கடிகாரத்தைச் சுற்றி ஓடுகின்ற வழமையான அன்றாடங்களில் இருந்து இளைப்பாறிக் கொள்ளவும், கொஞ்சம் வேறு யுகங்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் சென்று புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளவும் உதவுகின்றன செல்லப் பறவைகள் வளர்ப்பு. தொடர்ச்சியாக உற்றுக் கேட்கும் பொழுது அவற்றின் மொழி நமக்கும் புரியத் துவங்கும். அவற்றுடன் ஆத்மார்த்தமான உரையாடல்கள் கூட சாத்தியமாகும். பறவை வளர்ப்பின் நீட்சியாக, வளர்ப்பு விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான புனைவுகளை வாசிக்கும் ஆர்வமும் அதிகரித்தது. அந்தத் தேடலினூடாக, நண்பன் கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்த்த, மோ யானின் “எருது” சிறுகதையை வாசித்தபின், அக்கதையின் சூழலில் ஈர்க்கப்பட்டு, மோ யானின் மற்றொரு படைப்பான “கன்றுக்குக் காயடித்தல்” சிறுகதையின் ஆங்கில வடிவத்தை தேடத்துவங்கினேன். அந்தக் கதையின் ஆங்கில மொழியாக்கம் கிடைக்கவில்லை. ஆனால், அதிலிருந்து, அடுத்தடுத்த கண்ணியாய் பறவைகள், விலங்குகள், சூழலியல் சார்ந்த உலகக் கதைகள் என்று தேடல் தொடர்ந்தது. வாசித்து மனதில் தங்கிய கதைகளை, தமிழில் மொழியாக்கம் செய்வது பிடித்த பொழுதுபோக்காகி, இன்று அவற்றை இணைத்து ஒரு தொகுப்பாகப் பதிப்பிக்கும் அளவு வளர்ந்திருக்கின்றது.
ஹங்கேரி, இத்தாலி, தென்கிழக்கு ஆப்ரிக்கா, மொராக்கோ, ஜப்பான், பிரேசில், போர்ட்டோரிகா, அமெரிக்கா என்று பல்வேறு நிலப்பரப்புகளையும், அவற்றில் வாழ்ந்த பல்வேறு காலகட்டத்தைச் சார்ந்த எளிய மனிதர்களின் வாழ்வையும் பேசும் பத்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டிருக்கின்றன. கிடை போடும் இடையர்கள், வாழ்வாதாரத்திற்குச் சிரமப்படும் படகோட்டி, விளிம்பு நிலையில் வாழும் இளம்பெண், ஓய்வின்றி உழைக்கும் வேசி, தத்தம் துணைகளையும், குடும்பத்தையும் விட்டு விட்டு வேறு தேசம் சென்று ஓவியம் வரைந்து சிறுபொருளீட்டும் நடுத்தர வயது இணையர், ஊர் முழுக்க நிறைந்திருக்கும் திருடர்கள், தன் ஒரே மகனை கொடுநோய்க்குப் பறிகொடுக்கும் குடியானவன், வனதேவதையுடன் பேசும் ஆடுமேய்ப்போன், முகாம்களில் வசிக்கும் கூலிகள், தங்களுக்கான புதிய தேசத்தைத் தேடி அலையும் அடிமைகள்… இப்படி சமூகத்தின் கீழடுக்குகளில் வாழும் எளிய மனிதர்கள் மற்றும் அவர்களின் வாழ்வோடு இணைந்திருக்கும் பறவைகள் மற்றும் விலங்குகள், அதன் மூலம் அவர்களுக்குள் ஏற்படும் உறவு இணக்கம் அல்லது முரண் ஆகியவற்றைப் பேசுகின்ற கதைகளாக இவை அமைந்திருக்கின்றன.
இக்கதைகளின் ஊடாக, மொழி, பண்பாடு, தேசம், சூழ்நிலை, காலம் கடந்து எளிய மக்களின் வாழ்வும் பாடும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும் சித்திரம் கிடைக்கின்றது. அவர்கள் தங்களுக்கே உரிய மேன்மையையும், சிறுமையையும் பெரிதாக பொருட்படுத்தாமல், தங்கள் வாழ்வை அதன் போக்கில் வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.
