சில புத்தகங்களைப் படிக்கும்போதுதான் நிஜ வாழ்வில் நாம் பெற்ற அனுபவங்களுக்கு புது அர்த்தம் கிடைக்கிறது. இந்த புத்தகம் வழியே நான் பெற்ற அனுபவம் வலி மிகுந்தது. அனிதாவுக்காக இத்தமிழ்நாடே துயருற்ற அத்தருணத்தில்தான் அந்த சம்பவமும் நடைபெற்றது. ஆம் என் முன்னாள் மாணவி ஒருத்தியும் அதே சமயத்தில்தான் இறந்துபோனாள்… தற்கொலை செய்து கொண்டு…
என்னிடம் எட்டாம் வரை படித்துவிட்டு அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தாள். பத்தாவதில் தேர்ச்சிபெற்று அதே பள்ளியில் வணிகவியல் குரூப்பில் சேர்ந்தாள். 2016 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியவளால் தேர்ச்சி பெற முடியவில்லை. மறுபடியும் அவள் அந்தத் தேர்வை எழுதவில்லை. வீட்டு வேலையிலும் வயல் வேலையிலும் பெற்றவர்களுக்கு உதவியாக ஒரு வருடம் இருந்தவளால் அதற்கு மேல் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வெளியூருக்கு வேலைக்குச் செல்ல பெற்றவர்களிடம் அனுமதி கேட்கிறாள். வீட்டில் வெளியூருக்குச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. முரண்பாடுகள் சில மாதங்களாகத் தொடர, முடிவெடுக்கிறாள் இறந்து போக. விஷமருந்தி இறந்தும் போகிறாள். அவளின் முன்னாள் ஆசிரியனாய் எனது மனம் அடைந்த வருத்தம் அதிகம். இன்னும் அந்தப் பெண்ணுக்கு நன்றாக நான் சொல்லிக் கொடுத்திருந்தால், 12 ஆம் வகுப்பில் தேர்வு பெற்றிருந்தால் , அவள் ஏதோவொரு கல்லூரியில் இப்போது படித்துக்கொண்டிருப்பாளோ? என்ற குற்ற உணர்வு இன்னும் என்னை வதைக்கிறது. என்ன செய்ய வாழ்க்கை என்பது “ ஆல்” களாலும், “ம்” களாலும் ஆனதுதானே. அப்படி நடந்திருந்(ஆல்) இப்படி அமைந்திருக்கு(ம்) என்று பேசிப்பேசியே மன இறுக்கத்தை சில நேரம் தளர்த்திக்கொள்கிறோம், சில நேரம் இறுக்கிக் கொள்கிறோம்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் தான் இந்த புத்தகம் என்னில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். 35 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி, 34 மதிப்பெண் பெற்றால் தோல்வி. என்ன குரூரமான தரம் பிரித்தல்.
கனத்த இதயத்துடன் நூலின் உள்ளே……
முகப்பிலேயே,
“உலகம் முழுவதும் ஏழைகளுக்கு எதிராக உள்ள கல்வி அமைப்பு குறித்த கோபமான விமர்சனம். இத்தாலி மாணவர்கள் எட்டு பேர் தங்களை பெயிலாக்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு எழுதிய கடிதத்தின் சாரம்” எனக் குறிப்பிட்டு நூலின் நோக்கம் நிறுவப்பட்டுள்ளது.
பர்பியானா என்பது இத்தாலியின் மலைப்பகுதியிலுள்ள இருபது வீடுகள் கொண்ட குடியிருப்புப் பகுதி . 1954 ஆம் ஆண்டு பார்பியானா தேவாலயத்திற்கு வருகிறார் “பாதர் மிலானி”. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள குழந்தைகள் பள்ளி செல்லாதிருப்பதைக் காண்கிறார். அவர்கள் தேர்வுகளில் தவறியோ அல்லது ஆசிரியர்களின் கண்டிப்புகளால் மனம் வெதும்பியோ பள்ளியை விட்டு வெளியேறியவர்கள் என அறிகிறார். 11 வயது முதல் 13 வரை பத்து மாணவர்களைக் கொண்டு துவங்கப்பட்ட இந்தப் பள்ளியின் எண்ணிக்கை பின் இருபதாக உயர்கிறது.மூத்த மாணவர்கள் இளையவர்களுக்குக் கற்பிக்கிறார்கள் மேலும் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கும் கற்பிக்கிறார்கள். கற்பித்துக்கொண்டே கற்றனர். ஒவ்வொரு மாணவனும் ஏதேனும் ஒரு சூழலில் ஆசிரியனாக அவதாரம் எடுக்கிறான்.
