ஒரு முஸ்லீம் குடும்பத்தை முன்வைத்து, முஸ்லீம் சமூகம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் கூறுவதே இந்நாவலாகும். வட்டனடிமைக் காக்கா, குஞ்ஞுத்தாச்சும்மா, குஞ்ஞுபாத்துமா ஆகிய மூவரும் அடங்கிய முஸ்லீம் குடும்பத்தின் அகக்காட்சிகளே இந்நாவலாக விரிந்துள்ளது. சுருக்கமாக, “இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம்” (பின் அட்டை) என்று குறிப்பிடுகிறார் கவிஞர் சுகுமாரன்.
நல்ல நிலையில் வாழ்ந்த ‘வட்டனடிமைக் காக்கா’வின் குடும்பம் உறவினர்களின் பொறாமையின் விளைவாக ஏற்பட்ட நீதிமன்ற வழக்கின் காரணமாக அனைத்துச் செல்வங்களையும் இழந்து வறுமைக்கு ஆட்படுகிறது. ஊரின் முக்கியப் பிரமுகராக இருந்த வட்டனடிமைக் காக்கா, வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டபோது, வீட்டைக் காப்பாற்றுவதற்காக மீன் வியாபாரம், இறைச்சி வியாபாரம் எனப் பல வேலைகளையும் செய்கிறார். இதனால் ஊர்மக்கள் அவரைப் பரிகாசத்தோடு பார்க்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து மனைவியான குஞ்ஞுத்தாச்சுமாவும் அவரைப் பரிகாசம் செய்ததோடு, பட்டப்பெயர்களும் சூட்டி மகிழ்ந்தாள். அவ்வாறு அவளால் அவருக்கு வைக்கப்படுகின்ற பெயர்தான் ‘செம்மீனடிமை’ (ப.46).
நல்ல நிலையில் வாழ்ந்தபோதும் சரி, வறுமை நிலையில் வாழும்போதும் சரி, வட்டனடிமைக் காக்காவின் மனைவியான குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு எந்த நேரமும் அவளது அப்பா வளர்த்த கொம்பன் யானையைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. எப்போதும், தன்னை ‘ஆனெ மக்காருக்கெ செல்ல மவள்’ (ப.49) என்று பெருமையாகக் கூறிக் கொண்டே இருப்பாள். அதனோடு சேர்த்துக் கணவனைப் பழிப்பதும், மகளை வேலைக்காரியைப் போன்று நடத்துவதும், கொடுஞ்சொற்களால் திட்டுவதும் தினசரி கடமைகள் ஆகும்.
செல்வச் செழிப்பான நிலையில், வேலைக்காரர்கள் புடைசூழ வாழ்ந்த வீட்டிலிருந்து உடுப்பதற்குத் துணியோ, வாழ்க்கைத் தேவைகளுக்கான பணமோ இன்றி நீதிமன்றத்தின் தீர்ப்புப் பாதகமாக அமைந்ததால் அவமானமும், தோல்வியுமாக வெளியேறும்போது குஞ்ஞுபாத்துமாவின் மனத்தில் மட்டும் கரைகடந்த மகிழ்ச்சி. காரணம் என்னவென்றால் “மனிதர்களைப் பார்க்கலாம். சுத்தமான காற்றைச் சுவாசிக்கலாம். சூரிய வெளிச்சத்தின்கீழ் நிற்கலாம். நிலவொளியில் மூழ்கலாம். ஓடலாம். குதிக்கலாம். பாடலாம்…எல்லாவற்றிலும் அவளுக்குச் சுதந்திரமிருந்தது” (ப.36). அதுவரை அவள் அனுபவித்து வந்த சிறைவாழ்க்கையிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சி அவளுக்கு. இம்மூவரும் இந்நாவலின் முக்கியமான கதைமாந்தர்கள் ஆவர்.
முஸ்லீம் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் அல்லது அவர்களால் நம்பப்பட்டிருக்கும் மூடநம்பிக்கைகள், சமூக நிலை ஆகியவற்றைப் பஷீர் இம்மூன்று கதாப்பாத்திரங்களின் வழியாக இந்நாவலில் சுட்டிக்காட்டுகிறார்.
முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் நவீனத்தை ஏற்றுக்கொள்ளும்போது அவர்கள் முஸ்லீம் மக்களாலேயே வெறுக்கப்படுகின்றனர்; ‘காஃபிரிச்சிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர்; அதுமட்டுமின்றி, ‘இறந்த பின்னர் இவர்கள் எல்லாம் நரகத்திற்குப் போவார்கள்’ என்று கூறி, பிற முஸ்லீம் மக்கள் அவர்களோடு எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற சிந்தனையை தமது மக்களிடையே பரப்புபவர்களாக முஸ்லீம் சமூகத்தின் ஒருபகுதி மக்கள் இருக்கிறார்கள்.
