வெளிவராது முடங்கிப்போன 'உறைந்த எழுத்து' நூலுக்கான முன்னுரை இது.
தமிழ் இலக்கியச் சூழலில், தங்களுக்குத் தாங்களே ‘பீடங்‘களாய் முடிசூட்டிக் கொண்ட வர்கள், பிற எழுத்தாளர்கள் குறித்து அடிக்கடி உச்சரிக்கும் ஒருசொல்லாக ஆகியிருக்கின்றது, ‘உதிரிகள்‘. அச்சொல்லை அவர்கள் லாவகமாக உச்சரிக்கின்றார்கள். அப்படி உச்சரிக்கும்போது தங்களைச் சுற்றி, ஒரு பிரமாண்டம் இருப்பதையும் அவர்கள் சொல்லாமலேயே சொல்லிக் கொள்கின்றார்கள். அதில் நமக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. ஆயினும், அப்படி எடைபோட அவர்கள் நீட்டலளவை, முகத்தலளவை, நிறுத்தலளவை அல்லது எந்த மின்னளவு முறையைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதுதான், நெடுநாள் வினாவாகவே இருக்கின்றது.
அப்பீடங்களின் ஒட்டுமொத்தப் படைப்புகளைக் கூர்ந்து அவதானிக்கையில், ஒன்றிரண்டைத்தவிர, மற்றவையெல்லாமே ‘மல்லடித்த‘தாக, பெய்த மூத்திரத்தை முகர்ந்து, பல் தெரிய இளிக்கும் கிடாயைப்போல இருப்பதை வாசகர்கள் உணர்ந்தே யிருக்கின்றார்கள். அதைமறைக்க, யானைகளுக்கு அமைக்கப்படும் புத்துணர்வு முகாம் போல வாசகர்களுக்கு மலைப்பிரதேசங்களில் பயான் வகுப்பறைகள், இரவுநேர ஜெபக் கூட்ட ஆராதனைகள், எழுப்புதல் பயிற்சி என ‘நித்தியானந்தத்தனங்களை‘ச் செய்து, தங்கள் பீடங்களைச் செப்பனிட்டுக் கொள்கின்றனர்.
அதேவேளையில் ‘உதிரிகள்‘ என்று குறிப்பிடப்படும், ஓரிரண்டுப் படைப்புகளை மட்டுமே தந்த எழுத்தாளர்கள், நிச்சயமாக அவர்களைக் காட்டிலும் அரிய விஷயங் களைக்கொண்ட களங்களையே தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அதனை நுட்பமாகக் கையாண்டு, பல்வேறு இலக்குகளைத் தொட்டிருக்கின்றார்கள். அந்தவகையில் பல்வேறு உதிரிகளின் ஆக்கங்கள், பீடங்கள் தந்திருக்கும் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றன. தனித்துப் பார்க்கையில், அப்பீடங்களும் உதிரிகளாக அல்லாமல், ‘வேறு என்னவாக இருக்கின்றார்கள்?‘ என்றொரு கேள்வியும் இருக்கின்றது.
இங்கே, அப்படியான ‘உதிரி‘களை ஒன்றுதிரட்டி, தோப்பாக ஆக்கியிருக்கின்றேன். ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையானக் களங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றார் கள். விடுபட்டுத் தப்பியோடுபவை விலாங்குகளாக, தேளிகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும். சிக்கிக்கொண்ட அயிரையிலும், கெளுத்தியிலும், காரைப்பொடிக் கெண்டை யிலும் இருக்கும் சுவை நிச்சயம் விலாங்கிடமும், தேளியிடமும் இருப்பதில்லை.
இதில் இடம்பெற்றுள்ள.......... கட்டுரைகளுமே ஏதேனும் ஒருவகையில் என்னுடன் பின்னிப்பிணைந்தவை; சிலமணி நேரமேனும் ஆக்கிரமித்தவை; சிந்திக்கச் செய் தவை; ரசிக்க வைத்தவை; பரிதாபம்கொள்ளச் செய்தவை; இந்த ஆணியைப் புடுங்கி யிருக்க வேண்டாமோ என கழிவிரக்கம்கொள்ள வைத்தவை. அவற்றை இங்கே இடம் பெறச் செய்ததில் எனக்குள் அரசியல் ஏதுமில்லை. ஆயினும் அவற்றைத் தமிழ் இலக்கியச் சூழலில், சமகாலத்தின் முக்கியமானச் சம்பவங்களாக; நிகழ்வுகளாக; படைப்பு களாக மட்டும் கருதுகின்றேன்.
