தம் நெடிய பயணத்தில் அனுபவம் பல தேடி, எளிய சொற்கள் கொண்டு நம் இதயத்தோடு உறவாடி, ஆணியாய் அறையும் கல்வியை விதைகளாய்த் தூவ வழிகாட்டும் பேராசியர் ச.மாடசாமி அவர்களின் கல்வி குறித்த பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இந்த “என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா” என்னும் புத்தகம். முதலாவது கட்டுரையே புத்தகத்தின் தலைப்பாகவும் உள்ளது. புத்தகத்தின் அட்டைப்படமே ஒரு கதை சொல்கிறது. ஒரு சிவப்பு பேனா செங்குத்தாக நிற்க, அச்சிவப்புப் பேனாவின் நிழல்கள் கீழே கத்தியாகவும், வாளாகவும், ஈட்டியாகவும், துப்பாக்கியாகவும் கிடக்கிறது. இது மாணவர்களின் விடைத்தாள்களில் சிவப்பு பேனா நிகழ்த்தும் வன்முறையினை வலிமையாக உணர்த்துகிறது.
ஆசிரியரை ஒரு பயந்த சர்வாதிகாரி என்கிறார் நூலாசிரியர். “ஆசிரியர் சுற்றிலும் உள்ள எதைப் பார்த்தாலும் பயந்து அரளுவார். வகுப்பறைக்குள் மட்டும் ஒரு சர்வாதிகாரி போலக் காட்டிக் கொள்ளப் பார்ப்பார். பயந்த குடிமக்களை விரும்பும் ஒரு பயந்த சர்வாதிகாரி” என மேலும் விளக்கம் அளிக்கிறார். இந்த சர்வாதிகாரியின் கையில் கிடைத்த மிக முக்கியமான ஆயுதம்தான் சிவப்பு பால்பாயிண்ட் பேனா. அதற்குள் ஒரு சிறு அதிகாரம் நிரம்பிக் கிடப்பதை இக்கட்டுரை வழியே விளக்குகிறார். தனது பணிக்காலத்தின் ஆரம்பத்தில் மாணவர்களின் விடைத்தாள்களில் வரிக்கு வரி சிவப்பு மை கொண்டு திருத்தி “பொருத்தமற்ற விடை, குழப்பம், தெளிவில்லை, வெட்டிக்கதை, பிழைகள் ஏராளம் என யோசித்து யோசித்து குறிப்பு எழுத, விடைத்தாள்கள் சக மாணவர்களிடம் காட்டப்படாமல் அவரவர்களால் பதுக்கப்பட்டு கல்லூரி மைதானத்தில் துண்டு துண்டாக கிழிபட்டு கிடப்பதோடு தன் விமர்சனமும் கிழிபட்டு கிடப்பதை காண்கிறார். மேலும் கடைசி வகுப்பில் மாணவர்கள் மேசைமீது வைத்துப்போன துண்டுச் சீட்டில்,” மாடசாமி! நீ மடசாமி” என்று எழுதியிருந்ததோடு படிக்கச் சொல்லி துன்புறுத்துவதாகவும் எழுதி இருக்கிறது. இதனை மறைக்காமல் இந்நூலில் பதிவுசெய்துள்ளதோடு, அச்சம்பவத்தின் பின் நடைபெற்ற ஆசிரியர் போராட்டங்களும், அறிவொளி இயக்க அனுபவங்களும் தனது அணுகுமுறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் .
அதன் பின் விடைத்தாள்களை கரும்பலகையாக மாற்றி கற்றுக் கொடுக்கிறார். நன்று! அருமை! பிரமாதம்! போன்ற பாராட்டுகளும் விடைத்தாள்களில் பளிச்சிடுகின்றன. ‘ நுட்பமான கருத்து, கச்சிதமான கட்டுரை, இனிய கற்பனை, தெளிந்த நடை’ போன்ற வார்த்தைகள் விடைத்தாளை அலங்கரிக்கின்றன. இதனால் விடைத்தாளை ஆசையோடு எதிர்பார்த்த மாணவர்கள் அதனை இப்போது பதுக்கவில்லை, கடைசி பெஞ்ச் வரை விடைத்தாள் மரியாதையோடு பயணிக்கிறது. சிவப்பு பால்பாயிண்ட் பேனா தன் அதிகாரம் இழந்து சட்டைப் பைக்குள் செருகிக் கிடந்தது என்று கட்டுரையை முடிக்குமிடத்தில், “அதிகாரமற்று இருப்பதைப் போல மகிழ்ச்சி வேறு எதில் இருக்கிறது?”...என்று தனது வாழ்வியல் அனுபவத்தின் சாரங்களை போகிறபோக்கில் தெளித்துவிட்டுச் செல்கிறார்.
