'எரியும் பனிக்காடு' மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்து பத்து ஆண்டுகளில் பத்தாவது பதிப்பு வெளிவந்திருக்கிறது. தமிழ்ப் பதிப்புலகில் அரிதான நிகழ்வு இது. பால் ஹாரிஸ் டேனியல் எழுதிய 'ரெட் டீ' என்ற ஆங்கில நாவலை 'எரியும் பனிக்காடு' என்ற தலைப்பில் தமிழாக்கியவர் வழக்கறிஞரும் எழுத்தாளருமான இரா.முருகவேள்.
தேயிலைத் தொழிலாளர்களின் கொத்தடிமை வாழ்க்கையை 'எரியும் பனிக்காடு' நாவலைப் போல வேறு எந்தப் படைப்பும் இவ்வளவு நுட்பமாகச் சொன்னதில்லை. வால்பாறையின் பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்களின் அழகுக்குப் பின்னால் இருக்கும் ரத்தம் தோய்ந்த வரலாற்றை அழுத்தமாகப் பதிவுசெய்த படைப்பு இது. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம் பிழைக்க மனைவியுடன் இடம்பெயரும் கருப்பனிடமிருந்து தொடங்குகிறது நாவல். தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கு வரும் மருத்துவர் டேனியல் வழியாகச் சொல்லப்படுகிறது கதை.
உழைப்புச் சுரண்டல், பொருளாதாரச் சுரண்டல், சூழலியல் சுரண்டல், பாலியல் சுரண்டல் எனச் சுரண்டலின் பல்வேறு பரிணாமங்களைப் பேசுகிறார் ஆசிரியர். அடித்தட்டு மக்களை நம்ப வைத்துச் சுரண்டுகிறான் கங்காணி. தேயிலையின் எடையைக் குறைத்து எழுதிச் சுரண்டுகிறார்கள் அலுவலர்கள். அலுவலர்களின் மனைவியை வளைத்துப்போட்டுச் சுரண்டுகிறான் ஆங்கிலேய அதிகாரி. இந்தச் சுரண்டல்களையும், கொள்ளை நோயால் கொத்துக் கொத்தாகத் தொழிலாளர்கள் இறக்கும்போதும் மது விருந்தில் மயங்கித் திளைத்த ஆங்கிலேய அதிகாரிகளையும் வெளியுலகுக்குக் காட்டிய டேனியலைப் பாராட்ட வேண்டும். கூடவே பனிமூட்டம், பனிப்பொழிவு, பொங்கும் காட்டாறு, பல்வேறு வகையான உயிரினங்கள், பறவைகள், பாம்புகள், பூச்சிகள் என இயற்கைச் சூழலும் நாவலில் துல்லியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
'எரியும் பனிக்காடு' பத்தாவது பதிப்பு வெளியான சூழலில் அதன் மொழிபெயர்ப்பாளர் இரா. முருக வேளிடம் பேசினோம். "10-வது பதிப்பு ஆச்சர்யம் என்கிறார்கள். ஆனால், இதைவிடக் கடினமான, வறட்சியான பொருளடக்கத்தைக் கொண்டது எனது 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' மொழிபெயர்ப்புப் புத்தகம். அதுவே ஒன்பது பதிப்புகளைத் தொட்டுவிட்டது. நல்ல புத்தகம் என்றால் மக்கள் வாங்கிவிடுகிறார்கள். அதே சமயம், இதனால் பொருளாதார ரீதியாக எழுத்தாளனுக்கு லாபம் அல்லது புத்தக வருவாயை வைத்து வாழ்க்கை நடத்த முடியும் என்றெல்லாம் சொல்ல முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் நான் எழுதிய புத்தகங்களிலிருந்து சுமார் ரூ. 2.5 லட்சம் மட்டுமே சம்பாதித்திருப்பேன். இது கைச் செலவுக்கே போதாது. ஆனால், அனைத்து எழுத்தாளர்களுக்கும் இது பொருந்தாது. தமிழகத்தில் சுஜாதா, பாலகுமாரன், கல்கி போன்றவர்கள் எழுத்தை வைத்து நன்றாகச் சம்பாதித்தார்கள்" என்றவரிடம் இந்த நாவலைத் தழுவி 'பரதேசி' படமாக்கப்பட்டது குறித்துக் கேட்டோம்.
