ஒரு வீட்டில் அப்பா அம்மா இரண்டு பேருக்கும் பிள்ளை படிக்க வேண்டும் என்பதில் அளவு கடந்த அக்கறை இருந்தது. பிள்ளையை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்கள். அவனும் தினசரி பள்ளிக்கூடம் போய் வந்தான். ஒரு நாள் அவனிடம் அம்மா கேட்டாள்.
“எங்கே! ஒண்ணு ரெண்டு சொல்லு பாப்போம்!”
“ஒண்ணு!”
மௌனம். அதற்கு மேல்அவன் சொல்லவில்லை.
அம்மா மீண்டும் ‘ சொல்லு’ என்றாள்.
“ஒண்ணு!”
அத்துடன் நின்று விட்டது.
அம்மா தரதரவென்று பையனை இழுத்துக்கொண்டு ஆசிரியரிடம் போனாள்.
“இவனுக்கு ஒண்ணு,ரெண்டு சொல்லி கொடுத்திருக்கிங்களா?” என்று கேட்டாள்.
“ஓ! கேட்டுப்பாருங்கள்! நூறு வரைக்கும் சொல்வானே!” என்றார் ஆசிரியர்.
“நீங்களே கேட்டுப் பாருங்க!” என்று அம்மா சலித்தாள்.
“சொல்லுடா!” என்றார் ஆசிரியர்.
அவன் சொன்னான்.
“ஒண்ணு!”
உடனே ஆசிரியர்,”ம்!” கொட்டினார் ஆதரவாக. தயக்கமின்றி பையன் “இரண்டு!” சொன்னான். ஆசிரியர் மறக்காமல் “ம்!” கொட்டினார்.
எக்ஸ்பிரஸ் வேகத்தில் பையன் சொல்ல ஆரம்பித்தான்.
“மூணு!”
“ம்ம்!”
“நாலு!”
“ம்!”
நூறு வரை மாணவன் மளமள என்று சொல்லி முடித்தான்.
அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
என்ன இது? புத்தக அறிமுகம் என்று கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா?
இந்தக் கதை பேராசிரியர் ச.மாடசாமி எழுதியுள்ள எனக்குரிய இடம் எங்கே? என்னும் நூலில் தான் உள்ளது.
மேலுள்ள கதை சொல்ல வருவதென்ன “ *அங்கீகாரம்*”.
ஒரு அறிவுஜீவிக்குள்ளேயே அங்கீகாரத்திற்கு ஏங்கும் குழந்தை இருக்குமானால், இளம் மாணவர்களுக்குள்…… ‘ஏங்கும் குழந்தைகள் எத்தனை இருக்க வேண்டும்”
இவ்வாறு கற்பித்தலுக்குத் தேவைப்படும் அறிவைத் தாண்டி, குழந்தைகளின் மனமறிந்து செயல்பட, உளவியல் ரீதியாக நம்மை வளப்படுத்திக் கொள்ள பல சிந்தனை தெறிப்புகள் இந்தப் புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.
பொருத்தமான பொறுப்புகள் கிடைத்துவிட்டால் மனிதர்கள் விசுவ ரூபம் எடுத்து விடுகிறார்கள்.
எத்தனை திறமை இருந்தால் என்ன?
ஒரு முன் கோபம் போதும் ...
வகுப்பறையின் முகத்தில் கீறலை உண்டுபண்ண!
வகுப்பறை என்பது கூட்டு முயற்சி! ஒரு கூட்டிசை.
கூட்டிசை கேட்காத இடங்களில் கொசுக்களின் ரீங்காரம் தலை தூக்கும்!
கூடவே கொசுவை விரட்டும் கைதட்டல் ஓசையும்.
வெற்றி- தோல்வி
மனஸ்தாபம் - நட்பு
எழுச்சி- வீழ்ச்சி
எல்லாம் கலந்த ஒரு ஜீவனுள்ள சந்திப்பு
வகுப்பறை.
ஆசிரியருக்கு நூறு முகம் வேண்டும். வகுப்பறைக்கு நூற்றுக்கணக்கான
கண்கள் வேண்டும். எதற்கு?
ஒவ்வொரு மாணவனையும் பார்ப்பதற்கு! கண்டுபிடிப்பதற்கு!
நடிப்பைப் போலக் கற்பனை நிறைந்த பணி ஆசிரியர் பணி!
கூசி ஒடுங்கவும் கூடாது. இறுகிப் போய்விடவும் கூடாது.
வாய் மூடிக்கிடப்பது அல்லது ஆளாளுக்குப் பேசுவது இரண்டுமே விவாதம் என்ற நாகரிகத்தின் விரோதிகள். இவற்றைச் சமூகத்திடமிருந்துதான் மாணவர்கள் கற்கிறார்கள்.
இன்னும் நிறைய. ஆனால் நீண்ட பதிவு பிறகு மிக மிக நீண்ட பதிவாகி உங்கள் கோபத்தைத் தூண்டிவிடும்.
கல்வி உளவியல் என்று ஆசிரியர் பயிற்சியின் போது நாம் படித்தவை வறட்சியான தத்துவங்களாக உள்ளது. ஆனால் இந்தப்புத்தகம் வகுப்பறையில் உயிருள்ள உணர்வுள்ள குழந்தைகளின் முன் நாம் நிற்கும்போது வகுப்பறையை உயிரோட்டமுள்ள வகுப்பறையாக மகிழ்வுடன் கொண்டு செல்ல பலப்பல உத்திகளைக் கொண்ட நிறைவான புத்தகமாக உள்ளது. முப்பதாண்டு காலம் கல்லூரிப் பேராசிரியராகவும், அறிவொளி இயக்கச் செயல்பாட்டாளராகவும், தற்காலதமிழகத்தின் சிறந்த கல்வியாளருமான ச.மாடசாமி அவர்கள் “எனக்குரிய இடம் எங்கே?” என்னும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகத்தை உங்களிடம் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஆசிரியர் பயிற்சியில் நாம் பயின்ற புத்தகங்களைத் தாண்டி மிகச்சிறப்பான புத்தகங்கள் பொது வெளியில் உள்ளன. அவற்றை உங்களிடம் ஒரு தொடராக அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன். ஆதரவுக் கரம் தருக.
இந்தப் புத்தகத்தின் ஓரிடத்தில் இப்படி வரும். "இரைச்சல் மிக்க கூட்டத்திலும் உண்மையான ஆர்வத்துடன் சிலர் இருக்கவே செய்கிறார்கள். நம் வார்த்தை யாராவது சிலரின் காதுகளையும் மனதையும் எட்டத்தான் செய்கிறது".