எதையேனும் சார்ந்திரு
கவித்துவம், தத்துவம்
காதல், சங்கீதம்,
இங்கிதம்... இப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல்
உலகம் காணாமல் போய்விடும்.
- வண்ணநிலவன்
வாசகனை முதல் வரியிலிருந்தே தன்னுள் அனுமதிக்காத தீர்மானத்தையும் இறுக்கத்தையும் கொண்டுள்ளது சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ நாவல். எந்த நொடியிலும் வாசகன் நாவலில் தன்னை மறந்து ஒன்றிவிடக்கூடாது என்ற கவனத்துடன் எழுதப்பட்டுள்ளது. நம் சூழலில் பயின்றுவரும் வழக்கமான நாவல் இலக்கணத்துக்கு எதிரானது இது. நாவல் தன்னை உடைத்து நொறுக்கிய பின் அவற்றிலிருந்து சில துண்டுகளை மட்டும் நம் முன்னால் கலைத்துப்போட்டு அவற்றிலிருந்து முழுமையை ஊகித்துக்கொள்ளச் சொல்கிறது. அவ்வாறான சிதறல்களில் சில சம்பவங்கள். பிற, அச்சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட நாவலின் சில அத்தியாயங்கள். சம்பவங்களில் உலவும் கதாபாத்திரங்களே நாவலிலும் வேறு பெயரில் உலவுகின்றன. முழுவதுமான கதைத்தன்மை நாவலின் ஒருமைக்குச் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக இடையிடையே ஒரு கட்டுரை, இரண்டு உரைகள், கடிதங்கள் என்று பல்வேறு வடிவங்களும் செருகப்பட்டுள்ளன. சம்பவங்களும் அத்தியாயங்களும் முன்னும் பின்னுமாகக் கலைத்துப் போடப்பட்டுள்ளன.
மீநாவல் வடிவம் தமிழுக்குப் புதியதல்ல. நாவலின் பரீட்சார்த்தமான வடிவங்களை, மேற்கின் சாயல்களுடனோ அல்லது அவற்றின் பாதிப்பினாலோ பலரும் முயற்சிசெய்திருக்கிறார்கள். ஆண் பிரதி-பெண் பிரதி, கதைக்குள் கதை, முற்றிலும் செயப்பாட்டுவினையால் அமைப்பது, முற்றுப் புள்ளியே இல்லாத வாக்கியங்களால் எழுதுவது என்று பல்வேறு உத்திகளும் கையாளப்பட்டுள்ளன. தமிழவன், எம்.ஜி. சுரேஷ், பா. வெங்கடேசன், டி. தர்மராஜ், டி. கண்ணன், எம்.டி.எம், பிரேம்-ரமேஷ் எனப் பலரும் இதற்கான முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள்.
இந்த நாவல் அப்படியான திட்டமிடுதலுக்குப் பிறகு முனைந்து எழுதப்பட்டதா அல்லது எழுதும்போக்கிலேயே தற்செயலாய் அப்படி அமைந்ததா என்பது நாவலின் ஆசிரியருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால் வடிவம் சார்ந்த இந்தக் கேள்விக்கு அப்பால் இந்த நாவலில் யோசிக்கத்தக்க பிற அம்சங்களே முக்கியமானவை.