"எனக்கு 'பரதேசி'யில் உடன்பாடு கிடையாது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை முழுமையாக அதில் காட்டத் தவறிவிட்டார்கள். அந்த மக்கள் மலைகளுக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி ஏன் ஏற்பட்டது? அடிமை வாழ்க்கை, அடக்குமுறைகளுக்கு இடையே எப்படி வாழ்ந்தார்கள்? எப்படிச் செத்தார்கள்? அடிமை வியாபாரம் எப்படி நடந்தது?sss மலைகளின் சுற்றுச்சூழல், மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல், அதில் சாதியின் தாக்கம் என அனைத்தையும் நாவல் அலசியது. ஆனால், வெறுமனே ஒப்பாரி வைத்து அழுதது 'பரதேசி'.
ஆங்கிலேயர்களால்தான் தலித் மக்களுக்கு நன்மைகள் கிடைத்ததாக ஒருசாரார் சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறு. சொல்லப்போனால், தலித் மக்களை அதிகம் சுரண்டியதே ஆங்கிலேயர்கள்தான். தலித் மக்களை இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் மலைகளிலும் அணைகளிலும் சுரங்கங்களிலும் வாட்டி வதைத்தது ஏகாதிபத்தியம். இந்திய நிலப்பிரபுக்களின் நண்பனான ஏகாதிபத்தியம் ஒருபோதும் தலித்து களின் நண்பனாக முடியாது. தங்கள் நாட்டில் கறுப்பினத்தவர்களிடம் திணித்த அதே அடிமைத்தனத்தை இங்கே தலித் மக்களிடம் திணித்தது ஆங்கிலேயே ஏகாதிபத்தியம்.
இதையெல்லாம் படத்தில் தொடவே இல்லை. மிகையுணர்ச்சியும் செயற்கை யான நாடகத்தனமும் மட்டுமே போதும் sஎன்று நினைத்துவிட்டார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆங்கி லேயர்களின் அடக்குமுறைகளை நாவல் மூலம் வெளியே கொண்டுவந்த டேனியலை மதம் மாற்றுபவராக அசிங்கப்படுத்தியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மத துவேஷத்தின் உச்சம் இது. 'பத்மா நதிர் மஜ்கி' என்றொரு வங்காள மொழிப் படம் இருக்கிறது. 'பத்மா நதியின் படகோட்டி' என்று பொருள். கங்கையும் பிரம்மபுத்திராவும் வங்கத்தில் பத்மா என்கிற இடத்தில் ஒன்று சேரும். பிரம்மாண்டமான நதி அது. அங்கு ஆற்றின் அகலமே 15 கி.மீட்டர் இருக்கும். ஆங்கிலேயர் ஆட்சியில் மக்கள் சுந்தர வனக் காடுகளுக்கு இடம்பெயர வைக்கப் பட்ட வரலாற்றைப் பேசும் படம் இது. படகோட்டியை மையமாக வைத்துக் கதை நகர்ந்தாலும், நதியின் பிரம்மாண்டம், சேறு படிந்த மக்கள், மக்களின் வாழ்க்கை, படம் முழுக்க சாம்பல் நிறம் என மிரட்டியிருப்பார் இயக்குநர் மாணிக் பந்தோ பாத்யாய. அதுபோன்று வந்திருக்க வேண்டிய படம் பரதேசி. வராதது ஏமாற்றமே!" என்கிறார்.
(நன்றி: தி இந்து)