சூழலியல் சாந்த உலகச் சிறுகதைகளை கண்டடைவதற்கும், அவற்றை மொழிபெயர்த்து தொகுப்பாக கொண்டுவருவதற்கும் அண்ணன்கள் எஸ்.அர்ஷியா, நேசமித்ரன் மற்றும் நண்பர்கள் கார்த்திகைப் பாண்டியன் மற்றும் ஸ்ரீதர் ரங்கராஜ் ஆகியோரின் உதவியும் மிக முக்கியமானது. தொடர் உரையாடல்கள் மூலமும் சரியான உள்ளீடுகள் மூலமாகவும் எனது மொழிபெயர்ப்புப் பணியை தொடர்ந்து செம்மையாக்குப்வர்கள் இவர்கள். இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சில கதைகள், இதழ்களில் வெளியாகிய பொழுது, எனது மொழிபெயர்ப்பை அங்கீகரித்து தொடர்ந்து மொழியாக்கங்களில் ஈடுபட உற்சாகமூட்டிய இலக்கிய முன்னோடிகள் எழுத்தாளர் பாவண்ணன், கவிஞர் சம்யவேல், கவிஞர் சிபிச்செல்வன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் மற்றும் சக பயணிகளும் நண்பர்களுமான, போகன் சங்கர், இராமசாமி கண்ணன், ”எதிர் வெளியீடு” அனுஷ், “பாதரசம்” சரோலாமா, தருமி அய்யா, மதுரை சுந்தர் ஆகியோருக்கும் மிக்க நன்றி. ஆரோக்யமான விவாதங்கள் மூலமாக, என்னையும் என் எழுத்தையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் தோழர்கள் கருப்பையா, சங்கையா, நேரு, “புத்தகத் தூதன்” சடகோபன் உள்ளிட்ட வாசிப்போர் களம் நண்பர்களுக்கு தீராத என் அன்பும், நன்றியும். தொகுப்புக்கு மெய்ப்பு பார்த்து, செறிவான அணிந்துரையும் வழங்கியிருக்கும் எழுத்தாளர் எஸ்.அர்ஷியா அவர்களுக்கு மீண்டுமொரு முறை நன்றியை உரித்தாக்குகிறேன். மிகக் குறுகிய காலத்தில், இத்தொகுப்பினை பதிப்பது மட்டுமின்றி, எனது எழுத்துப்பணிக்கு பக்கபலமாய் நிற்கும் “நூல்வனம்” மணிகண்டன் மற்றும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கென்றே இருக்கும் கரடுமுரடான எழுத்து நடையின்றி, வாசிப்பதற்கு எளிதாக, நேரடிப் படைப்புகளைப் போன்ற இயல்பான நடையில் இருக்க வேண்டும் என்பதே எனது மொழியாக்கத்திற்கென நான் வகுத்துக் கொள்ளும் ஒரே நிபந்தனை. அது போலவே, இத்தொகுப்பிலும் கதைகள் நடைபெற்ற காலம், சூழ்நிலை, பண்பாடு போன்றவற்றை கவனத்தில் கொண்டு, மூலப்படைப்புகளுக்கு உண்மையானதும், மிக நெருக்கமானதுமான எளிய மொழியாக்கத்தை வழங்க நூறு சதவீதம் உழைத்திருக்கிறேன். மொழியாக்கம் குறித்து, இத்தொகுப்பை வாசிக்கும் உங்களின் மேலான கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கிறேன். உங்களின் கருத்துக்கள் எனது எழுத்துக்களை இன்னும் செழுமைப்படுத்தும் என்று நிச்சயமாக நம்புகிறேன், வணக்கம் !
பாலகுமார் விஜயராமன்
டிசம்பர் 2017,
ஓசூர்
(நன்றி: மலைகள்)