இக்கட்டுரையைப் போன்றே இத்தொகுப்பில் உள்ள மற்ற கட்டுரைகளும் நமக்கு அள்ளித் தரும் அனுபவ முத்துக்கள் அதிகம். பசங்க திரைப்படத்தில் ஒரு ஆசிரியர் தனது மாணவனை, “டேய்! கெளவி புருஷா” என்று சொல்ல அனைத்து மாணவர்களும் சிரிப்பார்கள். நானும் இது சாதாரண விஷயம்தானே என்று தான் “ ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்” என்னும் கட்டுரையைப் படிக்கும் வரை நினைத்திருந்தேன். ஆனால் ஆசிரியர்களுக்கு “சாதாரணமாய்” இருக்கும் பல விஷயங்கள் மாணவர்களுக்கு “சதா - ரணமாய்” இருப்பதை, குழலி என்னும் அழகிய பெயரை அவளது ஆசிரியர் “கெளவி” என்று சொல்லும் போதும் மற்றொரு மாணவியை, “ ரெட்டை சடை போட்டுட்டு வர முடியுது, ஹோம்வொர்க் செய்ய முடியலையா?” என்று கேட்கும் போதும் ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணமாவதை நாம் உணரலாம். இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஸ்டீபன் என்னும் மாணவனைப் பற்றி அவனது ஆசிரியர் ஜோனாதன் கோசல் எழுதியுள்ள “Death At an early age” என்னும் நூல் அறிமுகம் மிகச்சிறப்பு!
ஆசிரியர் கூட்டங்களில் பயிற்சியளிக்கும் போது நடந்த விவாதங்களின் தொகுப்புக் கட்டுரையான “பங்கஜம் சொன்ன கதைகள்” நிறைய செய்திகளை நமக்குக் கடத்துகிறது. மேலும் வகுப்பறைகளில் ஆசிரியரல்லாத திறன் வாய்ந்த மனிதர்களின் அறிவைப் பயன்படுத்திக் கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
“அரசுப்பள்ளி மாணவர் போல வெடிப்புறப் பேசக்கூடிய, விவாதிக்கக் கூடிய மாணவர்களை வேறு பள்ளிகளில் காண்பதரிது. பாட்டு, நாடகம் என்றாலும் அரசுப்பள்ளி மாணவர்கள் தூள் கிளப்புவார்கள்” என்று அரசுப்பள்ளி மாணவர்களை பாராட்டும் நூலாசிரியர், இதற்குக் காரணமாக, தனியார் பள்ளிகளைப் போல மாணவர்களின் ஆளுமையில் தலையிட்டு வடிவமைக்காத திறமைகள், கூண்டுக்குள் சிக்காத குரங்குகள் அரசுப்பள்ளி மாணவர்கள்தான் என்கிறார். “வடிவமைக்கப்படாமல் தப்பித்தது எதுவோ, அதுவே உன் ஜீவன் மிக்க சாராம்சம்” என்று சிந்தனையாளர்களின் சொற்களோடு, “யார் கைகளும் படாமல், யார் கைகளிலும் சிக்காமல் தப்பித்தவைதான் ஒரிஜினல்! தப்பித்த குரங்குகள்! வடிவமைக்கப்பட்டதெல்லாம் ஜெராக்ஸ்தான்!” என்று மாணவர்களின் தனித்துவ அவசியத்தை “தப்பித்த குரங்குகள் முக்கியமானவை என்னும் கட்டுரையில் விவரிக்கிறார்.