ஒன்று, வாழ்வே பாவனைதான் என இந்த நாவல் முன்வைக்கும் பார்வை. வாழ்வின் அனைத்து அம்சங்களையுமே இது சந்தேகப்படுகிறது. அவை அனைத்தும் பாவனைகளே என்று சொல்லி முற்றாக நிராகரிக்கிறது. எல்லாவிடத்திலும் அகம் விலகி நின்று அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறது. அக்கணத்தில் நிகழும் நாடகத்தை நக்கலான சிரிப்புடனோ எரிச்சலுடனோ பார்த்து நிற்கிறது. உறவுகள், நட்பு, காதல், காமம், மரணம், அரசியல், பணம், பதவி என அனைத்துமே பாவனைகளின், நடிப்பின் வெவ்வேறு வடிவங்களே; கண்ணீருக்கும் சிரிப்புக்கும் பின்னால் அதற்கு நேர்மாறான உணர்ச்சி வெடிப்புகளே உள்ளுக்குள் நிகழ்கின்றன; வாழ்வின் ஒவ்வொரு தருணமும் நெடிய நாடகத்தின் பல்வேறு அபத்தக் காட்சிகளே என்று புறக்கணிக்கிறது நாவலின் மையக் கதாபாத்திரமான சுரேஷ் பிரதீப் அல்லது சக்தி. அந்த நாடகத்தில் அனைவரது நடிப்பையும் தன்னையும்கூட விலக்கி நின்று எதுவும் உண்மையில்லை என்று விமர்சிக்கிறது. எதிலும் உணர்ச்சிமயமான ஒட்டுதலின்றி அனைத்தையுமே நிராகரிக்கும் இந்த மனநிலை தொடர்ந்து தாங்க முடியா வெறுமையையும் தீராத கசப்பையும் தருகிறது. எங்கிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ளமுடியாத மனம் வறிய நிலையில் வாழ்வை முடித்துக்கொள்ளவே விழைகிறது. சக்தி அல்லது சுரேஷ் பிரதீப் தற்கொலை செய்துகொள்கிறான்.
கணந்தோறும் அலைக்கழியும் மனித மனம் அத்தகைய தத்தளிப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் அதன் துயரிலிருந்து தற்காத்திடவுமே உறவுகளையும் அதன்பாலான பல்வேறு உணர்வுநிலைகளையும் உருவாக்கி வந்திருக்கிறது. குழந்தைகள் மேலான பிரியம், ரத்த உறவுகளின் மீதான அன்பு, சக உயிர்களிடத்தே காட்டும் கருணை, தாய்மை, காதல், குடும்பம் என்ற உறவு நிலைகள் மனித வாழ்வை ஒன்றிணைத்து வைத்திருக்கின்றன. இவை அனைத்தையும் சந்தேகித்து நிராகரிக்கும் மனம் சென்றடைவது வெறுமையை மட்டுமே. இந்த வெறுமையைத் தாங்க முடியாதபோது இலக்கற்ற கோபமும் வன்முறையும் உள்ளுக்குள் கவிகின்றன. இவ்வாறான மனநிலையின் விளைவுகளை நாவலின் பல்வேறு தருணங்கள் சுட்டி நிற்கின்றன.
இச்சமயத்தில் இலக்கியங்கள் தற்கொலையைப் புனிதப்படுத்தியுள்ளனவோ என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. ஆத்மாநாமின் தற்கொலை, சம்பத்தின் ‘இடைவெளி,’ சில்வியா பிளாத்தின் மரணம் போன்றவற்றின் மீது விழுந்திருக்கும் ஒளியே சுரேஷை ஈர்த்திருக்கிறது போலும்.
இரண்டாவது எதிலும் பிடிப்பற்ற, நம்பிக்கையற்ற இன்றைய இளைஞர்களின் சிதறலான மனநிலையை இந்த நாவல் பிரதிபலிக்கிறதா என்கிற கேள்வியை எழுப்புகிறது. இணக்கமற்ற கல்விச் சூழலும் அதன் பிறகான விருப்பத்திற்கேற்ப அல்லது தகுதிக்கேற்ப அமையாத வேலை வாய்ப்புகளும் இளைஞர்களின் மனநிலையில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவசரமும் நிர்ப்பந்தங்களும் உத்தரவாதமற்ற வாழ்க்கை நிலையும் ஒன்றுசேர்ந்து தாளாத மன அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன. இன்றைய கலை, அரசியல், சமூகச் செயல்பாடுகளில் பெரும்பாலானவை அத்தகைய மன அழுத்தத்தை இன்னும் தீவிரமாக்கும் முகமாக அமைகின்றனவே அல்லாது தீர்வுகளை முன்வைக்கும் திராணியற்றிருப்பது துரதிர்ஷ்டமானதே.