“முஸ்லியார்கள் இரவுப் பிரசங்கத்தில் சொல்லித் தந்தது போல் அவர்கள் அப்படியே வாழ்ந்து வருகிறார்கள். யாருக்கும் எந்த அறிவும் கிடையாது. எழுத்து வாசனை கிடையாது. கிரந்தங்களிருகின்றன. எல்லாமே அரபி மொழியில். முஸ்லியார்கள் அரபி மொழியைப் படித்தவர்கள். அவர்கள் சொல்லுவதை நம்ப வேண்டும். அவர்களை அனுசரித்து ஒழுக வேண்டும்” (ப.26). இதுதான் நடைமுறை வாழ்க்கையில் காணலாகும் நிலைப்பாடு. தாங்கள் படிக்கும் வேதப்புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதுகூட தெரியாமல் தினமும் ஐந்துமுறை தொழுகை நடத்தும் முஸ்லீம் மக்களையும், அவர்களை மதத்தின் பெயரைப் பயன்படுத்தி அடக்கி ஆளும் மதத்தலைவர்களையும் விமர்சனத்துக்கு உட்படுத்துகின்றார் பஷீர். இந்த விமர்சனம் முஸ்லீம் சமூகத்திற்கு மட்டும் பொருந்துவதன்று; எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.
குஞ்ஞுபாத்துமா என்னும் கதாப்பாத்திரத்தின் வழியாக மூடநம்பிக்கைகளையும், சமூகச் சிக்கல்களையும் வெளிக்கொணரும் ஆசிரியர் ஆயிஷா எனும் கதாப்பாத்திரத்தின் வழியாக அதற்கான தீர்வினைக் கூறிச் செல்கிறார். மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து குஞ்ஞுபாத்துமாவுக்கு மன தைரியத்தையும், உண்மையையும் வெளிப்படுத்தும் பாத்திரமாக ஆயிஷா என்ற கதாப்பாத்திரம் இந்நாவல் முழுதும் தொடர்ந்து வருகிறது. இஸ்லாம் என்றால் என்ன என்பதற்கும் முஸ்லீம்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும் கதாப்பாத்திரங்களின்வழி பதிலுரைக்கும் ஆசிரியர் ‘கருணையின் மதம்தான் இஸ்லாம்’ என்றும்; ‘நாம் நல்ல மனிதர்களாகவும், நல்ல முஸ்லீம்களாகவும் வாழ வேண்டுமே தவிர கட்டுக்கதைகளை நம்பி வாழக்கூடாது; மற்றவர்களுடைய மனதைப் புண்படுத்துபவர்களாகவோ, பகை, குரூரம் ஆகியவற்றைக் கொண்டவர்களாகவோ வாழக்கூடாது; தீமையான விஷயங்களுக்குத்தான் நாம் எதிரானவர்களாக இருக்கணும்; இதையெல்லாம் கடைப்பிடிப்பவங்கதான் முஸ்லிம்கள்’ (ப.82) என்றும் கூறுகின்றார்.
குஞ்ஞுபாத்துமா மனிதர்களைப் போலவே கன்னட்டை (மரவட்டை என்னும் ஒரு புழு), விரால் மீன், குருவி இவற்றோடு உரையாடுவதையும், தண்ணீர் கொடுக்க நினைக்கும் புறாவிற்குத் தண்ணீர் இல்லாததினால் தன்னுடைய இரத்தத்தைக் கொடுப்பதையும் (ப.56) பார்க்கும்போது பஷீரின் பெரும்பாலான நாவல்களிலும் மனித உணர்வுகளுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கொடுத்திருப்பதை உணர முடியும்.
தங்களுக்கு முந்தைய தலைமுறை கற்பித்த பழம்பெருமைகளை எல்லாம் உண்மை என்று நினைத்துப் பெருமிதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் குஞ்ஞுத்தாச்சும்மாவுக்குப் புதிய தலைமுறையால் அது உண்மை அல்ல; பொய் என்று நிரூபிக்கப்படுகிறது. இதனால் அவள் புதிய நடைமுறை விதிகளை அனுசரித்து வாழ நேர்கிறது.
கால மாற்றத்திற்கேற்ப நடைமுறைகளை மாற்றிக் கொள்ளவும், உண்மைகளை அலசி ஆராய்ந்து நடைமுறைப்படுத்தும்போது, பழமையை விட்டுப் புதுமையைச் சிந்திப்பவனாகவும், செயல்படுபவனாகவும்; சரி என்பதையும் தவறு என்பதையும் தனித்தனியே பிரித்தறியும் பக்குவத்தினைக் கொண்டவனாகவும்; மனிதன் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இங்குச் சுட்டிக்காட்டப்படும் கருத்தாகும். இந்த மாற்றத்தின் முக்கிய கருவிகளுள் ஒன்றாகக் கல்வியின் அவசியத்தைப் பற்றி விரிவாக இந்நூலில் விளக்குகிறார் பஷீர்.