‘காதலைக் கொன்றபின் மானுடத்துக்கு என்ன பெயரிட்டால் என்ன?‘ எனும் கட்டுரை, எனக்கு சவாலாகக் கொடுக்கப்பட்டது. ந. வானமாமலை அவர்களால் தொடங் கப்பட்ட திணை இதழை, தக்கலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மீண்டும் கொண்டுவர முனைந்தபோது, என்னைத் தொடர்புகொண்ட அதன் ஆசிரியர் குழு, ‘இளவரசன் - திவ்யா விவகாரத்தை வேறுபார்வையில் இலக்கியமாக எழுத முடியுமா?‘ என்று கேட்டது. முடிந்தளவுக்கு நுனிப்புல் அரசியலைத் தவிர்த்துவிட்டு ஆழம்தேடி எழுதியக் கட்டுரைதான், அது. மீண்டுவந்த திணையின் முதல் இதழ்க் கட்டுரை.
பொருந்தி இருந்தோமோ,
பிள்ளைகளைப் பெற்றோமோ.
பணியாரம் சுட்ட சட்டி பாதிமணம் போகலையே.
பந்தல் பிரிக்கலையே,
வந்த ஜனம் போகலையே,
எம்கணவா, எம்கணவா இந்த விதி வருவானேன்?
சண்டாள வன்னியர்கள் சதித்தாரோ கணவரைத்தான்.
முத்துப்பட்டனைப் பறிகொடுத்த பொம்மக்காவும் திம்மக்காவும் வயிறெரிந்துப் பாடிய அந்த ஒப்பாரி, இப்போது திவ்யாவுக்கு மட்டுமல்ல; அத்தனைக் கருணைக் கொலைகளுக்கும் பொருந்திப் போவதாக இருக்கின்றது. அந்தவகையில் அதற்கு முதலிடம் கொடுத்திருக்கின்றேன்.
இதுபோல ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு கதையுண்டு. வாசிக்கத் தொடங்கிய தும் எழுதத் தொடங்கியதும் எனக்கு ஒரேகாலமாக அமைந்துபோனது. அதன் சுவாரசி யத்தை இந்நூலின் சில பக்கங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. என்னைத் தோளில் ஏற்றி இலக்கிய உலகத்தைக் காட்டியவர்களுக்கான நன்றியாகவோ, கைம்மா றாகவோ அது இங்கு இடம்பெறவில்லை. ‘நீலகண்டப் பறவையைத் தேடி‘ எனும் ஒருநூலைத் தேடி உற்சாகமாக அலைந்த கதை, அது. உங்களிடமும் அப்படியோர் கதை இருக்கலாம். அதைக் கிளர்த்துவதற்கான சூதுதான், இக்கட்டுரை.
பண்டைத் தமிழகத்தில் கிடைத்த ‘மிளிர்கல்‘ எனப்படும் ஒளிவீசும் தன்மை கொண்ட மாணிக்கம், மரகதம், பவளம் ஆகிய கற்களுக்காக, அன்றைய மூவேந்தர்கள் போர் புரிந்தும், மதங்களைப் பரப்பியும், பழங்குடிகளை அழித்தும், அப்புறப்படுத்தியும் தங்கள் அரசதிகாரத்தை நிறுவியதுபோல, இன்றையப் பகாசுரப் பன்னாட்டு முதலாண்மை நிறுவனங்கள் காடுகளை அழித்தும், பழங்குடிகளை அழித்தும், அப்புறப்படுத்தியும், அறிவின்வழியாக அதிகாரத்தைக் கட்டமைத்து, நாட்டு வளங்களைச் சுரண்டு வதை இடதுசாரி மார்க்சியக் கருத்தியலோடுப் பொருத்தி, பயண அனுபவங்களை சமகாலப் புனைவாக மாற்றுவதுடன், வரலாறு மற்றும் சமூக உணர்வுகளையும் அந்நாவல் கொண்டிருப்பதால், ‘உறைந்திருக்கும் ஆறொன்று உருகிப்பெருகும் பிரவாகம் கரைபுரளும் வெள்ளம்போல‘ பரந்தவெளியில் களிநடனம் புரிகின்றது. அதை வாசகர்கள் எளிதாகக் கண்டுணர்வார்கள்.