இந்த நம்பிக்கையின்மையே நாவலின் கட்டமைப்பையும் தீர்மானித்திருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. நாவலின் போதாமைகளை இட்டு நிரப்ப நாவலுக்குள் நிறைய பாவனைகள் உதவியுள்ளன. கடிதங்கள், மனநல ஆலோசகரின் உரை, நாவல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் ஆற்றும் உரை, சிற்றிதழ் கட்டுரை என்று பலவும் நாவலின் மீதான விமர்சனத்துக்கான பதிலாகவும் சுயகணிப்பாகவும் அமைத்திருப்பதும்கூட உறுதியற்ற மனநிலையின் வெளிப்பாடே.
மூன்றாவது, இன்றைய இளைய தலைமுறையினர் இலக்கியத்தின் செவ்வியல் தன்மையைப் பொருட்படுத்துவதில்லையோ என்ற ஐயத்தை நாவல் எழுப்புகிறது.
இலக்கியம் மானுட வாழ்வைப் புரிந்துகொள்வதற்கான பெரும் சவாலின் ஒரு பகுதியைத் தொட்டுக்காட்டவே எப்போதும் முயன்றிருக்கிறது. தனது விரிவான கேள்விகளின் மூலமாகவும் அறிந்துகொண்டதன் வழியாகவும் வாழ்க்கைப் புதிர்வழிகளின் மீது சிறிதேனும் ஒளி பாய்ச்சவே இலக்கியம் உத்தேசிக்கிறது. இந்த முயற்சியில் கணிசமான தொலைவை அடைய முடிகிற எழுத்துக்களே செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன. செவ்வியல் இலக்கியங்கள் எழுப்பும் கேள்விகளும் தருகிற மனவிரிவுகளும் காலத்தின் முன் மழுங்காதவை; மண்டியிடாதவை. மனித வாழ்வின் இன்மைகளை ஈடுசெய்யும் காரியத்தைச் செவ்வியல் இலக்கியமே சாத்தியப்படுத்தியுள்ளது. ஒரு வாசகர் திரும்பத்திரும்ப செவ்வியல் ஆக்கங்களை நாடுவதன் காரணம் இதுவே. பரீட்சார்த்த முயற்சிகள், உத்திகள், புதிய சொல்முறைகள் கதைசொல்லலின் பகுதியாக, கருவியாக மட்டுமே நின்றுவிடுபவை. தமிழில் உத்தி சார்ந்து எழுதப்பட்ட நாவல்கள் அவற்றின் பரீட்சார்த்தமான முயற்சிகளுக்காகவே கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனவே அன்றி அவை ஒரு நாளும் செவ்வியல் நாவல்களின் வரிசையில் இடம்பெற்றதில்லை; இடம்பெறவும் முடியாது.
இலக்கியத்திலும் வாழ்விலும் செவ்வியல் தன்மையைப் புறக்கணிக்கும் இளைஞர்களின் அணுகுமுறையே அவர்களின் மனநிலையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவுகளையே இன்றைய சமூகத்தின் பயங்கரமான நிகழ்வுகள் பலவும் உணர்த்துகின்றன. காதலின் பெயரால் நடைபெறும் வன்முறைகளும் எண்ணிக்கையில் பெருகிவிட்ட மணவிலக்குகளும் கொலைகளும் மிதவை மனப்பான்மையின் விளைவாக அடைந்திருக்கும் வெறுமையின் வெளிப்பாடுகளே.
நான்காவதாக, சாதிய அடையாளங்களும் அதன் விளைவுகளும் இளைஞர்களிடம் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்று இந்த நாவல் முன்வைக்கும் கேள்வி மிக முக்கியமானது.
கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை, மண உறவு, பிறழ் உறவுகள் என அனைத்துமே கைவசமான பின்னும் நாவலின் கதை சொல்லியான சக்தியின் மனம் எதிலும் நிறைவுகொள்வதில்லை. குடும்பத்தில், அலுவலகத்தில், காதலில், காமத்தில், அரசியலில், பதவியில் என எதிலுமே அவன் ஒன்றிவிடுவதில்லை. எதிலும் தணிந்திடாத நெருப்பு ஆழத்தில் கனன்றபடியே உள்ளது. அணையாத நெருப்பு கிட்டும் ஒவ்வொன்றையும் கலைத்துப்போடவும் காயப்படுத்தவும் அதன் கண்ணீரைக் கண்டு மேலும் மூர்க்கத்துடன் பற்றியெரியவுமே விழைகிறது; இறுதியில் தன்னை எரித்துக் கொள்வதில் முடிகிறது.