வகுப்பறையில் புதுப்புது செயல்பாடுகளை நிகழ்த்திப் பார்க்கும் ஆசிரியர்கள் சில சமயங்களில் மற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காதபோது வருத்தப்படுவதை உற்றுநோக்கியுள்ள நூலாசிரியர் அருமையான இரண்டு யோசனைகளை முன்வைக்கிறார். ஒன்று தனது எண்ணங்களை அக்கறையுடன், பரிவுடன் உள்வாங்கக் கூடிய மனிதர்களிடம் பகிர்வது. இது போன்றவர்கள் பெரும்பாலும் வேலை பார்க்கும் இடங்களில் கிடைப்பதில்லை, இரண்டாவது நல்ல நூல்களை வாசிப்பது. இந்த வாசிப்புக்கான முக்கிய புத்தகங்களாக ஒரு முழுமையான பள்ளி அனுபவமான “டோட்டோசான்- ஜன்னலில் ஒரு சிறுமி” நூலையும், ஒரு வகுப்பறை அனுபவமான ஜுஜூபாய் பதேக்காவின் “பகல் கனவு” நூலையும் “பரிசோதனைக்காலத் தனிமையும்…வாசிப்பின் தோழமையும்” என்ற கட்டுரையில் பரிந்துரைக்கிறார். இரண்டும் மிகமிக முக்கியமான நூல்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இரண்டும் தமிழில் என்பிடி நிறுவன வெளியீடாகக் கிடைக்கிறது.
“வகுப்பறை உறவு நெருக்கமும் இடைவெளிகளும்” என்னும் கட்டுரை, பல உட் தலைப்புகளுடன் விரிகிறது. இதில் நிர்வாகத்திற்கெதிரான உள்குமைச்சலை வெளிக்கொண்டு வரும் ‘பேய் பிடிச்சிருக்கு’ விளையாட்டு முக்கியமானது. இதில் ஆசிரியரும் மாணவரும் இரு வேறு உலகம் என்று அல்லாமல் இரு வேறு பண்பாடுகள்.. இந்த பண்பாடுகள் விலகி நிற்பதற்காக அல்ல, புரிந்து கொண்டு மேலும் நெருங்குவதற்காக, தப்பபிப்பிராயங்களைக் களைவதற்காக என்கிறார் ஐயா ச.மா. வகுப்பறைக்குள் இயங்கும் ஊர், தெரு போன்றவற்றின் அடிப்படையிலான உள் வகுப்பறை என்பதை வகுப்பறையை உற்றுநோக்கும் ஆசிரியர்கள் அனைவரும் அறிந்ததே. மதிப்புகளுக்கும், நடைமுறைக்கும் உள்ள இடைவெளிகள் எல்லா ஒழுங்கீனங்களுக்கும் அடிப்படையாயிருக்கின்றன. இந்த விரிசல் பெரிதாய்த் தெரிவது பள்ளிகளில்தான் என்கிறார். மனிதப் பண்புகளை உருவாக்க வேண்டிய கல்வியின் நோக்கம் திசைமாறி தேர்வு வெற்றியின் பின்னால் சென்றது துரதிஷ்டம். இந்த வெற்றி வேட்கைதான் ஒழுங்கீனங்களின் ஆதார ஊற்று என்றும் நிறுவுகிறார்.
சீனாவில் 1966களில் மாவோவின் முயற்சிகளினால் ஏற்பட்ட கலாச்சாரப் புரட்சியினால் கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறது, “பள்ளியும் பண்பாட்டுப் புரட்சியும்” என்னும் கட்டுரை. இதில் உடல் உழைப்பை அலட்சியப்படுத்தி, பாடப்புத்தக அறிவு வகுப்பறைகளில் கோலோச்சி நின்றதை தகர்த்து எவ்வாறு அனைவருக்குமான உடல்உழைப்போடு கூடிய கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டது என்பதையும், அதனால் சீனாவில் கல்வி பெற்றோர் எண்ணிக்கை எவ்வாறு உயர்ந்தது என்பதையும் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரை.
மாணவர்களின் பொய்யை சிறிது கூட ஏற்றுக்கொள்ளாத ஆசிரிய மனம், As I am suffering from…. என லீவ் லெட்டரை முதல்நாளே கொடுத்துவிட்டு சொந்த வேலையில் ஈடுபடுவதை நகைச்சுவையுடன் தனது, “பொய்களுக்கும் ஓர் இடம்” கட்டுரையில் விவரிக்கிறார். மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை, ஆசிரியர் வந்தால் எழுந்து நிற்பதில்லை போன்றவற்றை அவமதிப்பாக உணரும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டலாக,பயிற்சி கூட்ட விவாதங்களில் கண்டெடுத்த முத்துக்களாய் சில ஆசிரியர்களின் வாசகங்களை தந்துள்ளார். ”குருகுல காலத்து எதிர்பார்ப்புகளோடு , இன்னைக்கி நாம வகுப்புக்குள்ள நுழையக்கூடாது; நுழையிறது தப்பு” என்ற ஆசிரியர் வெற்றிச்செல்வனின் கருத்து, “ தன்னம்பிக்கை குறைவானவங்கதான் அவமதிப்பை அதிகமா உணர்றாங்க” என்ற ஆசிரியர் சண்முகக்கனியின் கருத்து. “அவமதிப்புன்னு நெனச்சு நெனச்சுத்தான் வகுப்பறையும் சுருங்கிப் போச்சு.அவமதிப்புக்கும் கொஞ்சம் இடம் கொடுக்கலாம். கொடுப்போம் சார்! கொஞ்சம் விசாலமா இருக்கட்டும் நம்ம உலகம்” என்ற ஆசிரியை ராஜம் என ஆசிரியர்களின் மொழியில் மாணவர்களுக்காக பேசியுள்ளார் ஐயா ச.மா.