முற்றியக் கதிரின் அத்தனை மணிகளுமே முத்துகளாக இருந்துவிடுவதில்லை. அதுபோல, இலக்கிய வழி வரலாற்றுப் பெருமிதம் அடர்ந்திருக்கும் தமிழ்ச் சிந்தனை உலகில், ரத்தசோகையால் பீடிக்கப்பட்ட ஒருசில படைப்புகளும் வந்துவிடுகின்றன. அந்த எழுத்தை எதன் குறியீடாகக் கொள்வது? மகாராஷ்டிராவிலும் ஆந்திராவிலும் பருத்தி விவசாயிகள், வயலுக்கு அடித்த பூச்சிமருந்தின் மிச்சத்தைக் குடித்து, கொத்துக் கொத்தாய்த் தற்கொலை செய்துகொண்டார்கள். மழையின்மை, அதிக உரம், ஆர்ப்பாட்ட மானப் பூச்சி மருந்துகள், மகசூலின்மை, வருமானமின்மை, முதல் நட்டம், வரி, வட்டி, கடன் சுமை, அரசின் மெத்தனம், அரசின் கண்டுகொள்ளாமை, அரசின் கையாலாகாத் தனம், வட்டிக்குக் கொடுக்கும் நபர்களின் அழிச்சாட்டியம், அசலையும் வட்டியையும் திருப்பிவாங்க, அவர்கள் கையாளும் புதிய புதிய முறைகள், நிலம் அபகரிப்பு, கடன் வாங்கியக் குடும்பத்தைச் சேர்ந்தப் பெண்களைப் பெண்டாளுதல் ஆகியவை விவசாயி களை தற்கொலை முடிவுக்குக் கொண்டுபோய்த் தள்ளியது. விஷம்கலந்தக் குளத்துத் தண்ணீரைக் குடித்த ஆடுமாடுகள்போல நீலம்பாரித்து, நுரைதள்ளி விவசாயிகள் குடும்பம் குடும்பமாகச் செத்துப்போனார்கள். நீண்டகாலமாய் நடந்துவரும் இச்சம்பவங் களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சத்தைத் தாண்டிப்போய்விட்டது. அந்தத் தற்கொலைகளில் ஒன்றை, மேலாண்மை பொன்னுசாமி தன் கிராமத்துச் சூழலில் ‘உயிர்நிலம்‘ நாவலாக எழுதியிருக்கிறார். மார்க்சியத்தின் வழியில் பயணம் செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் அவர், மார்க்சியத்தை மறுக்கும் வகைமையில் எழுதிய நாவல், இது. அதுகுறித்த கட்டுரையொன்று, ‘கரட்டுக்காட்டுக்கு முரட்டு மண்வெட்டி‘ எனும்பெயரில் ‘யாரோடும் யாருக்கும் பகையுமில்லை...‘ என இடம் பெற்றுள்ளது.