1967 ஆம் ஆண்டு பர்பியானா பள்ளியை நிறுவிய பாதர் மிலானி இறந்து போக பள்ளியும் அவரோடு முடிவுக்கு வருகிறது. ஆனால் அந்த பர்பியானா குடியிருப்பிலும் மற்ற இடங்களிலும் மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் செயல் தொடர் ஓட்டம் போல தொடர்ந்து கொண்டே இருந்தது.
இந்த பர்பியானா பள்ளிக்கு வருவதற்கு முன் வேறு பள்ளியில் பயின்று பெயிலாக்கப்பட்டு அப்பள்ளியிலிருந்து லாயக்கற்றவர்கள் என்று வெளியேற்றப்பட்ட எட்டு மாணவர்கள் 1960 ல் இதற்கு முன் தான் பயின்ற பள்ளியின் ஆசிரியைக்கு எங்களை ஏன் பெயிலாக்கினீங்க? என்று கேள்வி கேட்டு ஓராண்டில் எழுதி முடிக்கப்பட்ட “ Letter to a teacher” என்ற நூலின் அறிமுகமே இந்த நூல்.
“அன்புள்ள மிஸ்” என்று தொடங்கும் கடிதம் இத்தாலி அரசு அமெரிக்காவில் எவ்வாறு கருப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் தரத்தில் வேறுபாடான கல்வியை வழங்கியதோ அதேபோல் இத்தாலிய அரசு மலையக மக்களான தங்களுக்கு ஒன்றிலிருந்து ஐந்து வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே வகுப்பறை என அனைத்திலும் இரண்டாம்தரக் கல்வியையே வழங்கியதான குற்றச்சாட்டோடு இந்த கடிதம் துவங்குகிறது.
அடுத்து தற்போது தாங்கள் பயின்று வரும் பார்பியானா பள்ளியின் சிறப்புகளைப் பட்டியலிடுகிறது கடிதம். “பர்பியானா பள்ளி ஒரு வழக்கமான பள்ளியலப் போல இருக்கவில்லை. ஆசிரியரோ, கரும்பலகையோ, இருக்கைகளோ ஏதுமில்லை. சுற்றி நிற்கவும், நின்று உணவு உண்ணவுமான மேஜைகள் மட்டுமே இருந்தன. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரே ஒரு புத்தகம் மட்டுமே இருந்தது. மாணவர்கள் அதைச்சுற்றி குழுமி நின்று கொண்டனர். இருப்பதிலேயே வயது கூடிய மாணவன் ஆசிரியராக இருந்தான். ஆசிரியர்களிலேயே வயது கூடியவருக்கு பதினாறு வயதுதான் இருக்கும். எந்த கல்விப்பிண்ணனியும் இல்லாத, தாமதமாகப் புரிந்துகொள்ளும் ஒரு மாணவன் கூட இங்கே மிகுந்த அக்கறையோடு கவனிக்கப்பட்டான். மிக கெட்டிக்கார மாணவனுக்கு மற்ற பள்ளியில் தரும் அக்கறையை பர்பியானா பள்ளி பின்தங்கிய மாணவர்களுக்குத் தருகிறது. அந்த பின் தங்கிய மாணவருக்கு பாடத்தில் ஒரு பகுதி புரியும்வரை இங்கே மற்ற மாணவர்களும் அடுத்த பகுதிக்குத் தொடர முடியாது”. ஒருமுறை பேராசிரியர் ஒருவர் வந்து மிக வறட்டுத்தனமான உரையை நிகழ்த்திவிட்டுச் செல்ல ஒருவர் செல்ல லூசியோ என்ற ஒரு மாணவன் சொல்கிறான்,”பள்ளிக்கூடம் மாட்டுச் சாணத்தை விடச் சிறந்தது” என்று கூறுகிறான். ஏனென்றால் லூசியோவின் வீட்டில் முப்பத்தாறு மாடுகள் உள்ளன. அத்தகைய வீட்டு வேலை செய்ய வேண்டிய சூழலில் எத்தகைய அலுப்பூட்டும் உரையும் எங்களுக்குச் சகிக்கக் கூடியதுதான் என்கிறான்.
இவ்வாறு பர்பியானாவில் பல சிறப்பம்சங்கள் இருந்தன. மாணவர்களே ஆசிரியராகவும் இருப்பதால் கற்பிக்கும் போதே பல விசயங்களை புதிதாய் கற்றுக் கொள்வதாகவும், “ கூட்டாகச் கற்பது சிறந்த அரசியல், தனியாகக் கற்பது சுயநலம் என்று புரிந்து கொண்டோம்” என தன் ஆசிரியைக்குக் கடிதம் எழுதுகிறார்கள். மேலும் “மிஸ்! இது உங்களுக்கு மிகச் சிறு விசயமாக இருக்கலாம். ஆனால் உங்கள் மிகச் சிறு விசயமாக இருக்கலாம். ஆனால் உங்கள் மாணவர்களிடம் இத்தகைய தன்மையை உங்களால் வளர்த்தெடுக்க முடியாது. ஏனென்றால், அவர்களாகவே சுயநலத்துடன் முன்னேறிச் செல்வதையே நீங்கள் ஊக்குவிக்கிறீர்கள்” என்று வழக்கமான பள்ளிகளைச் சாடுகின்றனர்.
நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களைப் பள்ளி உள்ளே தக்கவைத்துக்கொண்டு, பெயிலானவர்களைப் பள்ளிக்கு வெளியே துரத்துவதை, “நோயாளிகளை வெளித்தள்ளிவிட்டு, ஆரோக்கியமானவர்களைச் சேர்த்துக்கொள்ளும் ஒரு வினோத மருத்துவமனையாக பள்ளி மாறிவிடும். அத்தகைய மருத்துவமனையாக பள்ளி செயல்படுவது சரியாகுமா?” என சாட்டையடி கேள்விகளால் ஒரு உலுக்கு உலுக்கிவிடுகின்றனர்.
தேர்வுகளைப் பற்றிய, “கற்றுக் கொள்வதன் தன்மை அறிந்து தேர்வுகளில் கடினப்பகுதிகள் கேட்கப்பட வேண்டும். தொடர்ந்து கடினமானவையே கேட்கப்பட்டால், உங்களுக்கு எங்களைச் சிக்க வைக்கும் மனோபாவம் இருப்பதாகத்தான் அர்த்தம். அதுவும் திட்டமிட்டுச் சிக்க வைக்கும் சூழ்ச்சி மனோபாவம்” என்கிற வரிகள் மிகவும் முக்கியமானவை. மேலும் அவர்கள் கேட்கிறார்கள், “உங்களை அவ்வாறு செய்யத் தூண்டுவது எது? மாணவர்களின் நன்மைக்காகவா செய்கிறீர்கள்? பிரெஞ்சு பாடத்தில் முதல்வகுப்பு எடுக்கும் மாணவன் பிரான்ஸ் போனால், “கழிப்பிடம் எங்கே உள்ளது? என பிரெஞ்சு மொழியில் கேட்கும் நடைமுறை மொழி அறிவு இன்றி இருக்கின்றான்”.
“ உங்கள் மாணவர்களின் இலக்கு என்பது பெரும் துயரமானதுதான். ஒவ்வொரு நாளும் அவர்கள் மதிப்பெண்ணுக்காக, தேர்ச்சி அறிக்கைக்காக, சான்றிதழுக்காக மட்டும் தான் வேகவேகமாகப் படிக்கிறார்கள். ஆனால், அந்த வேகத்தில் அவர்கள் கற்கும் விசயங்களின் சிறந்த, நுட்பமான விசயங்களைத் தவறவிடுகிறார்” என மனப்பாடக்கல்வி முறையின் தீமைகளைச் சுட்டி, “யாருக்காக இதை இப்படிச் செய்கிறீர்கள், மிஸ்? நீங்கள் ஆய்வாளருக்காகவும், ஆய்வாளர் மேலதிகாரிக்காகவும், மேலதிகாரி கல்வி அமைச்சருக்காகவும் செய்கிறார்கள். இதுதான் உங்கள் பள்ளியின் மிக மோசமான தன்மையாகும்” என்று அவர்கள் கேட்கக் கேட்க நமது மனதில் புது சிந்தனை ஒளி எழுகிறது.
பெயிலாக்கப்படுவதால் மாணவர்கள் வருடங்களை மட்டும் இழப்பதில்லை, பல மாணவர்கள் உயிரையும் இழக்கின்றனர். “ அன்புள்ள மிஸ்! உங்களின் கட்டாயப் பள்ளிகள் ஆண்டுதோறும் 4,62,000 குழந்தைகளை பெயிலாக்கி வெளியேற்றுகின்றன. அவர்கள் மீண்டும் படிக்கிறார்கள். அவர்கள் பள்ளியை இழக்கவில்லை. ஆனால் தங்களின் வகுப்புத்தோழர்களை இழக்கின்றனர். மீதம் இரண்டு பேர் பள்ளிக்கு வருவதேயில்லை. ஆனால், அவர்களின் வியர்வை வயல்வெளிகளில் ஓடி நமக்கு உணவாக வருகிறது. கவனியுங்கள் மிஸ்! இந்தக் குழந்தைகளின் தாய்மார்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறப்பதில்லை. ஆனால் ஆசிரியர்கள் மறந்து விடுகிறார்கள்” என்கிறார்கள்.
