலேயே ஒன்றாகியது போல யூஜினி மலர்கிறாள். சார்லஸ் காத்திருக்க சொல்லி விடைபெறுகிறான் யூஜினியின் ஆன்மாவை எடுத்துகொண்டு.
சார்லஸ் சென்ற சில மாதம் கழித்து மகள் தனது சேமிப்பை தாரைவார்த்தது தெரியவர மகளை தண்டிக்கிறார். அப்போது அவரின் சொத்து மதிப்பில் அது அற்ப தொகை எனும்போதும். ஆனால் காதலுக்காக தண்டனையை பொறுக்கிறாள். இதனால் யூஜினியின் தாய் நோய்வாய்ப்பட்டு இறக்கிறாள். நாட்கள் செல்கின்றன தனிமையில் இருக்கும் யூஜினிக்கு அவன் வழங்கிய இரண்டு முத்தங்களும் அவனுடன் பேசியவை மட்டுமே துணையாக இருக்கிறது.
வருடங்கள் உருண்டோடுகிறது. சார்லஸ் பொருளீட்ட தொடங்க தன் ஆன்மாவின் அத்தனை நல்லதையும் இழக்கிறான் பணமே பிரதானமாக எல்லா நியாய தர்மமும் பின்னுக்கு போகிறது. பல பேர் பல தேசம் என சுற்றும் அவன் மனதில் யூஜினி என்ற பெண் புள்ளியாய் மறைகிறாள்.
க்ராந்தேவும் இறக்க கோடிக்கணக்கான சொத்துடன் தனியாகவே வாழ்கிறாள் வேறு யாரையும் ஏற்க மனமில்லாமல். சார்லஸ் அதிக பணத்துடன் திரும்பும்போது அந்தஸ்துக்கு தகுந்த நாகரீகப்பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவெடுக்கிறான். யூஜினிக்கு கடிதம் எழுதுகிறான் நாகரீக வாழ்க்கைக்கு யூஜினி சரிபட்டு வரமாட்டாள் என்றும் அந்த நேரத்தில் வயதில் உணர்ச்சியில் பேசியதை மறந்துவிட சொல்லி வேறொருவன் என்றால் இதை தெரிவிக்க கூட மாட்டான் என்றும் தான் கண்ணியமானவன் என்பதால் தெரிவிப்பதாகவும் அத்துடன் அவளிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் தருவதாக காசோலை இணைத்து அவன் பாதுகாக்க சொன்ன பெட்டியை தபாலில் அனுப்பிவிட சொல்கிறான். கண்ணீருடன் உள்ளுக்குள் உடைகிறாள் யூஜினி.
கடன்காரர்கள் தந்தை கடனை அடைக்க சொல்லி சார்லஸை நெருக்க திருமணம் நிற்கும் சூழல் வருகிறது. யூஜினி நம்பிக்கையான ஒருவரிடம் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் என் காதல் உணர்வு இறந்துவிட்டது ஆனால் ஒரு நல்ல நட்பாக இருப்பேன் என் சுதந்திரத்தில் தலையிடாமல் என் போக்கில் அனுமதிக்க வேண்டும் விருப்பமென்றால் திருமணம் என்கிறாள். சம்மதிக்கிறார். திருமணத்துக்கு முன் அவரை பாரீஸ் அனுப்பி சார்லஸ் கடனை அடைத்து ஒரு கடிதமும் அந்த பெட்டியும் அவரிடம் கொடுத்து சார்லஸிடம் ஒப்படைக்கிறாள். பின் இவள் திருமணம் செய்து கன்னியாகவே விதவையாகிறாள்.
தாய் இறக்கும்போது யூஜினியிடம் இறப்பில் தான் உண்மையான சந்தோஷமும் ஆன்மாவுக்கு விடுதலையும் என்று கூறி இறந்ததை உணர தொடங்குகிறாள். நல்ல காரியங்கள் செய்து தனிமைமில் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் என்பதாக யூஜினியின் கதை முடிகிறது.
ஆசிரியர் தத்துவங்களுக்குள் செல்லாமல் மனிதர்களின் பல்வேறு அகத்தை அப்பட்டமாக கண் முன் விரிக்கிறார். ஒரு கஞ்சனின் வாழ்க்கை, அவன் சிந்தனை,எண்ண ஒட்டம் , அவனின் நடவடிக்கைகள், இறக்கும் வரை அவன் வாழ்வு அனைத்தையும் க்ராந்தேவின் பாத்திரத்தில் ஆசிரியர் சொல்லியிருக்கும் விதத்தில் வாசித்து முடிக்கும்போது பிரமிப்பூட்டுகிறார்.
பிரெஞ்சு கிராம சூழலுக்குள்ளும் பெயர்களுக்குள்ளும் போராடி தான் உட்புக முடிகிறது. ஆனால் Wonderful feel. எல்லா இடங்களிலும் விரவி இருக்கும் சுயநலவாதிகளின் இயல்பும் பணத்தை கட்டி காக்கும் லோபி அதன் மீது கொண்ட பற்று பேராசையால் இறக்கும்வரை கணக்கு பண்ணியே அனுபவிக்காமல் பணத்தை எண்ணுவதை பெருகுவதை மட்டுமே சந்தோஷம் என நினைத்து கடைசி நிமிடம் வரை அவன் மன ஓட்டம் என கடினமான மனதின் நிலையை க்ராந்தே மூலமும். யூஜினியின் மூலம் காலம்காலமாக காதல் பெண்ணின் உணர்வுகளில் புரியும் மாயவித்தையை சொல்லியிருக்கும் விதம் க்ளாஸ். காதலுக்காக காதலிப்பவனின் வார்த்தைகளில் கரைந்து, அவனுக்காக
எதையும் செய்ய துணியும் அதற்காக எதையும் இழக்க தயாராகும் மனம் பற்றி அவ்வளவு அழகாக விவரித்திருக்கிறார். காதல் என்ற ஒன்று புகுந்தவுடன் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்று அந்த படபடப்பில் தூக்கம் இழக்கும் அவள் பின் துக்கத்தில் ஆற்றாமையில் கண்ணீரில். ஆனால் காதலிக்கும் முன் இருக்கும் அவளின் எந்த சிந்தனையுமில்லா தூக்கம் அதன் பின் இறப்பில் தான் பெண்ணுக்கு என்பதை அழகாக பதிவு செய்கிறார்.
உணர்வுகளை எந்த தத்துவ மதிப்பீடுகளுக்கும் உட்படுத்தாமல் அப்பட்டமாக எழுதியிருக்கும் விதத்தில் தனித்து தெரிகிறார் பால்ஸாக்.
(நன்றி: கமலி)