சி.சு. செல்லப்பா மீது ஒளிவட்டம் விழவைத்தது, சமரசமற்ற அவரது நேர்மை யான விமர்சனங்கள்தான். அதுவே அவரை தனித்து அடையாளப்படுத்தியது. அவருக்கு முன்பே, க. நா. சுப்பிரமணியம் போன்றவர்கள் விமர்சனக் கலைக்கு ஒரு வடிவம் கொடுக்க முனைந்திருந்தபோதும், செல்லப்பாவின் அணுகுமுறையில் ஒருவித்தியாசம் இருந்தது. சோதனை முயற்சிகளையும், புதிய வழித்தடங்களையும் கண்டறியும் தாகமும் அவரிடமிருந்தது. வரலாறு, மனிதனின் பிறப்பு அம்சத்துக்கு முன்புதொடங்கி, இறந்த பின்பும் தொடரக்கூடியது. அதை, ‘சுதந்திர தாக‘த்தில் விரிவாகக் கையாண்டிருக்கின்றார். சுதந்திர தாகத்தை அவரது சமகாலக் கதையம்ச நாவலாகப் பார்த்தால், அது சமகால நாவல். வரலாற்று அம்சமாகப் பார்த்தால், அது வரலாற்று நாவல். அரசியலாகப் பார்த் தால், அது அரசியல் நாவலும்கூட. ஆனாலும் அது, மூன்றையும் பின்னியதொரு களம். வரலாற்று அம்சத்தை வரலாற்றுப் பார்வையிலேயே பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், எழுத்து இதழின் ஆசிரியராக சோதனை முயற்சிகளையும், புதிய வழித்தடங்களையும் கண்டறிபவராக இருந்ததனாலேயே, வரலாற்றை செய்திச்சுருள் உத்தியால் கோர்வைப் படுத்தியிருப்பார். பிரகாசம் தலைமையில் சென்னை மெரினாவில் உப்புச் சத்யாகிரக, சட்ட மறுப்புப் பிரச்சாரத்தை எழுதும்போது, தமிழ்நாட்டின் தலைநகரில் நடக்கும் போராட்டத்துக்கு தலைமை தாங்க ஒரு தமிழரில்லை என்று துயரத்தில் வெம்புகிறார். அது, இந்தக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கின்றது. அதேவேளையில் வெள்ளைக் காரன் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து உப்பு வாங்கியதை அழகாக ஆவணப்படுத்தி யிருக்கின்றார்.
சைவ, வைணவ, சமண, பௌத்த சமயங்கள் தமிழுக்குக் கொடையாக இலக்கியங் களைக் கொடுத்திருப்பதுபோல இஸ்லாமும் தமிழுக்கு சிறப்புடன் கொடையளித்திருக் கிறது. உலகின் வேறெந்த மொழிக்குமில்லாத தனிப்பெருஞ்சிறப்பு தமிழுக்கு உண்டு. எல்லாச்சமயங்களும் தமிழைப் பேணிவளர்த்துள்ளன. அந்தவகையில் ‘எண்ணிறந்த இஸ்லாமியப் புலவர்கள் மிகச்சிறந்தப் படைப்புகள் பலவற்றைத் தமிழிலேயே படைத் திருக்கின்றனர். இவ்விலக்கியங்களினாலே தமிழ் இலக்கியம் பெரும்பயனடைந்திருக் கின்றது‘ என்று சொல்லியிருக்கிறார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி சு. வித்தியானந்தன். மேலும் அவர், தான் எழுதிய ‘தமிழ்த் தென்றல்‘, ‘கலையும் பண்பும்‘ எனும்நூல்களில், ஏனைய தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய நூலாசிரியர்கள் புறக்கணித்திருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றிய வரலாற்றினைக் குறிப்பிட்டும் எழுதியிருக்கிறார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழத் தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த தி. முருகரத்தினம், ‘உலகப் பெருஞ்சமயங் களெல்லாம் தமிழகத்தின் மண்ணில் மணம் வீசிக்கொண்டிருக்கின்றன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி சமய இலக்கியங்கள் எனப் பலப்பல உள்ளன. ஆனால் அவற்றின் வரலாறுகள் புதையுண்ட பொன்போல புலப்படாது கிடக்கின்றன‘ என்கிறார்.
நாட்டம் புதைக்கின்ற தென்னீ மடந்தை நவகண்டமே
வீட்டம் புகழ்வின்னன் மேவா ரெனவிங்ஙன் யான்வருந்த
வாட்டம் பயின்றாங் ககிலின் குழம்பணிந் தாகமெங்கும்
வேட்டம் தெரிகின்ற கொங்கைக ளென்னை மிகைசெய்தவே
யாத்த ஆசிரியரின் பெயர்க்கூட தெரியவராத நிலையில், அற்புதமாக இருக்கும் இதனை ஏன் வரலாற்றை எழுதியவர்கள் தவிர்த்தார்கள் என்பது வரலாற்றின் புதிரானப் பகுதி யாகும். அதுகுறித்து மிகவிரிவாகப் பேசுகின்றது, ஒரு கட்டுரை.