செவ்வியல் அம்சங்கள் விலகிப்போன வாழ்வின் அடையாளங் களோ இவை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. சராசரி வாழ்வின் குறியீடுகளாகக் கருதப்படும் எதிலும் நிறைவடையாத மனம் தன்னுள் உருவாக்கிக்கொள்ளும் தாழ்வுணர்ச்சி இவை யாவற்றையும் இல்லாததாக்கி வெறுமையை நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறான வெறுமைக்கும் அதன் விளைவுகளையும் இல்லாமலாக்கவே செவ்வியல் அம்சங்கள், அவை அபத்த நாடகங்களாக இருந்தபோதிலும், மனிதனுக்குத் தேவைப்படுகின்றன. இலக்கியத்திலும் சரி வாழ்விலும் சரி உணர்ச்சியின் வழியாகப் பிணைத்துக் கொள்ளும்போதுதான் ரசிக்கக் கூடியதாக அமைகிறது.
இறுதியாக இந்த நாவல் முன்வைக்கும் குணச்சித்திரங்களின் முரண்களும் அதன் விளைவுகளாக உருவாகும் இரண்டு கேள்விகளும் லட்சியவாதமும் அடுத்தடுத்து ஓயாது தேடி எதிலும் நிறைவுறாத வெறுமையுமாக அமைக்கப்பட்டிருப்பது சுரேஷின் அல்லது சக்தியின் கதாபாத்திரம். இதற்கு நேர்மாறாக ரகு அல்லது குணா கதாபாத்திரம் லட்சியவாதமோ பாவனைகளோ இல்லாத, கிடைத்ததை ஏற்றுக்கொண்டு வெகு சாதாரணமாக இருக்கும் ஒன்று இப்படியானவர்களால் இவ்வாறான குழப்பங்களுக்கும் வெறுமைக்கும் ஆளாகாது வாழ்க்கையை அதன்போக்கில் அனுபவித்து நகர முடிகிறது. லௌகீக வாழ்வின் அடிப்படைகளில் காலூன்ற முடியாத ஒருவன் மரணத்தைத் தழுவ, அதன்போக்கில் தன்னை அனுமதித்துக்கொண்டவன் உலகியல் வாழ்வில் தொடர்கிறான். காதலின் இழப்பும்கூட அவனை ஒன்றும் செய்வதில்லை. இத்தகைய குணச்சித்திர வார்ப்புகளின் விளைவாகவும் அவை அடையும் எல்லைகள் வழியாகவும் எழுகிற கேள்விகள் இரண்டு. லட்சியவாதம் பொருளற்றதா? லட்சியவாதமும் லௌகீகவாதமும் ஒன்றுக்கொன்று பூர்த்திசெய்யும் முரண் இயக்கத்தின் வழியாகவே வாழ்வு முன்னகர்கிறதா?
சுரேஷ் பிரதீப்பின் எழுத்து வாசிப்புத்தன்மைமிக்கது. சரளமான இயல்பான மொழிநடை. கச்சிதமான பாத்திர வார்ப்புகள். வசீகரமான சூழல் சித்திரிப்பு. புதிய சொல்முறையை, நவீன வடிவத்தை அடையும்பொருட்டு நாவலுக்குள் அவர் வலிந்து உருவாக்கியிருக்கும் உடைப்புகள் புதியன அல்ல. தமிழில் முன்பே பலரும் முயன்றிருக்கும் ஒன்றே என்பதால் உத்தேசித்திருக்கும் புதியவொன்றை அடைய இத்தகைய உடைப்புகள் உதவவில்லை. அவை வெறும் உடைப்புகளாக, பாவனைகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன.
சுரேஷ் பிரதீப் தனது முதல் நாவலை இப்படி யோசித்திருப்பதை அசட்டுத் துணிச்சல் என்று சொல்லலாம்; துணிச்சல் என்றும்.
(நன்றி: காலச்சுவடு)