“ஜென் வகுப்பறைகள்” என்னும் நீண்ட கட்டுரை தரும் செய்திகள் மிக அழகானது. அடுத்தவர் வீசும் அவமானச் சொற்களை நாம் வாங்கிக் கொண்டால்தானே அது நமக்குச் சேரும், வாங்கவில்லையென்றால் அது வீசியவரைத்தானே சேரும். மாணவர்கள் வாங்க விரும்பாத வசைகளைக் கொட்டிவிட்டு தினமும் திரும்ப அள்ளிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களாய் நாம் ஏனிருக்கிறோம் என நம்மை யோசிக்க வைக்கும் வார்த்தைகள். அடுத்து நூலாசிரியர் பாலோ பிரையரை படித்து , “உரைகளைவிட உரையாடல்களே சிறந்தவை” என்று உணர்ந்ததை நமக்கு எளிதாகக் கடத்திவிடுகிறார். “பெரும்பாலான ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள். அவர்களும் சில நேரங்களில் கோபத்தில் சறுக்கி விடுகிறார்கள். கண்மண் தெரியாமல் அடித்துவிட்டு ‘அந்த நேரத்தில் என்னை எந்தப் பேய் பிடிச்சுச்சோ, அவன் அழுக அழுக அடிச்சுப் புட்டேன்’ என்று கண்கலங்குகிறார்கள்” என்பதைப் பதிவு செய்துவிட்டு, ஒரு மூத்த அனுபவசாலியாய் நமக்கு இதனைத் தவிர்க்க வழிமுறையையும் “கோபம் உச்சிக்கேறிய சில நிமிடங்களைக் கடக்கவேண்டியது அவசியம். அதுதான் உணர்வு நிர்வாகம். குழந்தையை வளர்க்கிறவர்களுக்கும், குழந்தைகளுக்குக் கற்பிக்கிறவர்களுக்கும் உணர்வு நிர்வாகம் தேவை” என சொல்கிறார். மேலும் ஜென் வகுப்பறை கட்டுரையிலுள்ள கதைகளைப் படிக்கும் போது ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் கேட்பது போல உணர்ந்தேன்.
கடைசியாக “வீதியில் விதைத்த நம்பிக்கை” என்னும் அறிவொளி இயக்க அனுபவங்கள் பற்றிய கட்டுரை. “கட்டிடங்களுக்குள் கட்டுண்டு கிடந்த கல்வியை வீதிக்கு அழைத்து வந்தது அறிவொளி இயக்கம். வீதிகளில் ஒரு சுதந்திரம் இருந்தது,புத்தகங்களுக்குள் கட்டுப்படாத பாடத்திட்டம் இருந்தது. பாட்டும் சிரிப்புமான வகுப்பறை இருந்தது, கல்வி வியாபாரிகள் கவனம் விழாத தூரம் இருந்தது. மாற்றத்திற்கான நம்பிக்கை இருந்தது” என ஐயா.ச.மா கூற, இதையே எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி “ ரேகை வச்ச விரலுக்கு றெக்க முளைச்ச சந்தோசம்” என பரவசக் கவிதையாக்குகிறார்.
இறுதியாக,
“இந்த உலகம் நம்முடையது
இந்த தேசம் நம்முடையது
இந்தச் சமூகம் நம்முடையது
நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்?
நாம் செயல்படாவிட்டால்
நமக்காக வேறு யார் செயல்படுவார்?”
என்று இந்நூலில் வரும் மாவோவின் கவிதை கேட்பதைப் போல,பேராசிரியர். ச.மா தனக்குத் தானே கேட்ட கேள்விதான் அவரை நமக்காகச் செயல்பட வைக்கிறது. அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் சுதந்திரமான, வன்முறையற்ற வகுப்பறைகளை மலரச்செய்தலே! இதைவிட நாம் அவருக்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும்?