எர்னஸ்ட் ஹெமிங்வேயின் யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது (For Whom the Bell Tolls ) 1940-ம் வருடம் வெளியானது. தற்போது எதிர் வெளியீட்டில் சி.சீனிவாசன் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்திருக்கிறது. ஹெமிங்வேயின் ஆகச் சிறந்த படைப்பு யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது. இனிதான் இப்படைப்பை வாசிக்கப் போகிறேன். இணையத்தில் இப்படைப்பு குறித்த விமர்சனங்களைத் தேடியபோது ratracerefuge.com இணைய தளத்தில் ஸ்டீபன் ரூஃப் எழுதிய விமர்சனம் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அது என்னைக் கவரவே, பலருக்கும் பயன்படும் என்று அதைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இந்த விமர்சனம் 2009-ல் வெளியானது.
எர்னஸ்ட் ஹெமிங்வேயின் யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது. எந்த வகையில் பார்த்தாலும் இது ஒரு சிறந்த புத்தகம். போரைப் போன்ற ஒரு அதீத சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு சிந்திப்பார்கள் நடந்துகொள்வார்கள் என்பதைக் குறித்து ஆழ்ந்த நேரடித் தகவல்களை இது தருகிறது. சண்டை, காதல், வீரம், சோகம், புதிர் என்ற அனைத்தும் இதில் நிரம்பியுள்ளது. சுருங்கச் சொல்வதெனில் இது சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
1936-1939-ல் ஸ்பானிஷில் நடந்த உள்நாட்டு யுத்தத்தை மையமாகக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெடிமருந்து நிபுணரான ராபர்ட் ஜோர்டான் சிறு கொரில்லா படையுடன் வரப்போகும் தாக்குதலை சமாளிக்க எதிரிகளின் எல்லைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். தான் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை கொரில்லா படைக்கு விளக்கிய அவர், அவர்களை தக்கவாறு பயிற்சி செய்வித்து, தனது பணியை நான்குக்கும் குறைவான நாளில் முடிக்கிறார்.
போரின் போதும் போருக்கு முன்னரும் தனது வளர்ச்சிக்கு ஸ்பெயின் நாட்டு மக்களின் அன்பும் ஆதரவும்தான் காரணம் என்று உறுதியாக நம்பிய ராபர்ட், ஸ்பெயின் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு போர் நடவடிக்கையில் தன்னை இணைத்துக்கொள்கிறார். தான் மேற்கொள்ளும் காரியத்தில் கண்ணும் கருத்துமாக அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடுகிறார். பணியாற்றும்போது பெண்களைப் பற்றி சிந்திப்பதை அடியோடி தவிர்க்கவேண்டும் என்பது அவரது கொள்கையாகும். இருந்தும் நாவலின் ஆரம்பத்தில் தான் சந்திக்கும் அகதிப் பெண், கொரில்லா படைக்கு மருத்துவம் பார்க்கும் பொருட்டு அழைத்து வரப்படுகிறாள். அவளைப் பார்த்ததும் காதல் வயப்படும் அவர் தனது பணி தான் எதிர்பார்த்தைவிட அதிக சிரமமானதாக இருக்கப்போகிறது என உணர்ந்துகொள்கிறார்.
தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ராபர்ட் வெளிப்படுத்தும் இடங்களிலும், கொரில்லா படையின் முக்கிய அங்கத்தினர்களின் உணர்வுகள் வெளிப்படும் இடங்களிலும் ஹெமிங்வே தனது மேதமையை வெளிப்படுத்தி சிறப்பான புனைவைக் கொடுத்துள்ளார். நாவலின் அனைத்து உரையாடல்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் ஸ்பானிஷிலிருந்து மொழிபெயர்க்கபட்டதைப் போல தோன்றுவதால் ஆங்காங்கே உடைபட்டதாகத் தோன்றுவது ஒருவகையில் நாவலுக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. நாவலில் வரும் ப்ளாஸ்பேக் காட்சிகளின் வாயிலாக ராபர்ட்டின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், கொரில்லா படையின் சிலரது வரலாற்றையும், போரின் பயங்கரத்தையும் தெரிந்துகொள்கிறோம். போரின் கொடூரமான, விரும்பத்தகாத சில காட்சிகள் நாவலில் இடம் பெறுகின்றன என்றாலும் அவை நடக்கும் இடம் பற்றி விரிவாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.
நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களும் உயிர்த்துடிப்புடன் நாவலின் பக்கங்களில் உலவுகிறார்கள். ஒவ்வொரு பாத்திரமும் அதனது குறை நிறைகளோடு முக்கியத்துவம் கொடுத்து சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரில்லா படையின் தலைவனின் மனைவி, பிலர், படையில் அனைவரையும் இணைக்கும் சங்கிலியாக இருக்கிறாள். அவள் அழகற்றவளாக இருந்தாலும் அறிவாளியாகவும் புத்திசாலியாகவும் இருந்து இந்நாவிலின் மிக சக்திவாய்ந்த ஒரு பாத்திரமாகிறாள்.
நான் படித்ததிலேயே, எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய பல நல்ல புத்தகங்களிலும், யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது ஒரு சிறந்த நாவல். ஒவ்வொரு பதின்பருவத்தினரும் அதற்கு மேற்பட்ட வயதினரும் படிக்கவேண்டியது. யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது போர் என்பது உண்மையில் எப்படி இருக்கும் என்பதை மட்டும் சொல்லவில்லை, போரின் போது சில பெண்ணும் ஆணும் எவ்வாறு தங்களை போரோடு பிணைத்துக்கொள்கிறார்கள் என்பதை விவரிப்பதன் மூலம் மனித குலத்தின் இயல்பை ஆராய்கிறது.
(நன்றி: டி. பி. கேசவமணி)