மேலும் கடைசியாக தன் ஆசிரியைக்கு அவர்கள் வைக்கும் வேண்டுகோள் உலகில் உள்ள எல்லா ஆசிரியர்களுக்குமானது. “அன்புள்ள மிஸ். நாங்கள் சில சீர்திருத்தங்களை முன்வைக்கிறோம். மாணவர்களைப் பெயிலாக்காதீர்கள்! பின்தங்கிய மாணவர்களுக்கு முழுநேரப் பள்ளி நடத்துங்கள்! செயல்படாதிருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பணிகள் தாருங்கள்! மாற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. பழைய நிலைமைகளை நியாயப்படுத்தினால், எந்த மாற்றமும் கல்வியில் வரமுடியாது.
மிஸ்!
மிஸ்!
எந்த சக்தியாலும் தடுக்க முடியாத மாற்றங்களை சூழல்கள் உருவாக்கும். அதற்கு எதிராக நின்று கொண்டு உங்கள் ஆன்மாவை, அன்பைக் கறைப்படுத்திக் கொள்ளாதீர்கள்” என்ற வேண்டுகோளோடு இக்கடிதம் தங்களைப் பெயிலாக்கிய ஆசிரியைக்கு(பள்ளிக்கு) இத்தாலியைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் எழுதிய கடிதம் உலகில் பெயிலாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட அனைத்து மாணவர்களின் ஏக்கக் குரலே. இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்போது நூலுக்கு வாழ்த்துரை எழுதியுள்ள டாக்டர். ராமானுஜம் அவர்களின் விருப்மான “கல்வியில் தோல்விக்கு இடமில்லை, அனுமதியில்லை” என்ற நிலை உண்டாக்கி பெரும்புரட்சி ஏற்படுத்தலாம்.
வாசல் பதிப்பக வெளியீடுகள் மிகச்சிறந்த முன்னுரைகளை எப்போதும் கொண்டிருக்கும். ரத்தினச் சுருக்கமாக நூலின் கருத்துக்களை முன்னுரையில் தந்திருக்கிறார்கள். “வெற்றியாளர்களின் சாதனைகளையே கேட்டுப் பழகிய இந்தச் சமூகத்தில் தோற்றவர்களின் கதைகளுக்கு இடமில்லை. ரத்தம் சொட்டச்சொட்ட கட்டை விரல் வெட்டப்பட்ட ஏகலைவர்கள் வரலாறு நெடுகிலும் எத்தனை எத்தனையோ. வெற்றியாளர்களின் ஆர்ப்பாட்டமான கதைகளில் நாடகத்தனமும் பாசாங்கும் மிகுதி. தோற்றவர்களின் கதைகளோ சாம்பல் மூடிய நெருப்பு. தொட்டால் பொசுக்கி விடும்” என்ற முன்னுரை மிகச் சிறந்த முன்னுரை. மிகச்சிறந்த கல்வியாளர்கள் வாசல் பதிப்பகத்தில் உள்ளதற்கு வாழ்த்துகள்.
இந்நூலைத் தமிழாக்கித் தந்த ஐயா ஜே.ஷாஜகான் அவர்களுக்கு நன்றிகள் பல. நூலாசிரியர் இந்நூலின் ஆங்கில மூலத்தை வாசிக்கும்போது மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளானதாகக் கூறியுள்ளார். இந்த குற்ற உணர்ச்சி அவருக்கு மட்டுமல்ல இந்நூலினை வாசிக்கும்போது நமக்கும் ஏற்படுகிறது. இந்நூலில் தனது ஆசிரியைக்குக் கடிதம் எழுதிய மாணவர்களைப்போல நம்மிடம் படிக்கும் குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களானதும் தங்கள் பள்ளியைப் பற்றி, ஆசிரியர்கள் பற்றி விமர்சிப்பார்களே என்ற ‘அற அச்சம்’ நூலாசிரியருக்கு மட்டுமல்ல நமக்கும் ஏற்படுகிறது
நூலாசிரியர் ஜே.ஷாஜகான் அவர்கள் நமது மாணவர்களிடமிருந்தும் குறிப்பாக உயர்கல்வி மாணவர்களிடமிருந்து வரவேண்டும் என்றும் அப்போதுதான் இருப்போருக்கும் இல்லாதோருக்குமான இடைவெளி, தனித்தனி கல்வி அமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்றும் கனவு காண்கிறார். அப்பெருங்கனவின் சிறு துவக்கமே இச்சிறுநூல் என்றும் சொல்கிறார். இது போன்ற நூல்கள் எல்லா ஆசிரியர்கள் கைகளிலும் தவழும்போது அவரின் கனவு சாத்தியப்படும். வாசிப்போம்.. செயல்படுத்துவோம்.. நல்லவரின் கனவு வெல்லட்டும்!