பாண்டிச்சேரி ரோமன்ரோலண்ட் நூலகம் நான் வேலை பார்த்து வந்த புதுவைக் குரல் அலுவலகத்தின் எதிரேதான் இருந்தது. ரோமன் ரோலண்ட் நூலகம் ஒரு புஸ்தகச் சுரங்கம். பேர்லாகர் க்விஸ்ட்டின் ‘அன்புவழி’ போன்ற மகத்தான உலக இலக்கியங்களை எல்லாம் அந்த நூலகத்திலிருந்து எடுத்துச் சென்று படித்தேன். காரை சிபி, சில பிரெஞ்சு நாவல்களின் ஆங்கிலமொழி பெயர்ப்புகளைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். பாண்டிச்சேரியில் இருந்த நாட்களில் உலக இலக்கியங்களில் திளைத்தேன். அவை என் இலக்கிய அறிவைப் பட்டை தீட்டின. இலக்கியக் கலையின் நுட்பமானதும், ஆழமானதுமான பகுதிகள் என்னைத் தூங்கவிடாமல் செய்தன.
புதுவைக்குரல் வருமானம் வாய்க்கும் கைக்குமாக இருந்தது. பெரும்பாலும் பற்றாக்குறைதான். பிரபஞ்சனும் என்னைப் போலவே போதுமான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். என்னுடைய 200 ரூபாய் சம்பளம் சிறிது கூடப் போதவில்லை. வேலைக்குச் சேர்ந்து நான்கைந்து மாதங்கள் முடிந்து விட்டன. எப்படியோ மூச்சை இழுத்துப்பிடித்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். ஒரு சமயம் வண்ணதாசனுக்குக் கடிதம் எழுதிப் பணவுதவி கேட்டேன். இரண்டு மூன்று தினங்களிலேயே 25 ரூபாய் அனுப்பி உதவினார்.
கணையாழியில் எனது ‘கடல்புரத்தில்’ நாவல் தொடராக வந்து கொண்டிருந்தது. அதற்கு ஏதாவது சன்மானம் கிடைத்தால் உதவியாக இருக்கும். நானும் கேட்கவில்லை, கேட்பதற்குக் கூச்சம். ஆனால், பின்னால், பாண்டிச்சேரியை விட்டுக் கிளம்புகிறபோது, அந்தச் சன்மானத்தை நானே கேட்டு எழுதி வாங்க வேண்டியதாயிற்று.
இதற்கு நடுவில் என் பால்யகால நண்பன் ரவிக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. (பெங்களூரில் BEL-ல் வேலை பார்க்கும் ரவிதான்) சென்னையில் கல்யாணம். என்னைத் திருமணத்துக்கு வரச் சொல்லி, வழிச் செலவுக்குப் பணமும் அனுப்பி வைத்திருந்தான். ஆசிரியர் எம்.பி.ஜான் விடுமுறை தந்து அனுப்ப யோசித்தார். என் வேலையை யார் பார்ப்பது என்ற பிரச்சனை. ரிப்போர்ட்டர் கிருஷ்ணமூர்த்திக்கு மொழிபெயர்ப்பில் பரிச்சயம் இல்லை. கடைசியில், எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன். ஆனால் இரண்டே நாளில் திரும்பி வந்து விடவேண்டும், என்று சொன்னார் ஜான்.
கல்யாணம் சென்னையில்தான் என்றாலும், பாளையங்கோட்டையில் திருமண வரவேற்பு இருந்தது. அதற்கும் வர வேண்டும் என்று எழுதியிருந்தான் ரவி. ஜானிடம் கெஞ்சி எப்படியோ நான்கு நாட்கள் லீவு வாங்கி விட்டேன்.
சென்னையில் திருமணம் முடிந்த இரண்டாவது தினம் பாளையங்கோட்டையில் வரவேற்பு . ரவி தன் குடும்பத்தினரோடு எனக்கும் சேர்த்து திருநெல்வேலிக்கு ரயிலில் முன்பதிவு செய்திருந்தான் . அவர்களுடன் நானும் பாளையங்கோட்டை சென்றிருந்தேன். திருமணம் முடிந்த மறுநாள் திருநெல்வேலியிலிருந்து பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டேன் . காலை எட்டரை மணிக்கு பஸ் ஏறினேன்.
மதியம் மூன்று மணி சுமாருக்கு புதுக்கோட்டை , தஞ்சாவூர் மார்க்கத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாரி சாரியாக மாட்டுவண்டிகள் சென்றன. வண்டிகளில் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என பாத்திர பண்டங்கள், துணிமூட்டைகளுடன் பயணம் செய்தனர். வண்டிகளின் பின்னே இளைஞர்கள் நடந்து வந்தனர் சிறிது தூரத்தில் மீண்டும் இதேபோல் வண்டிகளில் செல்லும் குடும்பங்கள் தென்படும். தஞ்சாவூர் , கும்பகோணம் வருகிற வரைதொடர்ந்து இதுபோல் குடும்பம் குடும்பமாக வண்டிகளில் சென்று கொண்டிருந்தனர்.
காபி சாப்பிடுவதற்காக ஒரு இடத்தில் பஸ்ஸை நிறுத்தினபோது , இப்படி வண்டிகளில் குடும்பம் குடும்பமாக எங்கே போகிறார்கள் என்று விசாரித்தேன். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வேலை செய்து பிழைப்பதற்காக குடும்பம் குடும்பமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது . அந்த வருஷம் மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி . பருவ மழை பொய்த்து விட்டது. குளம் , கண்மாய்கள், ஆறுகள் எல்லாம் வறண்டு கிடந்தன . கிராமப்புறங்களில் விவசாயம் அறவே நின்றுவிட்டது. அதனால் சற்று வளமான தஞ்சை மாவட்டத்தில் எதாவது விவசாய வேலைகள் செய்து பிழைக்கலாம் என்று அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
இந்த விஷயம் என்னை வெகுவாகப் பாதித்தது . பாண்டிச்சேரிக்கு என் அறைக்கு வந்த பின்பும் அந்தக் கருத்து மெலிந்த மனிதர்களின் முகங்களும் , வண்டிகளை இழுத்துச் சென்ற மாடுகளின் கண்ணீர்க் கறை படிந்த கண்களும் என் நினைவில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன . சொந்த ஊரில் வாழ வழியில்லாமல் போவதென்பது எவ்வளவு கொடிய துயரம்.
அந்தத் துயரத்தை மறப்பதற்கு எனக்கு பல தினங்கள் பிடித்தன . ஒரு இரவு மிக நீண்ட சிறுகதை ஒன்றை எழுதினேன். அதற்கு ‘எஸ்தர்’ என்று பெயரிட்டேன். அப்போதும் அந்த விவசாயிகளை மறக்க முடியவில்லை . மறுநாளே இன்னொரு சிறுகதையும் எழுதினேன். அதற்கு ‘மிருகம்’ என்று தலைப்பு வைத்தேன். அந்த இரண்டு சிறுகதைகளையும் கணையாழிக்கு அனுப்பி வைத்தேன்.
(நன்றி: எஸ். ராமகிருஷ்ணன்)