இளைஞர்களை விவேகானந்தர் படைதிரட்டிய, 1897 ஆம்ஆண்டுக்கு ஆறு ஆண்டு கள் முன்னமே மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, ‘இப்படை தோற்கின் எப்படை வெல் லும்?‘ என்று, 1891 ஆம்ஆண்டிலேயே எழுதியிருந்தார். திருவனந்தபுரத்தில் ஏற்பாடாகி யிருந்த ஒருகூட்டத்தில் பேசும்போது விவேகானந்தர், ‘இந்துக்கள் யாவருக்கும் ஒரே அடையாளம்‘ என்று குறிப்பிட்டுச் சொல்ல, அக்கூட்டத்தில் மாற்றுக்குரல் ஒன்று, ‘தமிழர் களுக்குத் தனி அடையாளம் உண்டு‘ என்று கர்ஜித்திருக்கிறது. அது சுந்தரம்பிள்ளையின் குரல். அப்போது எழுந்த விவாதங்களுக்குப் பின்பு விவேகானந்தர் சுந்தரம்பிள்ளையின் கருத்துக்கு இசைந்திருக்கிறார். சுந்தரம்பிள்ளை தனது குறிப்புப் புத்தகத்தில், ‘உவப்போடு என்னுடன் பேசிமகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர், தங்களின் கோத்திரம் என்ன வென என்னிடம் வினா எழுப்பினார். வேறொரு தினமாகில் வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். ஆத்திரப்பட்டிருப்பேன். உறவென விருந்துக்குவந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மிக மெல்லியக் குரலில், ‘எமக்கும் கோத்திரத்துக்கும் சம்பந்தம் கிடையாது. தன்மானம் காக்கும் தென்நாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான்‘ என ஆத்திரமின்றி கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்‘ என்று எழுதியுள்ளார். ‘விவேகத்துக்கு முந்திய வீரிய வார்த்தைகள்‘ இக்கட்டுரையில் அண்ணாதுரை, சிங்கார வேலர் குறித்தும் சுவாரசியம் ததும்பும் செய்திகள் வழிந்துகிடக்கின்றன.
இலங்கையின் அடையாள நெருக்கடிகளுக்கு இடையிலும், காலத்தை வெல்லும் நாடகக் கலைஞர்களின் பணிகளும் பங்களிப்புகளும் வழக்கறிஞர் ஜோன் டி சில்வா விலிருந்து தொடங்கி... நீள்பயணத்தை மேற்கொள்கிறது. தமிழ்நாட்டின் நாடகத் தந்தை என்று வர்ணிக்கப்படும் சங்கரதாஸ் சுவாமி, பம்மல் சம்பந்த முதலியார், ராஜபார்ட் கிட்டப்பா, ஸ்திரிபார்ட் சுந்தராம்பாள், அவ்வை டி.கே. சண்முகம், மு. கருணாநிதி, என்.எஸ். கிருஷ்ணன் – டி.ஏ. மதுரம், சிவாஜி, எம்ஜிஆர் என்று அவர்களின் வாழ்விய லோடு பயணப்படுகின்றது. ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி அறிஞர் அ.ந. கந்தசாமி எழுதிய ‘மத மாற்றம்‘ 1962 ஆம்ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தினரால் தயாரிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் நடித்த இந்த நாடகத்தை நெறியாளுகை செய்தவர் கா. சிவத்தம்பி. ஆனால், ‘மதமாற்றம்‘ நாடகத்தை எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமி வேண்டுகோளுக்கு இணங்க கா. சிவத்தம்பி மாற்றப் பட்டு, லடீஸ்வீரமணி நெறியாளுகையை மேற்கொண்டார். லடீஸ்வீரமணி நெறியா ளுகைசெய்த ‘மதமாற்றத்‘தில் தான்தோன்றிக் கவிராயர் சில்லையூர் செல்வராசன், ஆனந்தி ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்தனர். இந்நாடகம் பற்றி பேராசிரியர் க. கைலாசபதி, ‘தமிழ்நாடக மேடையில் ஒருதிருப்புமுனை. மைல்கல்‘ என்று குறிப்பிடுகின்றார் என்ற ‘நுண்ணரசியலை‘, ‘தலைநகரில் தமிழ் நாடக அரங்கு‘ எனும் இந்நூல் பகர்கின்றது.
இதைத்தாண்டி, புலம்பெயர்ந்த சிலரின் நூல்களுக்கு நான் எழுதிய மதிப்புரைகள் முக்கியமானவை. அவை திட்டமிடல் ஏதுமின்றி இயல்பாக அமைந்தவை. அவற்றுள் வெற்றிச்செல்வியின், ‘போராளியின் காதலி‘ முக்கியமான ஒன்று. போர்க்காலத்தின் சூழலை நேர்த்தியாகப் பதிவுசெய்வது. அதுபோல மற்றொரு முக்கியமான ஆவணக் கட்டுரை, ‘நடிப்பு சுதேசிகளை அதிகமாகக் கொண்ட சமூகம்!‘ இலங்கையின் வரலாறு, சிங்கள - தமிழ் மக்கள், தமிழீழம், இனப்பிரச்சனை, அதன்நுட்பம் அறிந்தவர்கள், நூலுக் குள் புதைந்துகிடக்கும் தரவுகளின் போதுமை/போதாமை குறித்து ஆய்ந்துகொள்ள இடமிருந்தாலும், இந்நூல் இதுவரைக் கொண்டிருந்த பல்வேறு நம்பிக்கைகளின் மீதான விசாரணைக்கு வாசிப்பவரை இட்டுச்செல்கின்றது. பொதுமைப்படுத்தப்பட்டக் கருத்து களை சற்றே விலகச்செய்து, இடையீட்டால் நம்மை அதிர்ச்சியுற வைக்கின்றது. அவ்வதிர்ச்சியே, அரசியற்கருத்துகளில் ஒருவருக்கொருவர் முரண்பட்ட, தனித்தனியே யானப் போக்குகளைக்கொண்ட நான்கு ஆளுமைகளின் பரிமாணங்களை அருகருகே வைத்து, ‘தமிழீழத்தை‘ ஒரு பொதுப்புள்ளியில் ஒப்பிடவும் தூண்டுகின்றது. தளும்புதல் கள், தத்தளிப்புகள் ஏதுமின்றி, இதுவரையும் ரகசியங்களுக்கு ஊமைச்சாட்சியங்களாக நின்ற அவர்களின் குரல்கள், உண்மை சாட்சியங்களாகின்றன. இக்கட்டுரை சற்றே அதிர்வைத் தரக்கூடியதாகவும் இருக்கின்றது. மூன்றாவதாக, தமிழ்ச்சமூகம் பற்றிய புனித அடையாளங்களை மறுக்கின்ற நடேசனின் ‘அசோகனின் வைத்திய சாலை‘.
இதுபோலவே பிற கட்டுரைகளும் அதனதன் தனித்தன்மைக்காக எழுதப்பட் டவை. ஒரு படைப்பை எப்படி அணுகவேண்டும் என்ற வாத்தியார்த்தனம் இல்லாமல், இயல்பானப் போக்கிலேயே அலசுபவை. குறிப்பாக, தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர் களுக்கு பயனுள்ள நூலாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
இந்நூல் தொடர்பாக, சிலருக்கு நன்றிசொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். ‘நான் என்ன செய்கின்றேன்?‘ என்பதை ஒரு கங்காணிபோல கண்காணிக்கும் பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் சிராஜுதீன், நான் எழுதியதை அக்கறையுடன் பரிசீலித்து, அதன்மீதான தனதுகருத்தை, உடன்பட்டும் முரண்பட்டும் விவாதிக்கும் நண்பன் மதுசுதன் ராஜ்கமல், சமீபத்திய அறிமுகமென்றாலும் நீண்டநாள் நட்பாய் என்னுடன் உறவாடும் நண்பர் அருணாச்சலம் ஆகியோருக்கு என் அன்பும் நட்பும்...
- எஸ். அர்ஷியா